ஒருவருக்கொருவர் போனிலும் நேரிலுமாக வாழ்த்துகள் சொல்லி, ஆரவாரித்துக் கொண்டாடுகிற ஆங்கிலப் புத்தாண்டு... இதோ... பிறக்கப் போகிறது. இந்த சமயத்தில், கேக்கையும் தாண்டி, எலுமிச்சைப் பழம், ஆப்பிளெல்லாம் கொடுத்து வாழ்த்துச் சொல்லும் சம்பவங்களையும் கடந்து முன்னுக்கு வந்து நிற்கின்றன சபதங்கள்!
அநேகமாக, உங்கள் நண்பர்களோ உறவினர்களோ கூட உங்களிடம் புத்தாண்டு சபதத்தைச் சொல்லிப் பெருமைபடப் பூரித்துப் போயிருப்பார்கள். ‘இதைத்தானேடா போன வருஷமும் சொன்னே...’ என்று நீங்கள் நக்கலடித்திருக்கலாம்.
அவ்வளவு ஏன்... ‘மாப்ளே... இந்த வருஷமாவது புத்தாண்டு சபதக் கேஸ்ல ஜெயிச்சுக் காட்டுவியா’ என்று உங்களைக் கூட கலாய்த்திருப்பார்கள்.
சத்தியம் அவனுக்கு சர்க்கரைப் பொங்கல் என்பார்கள். அது சர்க்கரைப் பொங்கலா. தெரியவில்லை. ஆனால் சபதங்கள் சர்க்கரைப் பொங்கல்தான். புத்தாண்டில் தொடங்கி, பொங்கலுக்குள் முடிந்து விடுகிற, முடித்துக் கொள்கிற சபதங்களே இங்கே நிறைய உண்டு! அப்படியான சபதக்காரர்களே நம்மைச் சுற்றிலும். ஏன்... நாமே கூட!
நவம்பர் வரை செய்யும் செயலுக்காகத் திட்டு வாங்கிக் கொண்டிருப்பார்கள். அது டிசம்பர் வந்ததும் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் மாறிப்போகும். ‘சொல்றதைக் கேளு. இந்தப் புத்தாண்டிலேருந்தாவது அதை நிறுத்தறதுன்னு முடிவு பண்ணு’ என்பார்கள். உடனே நம்மாளும் ‘ஆமாம்டா... நிச்சயமாடா... சத்தியமாடா’ என்று மனோகரா சிவாஜி கணக்காக, பொங்கிப் பிரவாகிப்பார்கள்.
பள்ளித் தோழன் களஞ்சியம், எப்போதும் உற்சாகமாக இருப்பவன். அப்படி உற்சாகமாக இருப்பதற்கு எந்தப் பொய்யும் சொல்லுவான். அப்போதெல்லாம் அவனின் சித்தப்பா வீட்டுக்கு மெட்ராஸூக்கு வந்துவிட்டு, லீவு முடிந்து வருபவன்... ‘முந்தா நேத்து, கோடம்பாக்கம் மேம்பாலத்துல ரஜினியைப் பாத்தேண்டா. கையக் காமிச்சேன். சட்டுன்னு காரை நிறுத்திட்டாரு’ என்பான். அது பொய் என்று தெரியும். ஆனாலும் சுவாரஸ்யம் கூட்டிச் சொல்வதில், மகா கதை சொல்லி! அதற்காகவே அந்தப் பொய்யை ரசிப்போம். உண்மையென்று நம்புவது போலவே பொய்யாக நடிப்போம்.
அவன் வருடாவருடம், டிசம்பர் 30 மற்றும் 31ம் தேதிகளில், ரொம்ப சீரியஸாய் முகம் வைத்துக் கொள்வான். ‘டேய் கை நீட்டுடா’ என்று சொல்லி, சத்தியம் செய்வான். ‘இந்தப் புது வருஷத்துலேருந்து பொய்யே சொல்லப்போறதில்லடா நான்’ என்பான். ஆனால் மூன்றாம் நாள், பெரிய பொய்யை அவிழ்த்து விடுவான்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். ‘வர்ற ஜனவரிலேருந்து இனிமே எழவெடுத்த சிகரெட்டே தொடப்பொறதில்லடா’ என்பார்கள். 1ம் தேதி வரும். நமக்கு போன் செய்து ‘மாப்ளே... காலைலேருந்து ஒரு தம் கூட அடிக்கலைடா’ என்று சந்தோஷம் பொங்கச் சொல்லுவார்கள். 2ம் நாள் கதையும் கிட்டத்தட்ட இப்படித்தான். 3ம் நாள்... ‘சாப்பிட்டது சரியா செரிக்கலை. இன்னிக்கி நான்வெஜ் சாப்பிட்டேன். அதான் ஒரு தம். ஒரேயொரு தம்’ என்பார்கள்.ஐந்து அல்லது ஏழாம் நாளில், தம்மும் கையுமாகப் பார்ப்போம். ‘என்னடா பாக்கறே. இந்தப் பாழாப் போன உலகத்துல, எனக்கு இருக்கற ஒரே ஆறுதல், ரிலாக்ஸ் இதாண்டா. எல்லாருக்கு முன்னாடியும் மேனேஜர் காய்ச்சுகாய்ச்சுன்னு காய்ச்சி எடுத்துட்டாருடா’ என்று மேனேஜர் மீது கொளுத்திப் போடுவார்கள்.
ஏப்ரல், மே மாதங்களில், ‘ச்சே... வாக்கிங் போகலாம்னு பாத்தேன். முடியவே மாட்டேங்கிது. மாசத்துல பத்துநாள் அந்த ஊரு இந்த ஊருன்னு வேலை விஷயமாப் போயிடுறேனா. இதேபோல ஒரு அஞ்சாறு நாள், ஆபீஸ்ல செம வேலைன்னு லேட்டா வந்து, லேட்டா தூங்கி, லேட்டா எழுந்திருக்கிறேனா. வாக்கிங் போகவே முடியலை’ என்று அலுத்துக் கொள்வார்கள்.
இவன் என்ன சொல்கிறான். மாதம் முப்பது நாளும் ஊருக்குநாட்டுக்குப் போகாமல் இருந்தால்தான் வாக்கிங் போகமுடியும் என்கிறானா. ஆபீஸ் என்றால் வேலை கொஞ்சம் முன்னேபின்னே இருக்கத்தான் செய்யும். அப்படியெல்லாம் கூடாது என்கிறானா. ஏதோ ஒரு படத்தில், ஆட்டோ கண்ணாடியை சரி செய்துவிட்டு, வண்டியை ஸ்டார்ட் பண்ணச் சொல்வாரே அஜித். அப்படி ஏதேதோ காரணம் சொல்கிறானே என்று சிரிப்பு வரும் எனக்கு!
மூன்று வருடங்களுக்கு முன்பு, 31ம் தேதி நள்ளிரவு ஒண்ணேகால் மணிக்கு போன். ஊரில் இருந்து நண்பன் நாகராஜ் பேசினான். மன்னிக்கவும்... உளறினான். அவன் அப்படி உளறிப் பேசுவது புதிதல்ல. ஆகவே அந்த உளறலை எவர் தயவும் இன்றி, என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. ‘ஹேப்பி நியூ இயர்டா. நியூ இயர் பார்ட்டி வைச்சாங்க. செமயா இருந்துச்சு. ஆனா முன்ன மாதிரி முடியலடா. ஒருநாள் தண்ணியடிச்சா, ஒருவாரம் படுத்தி எடுக்குது உடம்பு. வயசாயிருச்சுல்ல மச்சான். அதான் முடிவு பண்ணிட்டேன். இன்னியோட தண்ணிக்கு குட்பைடா. நாளைலேருந்து புது நாகராஜ். ஆல்கஹால் இல்லாத நாகராஜ்’ என்று வசனம் பேசிக் குழறுவான். ஆனால் மறுநாளே... மீண்டும் போன். நள்ளிரவு போன். உளறல். மொழிபெயர்ப்பே இல்லாமல் புரிந்து கொள்ளல்.
