சோ: ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத குரல்!

By பால்நிலவன்

சோவின் நிலைப்பாடுகளில் நான் உட்பட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாறுபட்ட கருத்து உண்டு. உதாரணமாக ஈழத்தமிழர் போராட்டத்தில் அவரது நிலைப்பாடுகளும் அதன் வீரியத்தை குறைத்து மதிப்பிட்டு பேசிய வரையிலும் அவருடன் நிறைய பேருக்கு மாறுபட்ட கருத்துகள் ஏற்பட்டதுண்டு.

ஆனால் சோவின் நகைச்சுவை மற்றும் உடனுக்குடன் வழங்கும் சுருக்கமான பதிலிலும், முக தாட்சண்யம் பார்க்காமல் சரி, தவறை சுட்டிக்காட்டலிலும் அவரின் ஆற்றலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. துக்ளக் பத்திரிகையை எத்தகைய நெருக்கடியான சூழலிலும் அரசு விளம்பரங்கள் எதுவும் இன்றி ஜனநாயகத்தில் தனது குரலை அழுத்தமாகப் பதிவுசெய்தவர் அவர்.

திரைப்படங்களில் சோ பங்கேற்ற பாத்திரங்கள் வாயிலாக அன்றைய நாட்டு நடப்பை மட்டுமல்ல இவர் பங்கேற்ற திரைப்பட நாயகர்களின் அன்றைய அரசியல் நடவடிக்கைகளையும் அவர் உடன் நடிக்கும் அதே படங்களிலும் இவர் வெளிப்படுத்திய நகைச்சுவை உத்தி அபாரமானது.

முகமது பின் துக்ளக் நாடகம் 1971ல் எழுதி நடித்தார். அதில் இந்திரா காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதே நாடகத்தை 80களில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலும் அவரது ஆட்சியை விமர்சிக்க இந்நாடகத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அது மட்டுமின்றி எம்ஜிஆர் ஆட்சியை விமர்சிக்கும் விதமாக மேடையேற்றப்பட்ட 'நேர்மை உறங்கும் நேரம்' நாடகம் 80களில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்காக இவர் 70களின் கருணாநிதி ஆட்சியை ஆதரித்தார் என்று சொல்லமுடியாது... இவரைப் போல அந்த ஆட்சியை விமர்சித்தவர்கள் யாரும் இருக்கமுடியாது.

சோவின் விமர்சன துணிச்சலுக்கு உதாரணமாக துக்ளக் இதழில் நெருக்கடி காலகட்டத்தின் அவரது செயல்பாடுகள் உடனே நினைவுக்கு வரும். ஆனால் அவரது செயல்பாடுகளில் முதன்மையானதாகக் கருத நமக்கு இடம் அளிப்பது மொரார்ஜி ஆட்சியில் ஜனதா கட்சி அமைச்சர்களின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை அட்டைப்படத்தில் வயிறுவலிக்க சிரிக்கும்படியான கார்ட்டூன்கள் வெளியான காலம்தான்.

70களின் இறுதியில் ஜனதா கட்சியின் டெல்லி ஆட்சி கூட்டணியை அவரது அட்டையில் ராஜ்நாராயண் உள்ளிட்ட எல்லா பெட்டிகளும் கழன்றுகொள்ள வெறும் ஜனதா ரயில் என்ஜின் செல்வதான அட்டைப்படத்தை இதுநாள்வரைக்கும் மறக்கமுடியாமலிருக்க ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி என்று தான் நேசிக்கும் ஜனதாவையும் அவர் ஒளிவுமறைவின்றி கிண்டலடித்தார்.

ஜெ. முதல்முறை ஆட்சி நடத்திய சமயம் (1991-1996) அந்த ஐந்து ஆண்டுகளை கடுமையாக விமர்சனம் செய்தார் சோ. ஜெயலலிதாவின் வளர்ப்புமகன் சுதாகரன் திருமண வைபவத்தில் அரசாங்க இயந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை கடுமையாக சாடினார். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பார் இலானும் கெடும் என்கிற குறளுக்கேற்ப தனது விமர்சனத்தை யாராயினும் அது ஜெ. ஆயினும் முன்வைக்கத் தயங்கியதில்லை சோ. இதனாலேயே அந்த ஆட்சியை கவிழ்க்க ஊடகங்களின் வாயிலாகவும் நேரடியான முயற்சிகளிலும் இறங்கினார். அதில் வெற்றியும் கண்டார்.

