ஆகஸ்ட் 15, 1961. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் நேரு ஆற்றிய உரையில் நாட்டு ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை விடவும் முக்கியமாய் – ‘பணம், மனிதனை உருவாக்கவில்லை; மனிதன்தான் பணத்தை உருவாக்கினான்’ என்று கூறி ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறார். ‘ராக்கெட் யுகத்தில், அற்பத்தனமான சண்டைகளுக்கு இடமில்லை; இளைஞர்கள் இந்த அறிவியல் யுகத்துக்குத் தயாராகி வருகிறார்கள்’ என்கிற வாசகத்தில் நேரு வெளிப்படுத்திய நம்பிக்கை இன்று மெய்யாகி இருக்கிறது.
‘ஆயுதக் குறைப்பில் உலகத் தலைவர்களுக்கு நல்லறிவு இல்லை; ஆபத்தான ஆயுதங்களால் யாருக்கும் வெற்றி இல்லை; உலகமே சுடுகாடாய்ப் போனால் அது வெற்றியே அல்ல.’ என்கிற கூற்று, ‘இன்றைக்கு’ மிக முக்கியமாகப்படுகிறது. இதோ… 1961 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய மிக நீண்ட உரை:
சகோதர சகோதரிகளே.. குழந்தைகளே… 14-ஆவது சுதந்திர நன்னாளில் உங்களை வாழ்த்துகிறேன். இந்த நல்ல நாள் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். இந்த நாளில் பல எண்ணங்கள் நமது சிந்தைக்கு வருகின்றன. அனைத்துக்கும் முதலாய், விடுதலைக்கு வழி காட்டிய காந்திஜியை நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அவரைப் பற்றி மட்டுமல்ல; அவரது போதனைகள், நாம் செல்ல வேண்டிய பாதை, இதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் இருந்து நழுவினால் நாம் தவறான திசையில் சென்று விடுவோம்.
தம் இன்னுயிரை ஈந்த எண்ணற்ற தியாகிகளை, போராட்டத்தில் பங்கு பெற்ற கோடிக்கணக்கான மக்களை நாம் நினைவு கூர்வோம். இதன் பிறகு கடந்த 14 ஆண்டுகளில் நாம் என்ன செய்துள்ளோம், என்னென்ன குறைகள், எதிர்காலத்தில் எப்படி செயலாற்றலாம் என்று பார்ப்போம். நமது கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பதும் நல்லதுதான். ஏனெனில் அது நமக்கே உரித்தானது; நமக்குப் பாடம் புகட்டுகிறது. ஆனால் நிறைவாக நாம் எதிர்காலத்தையும் பார்க்க வேண்டும். நீங்களும் நானும் பல கோடி மக்களும்தான் எதிர்காலத்தை நிர்மாணிக்க வேண்டும்.
» செங்கோட்டை முழக்கங்கள் 10 - அன்று சொன்னதே இன்றும் | 1956
» செங்கோட்டை முழக்கங்கள் 12 - இது கதையல்ல; பாடம்... எல்லாருக்கும்! | 1958
நாம் விதியின் கைப்பொம்மை அல்ல; நமது செயலால் நமது உழைப்பால் நாமே நமது விதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.(“We are not the playthings of destiny; we have to create destinywith our work and ourlabour.”). இந்திய மக்களாகிய நாம் இத்தனை ஆண்டுகளில் பல்வேறு பெருங்கடல்களைக் கடந்தோம்; இன்னும் நாம் கடக்க வேண்டிய பெருங்கடல்கள் பல உள்ளன. (“We, the people of India, have crossed many a big oceans during these years; there are many more to be crossed’)
நமது இலக்கு வெகு தொலைவில் உள்ளது. இருந்தாலும், இதுவரை நாம் செய்த பணிகள் நமக்கு துணிவு, வலிமையைத் தருகின்றன. நாம் நிறைய செயலாற்றி இருக்கிறோம்; பல நிலைகளைக் கடந்துள்ளோம்; ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்துள்ளோம். ஒவ்வொரு திட்டமும் வளர்ச்சி நோக்கிய பெரிய முன்னேற்றம். வெற்றிகரமாக இரண்டு பெரிய அடிகள் எடுத்து வைத்துள்ளோம்; அடுத்ததாய் மூன்றாவது அடி எடுத்து வைக்க இருக்கிறோம். இந்த மூன்றாவது அடியின் நிறைவில், இந்தியா மொத்தமும் வெகுவாக முன்சென்று இருக்கும்; தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வலிமை பெறும்; பெரிய அளவில் வளமையைக் கூட்டும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு குறித்துக் குறிப்பிடுகிறேன் – காரணம், தேசத்தைக் காப்பது, சுதந்திரத்தைப் பாதுகாப்பது – முதல் கடமை. துரதிர்ஷ்டவசமாக நமது எல்லையில் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே நாம் அதிக விழிப்புணர்வுடன் நமது நாட்டைப் பாதுகாக்க வேண்டி உள்ளது.
நேற்றுதான் ஒரு சிறிய சம்பவம் நடந்தது. ஒரு சிறிய பாகம், சில கிராமங்கள், கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்தவை, மக்களவை மூலம் (மீண்டும்) இந்தியாவுடன் முறைப்படி ஒருங்கிணைக்கப்பட்டன. நான் தாட்ரா, நகர் ஹவேலி குறித்துச் சொல்கிறேன். அது நமது நாட்டின் சிறிய பகுதி; ஆனால் அது நமக்கு மிகவும் நெருக்கமானது; அதற்கென்று நமது இதயத்தில் ஓர் இடம் இருக்கிறது. அது மீண்டும் வந்ததில் நமக்குப் பெரு மகிழ்ச்சி. நம்மிடம் இருந்து பிரிக்கப்பட்டு ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் மேலும் பல துண்டுகளையும் நாம் திரும்பப் பெற்று நம்மோடு ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற எண்ணத்துக்கு இந்த இணைப்பு வழி கோலுகிறது.
எந்த நாட்டையும் தாக்க வேண்டும்; அதன் பகுதிகளை அப்பகுதிவாசிகளை நம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குக் கொள்கையும் இல்லை; ஆசையும் இல்லை. நமக்குத் தேவையும் இல்லை. அது பழமையான காலவதியாகிவிட்ட எண்ணம். இன்று நாம் எந்த நாட்டையும் தாக்க நினைக்கவில்லை; அல்லது அதன் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை. (இதேபோன்று) நம் நாட்டின் மீது (வேறு நாட்டின்) ஆக்கிரமிப்பையும் நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. இவையெல்லாம், இறந்தகால நிகழ்வுகள். அது மன்னராட்சிக் காலம் – தமது எல்லைகளை விரிவு படுத்துகிற முயற்சியில் அரசர்கள் சண்டையிட்டுக் கொண்ட ஜமீந்தாரி காலம். நாம் இப்போது புதுயுகத்தில் இருக்கிறோம்.
ஒவ்வொருவரும் தனது வீட்டில் தனது நாட்டில் அமைதியாக வாழ வேண்டும்; மற்ற மனிதர்களுடன் மற்ற நாடுகளுடன் ஒத்துழைத்து வாழ வேண்டும். எல்லைகளைப் பெருக்குகிற அல்லது வகுக்கிற காலம் அல்ல இது. அவ்வாறு யாரும் ஈடுபட்டால், அவர் இன்றைய நவீன உலகைச் சேர்ந்தவர் அல்ல; இன்னமும் இறந்த காலத்திலேயே வாழ்கிறவர் ஆவார்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தை நோக்குவோம். பூமியில் இருந்து நட்சத்திரம் நோக்கி ராக்கெட் பயணிக்கிற காலம் இது. இத்தகைய காலத்தில், அற்பத் தடைகள், நம்மைப் பிரிக்கும் எல்லைகள், அதன் மீது அற்பத்தனமான சச்சரவுகளுக்கு இங்கே இடம் இல்லை. (“Let us look at the age we are living in. Rockets are travelling to the stars from our earth. In such an age, there is no place for petty barriers and frontiers which divide us and petty disputes over them.”)
