செங்கோட்டை முழக்கங்கள் 7 - கடுமையான உழைப்பின் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குவோம் | 1953

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியா சுதந்திரம் அடைந்து ஆறு ஆண்டுகளாகிவிட்டன. முதல் பொதுத் தேர்தல் முடிவடைந்து மக்களின் பேராதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஜவர்லால் நேரு பிரதர் ஆனார். 1953 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினை உரையாற்றுகிறார் நேரு. எந்த இடத்திலும் காங்கிரஸ் அடைந்த வெற்றி, மக்கள் தனக்கு வழங்கிய பதவி குறித்துப் பெருமையாயப் பேசவில்லை. முந்தைய ஆண்டில் அவர் சொன்னது போல, ‘இயல்பாய்’ எடுத்துக் கொள்கிறார். நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியில் திளைப்பவராக இல்லை நேரு. மாறாக ‘இனி என்ன.?’ என்பதிலே அதிக அக்கறை காட்டுகிறார்.

‘இந்த நாளில் நாம் – சுதந்திரம் பெற்றவராக, வலிமை கொண்டவர்களாக மாறி நாம் பின்பற்றப் போகும் கொள்கை என்ன என்று நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் பலவீனம் அடைந்து விடுவோம்.’

‘நமது நாடு பல்லாயிரம் ஆண்டு வரலாறு உடையது. இத்தனை ஆண்டுகளில் பெருமிதம் அடைந்தோம்; அதே நேரம், சரிவையும் கண்டோம். மீண்டும் மீண்டும் சரிந்து விழுந்தோம். மீண்டும் மீண்டும் எழுந்து நின்றோம். நமக்கு இந்த வலிமையைத் தந்தது எது.? நம்மை பலவீனம் ஆக்கியது எது?’ இனி நாம் சென்று சேர வேண்டிய இடம் (இலக்கு) எது? எங்கே போகிறோம்? நமக்கான பாதை எது? மிக அருமையான கருத்தை முன் வைக்கிறார் நேரு:

‘தவறான பாதையில் சென்று யாரும் சரியான இலக்கை அடைய முடியாது. தவறான செய்கைகள் புரிவதன் மூலம், நல்ல விளைவுகளைப் பெற முடியாது. இது அடிப்படை விஷயம். இதை நாம் மறந்து போனால், நமது எல்லாப் பணிகளும் அழுகிப் போகும்.’ மெல்ல மெல்ல பாகிஸ்தான் பிரசினைக்குள் நுழைகிறார்.

‘நல்ல செய்கைகள் செய்து சுதந்திரத்தின் கனிகளைப் பெற்றோம். இந்த சுதந்திரத்தை நாம் கொண்டாடுகிற போது, ஆறாவது ஆண்டாக இங்கே நான் கொடி ஏற்றுகிறபோது, பாகிஸ்தானில், இந்தியாவில் வாஜ் மாகாணததில் பிரச்சினைகள் தெரிகின்றன.

ஒரு பிரச்சினை என்று வருகிறபோது (அதைத் தீர்த்து வைக்க) அங்கே எத்தனை பேர் ஓடி வருகிறார்கள்? எத்தனை பேர் நின்று எதிர் கொள்கிறார்கள்? நல்ல செயல்களின் விளைவுகளும் நல்லனவே. ஆனால்… தீய செயல்களின் தீய விளைவுகள் நம்மை வருத்துகின்றன.

ஒவ்வோர் ஆண்டின் சுதந்திர தின உரையின் போதும், சில கருத்துகளை நேரு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறார். ஏன் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று தோன்றலாம். ஆனால் அதற்கு வலுவான காரணம் இருந்தது.

தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியுறாத காலத்தில், அநேகமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, பிரதமராக நாட்டு மக்களிடம் உரையாற்றுகிற வாய்ப்பு கிடைக்கிற போது, சில விவரங்களை சில உண்மைகளை மீண்டும் மீண்டும் சொல்லத்தானே வேண்டும்? நேரு கூறுகிறார்:

‘நாம் ஈர இதயத்துடன் சிந்திக்க வேண்டும். நம்முன் பெரிய பணி உள்ளது. 36 கோடி மக்களை நாம் உயர்த்தியாக வேண்டும். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது மிகப் பெரிய காரியம். ஆயிரக்கணக்கான ஆண்டு பழைமை வாய்ந்த தேசத்தை புதுப்பித்தல் மிகக் கடினம் ஆகும். என்ன செய்ய வேண்டும்? இப்போது நமது கடமை என்ன?’

முதன்மையானது – நம்முடைய சுதந்திரத்தைப் பேணிக் காக்க வேண்டும். இது நம் அனைவரின் தலையாய கடமை. இரண்டாவதாக எல்லா நாடுகளோடும் நட்புறவு பேண வேண்டும். அவர்களுடன் ஒத்துழைத்து முன்னேற வழி காண வேண்டும். பிற நாடுகளின் விவகாரங்களில் நாம் தலையிடக் கூடாது. நம்முடைய பணிகளில் பிறரின் தலையீட்டை அனுமதிக்கவும் கூடாது. இதே வழியில், இங்கிருக்கும் யாரையும் யாரும் வெளியேற்ற அனுமதிக்கக் கூடாது. நமக்கான பாதையில் நாம் நடக்க வேண்டும். மூன்றாவதாக, முக்கியமானதாக, நமது நாட்டில் நாம் என்ன செய்ய வேண்டும்? 36 கோடி மக்கள் கொண்ட குடும்பத்தை எவ்வாறு நடத்திக் கொண்டு போக வேண்டும்?

நம்மைப் பிரிக்கிற எதையும் அனுமதிக்கலாகாது. பிரிவு எண்ணம், நம்மில் ஒருவரை ஒருவர் எதிரி ஆக்குகிறது; நம்மைத் தரம் தாழ்த்துகிறது.

மாநில உணர்வுகளுக்கு நாம் இடம் தரலாகாது. மாநிலத்தை முதன்மைப் படுத்தினால், நாடு பின்னுக்குத் தள்ளப் பட்டு விடும். நாட்டை முன்னேற்ற வேண்டும். நாடு முன்னேறினால் நாம் ஒவ்வொருவரும் முன்னேறுகிறோம் நாடு வளரவில்லை எனில் நாம் யாரும் வளரவில்லை. ஒரு மாநிலத்தின் ஒரு மாவட்டம் முன்னேறி உள்ளதா... பின்தங்கி உள்ளதா.. என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

இதே போன்று, ‘இனம்’ – நம்மைச் சுற்றியுள்ள மூன்றாவது சுவர். இது நம்மை தனியே வைத்து இருக்கிறது. ஒரு பெரிய நாடு என்கிற உருவாக்கத்தை இது பலவீனம் ஆக்குகிறது. தனி மனித வலிமை அல்ல - நாட்டு வலிமை. அது எதனினும் மேலானது. நமக்குள் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைப் பொருத்தது அது. தெளிவாகக் கூறுகிறார் நேரு:

நாம் அரசியல் சுதந்திரம் பெற்று விட்டோம். ஆனால் அது முழுமையான சுயராஜ்யம் அல்ல. சுயராஜ்யம் முழுமை அடையும் போது அது ஒவ்வொருவரையும் சென்று சேரும், அப்போது ஒவ்வொருவரின் பொருளாதார நிலையும் முன்னேறி இருக்கும். இது பெரிய பணி.

தனி மனித பொருளாதார வளர்ச்சியில்தான் இந்த நாட்டின் ‘ஸ்வராஜ்ய’ கனவு நிறைவேறுகிறது என்பதில் நேருவுக்கு இருந்த தெளிவும் உறுதியும் ஒரு நாளும் குறைந்ததாய்த் தெரியவில்லை. இதனோடு கூடவே, இல்லாமையை எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

‘இந்தியாவில் இருந்து வறுமையை முற்றிலுமாக அகற்ற வேண்டும். (ஒவ்வொருவரும்) தத்தம் உழைப்பின் மூலம் தனக்கு வேண்டியதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் வழியே நாட்டின் சொத்து அதிகரிக்கும். இந்தப் பணி, நமது ஆற்றலை விடப் பெரிது’.(அதாவது, நமது ஆற்றலுக்கு விஞ்சியது இது.) இதனைத் தொடர்ந்து தனக்கு மிகவும் பிடித்தமான உலக அமைதி குறித்துப் பேசத் தொடங்கி விடுகிறார். கூறுகிறார்:

உலக அமைதி கொண்டு வருவதும் நமது பணியே. அமைதிக்காக நம்மால் ஆனதை செய்வோம். எங்கும் சண்டை இருக்கக் கூடாது. இதைத்தான் நாம் முயன்று கொண்டு இருக்கிறோம்.

உலக நடப்புகளில் நமக்கு பெரிய பங்கு இருத்தல் வேண்டும் என்பது நேருவின் முக்கிய விருப்பமாக இருந்தது இல்லை. நமது வீட்டை சரிவர கவனித்து வந்தாலே போதும்.

சுதந்திரம் அடைந்த தொடக்க ஆண்டுகளிலேயே இந்திய ராணுவம், உலக நாடுகளில் அமைதி ஏற்படத் தனது பங்களிப்பைத் தருவதில் முனைப்பு காட்டியது. பிற நாடுகளில் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமன உதவிகள் புரிய நமது ராணுவம் அயல் நாடுகளுக்குச் செல்லத் தயாராகி விட்டது. பிரதமர் நேரு புகழ்ந்து பேசுகிறார்:

நம்மால் ஆன சிறிய பணியை ஆற்றி இருக்கிறோம். ஆயிரக்கணக்கான துருப்புகள், ஆயிரக்காணக்கான தோழர்கள் – கொரியா நோக்கி சென்றுள்ளனர். ஒரு நாட்டின் ராணுவம் எதற்காக வேறு நாட்டுக்கு செல்கிறது? சண்டையிட ,போர் தொடுக்க இதற்காகதானே.? ஆனால்... நமது ராணுவம் அமைதியை நிலை நாட்டுவதற்காகப் போகிறது.

தமக்குள் சண்டை இட்டுக் கொள்ளும் நாடுகள், நம்மை அழைக்கின்றன. ஏதாவது கடமை ஆற்ற அழைக்கின்றன.. நாம் (தலைமை) பொறுப்பு ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் நமது கடமை என்று வரும் போது நிச்சயம் நிறைவேற்றுவோம்.

நாம் பேச்சுவார்த்தை வேண்டும் என்கிறோம். ஆனால் சிலர், அச்சுறுத்தும் வகையில் பேசுகிறார்கள். அமைதி வேண்டும் எனில், அச்சுறுத்தல் ஆகாது. உறவுக்குக் கைகளை நீட்டுவதால் மட்டுமே அமைதி கிட்டும். அச்சுறுத்துவதால் அல்ல. சண்டை இட்டுக் கொள்வோர் சமாதானமாகப் பேசட்டும். வெற்றுப் பேச்சு உதவாது.

நமக்கு உள்ளேயும் ஒரு கடமை இருக்கிறது.. நமக்குள் வறுமை இருக்கிறது. இந்த வறுமை ஒழிக்கப் பட வேண்டும். எல்லாரும் இணைந்து வேலை செய்தால், வறுமை இருள் அகலும் ‘ஒளி’ - நமது நண்பன் ஆகும்.

இன்றுடன் ஒரு வாரம் ஆகி விட்டது. பாகிஸ்தான் செய்த தொந்தரவால் காஷ்மீரில் சில விரும்பத்தாகத சம்பவங்கள் நடந்தன. இது குறித்து இன்று நான் நிறைய பேச விரும்பவில்லை. வதந்திகளுக்குக் காது கொடுக்காதீர்கள்.

பாகிஸ்தான் நாட்டுச் செய்தித்தாள்களைப் படிக்கும் போது எந்த அளவு பொய்யான செய்திகள் வெளியாகின்றன என்று நான் வியந்து போகிறேன். மக்களைத் தூண்டி விடும் செய்திகள் பகைமையை உருவாக்கும். மற்றவரிடம் தீய விஷயங்களை விவாதிப்பது கூடாது. நான் கராச்சிக்கு சென்றது போல பாகிஸ்தான் பிரதமர் இங்கே விருந்துக்கு வருகிறார்.

நினைவில் ஏந்துவோம்... கடுமையான உழைப்பின் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குவோம்!

(தொடர்வோம்)

முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 6 - வரவேற்கிறது வருங்காலம் | 1952

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்