சபதங்கள் சினிமாவில்தான் ஒரெயொரு வகை. அம்மாவைக் கொன்னவனை பழிவாங்கணும். தங்கச்சியைக் கெடுத்தவனை பழிவாங்கணும். ஆனால் வாழ்க்கையில், நிஜத்தில் ஏகப்பட்ட சபதங்கள். ’சார்... என்ன பொழப்பு சார் இது. என்ன கேவலமான வாழ்க்கை. கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’. அவன் மட்டுமா... நானும்தான் சார். இந்த நியூ இயர்லேருந்து பத்துபைசா கூட கடன் வாங்கக் கூடாதுன்னு எனக்கு நானே சபதம் போட்டு, சத்தியமும் பண்ணிக்கிட்டேன் சார்’ என்றவர், சம்பளம் வாங்கிய பத்தாவது நாளில், திடீர்னு பொங்கலுக்கு சொந்த ஊர் போலாம்னு முடிவாச்சு சார். ஒரு ஆயிரம் ரூபா இருக்குமா சார்’ என்று பொங்கல் பண்டிகையில் இருந்தே கடனைத் தொடங்கிவிடுவார்கள். சபதம் சர்க்கரைப் பொங்கலாகியிருக்கும்.
தொப்பையைக் குறைக்க ஜிம்முக்குப் போகணும், அரியர்ஸ் எல்லாத்தையும் கம்ப்ளீட் பண்ணனும், இந்த வருஷம் எப்படியாவது சொந்தமா வீடு வாங்கணும், காலைல தினமும் வாக்கிங் போகணும், காலைல இனிமே ஓட்ஸ் கஞ்சிதான் உணவு, ரைஸ் குறைச்சிட்டு, பயறு வகையா சாப்பிடப் போறேன், சம்பளத்துல மாசாமாசம் ஐநூறு ரூபாயாவது மிச்சம் பண்ணப் போறேன். இந்த வருஷமாவது சிகரெட்டை விடணும், தண்ணியை விடணும், பொய் சொல்லவே கூடாது, ஆபீஸே கதின்னு இருக்கக் கூடாது, வீட்ல சண்டையோ சச்சரவோ போட்டுக்கக் கூடாது, கெட்டவார்த்தை சொல்லக் கூடாது, அவனோட சகவாசம் வைச்சிக்கக் கூடாது, இவனோட சகவாசம் நல்லதுதான், காசை கரியாக்கக் கூடாது, நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்... என சபதப் பட்டியல்கள் சுவாரஸ்யமானவை. அதேசமயம் சோகம் நிரம்பியதும் கூட!
சிக்னலுக்குக் காத்திருக்கும் போது, டூவீலரில் பின்னே உட்கார்ந்திருந்த பெண், முன்னே உள்ள பையனிடம், ‘இந்த நியூ இயர்லேருந்து பாரு. ஃபேஸ்புக்ல ரொம்ப நேரம் இருக்கமாட்டேன்’ என்றாள். அவன் உடனே ‘பாப்போம்... பாப்போம்’ என்றான் நக்கலுடன்!
அந்த நக்கல் அவளுக்குக் கோபமூட்டியது. ‘இந்த நியூ இயர்லேருந்து நீ ஸ்வேதா கூட பேசறது நிறுத்து. அப்பதான் நான் ஃபேஸ்புக் பக்கமே வரமாட்டேன்’ என்று ஒருபோடு போட்டாள். சிக்னல் மாறியது,
அந்தக் காதல், இனி ரெட் சிக்னலா... கிரீன் சிக்னலிலேயே தொடருமா. தெரியவில்லை. என்னைக் கேட்டால், புத்தாண்டு சபதம் எதுவும் போடாதீர்கள். எதற்கு சபதம் போடவேண்டும். பிறகு அந்த சபதத்தை ஏன் மீற வேண்டும்.
நிறுத்துவதற்கு புத்தாண்டு எதற்கு. இதோ... இந்த நாளே இனிய நாள்தானே!
அப்புறம் ஒரு விஷயம்... இந்த அட்வைஸ் பண்றதெல்லாம் இனி செய்யவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். யார் சபதம் போட்டா என்ன... சபதம் மீறினா என்ன. இப்படி விட்டேத்தியா இந்தப் புத்தாண்டிலேருந்து இருக்கறதுன்னு சபதமே போட்டுட்டேன்!
இனிய புத்தாண்டு சபத வாழ்த்துகள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago