இந்தியா சுதந்திரம் பெற்று ஐந்து ஆண்டுகள் ஆயிற்று. நமக்கென்று சிறப்பான அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்து விட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது (1952) உள்ள அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல. அடுத்த ஆண்டு இந்த நிலைமை இருக்காது. பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்து இருப்பார்கள். பெருவாரியான இடங்களைப் பிடித்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரைத் தலைவராகத் தேர்வு செய்கிறார்களோ அவர், இந்த நாட்டின் பிரதமர் ஆவார்.
இந்த வகையில் 1952 ஆகஸ்ட் 15 அன்று ஆற்றிய சுதந்திர தின உரை, அநேகமாக ‘நியமனப் பிரதமர்’ என்கிற தகுதியில் ஆற்றிய நிறைவுரை எனலாம். இதனை நேருவும் உணர்ந்து இருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது உரையின் தொடக்கப் பகுதியில் குறிப்பிடுகிறார்: ‘நமது பணியை நாம் செய்து இருக்கிறோம். நமது நேரம் கடந்து கொண்டு இருக்கிறது. மற்றவர்கள் வர வேண்டும். நாம் எழுப்பிய விடுதலைக் கூடாரம் – எரிந்து போய் விடக் கூடாது; எரிந்து போக விடக் கூடாது.’
ஒரு ஜனநாயக நாட்டில், அதிகார மாற்றம் இயல்பானது. இதனை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நேரு இவ்வாறு கூறினார் என்று யூகிக்க முடிகிறது. முற்றிலும் ஜனநாயக முறைப்படி எல்லாம் நடைபெற வேண்டும் என்பதில் நேரு மிக உறுதியாக இருந்தார். தொடர்கிறார் நேரு -
‘உங்களுக்கு உள்ள அதிகாரம் என்ன..? இளைஞர்கள், குழந்தைகளிடம் உள்ள வலிமை என்ன..? உணவுப் பிரச்சினையில், இவர்களின் வருத்தங்களைப் போக்குவது எப்படி..? கோடிக் கணக்கானோரின் கண்ணீரைத் துடைப்பது எப்படி..?’ கேள்வி எழுப்புவதோடு நின்று விடவில்லை; சுதந்திர இந்தியாவை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார். கூறுகிறார்:
» செங்கோட்டை முழக்கங்கள் 4 - விடுதலைக்கு விலங்குகள் உண்டு | 1950
» செங்கோட்டை முழக்கங்கள் 3 - தனித்து நிற்கும் வெள்ளைப் புறா | 1949
‘நம்முடைய குழந்தைகள் எழுதப் படிக்க கற்றுக் கொள்ள வாய்ப்பு பெற வேண்டும். அவர்களின் உடல் நன்றாக இருக்க வேண்டும். அவர்களின் சிந்தனை நன்றாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் பொறுப்பை சுமக்கத் தேவையான வல்லமை அவர்களுக்கு வேண்டும்.’‘இதனை உருவாக்குதல் மிக அவசியம். இது மிகப் பெரிய பணி. கடினமான பணி. இதனை, வெற்று சட்டங்கள், விதிமுறைகளால் செய்ய முடியாது; அரசின் ஆணை மூலம் கொண்டுவர முடியாது’.
‘எல்லாவற்றிலும், அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் நாட்டின் எல்லாக் குடிமக்களும் பங்களிக்காமல், ஒத்துழைக்காமல் அரசால் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியாது.’
‘வெளியில் தெரியாத ஒருவனின் குரல் இது. பரஸ்பர சண்டையினால் இந்த நாடு அழிகிறது. இது குறித்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். புதிது புதியாய் வித விதமாய் சண்டைகள் முளைக்கின்றன. சாமான்யனின் உரிமைகளுக்காக, விவசாயி நலனுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்பார்கள். இவர்களின் எதிர்ப்புணர்வால், நம்மவர்கள் ரத்தம் சிந்த வேண்டி வரும். இந்த நாடு, ‘வெற்று’ஆகிவிடும்.
மதத்தின் பெயரால் சண்டை மூட்ட சிலர் இருக்கிறார்கள். பணத்தின் மீதுள்ள பேராசையால் கருப்பு சந்தையை உருவாக்குவோர், பொய் பேசி நாட்டுக்குக் குந்தகம் விளைவித்துப் பயன் பெறுவோர், சூதாட்டம் மூலம் பணம் பார்ப்போர்… இவர்கள், நாட்டுக்கும் மக்களுக்கும் தீமை விளைவிப்போர் ஆவர்’.
