அன்பார்ந்த ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்களே!
உங்களுடன் பேச வேண்டும் என்பதற்காகத்தான், நீண்டகாலம் கழித்து கடிதமாகவே எழுதுகிறேன். கடிதம் என்பது, மனதின் பிம்பம். மனதின் சாட்சி. மனசாட்சி. ஆகவே, என் மனசாட்சியாகவே இந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு, உங்கள் மனசாட்சியிடம் இதை ஒப்படைத்துவிடுங்கள்.
234 தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியில், இடைத்தேர்தல் நடந்தால், அதுபாட்டுக்கு நடக்கும். நம்பாட்டுக்கு நம் வேலையைப் பார்ப்போம். ஆனால் உங்கள் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தமிழகம் முழுக்கப் பரவியிருக்கிறது. எல்லா சாலைகளும் ரோம் நகரம் நோக்கி என்றொரு வாசகம் உண்டுதானே. அதேபோல் எல்லார் எண்ணங்களும் கேள்விகளும் சிந்தனைகளும் உங்கள் தொகுதி பற்றியதாகத்தான் இருக்கிறது.
ஆனால் இதற்காகவெல்லாம் பெருமைப்படுவதில் அர்த்தமே இல்லை. மகாத்மா காந்தியைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கோட்ஸேவையும் தெரியும்தானே. அப்படித்தான்... மிக மோசமான முன்னுதாரணங்களுடன் எல்லோரும் கைகொட்டிச் சிரிக்கும் வகையில் உங்கள் ஆர்.கே.நகர் தொகுதி அதாவது நம் தொகுதி இருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்... வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்!
முன்பெல்லாம் எப்படி ஓட்டு போட்டோம். இப்போது எப்படி ஓட்டு போடுகிறோம் என்பதை உங்களுக்குள் ஓட்டுபோட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். ‘அட... இவரு நல்ல குடும்பத்துலேருந்து வந்து நிக்கிறாரு’ என்று ஓட்டு போட்டோம். ‘ஆமாம்பா... ரொம்ப நல்ல மனுஷன்’ என்று வாக்களித்தோம். பிறகு, பிடித்த கட்சி, பிடிக்காத கட்சி என்று இரண்டாகப் பிரிந்தோம். நம் கட்சிக்கான வேட்பாளருக்கு கண்ணை மூடிக் கொண்டு ஓட்டளித்தோம்.
அப்புறம்... சாதிகள் சங்கங்களாக இருந்து, கட்சிகளாகவும் வளர்ந்தன. நாமும் நம் அபிமானக் கட்சியைக் கடந்து, சாதிப்பாசத்துடன் , ‘நம்ம சாதிக்காரன் நிக்கிறாருப்பா’ என்று பெருமிதம் பொங்க ஓட்டு போட்டோம்.
இப்போது இவை ரொம்பவே மாறித்தான் போய்விட்டன. அதாவது நாம் மாறித்தான் போய்விட்டோம். யார் காசு கொடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஓட்டு என மாறி மாமாங்கமாகிவிட்டது. இதற்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று பெயர் இருந்தது. இப்போது 234 தொகுதிகளிலும் இதே கதைதான் என்பதால், இது ‘தேர்தல் ஃபார்முலா’ என்றாகிப் போனது.
அதேபோல், தேர்தலும் திருவிழா போலாகிவிட்டது. தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை என எல்லாத் தெருக்களிலும் வேடிக்கை பார்க்க வந்ததில், அங்கே நடப்பவை எதுவும் வேடிக்கையானதாகத் தெரியவில்லை. மிகப் பெரிய விபரீதத்துக்கு தூபம் போட்டுக் கொண்டிருக்கிறோமோ என்று பதறித்தான் போனேன். எங்கு பார்த்தாலும் பணம் பற்றித்தான் பேசுகிறார்கள் நம் வாக்காளர்கள். ‘யக்கோவ்.... முந்தா நேத்தே தெருல சரிபாதி வூடுங்களுக்குக் கொடுத்துட்டாங்களாம். நமக்குத் தரக் காணோமே. வாக்கா... அந்தக் கட்சி ஆபீசுக்குப் போய் பாத்தாறலாம்’ என்று கட்சி பேதமின்றி காசு கொடுப்பதும், சாதி பேதமின்றி ஓட்டுப் போட நினைப்பதுமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுசரி... காசுக்கு ஏது கட்சி? பணத்துக்கு என்ன சாதி?
