தமிழால் நெகிழவைக்கும் குடும்பங்கள்!

By பாரதி ஆனந்த்

'என் பெயர் நிகரன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். தமிழ் வழியில் கல்வி பயில்கிறேன்' - இப்படி ஒரு சிறுவன் என்னிடம் அறிமுகம் செய்து கொண்டபோது என் காதுகளில் தேன் பாய்வதை உணர்ந்தேன்.

வீட்டிற்கு வரும் விருந்தினர், உறவினரிடம் 'பாப்பா அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லு', 'சே ஹலோ டூ ஆன்ட்டி' என்றெல்லாம் வித்தை காட்டுவது போல் குழந்தைகளின் ஆங்கிலப் புலமையை பறைசாற்றிக் பெருமைகொள்ளும் இந்த காலகட்டத்தில், எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தை அழகாக தமிழ் பேச வேண்டும் என விரும்புகின்றனர், ஊக்குவிக்கின்றனர்?

இதை அறிந்துகொள்ள எத்தனித்தபோதுதான் நிகரனின் அறிமுகம் கிடைத்தது. அழகாக தமிழ் பேசும் நிகரனைப் பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள அவனது நண்பர்களும் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக் கொள்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. நிகரன் வீட்டில் அனைவருமே அநாவசியமாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் இனிமையாக தமிழ் பேசுகின்றனர்.

நிகரனின் தாய் காந்திமதியுடன் பேச்சு விரிவடைந்தது. பொதுவாக குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் மத்தியில் சற்று வேறுபட்டு நிற்கிறார்கள் நிகரனின் பெற்றோர். குறிப்பாக நிகரனின் தாய் காந்திமதி.

"ஆங்கிலத்தில் பேசுவது சமூக அந்தஸ்தாக கருதப்படுகிறது. ஆங்கிலப் புலமை உள்ள நபர் மிகப் பெரிய அறிவாளி என்ற தோற்றமும் நிலவுகிறது. சமுதாயத்தோடு ஒன்றரக்கலந்துவிட்ட இந்த கருத்தோடு இயைந்து வாழ சமூகமும் பழகிவிட்டது.

ஆங்கிலம் தெரியாமல் போய்விட்டால் எதிர்காலத்தில் குழந்தை தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாகவே ஆங்கில வழிக்கல்வி, வீட்டிலும் ஆங்கிலம் பற்றாகுறைக்கு ஸ்போகன் இங்கிலிஷ் வகுப்பு என குழந்தைகள் ஆங்கிலம் பயில்வதில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது.

என் குழந்தையை தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் சேர்க்கப்போகிறேன் என்றபோது குடும்பத்திற்குள்ளேயே அவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றை மீறியும் நானும் என் கணவரும் எங்கள் விருப்பம் போல் குழந்தையை தமிழ் வழிப் பள்ளியில் சேர்த்தோம்" என்றார்.

தமிழ்வழிக் கல்விக்கான அவசியத்தை விவரித்தபோது, "தாய்மொழி வழி கற்றலே உண்மையான கற்றல். அவ்வாறு கற்பதன் மூலமே துரிதமான புரிதல் ஏற்படுகிறது. சுயசிந்தனை, கற்பனைத் திறன் கூடுதலாக வளர்கிறது. ஆங்கில மொழிக்கற்றலில் எவ்வளவு உருப்போட்டாலும் புரிதல் என்பது முழுமையானதாக இருக்காது. மனித மூளையானது, தாய்மொழியிலேயே சிந்திக்கும். அப்படி இருக்கும்போது ஆங்கில மொழியில் கல்வி கற்கும்போது, ஒவ்வொரு முறையும் தமிழில் மொழிபெயர்த்து அதன்பின்னரே புரிதல் ஏற்படுகிறது. இதனால் சிந்தனைத் திறனுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

தாய்மொழிக் கல்வியால், சிறு வயதிலேயே புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கமும் உருவாகிறது. தன் மரபு சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த நூல்களை அதிகம் வாசிக்கும் போது பக்கவாட்டுச் சிந்தனை உதயமாகிறது. ஆனால், ஆங்கிலத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். நிகரனும், ஆங்கிலத்தையும் ஒரு புதிய மொழி என்றளவில் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறான்" என தன் கருத்துகளை முன்வைத்தார்.

நிகரன் ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை. நிகரனும் தமிழும் அந்த வீட்டில் அழகாக விளையாடிக் கொண்டிருக்க, இன்னொருவரையும் சந்திக்க நேர்ந்தது. இல்லத்தரசி சவிதா, தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தை வாயில் வார்த்தைகள் அரும்பும் போதே மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி என சிறு சிறு வார்த்தைகளை வலுக்கட்டாயமாக திணிக்காமல் பிள்ளைத் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் சவிதா.

"குழந்தையின் மூன்று வயது வரை முழு நேரமும் அதனுடன் செலவிட்டு அரவணைத்துச் செல்வது அவசியம். அதனாலேயே என் ஊடகப் பணியை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு ஆற்றல் அறிவனுடன் வீட்டில் இருக்கிறேன். என் நேரமும், பொழுதும் செம்மையாக செலவாகிறது. ஆற்றலுடன் நாங்கள் எப்போதும் தமிழில் தான் பேசுகிறோம்.

ஆங்கிலம் பயில்வதோ, பேசுவதோ தவறில்லை. ஆங்கிலமும் அத்தியாவசியம் தான். ஆனால் அது எங்கு தேவையோ, எவ்வளவு தேவையோ அவ்வளவே பயன்படுத்தினால் போதுமானது. வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் உரையாடுவதே உறவுகளுக்கு இடையே இணக்கத்தை வலுப்படுத்தும். குழந்தையின் உணர்வுகள் அப்படியே பிரதிபலிக்கப்படும். குழந்தை அழுத்தமாக, அழகாக, தமிழ் பேசும் போது கேட்டுப் பாருங்கள் அப்போது தமிழுக்கும் அமுதென்று பேர் என பாவேந்தர் சொன்னது புரியும்.

ஆற்றல், வளர்ந்து வரும்போது அவனை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கவே திட்டமிட்டுள்ளோம். கண்களால் நேரடியாக ஒரு பொருளைக் காண்பதற்கும், கண்ணாடி வழியாக காண்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதோ அதைத் தான் தமிழ்வழிக் கற்றலுக்கும் ஆங்கிலவழிக் கற்றலுக்கும் உள்ள வேறுபாடாக உணர்கிறேன்.

தமிழ் வழியில் கற்கும் போது எளிதில் புரிதல் ஏற்படும். மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எத்தனை காலம் ஆனாலும் படித்தது பசும்மரத்து ஆணி போல் பதிந்திருக்கும். கசடற கற்று அதன்படி நிற்க தாய்மொழியே சிறந்தது" என்றார் சவிதா.

நிகரன், ஆற்றல் நம் கண் முன் இரு சாட்சிகள். இவர்கள் போன்று இன்னும் பல இங்கும், அயல்நாடுகளிலும் இருக்கின்றனர்.

பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொதுஇடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது ஏன் தமிழ்ப்பேச ஊக்குவிப்பதில்லை என பேராசிரியர் ராஜாராமனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தபோது, "அது ஆங்கிலம் நம் சமூகத்தில் பெற்றிருக்கும் மதிப்பின் விளைவு" என்றார்.

'ஆங்கிலத்தின் மதிப்பை' விவரித்த அவர், "காலனி ஆதிக்கத்தில் இருந்த நம் நாட்டில் அந்த ஆதிக்கம் முற்று பெற்றாலும் கூட அது விட்டுச்சென்ற மொழியின் ஆதிக்கம் இன்னும் சற்று கூட அகலவில்லை. உயர்கல்வியில் ஆங்கிலத்திற்கு இருக்கும் முக்கியத்துவம், அதற்குள்ள பொருளாதார மதிப்பு, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என பல்வேறு கூறுகள் ஆங்கிலத்திற்கு தனி மதிப்பளித்துள்ளன. ஒரு மொழி ஆர்வலராக, ஆய்வாளராக ஆங்கில் மொழிக்கென நம் சமூகத்தில் ஒரு தனி மதிப்பு இருப்பதை உணர்கிறேன்.

பன்மொழிப்பேசக் கூடிய, பலவகை கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்துள்ள நம் இந்திய திருநாட்டில், ஆங்கிலம் வெறும் பயன்பாட்டு மொழியில் இருந்து ஒரு தேவையாகிவிட்டது.

இதன் காரணமாகவே தொடர்பு மொழி என்ற ஒரு நிலை வரும்போது ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பு மாயை அல்ல, அது உண்மையானதே.

அதுவே பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கின்றனர். ஆங்கிலத்தின் பயன்பாடும், மதிப்பும் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தமிழ் மொழி வளர்ச்சி நடக்காமல் இல்லை. தமிழ் மொழி வளர்ச்சி அந்த அளவுக்கு வெளிப்படையாக தெரியவில்லை. அந்த வெற்றிடத்தை இப்போது ஊடகங்கள் நிரப்பி வருகின்றன. தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளை அவ்வப்போது உலகிற்கு வெளிச்சம் காட்டி வருகின்றன.

இவை ஒருபுறம் இருக்க, ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பை மீறி தமிழ் மொழியானது பேச்சில் இருந்து கற்றல் வரை எங்கும் வேரூன்றி நிலைநிறுத்தப்பட்ட உருமொழியாகும். ஆனால் இவை ஒரு நாள் இரவில் ஏற்பட்டுவிடாது, அதற்கு காலங்கள் சில ஆகும்.

அத்தகைய சமூக மாற்றத்திற்கு மக்களின் மொழிப்பற்றும் அதிகரிக்க வேண்டும். தாய்மொழி வழி கற்றல் குறித்த விழிப்புணர்வும் பரவலாக ஏற்பட வேண்டும். ஜப்பான், ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியால் ஏற்பட்டுள்ள நன்மை அப்போதுதான் உணரப்படும். தாய்மொழிக் கல்வியே சமூக வளர்ச்சிக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் வித்திடும்.

இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டும் தமிழ்வழிக் கல்வி பயிலும் குழந்தைகள் இருக்கும் நிலை மாற அண்மையில் ஐ.ஏ.எஸ். தேர்வில் முழுக்க முழுக்க தமிழில் படித்து வெற்றி பெற்ற ஜெயசீலன் போன்றோர் தூண்டுகோலாக இருப்பர். ஒன்று, நூறாகும், நூறு ஆயிரமாகும். எல்லாம் மாறும் எதிர்காலத்தில்" என்றார் ராஜாராமன்.

பாரதி ஆனந்த், தொடர்புக்கு ap.bharathi@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்