மற்றொரு, புதிய யுகத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்; தயார் செய்து வருகிறோம். இந்தப் புதிய உலகத்துக்குத் தங்களைத் தயார் செய்து வரும் பல இளைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். இவர்கள் புதிய உலகை நிர்மாணிக்க முயற்சிக்கிறார்கள். வாழ்த்துக்கு உரிய செய்தி இது. (”We are on the threshold of another age and we have to prepare ourselves for it; and we are preparing. We have many young men who are preparing for this new world, who are also trying to build this new world.”)
கடந்த 14 ஆண்டுகளில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி பல நிகழ்வுகள்… ஆனாலும், இந்த சாதனைகளைச் சொல்லி நம்மை நாமே புகழ்ந்து கொள்ள விரும்பவில்லை. இந்த நாளில் நம்முடைய பலவீனங்களைப் பற்றிப் பார்ப்பதே சரியானதாய் இருக்கும்.
நமது துணைக் குடியரசுத் தலைவர் விடுத்த செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் படித்து இருப்பீர்கள். குறிப்பாக, நம் நாடு கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு கட்டுப்பாடு பற்றி அவர் நமது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். (அந்த அறிக்கையில்) மேலும் பல செய்திகள் அவசியமானதாய் இருந்தாலும், தேச ஒழுங்கு முதன்மையானது. இன்று நமக்கு எது மாதிரியான ஒழுங்கு தேவைப்படுகிறது? இராணுவ ஒழுங்கு – நமது படைகளை நல்லதாய், வலிமையாய், நம்பத் தகுந்ததாய் செய்துள்ளது. நம் கோடிக் கணக்கானோர் மத்தியிலும் ஒழுங்கு தேவை – ஏனெனில், பன்முகப்பு கொண்ட இந்தியா, பல மாநிலங்கள், பல மொழிகள், பல மதங்கள், பல வேற்றுமைகளைக் கொண்ட இந்தியா, வலிமை பெற வேண்டும். இது ஒரு குடும்பம். இது வலுப் பெற வேண்டும்.
நமது ஒற்றுமைக்குத் தீக்கு விளைவிக்கிற, அதனை பலவீனப் படுத்துகிற எதையும் யார் செய்தாலும் அவர் இந்தியாவுக்கு ஊறு விளைவிக்கிறார். அவர் இந்தியாவுக்கு சேவை புரியவில்லை. நமது அண்டை நாட்டார் வேற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களோடு நாம் ஒன்றாக இருத்தல் வேண்டும்; நமது நாட்டவரும் எல்லாரும் ஒன்றாக இருத்தல் வேண்டும். துரதிஷ்டவசமாக இதனை நாம் மறந்து விடுகிறோம் – மாநில உணர்வு, மதவாதம், சாதியம் மற்றும் மொழிச் சண்டை எனும் வலைக்குள் சிக்கிக் கொள்கிறோம். விரைந்த வளர்ச்சி என்னும் நல்ல பாதையில் இவை தடைகளாய் இருந்து, நமது வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி விடும்.
நினைவில் கொள்வோம் – நாம் அரும் பெரும் காரியத்தில் இறங்கி இருக்கிறோம்; அநேகமாக உலகத்தில் வேறு எந்த நாடும் முயற்சிக்காத அரும் பெரும் காரியத்தில் முனைந்துள்ளோம். நமது நாட்டின் 43 கோடி மக்களை உயர்த்துவதே இந்த அரும் பெரும் பணி. பல துறைகளில் இவர்களை முன்னேற்ற வேண்டும்; எல்லாவற்றையும் விட, இவர்களை ஒரு யுகத்தில் இருந்து மற்றொரு யுகத்துக் கொண்டு வர வேண்டும்.
பழமையான போர் எண்ணங்கள், பழமையான உலக வாழ்க்கை முறை, பழமையான உலக வறுமை… இவற்றில் இருந்து விடுவித்து வளமையான புதுயுகத்துக்குள் அவர்களைக் கொண்டுவர வேண்டும். நவீன உலகை வடிவமைக்கும் சக்திகளைப் புரிந்து கொள்வோம். இவற்றைக் கையகப்படுத்தி, இவற்றைப் பயன்படுத்தி நமது நாட்டை முன்னேற்றுவோம். நமது நாட்டின் வளமை இதில்தான் அடங்கி உள்ளது. வளமை மட்டுமல்ல; அதன் பின்னால் உள்ள, நமது சிந்தையை எண்ண ஓட்டத்தைக் கட்டுபடுத்தும் எல்லா நன்மைகளும் இதிலேதான் அடங்கி உள்ளன. இவற்றை நாம் தத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
எளிதாக சொகுசாக நாடுகள் முன்னேறி விடுவதில்லை. நாட்டு மக்கள் கணிசமாக இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கடந்த 14 ஆண்டுகளில் நாம் முன்னேறி இருக்கிறோம். சில சொகுசுகளையும், சில இன்னல்களையும் அனுபவித்தோம். இதுபோல் மேலும் பல இன்னல்கள் வர இருக்கின்றன.
நாம் எதிர்கொள்ள இருக்கும் இன்னல்கள், கடினங்களுக்காக உங்களை நான் வாழ்த்துகிறேன். இத்தகைய இன்னல்கள் இல்லாமல் சொகுசுகள் மட்டுமே இருந்தால், நாளைய பிள்ளைகள் சோம்பேறிகளாய் வலுவிழந்தவர்களாய்ப் போய் விடுவார்கள்; நாடு பலவீனம் ஆகி விடும். நமக்கு வேண்டியது - மனத்திண்மை கொண்ட நாடு; துணிச்சல் மிக்க நாடு; ஒருவருக்கு ஒருவர் சகோதர சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழும் நாடு.
இன்றைய இந்தியாவைப் பாருங்கள். ஒருபுறம், பெரிய திட்டங்கள் நம்மை முன்னேற்றிக் கொண்டுள்ளன. கோடிக்கணக்கான நமது பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று புதிய உலகைக் கற்றுக் கொள்கிறார்கள். உங்களில் பல லட்சம் இளம் ஆண் பெண்கள், கல்லூரிக்குச் சென்று தம்மைப் பற்றி, இந்தியாவைப் பற்றி, உலகைப் பற்றிய பயிற்சி பெறுகிறார்கள்.
மறுபுறம், அற்பத்தனமான சண்டைகள், வெறுப்பு, கோபம். குறிப்பாக, கடந்த காலத்தில், சுதந்திரப் போடாட்டத்தில் துணிவு மிக்க ஆண்களைத் தந்து இந்தியாவுக்கு சேவை புரிந்த, இனி வருங்காலத்திலும் சேவை புரிய இருக்கும் பஞ்சாப் மாநிலம் நமது கவனத்தை ஈர்க்கிறது. நமது படைகளுக்குப் பெருமை சேர்க்கும் இவர்களின் துணிச்சல், (சமீபகாலமாக) பரஸ்பர அவநம்பிக்கை, பகைமையில் வீணாகிக் கொண்டு இருப்பது, துரதிர்ஷ்டவசமானது. இதேபோன்று நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு காண்பது மிக முக்கியம் ஆகும்.
வளர்ச்சி நோக்கிய ஐந்தாண்டுத் திட்டப் பாதையை நாம் தொடர வேண்டும். கோடிக் கணக்கான மக்கள், தோளோடு தோள் நின்று வளர்ச்சி நோக்கி நகர வேண்டும். இதுவே நமது தலையாய பணி. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவில், தேசத்தை செயலாற்றத் தூண்டும் ஒற்றுமை வேண்டும்.
இதயங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இதைத்தான் நாம் உணர்ச்சிபூர்வ ஒருங்கிணைப்பு என்கிறோம். சமீபத்தில் இதுகுறித்து சிந்திக்க பல மாநிலங்களில் இருந்தும் இங்கே (தில்லிக்கு) வந்தனர். அவர்கள் (தீவிரமாக) பரிசீலித்து சில முடிவுகளை எட்டி உள்ளனர். ஆனால் இது அவர்கள் எடுத்து வைத்துள்ள முதல் அடி மட்டுமே.
ஒற்றுமை என்கிற கருத்துருவை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்; நாட்டை முன் நிறுத்த வேண்டும். நாம், பெரிய தொழிற்சாலைகளை நிறுவலாம்; உலகாயத வெற்றி பெறலாம்; ஆனால் நமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு பயனற்றவர்களாக மாறிப்போனால், ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக வாழ முடியாமற் போனால், இவை எல்லாமே வீணாய்ப் போய்விடும்.
இத்தகைய சம்பவங்களில் நான் துடித்துப் போகிறேன். இது தற்போது பஞ்சாபில் தலை தூக்கி இருக்கிறது. அங்கே என்ன நடக்குமோ என்று மக்கள் கவலையுற்று இருக்கிறார்கள். எல்லாம் நல்லதாய் முடியும் என்று நம்புகிறேன். காரணம், பஞ்சாபியர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்றாலும் பகுத்துணர்ந்து சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். தம்முன் படர்ந்துள்ள பனித்திரையை விலக்கி, தெளிவான வெளிச்சம், புத்துணர்வு கொண்ட காற்று பெறுவார்கள் அவர்கள்.
நமது நாட்டில், சண்டையிட்டுத்தான் தீர்க்க முடியும் என்பதான பிரச்சினை ஏதுமில்லை. உண்ணாவிரதம் இருந்து போராட வேண்டிய அளவுக்குப் பிரச்சினைகள் இல்லை. ஒரு ஜனநாயகத்தில், பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் இவையல்ல. ஏனெனில் இதுதான் சரியான வழிமுறை என்றால்,(பிரச்சினை கிளப்பும்) எல்லாத் தரப்பினரும் இதே வழியைப் பின்பற்றத் தொடங்கலாம்; பிறகு ஒரு தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சலாம்; அது, சமுதாயத்தில் குழப்பத்தையே உண்டாக்கும்.
நமது சமுதாயத்தை நாம் சரியாக நிர்வகிக்க வேண்டும். நம்முடையது – ஹிந்து, முஸ்லிம், சீக்கியம் அல்லது வேறு எந்த குறிப்பிட்ட சமுதாயமும் அல்ல. நம்முடையது – எல்லாரையும் அரவணைத்துச் செல்கிற இந்திய சமூகம். எனவே நமது முதல் பணி – வடக்கு – தெற்கு, கிழக்கு – மேற்கு என்று எல்லாவற்றையும், எல்லாரையும் ஒன்றிணைப்பதே ஆகும்.
பல மதங்கள், இங்கே தோன்றியவை; சில - வெளியில் இருந்து வந்தவை. ஆனாலும், இந்தியாவில் உள்ள அத்தனை மதங்களும் நமக்கானவை; அனைத்தையும் சமமாக மதித்தல் வேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக, இதுவே நமது மரபு. ஒவ்வொருவரையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும்; அவர்களின் மதங்களை, வாழ்க்கை முறையை மதிக்க வேண்டும் என்பதே இந்திய சரித்திரம் கூறும் செய்தி. ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. அசோகர் காலத்தில் இருந்தே இந்தச் செய்தி கல்லில் செதுக்கப் பட்டுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் இந்த நடைமுறை தக்க வைக்கப்பட வேண்டுமா இல்லையா? இதனை மறந்து விட்டு மொழி, மதம், சாதியின் பெயரால் சண்டை யிட்டுக் கொள்ள வேண்டுமா?
சாதிப் பாகுபாடு உள்ளிட்ட வேற்றுமைகள் ஜனநாயகத்தில் இருக்கவே முடியாது. நமது சமுதாயத்தைத் துண்டாக்கி விட்ட சாதியப் பாகுபாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும். இத்தகைய வேற்றுமைகளை ஒழிக்க வேண்டும். அவரவர் தத்தம் மதத்தைப் பின்பற்றலாம்; இதற்கு, பிறருடன் சண்டையிட்டு நாட்டை பலவீனம் ஆக்கலாம் என்று பொருளல்ல. நமது மதத்தைப் பினபற்றுகிற போதே, அதைவிடப் பெரிய மதம் இருக்கிறது என்பதை அறிவோம். ‘இந்தியா (என்கிற) மதம்! இந்த மதத்தில் நாம் எல்லாரும் ஒன்றாய் வாழ்ந்து ஒன்றாய் உழைத்து ஒன்றாய் உயர்வோம். இந்தப் பாதையில் குறுக்கே வருவது – இஸ்லாம், கிருஸ்துவம், சீக்கியம் – என்று எதுவாக இருந்தாலும் அது தவறுதான். இந்த நாட்டில், எல்லாரும் சமமானவர்கள்; சமமாக உயர்த்தப்பட வேண்டியவர்கள். அற்பத்தனமாக நாம் சண்டை யிட்டுக் கொள்வோம் என்று எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.
நவீன யுகம், முன்னர் சொன்னது போல, விண்வெளியில் மனிதன் பயணிக்கும் யுகம். எப்போது மனிதன் நட்சத்திரங்களை சென்றடைவான் என்று நமக்குத் தெரியாது. நம்முடைய இளைஞர்களும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்து அங்கு சென்றடைய முயற்சிப்பார்கள். இவ்வாறு அர்ப்பணிப்பவர்கள் நமது நாட்டை முன்னேற்றுபவர்கள்.
சொகுசாக அமர்ந்து கொண்டு தமது பண மூட்டைகளை எண்ணிக் கொண்டு இருப்பவர்களால் நாடு முன்னேறுவதில்லை.உண்மை, பணத்துக்கென்று பயன்கள் இருக்கின்றன. (ஆனால்..) பணம் மனிதனை உருவாக்கவில்லை; மனிதன்தான் பணத்தை உருவாக்கினான். (”Money does not make the man. It is the man who makes money.”) நமது தேவை - மனிதர்கள்; மனிதம். ஒவ்வொருவருக்கு உள்ளும் மனிதம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஒருகணம் இன்றைய உலகைப் பாருங்கள். சில சமயம், போர் முரசு கேட்கிறது. போருக்கான முஸ்தீபுகள் தெரிகின்றன. உலகையே அழிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பார்க்கிறோம். இத்தகைய ஆயுதங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.
ஆயுதங்களைத் தடை செய்ய, இவற்றை அழிக்க, ஓர் உடன்படிக்கை எட்ட, உலகத் தலைவர்களிடம் நல்லறிவு இல்லை. இத்தகைய ஆயுதங்கள் பிரசினைகளைத் தீர்க்க உதவாது. இவை உலகத்தை அழிக்கவே செய்யும். இத்தகைய போரில், யாருமே வெற்றி பெற இயலாது. உலகமே சுடுகாடாய் மாறிப் போனால், அது வெற்றியே அல்ல. (”The leaders of the world do not have the good sense to come to an agreement and ban and destroy the deadly weapons. These weapons do not solve the problem of the world. They only devastate the world. Nobody can win in such a war; it is not victory if the world is turned into a graveyard.”)
உலகைப் பற்றிய அக்கறைக்கு முன்னால் நம்மைப் பற்றிய அக்கறை வேண்டும். உலகத்துக்கு அபாயம் இருக்கிற போது நாம் செய்ய வேண்டிய கடமை என்ன? நாம் தேர்ந்தெடுத்த (காந்திய) பாதையில் தொடர்ந்து இயங்க வேண்டும். போரில் இருந்து உலகைக் காக்க நம்மால் இயன்றதைச் செய்வோம். இதற்காக நமது மெல்லிய குரலை உயர்த்துவோம்; நமது எளிய சேவையைச் செய்வோம். நமது நாட்டில் நல்ல சூழலை நாம் உருவாக்குகிற பொழுது, நமக்கென்று செல்வாக்கு வளர்த்துக் கொள்கிற போது, நம்மால் போரில் இருந்து உலகைக் காக்க முடியும்.
நமக்கு நாமே சண்டையிட்டுக் கொள்கிற அளவுக்கு சூழல் சரியில்லாத போது, நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடியாது; உலகையும் காப்பாற்ற முடியாது. எனவே, நவீன யுகத்தின், நவீன இந்தியாவின் தேவைகளை இந்திய மக்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால் இன்றைய இந்தியா - புதிய இந்தியா; புதிய உலகத்தை நோக்கி விரையும் இந்தியா.
நாம் பயணிக்க வேண்டிய தூரத்தை மக்கள் அறியட்டும். பழைய சச்சரவுகளை இவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியாது. மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதே முக்கிய கேள்வி. அவர்கள் அதே பழைய நிலையிலேயே நீடிக்கப் போகிறார்களா… அல்லது அதில் இருந்து வெளியில் வந்து மனிதத்தின் உயரிய சிகரத்தை எட்டிப் பிடிக்கப் போகிறார்களா..? இதுதான் இந்தியா முன் உள்ள உண்மையான கேள்வி. ஐந்தாண்டுத் திட்டங்கள் போன்றவை இந்தக் கேள்வியின் ஒரு பாகம்தான். நீங்களும் நானும் (முதலில்) பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும்; எந்தப் பாதையில் செல்லலாம்; யார் நம்மை வழி நடத்த இருக்கிறார் என்று சிந்திக்க வேண்டும். நாம் இன்னமும் பழைய சண்டைகளிலேயே தங்கி இருந்தால், நம்மால் புதிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போய் விடும்.
தேர்தல்கள் வரும், போகும். ஆனால் தேசம் தொடர்ந்து நடை போடும். தேசத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் நிலைத்து நிற்கும். ஒற்றுமையை உறுதி செய்யும் சரியான பாதையில் செல்லக் கற்றுக் கொள்ளா விட்டால், ஒருங்கிணைப்பை சாதிக்க முடியாவிட்டால், உட்குழப்பங்களிலேயே மாட்டிக் கொண்டால், தேர்தல்கள் (மூலம்) எதையும் சாதித்து விடாது. யாரேனும் வெல்லலாம்; யாரேனும் தோற்கலாம். உண்மையில் தேசம் தோற்றுப் போகும். ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெற்றி அல்லது தோல்வி அல்ல இப்போதுள்ள பிரசினை. இது – தேசத்தின் வெற்றி, இந்தியாவின் வெற்றி குறித்தது.
இந்திய மக்களுக்கு, குறிப்பாய் பஞ்சாப் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சீக்கியத் தலைவர்களோ, இந்துத் தலைவர்களோ, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, எதிர்மறை உணர்வுகள் உங்களைக் கொண்டுபோக அனுமதிக்காதீர்கள்; தவறான பாதையில் போவதால், சரியான நடவடிக்கைகள் கூடத் தவறாகப் போய் விடலாம்.
காந்திஜி நமக்குக் கற்றுத் தந்த முக்கிய பாடங்களில் ஒன்று – தவறான பாதை, சரியான விளைவுகளுக்கு இட்டுச் செல்லாது. தவறான வழிமுறைகள் மோசமானதையே விளைவிக்கும்.
இந்தியாவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காலத்தில் நாம் வாழ்கிறோம். இன்றைய இந்தியாவில் வாழும் உங்களை நான் வாழ்த்துகிறேன். இந்தியாவின், உலகின் சரித்திரம் (மீண்டும்) எழுதப்படுகிற காலம் இது. நாம் இந்த சரித்திரத்தை எவ்வாறு எழுதப் போகிறோம்? பேனாவால் அல்ல; அது பிற்பாடு வரும். நாம் நமது சரித்திரத்தை நமது செயல்களால், நம்முடைய ஒற்றுமையால், நமது உழைப்பால் எழுத இருக்கிறோம். சுதந்திரத்துக்காக நாம் எழுதிய அந்த சரித்திரத்தைப் போல!
நாம் பெரிய வினாக்களைக் கையிலெடுப்போம். அற்பத்தனங்களில் நாம் வழி தவற விட வேண்டாம். (இப்படிப்பட்ட) அற்ப விவகாரங்கள் கூட சண்டையினால் பகைமையினால் தீர்ந்து போகப் போவதில்லை. எனவே இந்த வழிமுறையை விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதிய உலகைப் பாருங்கள்; புதிய சூரியன் உதிப்பதைப்பாருங்கள்; அதனை நோக்கி நடை போட, நாட்டை வழி நடத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சுதந்திரம் பற்றிக் கனவு கண்டோம்; இன்று அது நிறைவேறி இருக்கிறது. சில கனவுகள் மட்டுமே நிறைவேறுகின்றன. இந்தக் கனவுகள் நிஜமாகும். இவை கண்முன் நிஜம் ஆனதில் மகிழ்ச்சிதான்; ஆனால் அதுவே நமது இலக்கை எட்டப் போதுமானது அல்ல.
நாம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாய் உள்ளன. ஒன்றுபட்ட நாட்டை நிர்மாணிக்கப் பாடுபடுகிறோம்; இமயம் முதல் கன்னியாகுமரி வரை வலிமையான, பெரிய மனது புனித சிந்தனை கொண்ட, தமக்குள் ஒத்துழைப்பு நல்கும் மக்களைக் கொண்ட வளமான இந்தியாவை எழுப்புவதற்குப் பாடுபடுகிறோம். 43 கோடி, சாதியப் பாகுபாடுகளைத் துறந்து, மேலோர் – கீழோர் என்றில்லாமல், இத்தனை பேரையும் தமது சொந்த வலிமையில் முன்னேறச் செய்தல் – சாதாரண பணியல்ல. (இதற்காகத்தான்) எல்லாருக்கும், வளர்ச்சிக்கான சம வாய்ப்பு நல்க விரும்புகிறோம். மதங்கள், நமது நல்வாழ்வுக்கு வழிகோல வேண்டும்; ஆனால் வெறுப்பைக் கற்றுக் கொடுத்தால், நமக்குள் சண்டையிடக் கற்றுக் கொடுத்தால், அது வேறு ஏதோ, அது – தீமை. நமக்குள் சண்டை மூட்டுகிற, நம்மைப் பிளவு படுத்துகிற எல்லாவற்றையும் நாம் துறந்து விட வேண்டும்.
நான் ஓர் அளவுகோல் சொல்வேன். எப்பொழுது எது செய்வதாக இருந்தாலும், அது நம்மை ஒன்றிணைக்குமா பிளவுபடுத்துமா என்று கேட்டுப் பார்க்கவும். இதை அளவுகோலாகக் கொண்டு, உங்களின் செயல்களைக் கணக்கிட வேண்டும். மக்களை இணைத்தால், நல்லது. மக்களைப் பிரித்தால், தீயது. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வளர்ந்த மனிதனும் ஒவ்வொரு முதியவரும் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில், ஒழுங்கும் கட்டுப்பாடுமே முதன்மையானவை – இதயத்தின், சிந்தனையின் ஒற்றுமை, கட்டுப்பாடு… இதற்குக் குறுக்கே, மதத்தின் பெயரால் அல்லது வேறு எந்த முகமூடி அணிந்து, எது வந்தாலும் அது தவறு.
இங்கே எதிரில் அமர்ந்து இருக்கும் குழந்தைகள் – நாளைய இந்தியாவின் குழந்தைகள். இவர்கள் வளர்கிற போது இவர்கள்தாம் நாளைய இந்தியா.
இவர்களுக்கான உலகை நாம் நிர்மாணிக்க வேண்டும். இவர்கள் உன்னதமான உலகில் வாழ்வதற்காக நமது உழைப்பை நல்குகிறோம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். நமது பண்டைய நற்பண்புகளைத் தக்க வைத்துக் கொள்வோம்; புதியனவற்றை பழக்கப் படுத்திக் கொள்வோம். புதிய உலகை, அறிவியல் உலகை முற்றாகக் கற்று மேதைகளாவோம். நம்மைப் பிரிக்கும் அனைத்தையும் துறந்து ஒரு பெரிய குடும்பமாக நடை போடுவோம்.
இந்த 14 ஆவது சுதந்திர தினம் உங்களுக்கு நல்லனவற்றைக் கொண்டு வரட்டும். குறிப்பாக ஒன்றின் மீது உங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நம் குடியரசுத் தலைவர் சில நாட்களாக உடல் நலம் குன்றி இருக்கிறார். தற்போது சற்று தேறியுள்ளார்; ஆனாலும் உடல் நலமின்றி இருக்கிறார். நீங்களும் நானும் மொத்த நாடும் அவரைப் பற்றி சிந்திக்கிறோம். அவர்கள் விரைந்து நலம் பெற்று பல்லாண்டுகளுக்கு தேசத்துக்கு சேவையாற்ற வாழ்த்துகிறோம்.
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 14 - “சாதி, மொழி, மதத்தின் பெயரால் நஞ்சு விதைக்கப் பார்க்கும் சிலர்...” | 1960
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
22 days ago