அப்போதைய ஆட்சி மாற்றத்திற்கு காரணகர்த்தாக்களில் ஒருவர் என்ற வகையில் அடுத்தடுத்து வந்த ஆட்சிகளில் நேர்ந்த தவறுகளை உரிமையோடு சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சியில் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் குறுநில மன்னர்களானதை எள்ளி நகையாடினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் வென்று மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்ற திமுகவின் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் திமுக ஆட்சியைக் குறித்து தனது அதிருப்தியை தொடர்ந்து தெரிவித்துவந்தார். 2ஜி உள்ளிட்ட விவகாரங்களில் அவர்களது அதிகார துஷ்பிரயோகத்தை துணிச்சலாக தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார். திமுகவோடு முரண்பட்டபோதும் அவர்களுடனான நட்புறவுகளில் எப்போதும் முகம் சுணங்கியதில்லை. ஜெ.வோடு நிறைய முரண்பட்டாலும் அவர் மீது நட்பும் அன்பும் கொண்டவர் சோ... பலபடி மேலே சென்று சோவின் ஆலோசனைகளை ஜெ. கேட்டு நடந்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

கலையுலகிலிருந்து வந்தவர்கள் என்ற முறையில் சகோதர வாஞ்சையோடு ஜெ.வுடன் அவருடைய நட்பை கவுரவத்தோடு போற்றி வந்தார். அதே நேரம் தவறு செய்தால் அது யாராக இருந்தாலும் (எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா) அவர்களை ஆட்சியிலிருந்து கீழே இறக்க தீவிரம் காட்டியவர் சோ . இந்த வலிமையான குரலுக்கு பின்னுள்ளது ஆதாயம் தேடாத அவரது நேர்மை என்ற ஒரே ஆயுதம்தான். அவரது அரசியல் விமர்சனங்களை சந்தேகிக்கமுடியாது என்பதற்கு சில உதாரணங்களே இவை.

குறைந்தபட்சம் இந்த அணுகுமுறைதான் இங்கு குறைவாக இருக்கிறது. சோ எல்லோரிடமும் நட்பு பாராட்டியபடியே அவர்களை விமர்சிக்கவும் தயங்கியதில்லை எனும் நடைமுறை ஆரோக்கியமான சூழலுக்கு வலு சேர்க்கக்கூடியவை. ஒரு நாடக ஆசிரியராக அவரது மேடை நாடகங்களை ஒரு திரைப்பட நடிகராக அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை ஒரு திரைக்கதையாசிரியராக அவரது வசனங்களை போகிற போக்கில் எனக்கும் அவரைத் தெரியும் என்று ரசித்துவிட்டுப் போகலாம்.

ஆனால், ஒரு திரைப்பட இயக்குநராக 'முகமது பின் துக்ளக்', 'உண்மையே உன் விலை என்ன?', 'மிஸ்டர் சம்பத்', 'யாருக்கும் வெட்கமில்லை', 'சம்போ சிவ சம்போ' போன்ற படங்களை அவர் இயக்கும்போது அதில் சோவின் எதிர்மறை நகைச்சுவை பாத்திரங்களை சற்றே ஆராய்ந்து பாருங்கள். சமகால அரசியலை இவர் அளவுக்கு பகடி செய்தவர்கள் வேறு யாரும் இருந்தார்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

ஆக இவர் அந்தந்த நேரத்தில் ஒவ்வொருவரின் ஆட்சிமுறையை கவனித்து அதை விமர்சித்து அவர்களை சரியான பாதையில் செல்வதற்கான அறிவுறுத்தல்களாகவே அவருடைய விமர்சனங்கள் அமைந்திருந்தன. தவிர தனிமனித காழ்ப்பு அல்லது கொள்கைவெறி சார்ந்த எதிர்ப்பு போன்ற தன்மைகளில் அவரது விமர்சனங்கள் அமைந்திருக்கவில்லை.

''சுல்தான் நீங்கள் காடுகளுக்கு மிருக வேட்டையாடச் செல்லும்போது மனிதர்களையும் வேட்டையாடுவீர்களாமே என்று அமைச்சர் கேட்க, அதற்கு சோ நக்கலாக சொல்வார், 'ஆமாம். விலங்குகளை வேட்டையாடும்போது சற்று அலுப்பு ஏற்பட்டால் வழியில் கிராமத்தில் உள்ள மனிதர்களையும் நான் வேட்டையாடுவதுமுண்டு'- எந்த அரசாக இருந்தாலும் நிலைதடுமாறி செயல்படும்போது அப்போதுவெளிப்படும் அவற்றின் கோரமுகத்தை கிழிக்கும் வசனம் இது...

இன்றுள்ள தமிழ் சமுதாயத்தில் சோ தவிர்க்கமுடியாத குரல் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அப்படி புரிந்துகொள்வது என்பதில், 'மொழிகுறித்த நல்ல பார்வையில்லை, ஈழத்தமிழர் அவலம் குறித்து பெரிய ஆர்வமில்லை, 'எங்கே பிராமணன்'எனும் தொலைக்காட்சி தொடரை இயக்கியதன் மூலம் சனாதன தர்மத்தை தூக்கிப் பிடித்தல், மோடி குறித்து கண்மூடித்தனமான நம்பிக்கை' - என நீங்கள் சார்ந்த அரசியலுக்கு எதிரானதாகவும் இருக்கலாம்.

அதனாலென்ன ஒட்டுமொத்தமாக அவரைப் புறக்கணிக்காமல் அவரது நீண்டகால பணிகளை உள்வாங்கி விமர்சிப்பதன் மூலமாவது ஜனநாயகத்தின் பன்முகத் தன்மைக்கு பலம் சேர்ப்பதில் நம்மையும் இணைத்துக்கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்