செங்கோட்டை முழக்கங்கள் 8 - ஒன்றாய் உழைப்போம்... ஒன்றாய் உயர்வோம் | 1954

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியப் பிரதமராக ஜவஹர்லால் நேரு, மக்களுக்கு ஆற்றிய உரைகள் எல்லாவற்றிலும் தவறாது வலியுறுத்திய இரண்டு அம்சங்கள் – ஒற்றுமை; உழைப்பு. 1954-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையிலும் இவையே முக்கிய இடம்பெற்று இருந்தன.

‘புதிய இந்தியா உதயமாகி 7 ஆண்டுகள் ஆயிற்று. ஒவ்வோர் ஆண்டும் இங்கே செங்கோட்டை வளாகத்தில் நாம் கொண்டாடுகிறோம். இந்தக் கொண்டாட்டம் நம் எல்லாருக்குமானது; பல கோடி மக்களுக்கானது. இந்தியா புதிய வாழ்க்கையைத் தொடங்கி உள்ளது. புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.’

‘இந்த, ஏழு வயதுக் குழந்தை எவ்வளவு வளர்ந்து உள்ளது? இனி வரும் காலத்தில் எங்கு செல்ல இருக்கிறது?’

தன்னுடைய உரைகளில் நேரு, எதிர்காலம் குறித்த தெளிவான பார்வையும், மிகுந்த நம்பிக்கையும் வெளிப்படுவதை ஒரு கடமையாகக் கொண்டு இருந்தார்.

எப்போதுமே நம் முன் பெரிய கேள்விகள் இருக்கத்தான் செய்யும். இப்போது நமக்கு, ஒரு புதிய வாழ்க்கை உருவாகி உள்ளது. கிராமப் பகுதிகளில் வாழ்க்கையில் மின்னல் கீற்று (வெளிச்சக் கீற்று) தென்படுகிறது. உறங்கிக் கிடந்த மக்கள் விழித்துக் கொண்டு விட்டனர். பழமையில் ஊறியவர்களின் உடல் இதயம் சிந்தனைகள் – புதிய திசை நோக்கித் திரும்பி உள்ளன. இதுதான் இன்று பாரதத்தில் நிலவும் நற்சூழல்.’

கள நிலைமை, யதார்த்த நிலைமையை மறைத்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக் கொள்கிற வழக்கம் நேருவுக்கு இருந்ததே இல்லை. அதனால்தான் கூறுகிறார்: ‘ஏராளமான பிரச்சினைகள் உள்ளன; ஏராளமான சகோதர சகோதரிகள் பிரச்சினையில் உள்ளனர். இருப்பினும் நாம் இந்த முக்கிய பயணத்தில் முன் நோக்கி நகர்ந்து வருகிறோம்.’

இந்தியா தன்னிறைவு பெற வேண்டும்; எல்லாரும் வளமாக வாழ வேண்டும் என்பதே நேருவின் விருப்பமாக, இலக்காக இருந்தது.

‘சுதந்திரம் வந்து விட்டது. ஆனால்…, சுவராஜ்யா..? சுதந்திரத்தின் அர்த்தம் என்ன?. சோம்பேறியாக அமர்ந்து இருப்பது அல்ல. சுயாட்சி அல்லது விடுதலை – இத்துடன் முடிந்து விடுவதில்லை. ஒரு நாட்டு வளர்ச்சியில் இது முதல் படி மட்டுமே.’

‘புதிய பயணத்துக்கான புதிய பாதை இது. ஒரு நாட்டின் சுதந்திரம் (என்றைக்கும்) முடிந்து விடக் கூடியது அல்ல. அது மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். வாழ்கிற ஜனசமூகம் நாம். (ஒரு கணமும்) நிற்பதற்கு இல்லை; நகர்ந்து கொண்டே இருத்தல் வேண்டும். இதற்காகத்தான் நாம் சுதந்திரம் பெற்றோம்.’

இதன் (நம்மிடம் இருந்து) ஒருதுண்டு, ஒரு சிறிய பாகம் தனித்துப் போனது; அங்கிருந்து சில குரல்கள் வருகின்றன; கலவரங்களுக்கு வழி கோலுகிறது. சிறிய பாகமும் நம்மோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.. உலக நாடுகளின் எதிர்பார்ப்பும் இதுதான். கோடானுகோடி மக்கள் இதனை நிறைவேற்றுவார்கள்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் விடுதலைக்கு வருகிறார் நேரு. கூறுகிரார்:

‘விடுதலை என்பது அரசியல் விடுதலையுடன் நின்று விடுவதில்லை. சுயாதிகாரம் மற்றும் சுதந்திரத்துக்கு வேறு அர்த்தங்களும் உள்ளன. அது – சமூக விடுதலை; பொருளாதார விடுதலை. நாட்டில் வறுமை இருக்கிற வரை, ஏழைகளை விடுதலை சென்று சேரவில்லை என்றுதான் பொருள். அவர்களை நாம் இன்னமும் விடுவிக்கவில்லை என்றுதான் பொருள். வறுமையின் பிடியில் உள்ளவர்களை, வறுமைக்கு அடிமைப் பட்டவர்களை அதில் இருந்து விடுவித்தாக வேண்டும்.’

‘இதேபோன்று, நமக்குள் நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நம்மிடையே சுவர் இருந்தால், நாம் இணைந்து வாழவில்லை என்றால், நாம் இன்னமும் முழு சுதந்திரம் பெறவில்லை என்றுதான் பொருள். நாம் நிறைய பேச வேண்டி உள்ளது. வறுமையை ஒழிக்க வேண்டும் எனில், வேலைவாய்ப்பின்மையை நீக்க வேண்டும். மதம், சாதி, மாநிலம் என்கிற வேற்றுமைகள் அகற்றப்பட வேண்டும். ஒரு கிராமத்தில் ஓர் இந்தியன் வாழ்கிறான். அவரை வேறு பெயர் சொல்லி அழைத்தால்.., உணவு உண்ண, (சாலையில்) நடந்து செல்ல, மானத்துடன் வாழ, அவருக்குத் தடைகள் இருக்குமானால், அந்த கிராமம் இன்னமும் விடுதலை பெறவில்லை என்றுதான் பொருள்.’

‘இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் விடுதலை பெற்றுத் தரவேண்டும். பொருளாதார வசதி மட்டுமல்ல; வாழ்க்கை நிலை – வாழும் சூழல், கல்விக்கு வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள்… தரப்பட வேண்டும்.’

எல்லாருக்கும் பொதுவாக ஒரு வேண்டுகோள் விடுக்கிறார் பிரதமர் நேரு:

‘இந்த நாட்டு வளர்ச்சி என்கிற பெரும் பணியை, எங்களிடமே (எல்லாவற்றையும்) விட்டுவிட்டுப் பிரிந்து செல்லாதீர்கள். நீங்களும் உடன் வர வேண்டும். நாம் வளர வேண்டும். இந்த உலகம் வளர வேண்டும்.’

நமது நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகில் புரட்சிகர மாற்றம் நிகழ்ந்துள்ளது. உயர்வும் தாழ்வுமாக பல மாற்றங்கள் தெரிகின்றன. நாம் மறுபிறவி எடுத்துள்ளோம். இந்த நிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆசியாவில் என்ன நடைபெறுகிறது? பல நூற்றாண்டுகளாக இங்கிருந்த ஆட்சிமுறை மாறி வருகிறது’.

‘பிரிட்டிஷுடன் நமக்குப் பகை கிடையாது. இங்கிருந்து அவர்கள் கிளம்பிய போது சண்டையை அல்ல; நட்பையே விட்டுச் சென்றனர். பர்மாவிலும் இப்படியே. ஆசியாவின் பல நாடுகளில் அன்னிய ஆட்சி இருந்தது. சில நாடுகளில் இன்னமும் சில தடைகள் உள்ளன. இந்தோனேசியாவில் உள்ளது. ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆளுகிற யுகம் – பழசாகி விட்டது. இன்று உள்ளது அந்த யுகம் அல்ல. ஒரு புதிய யுகத்தில் உள்ளோம். நல்லதோ தீயதோ, அன்னிய ஆட்சியை விரும்புகிறவர்கள் – இந்த உலகின், இன்றைய ஆசியாவின் இதயத்தை உணராதவர்கள்.’

ஒரு சம்பவம் நிச்சயம் நேருவின் மனதை நெருடிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். மீண்டும் அங்கேயே வருகிறார். கூறுகிறார்:

‘இந்தியாவின் சிறிய பாகம் – சில கிராமங்கள் கொண்ட பாகம். அவ்வளவுதான். ஆனாலும் அது நமக்குத் தொல்லை கொடுக்கிறது. உடலுக்குள் ஒரு சிறிய பாகம் சிறிய தொல்லை கொடுத்தாலும் அது பிரச்சினைதானே..? இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும். (இல்லையேல்) எதிர்காலத்திலும் பிரச்சினைகள் இருக்கும். நமக்கென்று உயரிய கோட்பாடுகள் உண்டு. அந்த வழியிலேயே தீர்வு காண்போம்.’

‘இந்திய சுதந்திரத்தை ஆசியா ஒப்புக் கொண்டது. போர்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஏதேனும் ஒரு ‘பரிட்சை’ உள்ளது. என்ன நினைக்கிறீர்கள்? இது என்ன செய்யும்? இது எங்கு போகும்? இது என்ன தரும்? தவறான அணுகுமுறையால் தொல்லைகள் பெருகும். சரியான அறிவுரையால் பிரச்சினை தீர, பல வழிகள் உள்ளன. ’

இந்த உரையின் நிறைவு வரிகளில் நேரு தனக்கே உரிய சிறப்பு முத்திரை பதிக்கிறார். முழங்குகிறார்:

‘தற்போது இந்தியா மகத்தான பயனத்தில் உள்ளது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், சமணர், யூதர், புத்த மதத்தினர் வாழும் பெரிய சமூகம் இது. எல்லாரும் இந்தியர்களாக முன்னேறுகின்றனர். தமது கடின உழைப்பின் மூலம் நாட்டை முன்னேற்றுகின்றனர். நமக்கு உதவ நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. வானத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. நமக்குக் கரங்கள் இருக்கின்றன; கால்கள் இருக்கின்றன; சிந்தனை இருக்கிறது .பரஸ்பரம் முன்னேறுகிறோம். இந்த நன்னாளில் எல்லாரும் கொண்டாட்டத்தில் பங்கு பெற அழைக்கிறேன். எல்லா வல்லமையுடன் உழைக்க அழைக்கிறேன். கிராமத்தில் நகரத்தில் எங்கிருந்தாலும் – இந்தியாவை வலிமையாக்க வாருங்கள். ஜெய்ஹிந்த்!’

(தொடரும்)

முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 7 - கடுமையான உழைப்பின் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குவோம் | 1953

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்