யார்யாரோ உங்கள் தொகுதியில் நின்றிருக்கிறார்கள். வென்றிருக்கிறார்கள். வெல்ல வைத்திருக்கிறீர்கள். அவர்கள் அடுத்தடுத்து அரசியல் வானில் பறக்க, கைகொடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் நீங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது ஜெயிப்பது அவர்கள்... ஜெயிக்க வைத்த நீங்கள்... தோத்தாங்குளிகள். இதுவே நிதர்சன உண்மை. வலிக்கிற நிஜம்.
‘எல்லாக் கட்சிக்காரங்களும் வருவாங்க சார். வழக்கத்தை விட பத்து, முப்பது லிட்டர் பால் கூடுதலா போவுது. காலைலன்னா டீ, பிஸ்கட், சாயந்திரம்னா டீ, பஜ்ஜி, வடைன்னு நமக்கு செம கல்லா சார்’ என்று உற்சாகத்துடன் சொல்கிற டீக்கடை அண்ணன்களும் பேக்கரிக் கடைக்காரர்களும் சொல்வதில் நியாயம் இருக்கிறது. அது வியாபாரம். ஆனால் அவர்கள், டீ விற்பது போல், காபி விற்பது போல், வடை பஜ்ஜி விற்பது போல், உங்கள் ஓட்டுகளை விற்கலாமா? அது வியாபாரமாகிவிடாதா. நாமும் நாடும் தேறுவதற்குத்தானே, வளர்ச்சி அடைவதற்குத்தானே தேர்தல். அப்படித் தேர்ந்தெடுப்பதற்குத்தானே ஓட்டு. ஆனால் மொத்த ஆர்.கே.நகர் தொகுதியும் சந்தையாகிவிட்டதுதான் கொடுமை. ஏலக்கடை போலாகிவிட்டதுதான் வேதனை.
’சின்னச் சின்ன பொருளெல்லாம் தேர்தல் சின்னமா இனிமே ஒதுக்காதீங்க. ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷினு, ஏஸின்னு சின்னம் கொடுங்க. அப்பத்தான் எங்க தொகுதில, எல்லா வீடுகளுக்கும் எல்லாப் பொருளும் வந்துசேரும்’ என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைப்பது போல், ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, அதாவது நம்மை, அதாவது வாக்காளர்களை கேலி செய்து, சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகிறார்கள். அந்த குறைந்தபட்ச சமூக அக்கறையை, ஓட்டு விற்காமல் நாம் காட்டினால், அதுதான் நாளைய சமூக நலனுக்காக மிகப்பெரிய அக்கறை என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது.
குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை உறுதியாகி, வேறோரு தொகுதியில்... நின்று ஜெயித்ததெல்லாம் செல்லாது என்றாகிவிட்டது. பிறகு, அந்தத் தொகுதிக்குத் தேர்தல். யாரோ நின்றார்கள். வென்றார்கள். பிறகு மேல்முறையீடு செய்து, ‘தப்பு தப்பு... கணக்கு தப்பு’ என்று தீர்ப்பு சாதகமாய் வந்ததும், உங்களின் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. அவசரம் அவசரமாய் ராஜினாமா செய்ய , மீண்டும் உங்கள் தொகுதியில் தேர்தல். அங்கே நின்று பதவிபோனவர், இங்கே நின்று ஜெயித்தார். பதவியிலும் அமர்ந்தார்.
இதிலொரு சோகம்... சீக்கிரமே வந்தது பொதுத்தேர்தல். அவரே நின்றார். ஜெயித்தார். பிறகு உடலநலமின்மை, அப்போலோ, சிகிச்சை, மரணம்.. என்பதெல்லாம் அரசியலின் சோக அத்தியாயம். அதற்குப் பிறகு நடந்ததுதான் அரசியல் ஆபாசம். அதன் பிறகு கட்சி இரண்டாக, மூன்றாகப் பிரிந்தது. சின்னம் முடக்கப்பட்டது. உங்கள் தொகுதிக்கு தேர்தல் வந்தது. இடைத்தேர்தல். அதாவது போனமுறையும் இரண்டு தேர்தலைச் சந்தித்தீர்கள். இந்த முறையும் இரண்டாவது முறையாக சந்தித்தீர்கள். ’காசு காசு...’ என்று அவர்கள் கூவ... ‘ஓட்டு ஓட்டு’ என்று நாம் கூவ... தேர்தல் சந்தையில், ஜரூராக நடந்தது ஓட்டு பிசினஸ். பணம் பாதாளம் வரை பாய்ந்தது டில்லி வரை எதிரொலித்தது. தேர்தலை ரத்து செய்த கேவலம், அவலம் நடந்தேறியது.
