செங்கோட்டை முழக்கங்கள் 11 - வறுமையை ஒழிப்போம் | 1957

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்த ஆண்டு 1957 – முதல் சுதந்திரப் போர் என்று சரித்திரப் புத்தகங்கள் கூறும் சிப்பாய்க் கலகம் முடிந்து நூறாண்டு நிறைவுற்ற நிலையில், அதனை நினைவுகூரும் வாசகங்களுடன் தனது உரையைத் தொடங்குகிறார் பிரதமர் நேரு.

இன்று அதிக எண்ணிக்கையில் இங்கே கூடி இருக்கிறீர்கள். இந்தியாவின் சேவைக்காக ஏராளமாக தியாகம் செய்தோரின் நினைவுகளும் இங்கே கூடி இருக்கின்றன. இவர்கள், சுமார் 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ள நமது நினைவுகளின் வழியே இங்கு வருகை புரிந்துள்ளனர். எதற்கு முயன்றார்களோ, எதற்காக வியர்வை, ரத்தம் சிந்தினார்களோ, எந்தக் காரணத்துக்காக தமது இன்னுயிரை ஈந்தனரோ, அதனை சாதித்து விட்டோம். அதன் பிறகு, இதன் (விடுதலையின்) இந்த விளைவு இன்று எவ்வாறு முகிழ்த்து இருக்கிறது? அறிந்துகொள்ள ஆர்வமாய் அவர்களின் நினைவுகளை சுமந்தபடி இங்கே அமர்ந்து இருக்கிறீர்கள்.

இந்த செங்கோட்டையின் ஒவ்வொரு கல்லும் அந்தக் கதையைச் சொல்கிறது நூறாண்டுகளாகப் புகழ் பெற்று விளங்கும் அங்காடித் தெரு சாந்தினி சவுக் என் முன் இருக்கிறது. சாந்தினி சவுக் என்னவெல்லாம் பார்த்து இருக்கிறது? சாம்ராஜ்யங்களின் அணி வகுப்பு, பேரரசர்கள், இந்த நாட்டின் திருப்பு முனை, சாம்ராஜயங்களின் வீழ்ச்சி, புதிய மாநிலங்கள் உதயம், பண்டைய இந்தியாவின் மாபெரும் ஊர்வலங்கள், ஆங்கிலேயர் அரசுக்கு வந்தது… ஒவ்வொருவரும் பெரிய யானைகளில் வந்தனர்… எல்லாம்… வந்தன... சென்றன. இப்போது சுதந்திரம் கிடைத்து விட்டது. இந்த தேசத்தை நிர்மாணிக்கும் மிகப் பெரும் பணி உங்களுக்கும் எனக்கும் இருக்கிறது. நூறாண்டு கால கடின உழைப்பின் பலனை நாம் இன்று அறுவடை செய்கிறோம். இனி.., நம் கடின உழைப்பைத் தந்து இன்றைய நிலையை உறுதியாக்க வேண்டும்.

உலகின் சில பகுதிகளிலும் கூட, புதிய நாடு... புதிய பெரிய நாடு உதயம் ஆகி இருப்பதாய் செய்தி சென்று சேர்ந்துள்ளது. மற்ற நாடுகளிடம் இருந்து மாறுபட்ட குரலுடன், யாரையும் அச்சுறுத்தாத மிரட்டாத, இரைச்சல் செய்யாத நாடு… என்று உலக நாடுகள் (நம்மைப் பற்றி) பேசிக் கொள்கின்றன(ர்) இந்த நாடு, தனது மேலான தலைவர்களிடம் இருந்து இதனைக் கற்றுக் கொண்டுள்ளது. மகாத்மாஜி விட்டுச் சென்ற பணியின் வலிமை இன்னமும் இருக்கிறது. பத்து ஆண்டுகளில் இந்த நாடு, உலக அரங்கத்துக்கு வந்து விட்டது. ஒரு மல்யுத்த வீரனைப் போல அரங்கத்துக்குள் சண்டையிட வரவில்லை. தனக்குத்தானே சேவை செய்து கொள்ள, உலகத்துக்கு சேவை செய்ய வந்துள்ளது. விடுதலையைத் தன் மீது அணிந்துள்ளது. அதனோடு சில பொறுப்புகளையும் பூண்டுள்ளது.

நாம் சில ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து இருக்கிறோம். சுதந்திரத்துக்கு முன்பு இந்தியா எந்த வடிவத்தில் இருந்தது என்று இங்கே அமர்ந்து இருக்கும் குழந்தைகள் நினைவு கொள்வார்களா? நினைவு கொள்ளவில்லை எனில், கிராமங்களில், நகரங்களில் உள்ள உங்களால் (பிறரோடு) போட்டியிட இயலாது. மாபெரும் பணி.. ஒரு ‘மேஜிக்’ போல நடந்தேறியது. ஒரு மனிதரின் கடின உழைப்பு இந்தியாவை விடுதலை நாடாக்கியது. மனித உழைப்பினால் இது சாத்தியம் ஆனது! பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கடுமையாக உழைத்தோம். அதே கடின உழைப்புடன் இனி நமது நாட்டை நிர்மாணிப்போம்.

அதே ஒற்றுமை, அதே துணிச்சலுடன் முன்னேறுவோம். விரைந்து முன்னேற வேண்டும் எனில், கூடுதலாகப் போட்டியை எதிர்கொள்ள வேண்டும். சில சமயங்களில் தடுமாறவும் செய்யும். எப்போதும் சோம்பேறித்தனமாக அமர்ந்து இருப்பவர்கள்தாம் தடுமாறி விழுவார்கள். ஆனால் ஒட்டுமொத்த சமுதாயமும் விரைந்து செயல்படும் போது, தடுமாற்றத்தில் இருந்து மீண்டு எழுந்து முன்னிலும் வேகமாய் முன்னேறுவார்கள்.

இதுதான் நடந்து இருக்கிறது. சிலரின் துணிச்சல், சேதமுற்று இருக்கலாம். காரணம் நாம் ஏற முயற்சிக்கும் மலையின் உயரம் மிக அதிகம். நம் முன் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. நாம் களைப்பாய் இருக்கிறோம். மாபெரும் சாதனைகள் இவ்வாறு சாதிக்கப் படுவதில்லை.

இந்தியாவின் முகத்தைப் பாருங்கள்.. அப்படியே.. சுற்றுமுற்றும் பாருங்கள்.. . பல்லாயிரம் ஆண்டு பழமையான நமது நாடு எவ்வாறு வளர்கிறது? உலகின் பிற பகுதிகளில் இந்தியாவைப் பற்றி என்ன பேசப்படுகிறது.? நாம், உலகின் ‘மாமாக்கள்’ பற்றிப் பெரிதாய்க் கவலைப்படவில்லை (we don't care so much about the world's uncles) நமது நாட்டில் நாம் பல பெரிய பணிகளை மேற்கொள்கிறோம். இவற்றை நாம் நிறைவேற்றிக் காட்டுவோம்.

நிச்சயமாக சில பிரச்சினைகள் இருக்கின்றன. இப்போதெல்லாம், உலகின் எல்லா நாடுகளிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. இன்றைய யுகத்தின் ஒரு பக்கத்தில் புதிய ஆயுதங்கள் அணுகுண்டுகள், ஹைட்ரஜன் குண்டுகள், தலை மேல் தொங்கிக் கொண்டு இருக்கின்றன; எப்போது வெடிக்குமோ… அறியோம். மறு பக்கத்தில், மேலும் மேலும் கேள்விகள். பழைய உலகம் முடிந்து போனது. நாம் இப்போது புதிய உலகத்தில்.. அணுகுண்டு யுகத்தில் இருக்கிறோம். நாம் அறிவார்ந்து செயல்படப் போகிறோமா அல்லது மாபெரும் அழிவைச் சந்திக்க இருக்கிறோமா என்பதே கேள்வி. நாம் கைகோர்த்து நடப்பதில் காட்டும் துணிவு, ஒற்றுமையைப் பொருத்தது அது.

இந்தப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் உள்ள காட்சி என்ன? எதிர்காலம் குறித்த காட்சி எப்படி இருக்கிறது? பத்தாண்டுகளில் சிலவற்றை சாதித்து இருக்கிறோம். சில பழமையான சங்கதிகளைத் துடைத்து எறிந்து விட்டோம். வழி சுத்தமாக இருக்கிறது. அரசியலைப் பார்க்கும் போதே பொருளாதாரப் ,பிரச்சினைகளையும் பார்க்கிறோம். சில பாதைகளை, சட்டத்தின் மூலம், சிலவற்றை சமூக முன்னேற்றம் மூலம் திருத்தி இருக்கிறோம்.

ஆமாம். இன்னமும் (முழுதாய்) தெளிவாகவில்லை. நாம் செல்லச் செல்ல, புதிதாய்க் கேள்விகள் எழுகின்றன. இன்று நாமும் நாடும் பலவகைக் கேள்விகளை எதிர்கொள்கிறோம். உணவுப் பொருட்களின் விலை ஏறிக் கொண்டு இருக்கிறது. இதை நிச்சயம் கவனித்தாக வேண்டும்.

தற்போது இந்தியா முழுவதும், பெரிய தொழிற்சாலைகள், பெரிய இரும்பு ஆலைகள் உள்ளிடவை கட்டப்பட்டு வருகின்றன. பெரிய திட்டங்கள் என்பன – வளர்ச்சியின் அடையாளங்கள். சிறிது காலத்துக்கு விலை அதிகமாய்த் தோன்றலாம். ஏனெனில் இந்தத் தொழிற்சலைகளின் பயன்கள் இன்னமும் முழுதாய் வந்து சேரவில்லை. (உதாரணத்துக்கு) இரும்பு ஆலை கட்டி விட்டோம்; இரும்பு இன்னும் தொழிற்சாலையில் இருந்து வரவில்லை. இன்னும் ஓராண்டில் வரத்தொடங்கி விடும். இது இடைப்பட்ட காலம். நமது உழைப்பின் பலனைப் பெறத் தொடங்காத காலம். அதற்காக உழைக்காமல் விட்டால், நாளை, பலனைப் பெற இயலாது.

தற்போது, இந்தியா மொத்தமும் தொழிற்சாலைகள் எழுந்து வருகின்றன. லட்சக் கணக்கானோர், உற்பத்தியில் இறங்கி உள்ளனர். நிதானமாக வேலை நடந்து கொண்டு இருக்கிறது. இதன் பலனை சமுதாயம் பெறும் நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இதுவே இந்தியாவில் நிலவும் காட்சி.

இந்தியாவை உருவாக்குவோர் யார்? வெளியில் இருக்கும் யாரும் இல்லை. நாம்.. நாம்… நாம்... நாம் எல்லாரும் சேர்ந்து உயர்த்துவோம். ஒரு அரசாங்கத்தால் நாடு உயர்வதில்லை; சட்டங்களால் நாடு உயர்வதில்லை; சமூக ஒற்றுமை, சமூக வலிமையால் சமூகத் தேவையால் (மட்டுமே) உயர்கிறது.

எதிரே ஏராளமான குழந்தைகள் (சிறுவர்) வீற்று இருக்கிறீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள். சுதந்திர இந்தியாவின் குழந்தைகளுக்கு வாழ்த்துகள். நீங்கள் வளர்ந்து உற்சாகத்துடன் இந்த நாட்டுக்காக உழைப்பீர்கள்; இந்த நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்வீர்கள்.

இதோ.. இப்போது மழை பொழிகிறது. (கைதட்டல்) எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மழையில் நனைகிறோமே.. என்று கவலைப் படலாம். ஆனாலும், இந்த நாட்டின் வளமையை நான் பார்க்கிறேன். உங்கள் இதயங்கள் மலர்வதை நான் பார்க்கிறேன். (கைதட்டல்)

இமயம் முதல் குமரி வரை உங்கள் முன்னால் இந்த நாடு விரிந்து கிடக்கிறது. இங்கே.. தில்லியில் மட்டுமல்ல; நாடு முழுதும் இன்று கொண்டாடுகிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறப்பான நாளில் முதன் முதலில் இங்கே. செங்கோட்டை வளாகத்தில் இருந்து பேசினேன். அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் நான் இங்கு வருவது.… யதேச்சையாக நடந்து விட்டது. இங்கே வந்தோம். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். முன்னோக்கிப் பார்க்கிறோம்.. நமது விருப்பங்களில் உறுதி கொண்டோம். மேலும் வலிமை
கொண்டவர்களாய் வீடு திரும்பினோம். இதே முறையில், இன்றும் ஒன்று கூடி இருக்கிறோம்.

இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்த, தமது ரத்தம் சிந்தி விடுதலைக்கு அடித்தளம் இட்ட, பல பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. சுதந்திரம் கிடைத்தது.. ஒரு மேஜிக் அல்ல; சுதந்திரம் என்கிற கட்டிடம், ஒவ்வொரு செங்கல்லாகக் கட்டப்பட்டது.

வரலாற்று ஆசிரியர்கள் நமது 100 ஆண்டு சுதந்திரப் போராட்டம் குறித்து பெரிது பெரிதாய் புத்தகங்கள் எழுதுகிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். உண்மைதான். என்ன நடந்தது என்பது குறித்து, பல்வேறு கருத்துகள் இருக்கத்தான் செய்யும்.

இந்திய மக்கள் எழுந்தார்கள்; அந்நிய ஆட்சியை அகற்ற முயன்றார்கள். இதில் யாருக்கும் ஐயம் இருக்கிறதா..? இந்தப் போராட்டத்தில், வெவ்வேறு மதத்தவர் ஒன்றாய் எழுந்தனர்; இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாய் எழுந்தனர்; ஒன்றாய் முயற்சித்தனர்; ஒன்றாய் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அதனால்தான் 1857 ஆண்டுக் கலகம், விடுதலைப் போராட்டம் எனப் படுகிறது.

அந்தக் காலத்து இந்தியா வேறு மாதிரி இருந்தது. அது, மன்னர் காலம். பகதூர் ஷா பாட்ஷா ஆண்ட காலம். ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அப்போது இந்தியா என்னவாக இருந்தாலும், அது சுதந்திரத்துக்காக முயற்சித்த காலம்; பொது மக்கள் அதில் பங்கு பெற்றனர். பல பெயர்கள்… நானா சாஹிப், குன்வர் சிங், லியாகத் அலி கான், உங்களுக்குப் பிடித்த லட்சுமிபாய் ராணி. (கைதட்டல்) இந்தப் பெயர்கள் எல்லாம் இன்று நம் இதயத்தில் உள்ளன. ஏனெனில் இவர்கள்தாம் சுதந்திரத் தீயை மூட்டியவர்கள். இதனை தலைமுறை தலைமுறையாகத் தாங்கி வருகிறோம். நம்முடைய தலைமுறையில் நாமும் இதனை உயர்த்திப் பிடித்தோம் என்பது பெருமைக்கு உரியது. இதனைத் தளர விடாதீர்கள். நம்மில் யாருக்கேனும் களைப்பு ஏற்பட்டால், வேறு யாரேனும் வந்து வாங்கிக் கொள்வார்கள்; தாங்கிக் கொள்வார்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டு பழமையான நாட்டை சேர்ந்தவர்கள் நாம். அதே சமயம் இது புதிய நாடும் கூட. நாம் இளமையின் உற்சாகத்தோடு இருக்கிறோம். இது ஓர் இளமையான நாடு. ஒரு புறம் சுமார் 56,000 ஆண்டுப் பழமை; மறு பக்கம், பத்து வயதுக் குழந்தை! ஆனால் இந்தக் குழந்தை மிகவும் வலிமை பொருந்தியது. சிந்தையில் இளமை இருக்கிறது. தொடர்ந்து வளர்கிற குழந்தை இது.

சுதந்திரத்துக்கான போராட்டம் என்றும் வற்றாதது. அது என்றும் முடிவுறாதது. அடுத்தடுத்து தலைவர்கள் உதித்தனர்; சுதந்திர ஜோதியை உயர்த்திப் பிடித்தனர். தாதாபாய் நெளரோஜி வந்தார்; சாதித்தார். லோக்மான்ய திலகர் வந்தார்; நாட்டையே உலுக்கினார்; வலிமை சேர்த்தார். இவர்கள் புதிய பாடங்களைக் கற்றுத் தந்தனர்; ஒற்றுமை சொல்லித் தந்தனர்; வெவ்வேறு சமயத்தவர் ஒன்றாய் வாழ வழி காட்டினர். மனதில் பகைமை இல்லாது, அமைதியாய்ப் பணி புரிய பாடம் எடுத்தனர்.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம புத்தர் பிறந்த நாடு. நூற்றாண்டுகளுக்குப் பின்பு மகாத்மா காந்தி தோன்றி நமக்குப் புத்தாக்கம் தந்தார். பழம்பெரும் பண்பாடு, பழைய வலிமை… மீண்டும் தோன்றியது.

மகாத்மாவின் கோட்பாடுகளால் விடுதலை அடைந்தோம். அதுவே, உலகம் முழுதும் நமக்கு மரியாதை பெற்றுத் தந்தது. காந்தியின் சிந்தனைகளை இதயத்தில் தாங்கி உள்ளோம். இதுவன்றி நமது அடித்தளம் வலுவாக இராது. இன்று அவரை நினைவு கொள்வோம். அவரை நினைவில் கொண்டால் (மட்டுமே) நிச்சயமாக நாம் வலுவான நாடாகத் திகழ்வோம்; முன்னேறுவோம்.

நாம் உலகின் எந்த நாட்டோடும் சண்டை இடவில்லை. பாகிஸ்தான் ஒரு காலத்தில் நமது நாட்டின் ஒரு பகுதி. அவர்களுடன் சண்டையிட, நமக்கு எப்படி மனம் வரும்? (ஒருவேளை சண்டை இட்டால்) தன்னைத்தானே வருத்திக் கொள்வது போல. அவர்கள் நமக்குத் தீங்கு நினைத்தால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக் கொள்வது போலத்தான். இதுதான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வினோதமான உறவு. சில சமயங்களில் சிலருக்கு சினம் தோன்றலாம். ஆனாலும் ஆயிரம் ஆண்டு உறவு, அழித்து விட முடியாது.

ஒருவேளை இந்தியாவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், அது பாகிஸ்தானுக்கும்தான்; அதேபோல பாகிஸ்தானுக்கு ஏதும் ஏற்பட்டால் அது இந்தியாவுக்கும் இழப்புதான். அவர்களின் சுதந்திரத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். நமது சுதந்திரத்தில் நாம் மகிழ்வோம். அமைதியாக வாழ விரும்புகிறோம். நட்புடன் வாழ விரும்புகிறோம். இதற்கு, அச்சுறுத்தினால் அஞ்சி விடுவோம் என்று பொருளல்ல. நம்முடைய உரிமைகளில் நாம் உறுதியாய் இருப்போம்.

ஒவ்வொரு நாட்டோடும் நட்பாய் இருப்போம். சண்டை என்பது எப்போதும் மனதில் பகைமையைத் தாங்கிக் கொண்டு இருப்பது. (ஆகையால்) வேண்டாம். என்ன இருந்தாலும், நமது நாட்டில் நாம் எவ்வளவு உழைக்கிறோமோ, அதற்காகவே நாம் மதிக்கப் படுவோம். இன்று உலகில் நமக்கு மரியாதை இருக்கிறது எனில், கடந்த பத்து ஆண்டுகளில் நாம் ஆற்றிய பணி அப்படி.

உழைக்கும் சமுதாயம் உதயமாகி விட்டது, வேகமாய் வளர்ந்து கொண்டு கொண்டு இருக்கிறது. பழைய பிரச்சினைகளை எல்லாம் வென்றாக வேண்டும். படிப்படியாய் முன்னேற வேண்டும். வேலையில்லாப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவோம். கிராமங்கள், நகரங்களில் நமது ஏழை சகோதர சகோதரிகளை சூழ்ந்துள்ள வறுமை அகற்றப்படும். இதுவே நம் முன் விரியும் காட்சி. அடிமைத் தனத்தை விரட்டியது போல, வறுமையையும் இந்த நாட்டில் இருந்து விரட்டி அடிப்போம். இது உறுதி. ஜெய்ஹிந்த்.

(தொடர்வோம்)

முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 10 - அன்று சொன்னதே இன்றும் | 1956

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்