ஏதோ அபாய அறிவிப்பு போல் ஒலிக்கிறதா..? நாடு விடுதலை பெற்ற முதல் சில ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதார சுரண்டல், பொருளாதாரக் குற்றவாளிகள் மிகுந்து இருந்ததையே இந்தப் பேச்சு நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இதன் பிறகு படிப்படியாகக் கடுமையான சட்டங்கள் நடவடிக்கைகள் மூலம் இவை எல்லாம் கட்டுப்படுத்தப் பட்டன. சுதந்திர இந்தியாவின் மிக முக்கிய சாதனையாக இதனைச் சொல்லலாம்.
உலகில் பல நாடுகளில், இந்த ஒழுங்கு இன்னமும் முழுமையாகக் கொண்டுவரப் படவில்லை. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை இன்றளவும் மோசமாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. இது, குற்றச்சாட்டு அல்ல; ஆற்றாமை. சரியான ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதனை அந்தந்த நாட்டுத் தலைவர்களும் முன்னெடுத்தால், சமுதாயத்தில் ஒழுங்கு தானாக நிலை பெறும். பல நாடுகளில் இது சாத்தியப் படவில்லை. இந்தியாவில் நிறைவேறி இருக்கிறது.
பொதுத் தேர்தலுக்குப் பின் ஆட்சி கைமாறக் கூடும். அதனால் என்ன..? இந்த நாட்டின் பயணம் எப்போதும் போல தொடர வேண்டும். இதனை வலியுறுத்திக் கூறுகிறார் நேரு:
‘பெருமிதத்துடன் விடுதலை அடைந்தோம்; பெருமிதத்துடன் முன்நோக்கி நகர்வோம்; இந்தியாவின் கனவை நிறைவேற்றுகிற பணியை வேறு யாரிடமாவது தருவோம். எதைப் பற்றியும் கவலையுற வேண்டாம்; நமது கரங்களில் வலிமை இருக்கும் வரை, நமது நாட்டை முன்னேற்றி இட்டுச் செல்வோம். இது உறுதி செய்யப்பட்டாலே போதும். நமது பணி முடிந்து விட்டது. அது வரை நாம் உச்சம் தொட்டதாய் சொல்ல முடியாது.
ஒரே ஒரு நாளுக்காக, ஒரே ஒரு நபருக்காக, ஒரு சாதி, ஒரு மதத்துக்காக, இந்தப் பணி இருக்கலாகாது. இந்தியா - 36 கோடி மக்கள் கொண்ட பெரிய குடும்பம். எல்லாப் பக்கங்களில் இருந்தும் இதனை நோக்க வேண்டும். வீழ்ந்தவர்களை நாம் கைகொடுத்துத் தூக்கி விட வேண்டும்.’ மற்றவர்களின் துயரத்தில் பங்கு கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு தருணத்திலும் நினைவு படுத்துகிறார் நேரு. ‘கண்ணீர்க் கண்களில் இருந்து கண்ணீரைத் துடைக்க வேண்டும்.
பொதுப் பிரசினைகளையும் தொட்டுச் செல்கிறார். சொல்கிறார்: ‘இயற்கை, நமக்குத் தொல்லை கொடுத்தது. இந்த ஆண்டு மழை நன்கு பெய்யவில்லை. சில இடங்களில் வெள்ளம், நில நடுக்கம்; ஆனாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலைமை பரவாயில்லை. நமது நாடு மிகப் பெரியது; எல்லா நாட்களிலும், எங்கேயேனும் யாரேனும் துயரத்தில் இருக்கிறார்கள். ஆறுதலாக, சில இடங்களில் மழை நன்கு பெய்கிறது. உணவு உற்பத்தி நன்றாக இருக்கிறது.’
‘உத்திரப் பிரதேச மாவட்டங்கள் சிலவற்றில், மேற்கு வங்கத்தில் ராயலசீமாவில் மதராஸில் மைசூரில்.. நிலைமை மோசமாக உள்ளது; அளவற்ற வறுமை இருக்கிறது; உணவுப் பொருள் பற்றாக்குறை நிலவுகிறது.; எல்லாப் பக்கங்களில் இருந்தும் இவர்களுக்கு உதவ வேண்டி இருக்கிறது. ஆனால் வெற்று உதவியாக இருக்கக் கூடாது. அவர்கள், தமது கால்களில் ஓடுபவர்களாக இருத்தல் வேண்டும்.’
‘36 கோடி பேரும் ஒரு பயணத்தில் இருக்கிறோம். சிலரைத் தனியே தவிக்க விட்டு விட்டு (தாம் மட்டும்) பயணிப்போம் என்று சிலர் கருதினால் அது மாயை; கனவு, வீண். சிலர் பின் தங்கினால், நாமும் பின் தங்குவோம்.’
சில அபாயங்கள் தெரிகின்றன – கருப்புச் சந்தை, லஞ்சம் தருதல் பெறுதல் – பிற மதங்களை அவமதித்தல் – இதன் மூலம் தனது மதத்தை வளர்த்தல்… சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி பார்த்தேன். கேலிக்கு உரியதாய் இருந்தது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்; இதன் மூலம் எமது அதிருப்தியைத் தெரிவிக்கிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். இது சிலருக்கான நிகழ்ச்சி அல்ல. (புறக்கணிப்பு) இந்தியாவின் சுதந்திரத்தை பாதிக்க கூடியது; தேசியக் கொடிக்கு அவமரியாதை ஆகும்.’
நாம் எல்லாருமாக முன்னேற வேண்டும். சில ஆயிரம் பேர் செய்கிற தவறால் பல கோடி பேர் பாதிப்பு அடையலாம். நாட்டுக்கே பாதிப்பு ஆகலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாமன்னர் அசோகர் என்ன சொன்னார்? பிற மதங்களை மதிப்பவரே தனது மதத்தை மதிப்பவர் ஆவார். பல்லாயிரம் ஆண்டுகளாக இதுவே இந்தியாவின் கலாசாரம் ஆகும். சிலர் கூறுகிற வெறுப்பு வாசகங்கள் வேண்டாம்.
ஜவஹர்லால் நேரு தவறாமல் சொல்கிற ஒரு செய்தி இம்முறையும் உண்டு. நம்பிக்கையுடன் பிரகடனப் படுத்துகிறார்: ‘இன்றைய உலகைப் பாருங்கள். இன்று உலகில் எந்த மூலையில் இருந்து என்ன தொல்லை வரும் என்று தெரியவில்லை. நாம் அமைதிக்காக இருக்கிறோம். நம்மால் ஆனதை செய்வோம். இந்தியாவின் பழைய பண்பாட்டை உலகத்துக்குக் கற்றுக் கொடுப்போம். உலகில் அமைதி ஏற்பட உதவுவோம்.’
வறுமையை முழுவதுமாக ஒழிக்க முடியாது. அது மிகப் பெரிய பணி. ஆனால் நமது காலத்துக்குள் அப்பணியை செய்து முடிப்போம். புதிதாய், மேலும் பல இளைஞர்கள் நமது இடத்துக்கு வருவார்கள். இப்பணியைத் தவறாது முன்னெடுப்பார்கள்.
மீண்டும் ஒருமுறை, உள் நாட்டுப் பிரிவுகள் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்துகிறார் – ‘ஒரு சமூகத்துக்கும் இன்னொரு சமூகத்துக்கும் இடையே சுவர்கள்; ஒரு சாதியை மற்றொரு சாதி அடக்கப் பார்க்கிறது. இந்தியர்கள், இந்தியாவில் அல்ல; ஆப்பிரிக்க இந்தியர்கள், மகாத்மாவின் வழியைப் பின்பற்றுகிறார்கள்; அந்த நாட்டு மக்களுடன் இணைந்து இணக்கமாகப் பணி புரிகிறார்கள். (இவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்லலாம்)
‘சுதந்திரம் பெற்றது போலவே, நமக்குள் இருக்கிற வேற்றுமைகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள முடியும். நம்முடைய ராணுவத்திடம் இருந்து, ஒழுங்கு என்றால் என்ன என்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய ஒற்றுமைக்கு அது சாட்சியாய் உள்ளது.
எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் நேர்மறைச் செய்தியுடன் உரையை நிறைவு செய்கிறார் நேரு – ‘அரும் பணியை மேற்கொள்வோம். வரும் காலத்தில் இதனை வேகமாய் முன்னெடுப்போம்.’
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 5 - நாட்டின் வரலாற்றில் டெல்லிக்கு தனி இடம் இருக்கிறது | 1951
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago