இந்தியா சுதந்திரம் பெற்று 11 ஆண்டுகள் முடிவில், டெல்லி செங்கோட்டையில் இருந்து உரை ஆற்றிய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த முறை, புதிதாக எதுவும் சொல்லவில்லை என்றாலும் நம் நாட்டு மக்கள் மிகச் சிறந்த தியாக வரலாற்ரை முற்றிலுமாக மறந்து போய் விட்டனரோ என்கிற ஏக்கம், உரை முழுதும் தூக்கலாக இருந்தது.
அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; நமது பொதுவான இலக்கு நோக்கிய பயணத்தில் சக பயணிகளில் ஒருவனாகவே தானும் இருப்பதாய் பிரதமர் நேரு கூறியதில் உண்மை இருந்தது. தமது பதவிக் காலம் முழுதும், தான் மறையும் வரை, ஒரு சிறந்த ஜனநாயகவாதியாகவே திகழ்ந்தவர். 1958-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் நேரு, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்போர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார். இத்துடன் எப்போதும் போல, மகாத்மா காந்தியை நினைவு கூர்வதும் கடின உழைப்புக்கு மக்களைத் தயார் செய்வதும் என்று பழகிய பாதையிலேயே பயணிக்கும் நேரு ஆற்றிய உரையின் முழு வடிவம் இதோ:
பதினொரு ஆண்டுகள் ஆகி விட்டன. நமது கொடி உயந்து, நமது இதயங்கள் மகிழ்ந்து, நமது இலக்கை எட்டி பதினொரு ஆண்டுகள் ஆனாலும் இந்த விடுதலையின் காலைப் பொழுது இன்னமும் வற்றி விடவில்லை; அன்பு வற்றி விடவில்லை; ஆனால் மாறான ஒரு செய்தி வந்து கொண்டு இருக்கிறது. நாகரிக வழியில் நாம் விடுதலை பெற்றோம் வன்முறையற்ற வழியில் பெற்றோம் என்று நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்ளும் போது இங்கும் அண்டை நாட்டிலும் சகோதர சண்டையில் ஒருவருக்கு ஒருவர் கொல்லப்படுகிறார்கள் என்கிற செய்தி வருகிறது.
நம்முடைய டெல்லியிலும் இந்தப் போக்கு பரவியுள்ளதைப் பார்க்கிறேன். நமது தோல்வி கண்முன் தெரிகிறது. இது எதிரியால் வந்த தோல்வி அல்ல; எதிரியை நாம் வென்று விட்டோம்; இது நம்முடைய பலவீனம்; அக்கறையினமை; எல்லாவற்ரையும் விட இது மிகவும் ஆபத்தானது.
» செங்கோட்டை முழக்கங்கள் 10 - அன்று சொன்னதே இன்றும் | 1956
» செங்கோட்டை முழக்கங்கள் 9 - முக்கிய முடிவுகளுக்குத் தயாராவோம் | 1955
சிங்கத்தை, சிங்கம் போன்று எதிர்த்து நின்றோம். பிறகு பாம்பு வந்தது; நம்மைப் பின்னால் இருந்து கொத்தியது. ஞாபகப்படுத்த விரும்புகிறேன் – பின்னால் இருந்து வந்து கொத்துகிற பாம்புகள் இன்றும் இருக்கின்றன; நாம் இதுவரை செய்ததை எல்லாம் அழிப்பதற்கு, நம்மை பலவீனப்படுத்த, நம்மை இழிவு படுத்த, அவை இயன்றவரை முயற்சிக்கின்றன. இங்கே கூடி இருக்கும் நாம், ஒரு கணம் பின்னால் நோக்குவோம். சில கேள்விகள் நம் முன் உள்ளன. நாம் எங்கு செல்ல இருக்கிறோம்..? அதற்கு ஏற்ப, சூசகமாக இன்னமும் கடினமான பயணத்துக்குத் தயார் ஆவோம். எல்லாரும் சேர்ந்து செல்ல வேண்டும் – ஒருவரை ஒருவர் கைகோர்த்தபடி. அப்போது, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அவர்களின் பிரச்சினைகள் குறையும்; ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான வாழ்க்கைத் தேவைகள் கிடைக்கும்.
இன்றைய நமது பிள்ளைகள் – அடிமத்தனத்தின் கீழ் இருந்தார் இல்லை; இனி இருக்கப் போவதும் இல்லை. இவர்கள் - சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள்; இனி எப்போதும் சுதந்திரமாகவே இருப்பார்கள்; தலையை நிமிர்த்தி நடப்பார்கள்; அவர்களும் நாடும் வளமாக முன்னேற்றம் கண்டதாய் இருக்கும்.
இதை நாம் சிந்தித்தோம்; இந்த வழியில் ஆயிரக்கணக்கான பள்ளங்கள், தடைகள், தொல்லைகள் இருந்தன. ஆனாலும் இந்தியாவின் தலை பணிந்து விடவில்லை. கடந்த ஆண்டுகளில் பல பிரச்சினைகளை சந்தித்தோம் சங்கடப்பட்டோம் ஆனாலும் இந்தியா, தலை சாயவில்லை.
சாம்ராஜயத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றோம். இம்முறை நமது பணி மேலும் சவால் ஆனது. எந்த அளவுக்கு நாம் ஒன்று சேர்ந்து வாழ்கிறோம், உழைக்கிறோம், சவால்களை எதிர்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். நமக்குள்ளே ஒருவருக்கு எதிராக சண்டையிடப் போகிறோமா. காந்திஜியின் பாடத்தை மறந்து விட்டோமா? இந்தியாவின் பல்லாண்டு கால சரித்திரத்தை மறந்து விட்டோமா? நமது எதிர்காலத்தை மறந்து விட்டோமா? எதற்காக யாருக்காக உழைக்கிறோம்? நம்முடைய பிள்ளைகளை மறந்து விட்டோமா? என்ன பிரச்சினை என்று என்னால் புரிந்து கொள முடியவில்லை.
நான் உங்கள் முன், உங்கள் நடுவே வளர்ந்தவன். நிச்சயமாக மகிழ்ச்சியாய் இருக்கிறது இந்த நாளைக் கொண்டாடுவதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் 11 ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தமும் எழுகிறது. விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொலை செய்து கொள்ளும் போது, ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று சொல்ல முடியுமா? மோசமான நபர்களின் மோசமான நடவடிக்கை குறித்த மோசமான செய்திகளைக் குறித்து விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. அது நமது வேலை அல்ல.
இங்கு நான், எந்த ஒரு கட்சியின் சார்பாகவும் நிற்கவில்லை. உங்களோடு பயணத்தில் பங்கு பெறுகிற – கோடி மக்களில் ஒருவனாய் – இந்த வேண்டுகோள் விடுக்கிறேன். - நமது நெஞ்சத்தைக் கேட்டுப் பார்ப்போம் – நமது கடமை என்ன?
எந்தக் கடமை எந்தக் கொள்கையாக இருந்தாலும் ஒரு வழியில் மட்டுமே வெல்ல முடியும். குறையாத ஒத்துழைப்புடன் அமைதியாக இணைந்து பணியாற்ற வேண்டும். இல்லையேல் நமது வலிமை மொத்தமும் வீணாகி விடும். நமக்குள் கருத்து வேற்றுமை இருந்தால் புரிந்து கொள்ள முயற்சிப்போம். உலகத்துக்கு, பஞ்சசீலம் மூலம் உரக்கக் குரல் கொடுத்தோம். இதை உலக நாடுகள் கவனித்தன.
இங்கே என்ன நடக்கிறது? அவமானத்தால் தலை குனிய வேண்டி இருக்கிறது. முதலில் நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் சண்டையிட்டுக் கொண்டால் விடுதலை இல்லை; சோசலிசம் இல்லை; ஜனாயகம் இல்லை. அச்சுறுத்தலால் அடையப் போவது எதுவும் இல்லை. பெரிய நாடுகள் அணுகுண்டுகள் வைத்துள்ளன; இதன் மூலம், உலகை அழிக்கலாம் ஆனால் அவர்களுடன் பேசி அவர்களை நாம் நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும்.
அமைதி வழியில் மட்டுமே நாம் நிரந்தரத் தீர்வு காண முடியும். மேற்கு ஆசியாவில் நிலமை மிகவும் ஆபத்தாக உள்ளது. ஆங்காங்கே துருப்புகள் குவிக்கப் படுகின்றன. பயிற்சி பெற்ற இராணு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். போருக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி எதுவும் நிகழாது என்று நம்புவோம். பிரச்சினைகள் தீர்க்கப்படும். அந்த நாட்டு மக்களும் சுதந்திரமாக வாழலாம். எளிய வழிகளைப் பின்பற்றி, நல்ல நட்புடன் வாழ்வார்கள் என்று நம்புவோம்.
சிலர் இந்தியாவை அறிவார்ந்த நாடு என்று நம்புகிறார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவது, கோபப்படுவது, யாருக்கு எதிராகவும் கையை உயர்த்துவது - நம்மிடம் இல்லை. இப்படித்தான் மக்கள் நம்மைப் பற்றிக் கருதுகிறார்கள். எந்த அளவுக்கு இது சரி? எந்த அளவுக்கு இது உண்மை? இதற்கான உதாரணங்கள் இங்கே உள்ளன.
காந்தி ஜி யுகத்தில் பொறுமையுடன் அகிம்சை வழி நடந்தோம். காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் மக்கள் கடின உழைப்புக்குத் தயார் ஆனவர்கள். தியாக மக்கள். இன்று இவர்கள் எங்கு போனார்கள்? இந்தியாவுக்கு இழுக்கு ஏற்படுத்தும் மோசமான காற்று எங்கிருந்து வந்தது? குஜராத் நல்ல இடம். இது போன்று, பிற இடங்களிலும் எழலாம். இது எந்தக் கொள்கை வழிப்பட்டதும் அல்ல. ஒவ்வொருவரும் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள உரிமை இருக்கிறது.
பல வகைப்பட்ட கொள்கைகள் இருக்க வேண்டும். ஆனால் பிறரின் கருத்தை திணிப்பின் மூலம் மாற்ற முடியாது. துப்பாக்கி குண்டுகள் காட்டினால் – இதன் விளைவு என்னாகும்? விளைவு - முழுச் சேதம், பேரழிவு. குழியில் வீழ்வோம். முன்பு நமக்கு, காந்திஜி என்ற, வழிகாட்டக் கூடிய பேரொளி இருந்தது. இன்று நம்மிடையே இல்லை. இதற்குத் தயாராக வேண்டும்.
விஷமிகள் தவறாக வழி நடத்தலாம். பெரியவற்றை மறந்து விட்டு அற்ப காரணங்களுக்கு சண்டை இடுகிறோம். அரிய பெரிய காரியங்களைச் செய்து முடித்து விட்டுத்தான் இங்கே வந்துள்ளோம். சிலர் நம்மை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். எதனாலும் நமது பணி நின்று விடாது... நாம் என்ன சிந்திக்கிறோம்.. எங்கே போகிறோம் என்பதைப், புரிந்து கொள்ள வேண்டும். நமது பணியை நாம் துணிச்சலுடன் தொடர்வோம்.
11 ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு நாட்டின் வரலாற்றில் இது நீண்ட காலம் அல்ல. 11 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் நிலைமை என்ன? இதுதான், இந்தியாவில் பொதுவாக நாம் காணும் சூழலா? அல்லது நமது வீட்டில் மட்டும் உள்ள சூழலா? உங்களுக்கு ஆயிரம் குறைகள், புகார்கள் உள்ளன. சில சரியானவை; சில தவறானவை. ஒன்றன் பின் ஒன்றாகப் பிரச்சினைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. பயிர் இழப்பு, வெள்ளம், மழைப் பற்றாக்குறை, வறட்சி. இப்படிப் பல.
விலைவாசி உயர்வு.. நாள்தோறும் ஏறிக் கொண்டே போகிறது. மக்களாகிய நீங்கள் புகார் தெரிவிக்கலாம். நியாயம் இருக்கிறது. மறுக்க மாட்டேன். சிலர் வணிகத்தில் இருக்கிறார்கள்; மக்களின் நிலையைத் தமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தவறான பாதையில் நடக்கிறார்கள்; மிரட்டப் பார்க்கிறார்கள். நாட்டுக்கு சுமை ஆகிறார்கள். அவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்கிறார்கள். நாட்டை வளர்ப்பதற்கு பதிலாக துரோகம் இழைத்தால் நாடு எங்கு போகும்? அவர்கள்தான் எங்கு போவார்கள்..?
இது நம்முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. நாமும் உலகத்தின் ஓர் அங்கம். உண்மை. ஆனால் நம்முடைய கேள்வி நமது வீட்டை, நமது நாட்டைப் பற்றியது; நமது நகரம் நமது வசிப்பிடம் பற்றியது. தெற்கே கன்யாகுமரி ராமேஸ்வரம், வடக்கே காஷ்மீர், கிழக்கே.. மேற்கே... எங்கே இருந்தாலும்… இந்த நாட்டை யாராலும் உடைக்க முடியாது. நாம் ஒருவர்; இது, ஒரே நாடு. யாரும் இதனை உடைக்க விடமாட்டோம்.
நாம் இந்திய குடிமக்கள். இந்த நாடு.. இந்த இடம்… இதில் இருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்லர். (நாம் வேறு; நமது நாடு வேறு அல்ல) இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் – இந்தக் கோட்பாட்டுக்கு எதிராக யாரும் கையை உயர்த்தினாலும் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள். வெளிநாட்டு சக்திகள், உள்ளூர் சக்திகள்… இவர்களுகு எதிராகப் போராட வேண்டி இருக்கிறது. இந்திய ஒற்றுமை… இந்திய சுதந்திரம்… இதுவே முதன்மை ஆனது. இது இல்லாமல் இந்தியா எப்படி வளம் பெறும்?
நாம் சோசலிசம் நோக்கி நடக்க யத்தனிக்கிறோம். நாம் பலவீனமாகி விட்டோமா..?. தவறுகள் நடந்துள்ளன. இனியும் நடக்கலாம். இன்றைய தேவை என்னவெனில்.. நமது சிந்தையில் இதயங்களில் நெருப்பு கனன்று கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை நாம் இடறி விழுந்தால் மீண்டும் எழுகிற சக்தி நமக்கு வேண்டும். மாபெரும் சாம்ராஜ்யத்துக்கு எதிராகப் போராடுகிற ஆர்வம், சக்தி, சாதுர்யம் நமக்கு இருந்ததை நிரூபித்துக் காண்பித்தோம்.
இப்போது நாம் எந்த ஏமாற்று வேலைக்குள்ளு சிக்கிக் கொள்ளக் கூடாது. இப்போது இந்த நாட்டுக்கு ஒரு வாழ்வு இருக்கிறது. அஜாக்கிரதை கூடாது. மென்மேலும் அதிர்ச்சிகளும் சிராய்ப்புகளும் ஏற்படுவதும் நல்லதுதான்./ நாம் யார்..? நமது நாடு எப்படிப் பட்டது..? என்பதை அவை நமக்கு உணர்த்துகின்றன; நினைவு படுத்துகின்றன. நமது சரியான பாதை என்ன? நமது கடமை என்ன? இந்த இடம் ஒரு அடையாளம் ஆகி விட்டது. இந்தக் கோட்டை அடிமைத் தனத்தின் அடையாளச் சின்னமாக இருந்தது.
இப்போது..? விடுதலையின் அடையாளம் ஆகி விட்டது. நம்மை நினைவுபடுத்திக் கொள்வது கடமைதான் என்றாலும் அதற்காக மட்டுமே நாம் இங்கே கூடவில்லை.
என்ன உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்..?. என்ன உடன்படிக்கை மேற்கொண்டோம்? என்ன கடப்படுகளுக்கு நம்மை நேர்ந்து கொண்டோம்? எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தால் நமது வாக்குறுதிகளை நிறைவேற்றலாம்? இது குறித்து சிந்திக்கவே இங்கே வந்துள்ளோம்.
இங்கே சிறு பிள்ளைகள் நிரம்ப உள்ளனர். இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு சுதந்திரப் போராட்ட வரலாறு மொத்தமும் ஒரு கதை. அவ்வளவுதான். ஆனால் இது வெற்றுக் கதை அல்ல. நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகிற பாடம் அது. மகாத்மாவை நினைவில் கொள்ளுங்கள். அவரது நினைவு, நாம் தவறான பாதையில் போகாது நம்மைக் காக்கும். நமது நாடு சுதந்திரம் பெற, நாம் நிமிர்ந்து நிற்க, நிமிர்ந்து நிற்க, பாடுபட்ட இன்னுயிரை ஈந்த அத்தனை பேரையும் நன்றியுடன் வணங்குவோம். ஜெய் ஹிந்த்!
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 11 - வறுமையை ஒழிப்போம் | 1957
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
26 days ago