இப்போது, பாரம்பரியம் மிக்க, எல்லோர் மனதிலும் பச்சை குத்தப்பட்ட சின்னம் கிடைத்துவிட்டது. ஆனால் ஆட்சியின் செயல்பாடுகள், தங்களை தக்கவைத்துக் கொள்வதாகவே இருக்கிறது. அங்கே நீயா நானா உண்டு. கட்சிக்குள்ளேயே இருப்பதுதான் காமெடி.
’சின்னம் முக்கியமில்லை. மக்களின் எண்ணத்தில் இருப்பதே முக்கியம்’ என்று சொல்லி, சுயேச்சையாக நிற்கிறார். கட்சி கைக்குள் வரும் என்கிறார். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உங்களைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார். அதாவது உங்கள் ஓட்டுகளை பயன்படுத்தி, பலம் காட்டப் பார்க்கிறார்.
இன்னொரு பக்கம்... அலைக்கற்றை தீர்ப்பை அந்த நாளில் அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. மறுபக்கத்தில்... வடக்கே ஜெயித்தாலும் இங்கே நான்காமிடம்தான் கிடைக்கிற நிலை. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில்தான் இங்கே சூடு பறக்க நடந்துகொண்டிருக்கிறது ஓட்டு வியாபாரம்.
இனிய ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்களே! உங்கள் கையில் தான் ஓட்டு இருக்கிறது. உங்கள் கையில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது. உங்கள் கையில்தான் ஜனநாயகத்தின் மாண்பு இருக்கிறது. உங்கள் கையில்தான் நாளைய சமூகத்துக்கான வளர்ச்சியே இருக்கிறது.
‘அவங்ககிட்ட இருக்கறது நம்ம காசுதானே. நம்ம காசை அவன் நமக்கே தர்றான். அதை வாங்கிக்கறதுல இன்னா தப்பு’ என்று புத்திசாலித்தனமாகக் கேட்பவர்கள்தான் நம் வாக்காளர்கள். நம் காசுதான். நம்மிடம் இருந்து கொள்ளையடித்த காசுதான். காசை இப்படிக் கேட்காமல், சாலையாகக் கேளுங்கள். நல்ல தண்ணீர் வேண்டும் என்று கேட்போம். பள்ளியாக, கல்வியாக, மருத்துவமனைகளாக, ரேஷன் அரிசி, சர்க்கரைகளாக இன்னும் இன்னும் கேட்போம். நம் காசை, காசாகவே, பணமாகவே வாங்கவேண்டாம் வாக்காளர்களே!
‘எங்க அப்பாரு சுவுரா சொல்லுட்டார்டா. எவன் நெறய்ய துட்டு கொடுக்கறானோ, அவனுக்குத்தான் ஓட்டுன்னு கரீட்டா சொல்லிட்டாரு’ என்று ஏழாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பசங்களெல்லாம் தொகுதிக்கு உட்பட்ட குண்டும்குழியுமான சந்தில் விளையாடியபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஓட்டுப் போடுகிற வயது வராத அந்தப் பிள்ளைகளின் புத்திக்குள் ‘ஓட்டுக்கு பணம்’ என்பதைத் திணிக்கிற தவறைச் செய்யாமல் இருக்க ஒரே வழி... அந்தத் தவறை நாம் செய்யாமல் இருப்பதுதான்!
நூறு இருநூறு என ஆரம்பித்து ஆறாயிரமாக உயர்ந்திருக்கிறது ஒரு ஓட்டின் விலை. அவர்கள்... நம்மையும் மதிப்பதில்லை; நம் ஓட்டுகளையும் மதிக்கவில்லை. 'நான் ஏன் காசு கொடுக்கணும். இந்தத் தொகுதிக்கு எல்லாமே செஞ்சிருக்கேன்’ என்று அவர்கள் மாறவேண்டும். அவர்களை மாற்ற வேண்டும். முன்னதாக, நாம் மாற வேண்டும். ‘ஓட்டுக்கு துட்டுலாம் வேணாம்’ என்று நாம்தான் மாற வேண்டும்.
உடலோடு இருக்கிற உறுப்புகளை விற்பது சட்டப்படி குற்றம். அதேபோல் உரிமைக்கு அடையாளமான ஓட்டுகளை விற்பதும் அதிபயங்கர குற்றம். சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும்... நம் மனசாட்சியே நம்மை உறுத்தி, குத்திக்கிழித்து ரணப்படுத்திவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஆகவே உங்கள் வாக்குகள் பொன்னானவை. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை, சில ஆயிரங்களில் விற்றுவிடாதீர்கள். அந்தப் பொன்னான ஓட்டுக்குள்தான் உங்கள் சந்ததியும் இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் மானமும் எதிர்காலமும் இருக்கிறது.
இப்படிக்கு
உங்களில் ஒருவன்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago