இந்தியா சுதந்திரம் பெற்று 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. நமக்கென்று தனியே சிறப்பு வாய்ந்த அரசமைப்பு சட்டம் வகுத்துக் கொண்டு, குடியரசு நாடு ஆகிவிட்டோம். இதனைத் தொடர்ந்து, சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு மக்கள் தயாராகி விட்டனர். இந்த நிலையில்தான் 1951 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையாற்றுகிறார் பிரதமர் நேரு. இந்த உரையும் இதனைத் தொடர்ந்து 1955 வரையிலான உரைகளும் இந்தி மொழியில் உள்ளன. இவற்றின் அதிகாரபூர்வ ஆங்கில மொழியாக்கம் கிடைக்கவில்லை. எனவே அடைப்புக் குறிக்குள் ஆங்கில வாசகங்கள் இடம்பெறவில்லை.
போட்டித் தேர்வு இளைஞர்கள் நினவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி - இரு அடைப்புக் குறிக்குள் இருக்கும் மேற்கோள் வாசகங்கள், எந்த மொழியில் பேசப்பட்டதோ அதே மொழியில் இருத்தல் வேண்டும்; அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ மொழியாக்கம் கூறுகிற அதே சொற்களில் அமைய வேண்டும். ‘இப்படிச் சொன்னார்’ என்று எழுதலாம். மற்றபடி, நாமாக மொழியாக்கம் செய்து தந்தால் அது ‘மேற்கோள்’ ஆகாது; அடைப்புக் குறிக்குள் தரலாகாது. இனி...
தலைநகர் ‘டெல்லி’ பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாய் இருந்துள்ளது. நாட்டு வரலாற்றில் தில்லிக்குத் தனி இடம் இருக்கிறது என்று தனது உரையைத் தொடங்குகிறார் நேரு. சுதந்திர தின உரையில், நமது தலைநகரம் பற்றிய குறிப்பிடுதல் இதுவே முதன் முறை. இதற்குப் பிறகும் அடுத்த 72 ஆண்டுகளில் அநேகமாக எந்தப் பிரதமராலும் எங்கும் குறிப்பிடவில்லை.
சுதந்திரத்துக்காகத் தன்னலம் அற்றுப் போராடியதற்காக உயிர் நீத்த தியாகிகளைப் போற்றும் நேரு, ‘அண்டை வீட்டு’ சகோதரர்களும் நம்மோடு இணைந்து போராடியதை நினைவுகூர்கிறார். ‘அவர்கள்’ வேறு யாரும் அல்லர்; நம்மோடு இணைந்து போராடிய நம்மவர்கள் என்று கூறி சூசகமான நற்செய்தியை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கிறார். சில விரும்பத்தகாத சம்பவங்களைப் பற்றிய கவலைகளுடன் தொடர்கிறார்.
» செங்கோட்டை முழக்கங்கள் 3 - தனித்து நிற்கும் வெள்ளைப் புறா | 1949
» செங்கோட்டை முழக்கங்கள் 2 - வழிகாட்டும் அணையா விளக்கு | 1948
கடந்த நான்கு ஆண்டுகளில் நிரம்ப ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. நாம் கடந்து வந்த பாதை, நாம் கையாண்ட (அஹிம்சை) வழிமுறைகளை மறந்து போனால் என்னவாகும்..? அண்ணல் காந்தியின் நெறிமுறைகளை மறந்து போனால், நம் வாழ்க்கையே கேள்விக் குறியாகி விடும். அக்கறையின்மையும் சோம்பேறித்தனமும் நமது வளர்ச்சிக்கு தடைகள் ஆகும். இது, எல்லோரும் இணைந்து உழைப்பதற்கான நேரம். இதுவே நமது பலவீனங்களை, நமது எதிரிகளை வெல்வதற்கான வழி.
இந்த நேரத்தின் தேவை என்ன? நாம் எவ்வாறு அடிமைப்படுத்தபட்டோம்? நாம் எவ்வாறு தனித்தனியாகப் பிரிந்துகிடந்தோம்? எவ்வாறு ஒன்றிணைந்தோம்? எவ்வாறு வெற்றி கண்டோம்? கடந்த கால சம்பவங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
சுதந்திரம் மட்டுமே எல்லாம் என்று ஆகிவிடாது. ஆயுதங்களால் மட்டுமே தற்காத்துக்கொண்டு விட முடியாது. நமது கனவுகள் மிக அபாரமானவை. நம்முடைய ஒற்றுமையால் மட்டுமே அதனை நாம் செயல்படுத்த முடியும். பழையனவற்றை நினைவுகூர்கிற அதே நேரத்தில் பழம் பெருமைகளைப் பேசியே பொழுதைக் கழிப்பதும் சரியல்ல. இனிதான் நாம் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது.
அயல் நாட்டு சக்திகள் குறித்து விழிப்புணர்வு வேண்டும். நமக்குள் இருக்கும் பிரிவுகள் அவர்களுக்கு சாதகம் ஆகிவிடக் கூடாது.
இன்று நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் உள்ளன. விலைவாசி ஏற்றம் – ஒரு பெருத்த பின்னடைவு. வேலை வாய்ப்பின்மை, பிரச்சினையும் உள்ளது. இவற்றை எதிர்கொள்ளவே, வறுமை, வேலைவாய்ப்பின்மையை நீக்கவே ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நினைவில் கொள்ள வேண்டிய செய்தி - அப்போதுதான், ‘ஐந்தாண்டுத் திட்டங்கள்’ நேருவால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், ஐந்தாண்டுத் திட்டங்கள் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இது முதல் குறிப்பு இதுவே ஆகும். வறுமையை ஒழிப்பதில், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் ஐந்தாண்டுத் திட்டங்கள் சிறப்பாக உதவும் என்கிற தனது நம்பிக்கையை முதன் முதலாக 1951 சுதந்திர தின உரையில் வெளிப்படுத்துகிறார். பிரதமர் நேரு.
இந்தத் திட்டங்கள் 40 கோடி மக்களின் (அப்போதைய மக்கள் தொகை) நல்வாழ்வுக்காக உருவாக்கப்படுபவை. இதன் வெற்றிக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.
நேருவின் இந்தக் கருத்து இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதலாம். அரசாங்கம், புதிதாக எந்தவொரு வளர்ச்சித் திட்டம் கொண்டு வந்தாலும், ஏதோ ஒரு வகையில் அது ஒரு சிலரை பாதிக்கத்தான் செய்யும். அதுபோன்ற சமயங்களில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதா, வேண்டாமா என்கிற கேள்வி எழுவது நியாயமே.
‘பொது மக்களின் ஒத்துழைப்பு’ தேவை என்பதை நன்கு உணர்ந்த பிரதமர் நேரு. தொடர்ந்து குறிப்பிடுகிறார்:
’அரசாங்கம் தன்னால் ஆன நல்லதைச் செய்யும். ஆனால் அதற்கு, பொது மக்களும் ஆதரவு நல்க வேண்டும். அவர்களின் உரிமைகள், நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்’.
‘ஆக்கபூர்வ சிந்தனைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். வேலை வாய்ப்பு இன்மையைத் தீர்க்க, சுயதொழில், சுயவேலை வாய்ப்புகள் – ஒரு நல்ல மாற்றாக இருக்கும்’. பிரதமர் நேர் முன் வைத்த - 70 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனை!
இன்று பெரிய அளவில் பேசப்படுகிற ‘ஸ்டார்ட் - அப்’ உள்ளிட்ட பல முயற்சிகளுக்கு முன்னோடி இந்த சிந்தனை எனலாம். இந்தியாவை முன்னேற்றிய பல நல்ல சிந்தனைகளை வலுவாக வேரூன்றியவர் நேரு என்று பலரும் பாராட்டுவதற்கு அவர் வெளிப்படுத்திய காலத்துக்கு முந்தைய, காலத்துக்கு ஏற்ற சிந்தனைகளே காரணம்.
அடுத்து, நாட்டின் முதல் பொதுத் தேர்தலுக்கு வருகிரார்.
‘விரைவில் பொதுத் தேர்தலில் நம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். புதிது புதிதாகப் பல வாக்குறுதிகள் அறிவிக்கப்படலாம். இந்தத் தேர்தல் நடைமுறை, மாபெரும் வெற்றி பெறும்; நமது நாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்றும் நம்புகிறேன்’.
நமக்குள் சண்டை இட்டுக் கொண்டு உலகில் நமக்கு வெளியே என்ன நடக்கிறது என்று அறியாமல் இருந்து விடல் கூடாது. உலக நடப்புகளில் நாம் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும்.
நேருவின் இந்த அறிவுரை மிகுந்த பொருள் கொண்டது.
சர்வதேச நடப்புகளில் இந்தியாவின் கவனம், பங்களிப்பு, உதவி எப்போதும் உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது. 76 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் ஆகப் பெரிய சாதனை என்றால் அது இதுதான் – உலகில் வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு, ஆழமான நம்பகத்தன்மையை இந்தியா சம்பாதித்து வைத்து இருக்கிறது.
எல்லா முக்கிய பிரச்சினைகளிலும் இந்தியாவின் கருத்தை உலகம் எதிர்பார்க்கிறது. இந்தியாவின் நிலைப்பாடு, நடுநிலையுடன் நியாயமாக இருக்கும் என்று நம்புகிறது. எனவே, இந்தியாவின் ஆதரவு, முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்தியத் தலைவர்களின் வருகை ஆராதிக்கப்படுகிறது. உலகின் எல்லா நாடுகளிலும் இந்தியக் குடிமக்கள் வரவேற்கப்படுகிறார்கள்; மதிக்கப் படுகிறார்கள்.
இதற்கெல்லாம் வழி கோலியது - பிரதமர் நேருவின் தீர்க்க தரிசனம்; உலக அமைதிச் சிந்தனை. எல்லா உரைகளிலும் அதனை வலியுறுத்திச் சொல்லி அதை நோக்கி இந்தியாவை நகர்த்தியவர் நேரு. இந்த உரையிலும் அது பிரதிபலிக்கிறது. நேரு கூறுகிறார்:
பாகிஸ்தான் – நம்மிடம் இருந்து பிரிக்கப்பட்டு விட்டது. ஒருவரின் உள்நாட்டு விவகாரத்தில் மற்றவர் தலையிடுதல் கூடாது. கடந்த நான்கு ஆண்டுகளில் விரும்பத்தகாத பல சம்பவங்கள் நடந்துள்ளன. சூழ்நிலையை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
சச்சரவுகளை இந்தியா விரும்பவில்லை. பாகிஸ்தான் உட்பட உலகம் முழுதும் அமைதி நிலவ வேண்டும். இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடல் வேண்டும். சண்டையிட்டுக் கொள்வதால் யாருக்கு என்ன பயன் நேர்ந்து விடப் போகிறது?
பாகிஸ்தானில் சிலர் வெறுப்புணர்வுடன் நடந்து கொள்ளலாம். இங்கேயும் சிலர் வித்தியாசமாக நடந்து கொள்லலாம். இவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் விலக்கி வைத்து, எச்சரிக்கையுடன் இருப்போம்.
எந்தச் சூழ்நிலையிலும் மகாத்மா காந்தி காட்டிய வழியில் இருந்து பிறழ்ந்து போய் விடாது இருப்போம். தேசியக் கொடியில் இணைக்கப் பட்டுள்ள ‘சக்கரம்’ – மாபெரும் வரலாற்றுப் பின்னணி கொண்டது. இந்த சக்கரம் - அமைதியைக் காட்டுகிறது; அறநெறியை வலியுறுத்துகிறது; எல்லாருக்கும் நீதியை உறுதி செய்கிறது.
உரையை நிறைவு செய்யுமுன், மீண்டும் ஒருமுறை, மக்களிடையே ஒற்றுமை உழைப்பு அர்ப்பணிப்பு உணர்வு மிகத் தேவை என்பதை வலியுறுத்தி அதனால் மட்டுமே இந்தியா செழிப்பான நிலையை எட்ட முடியும் என்று தெளிவாக உறுதியாக வலியுறுத்துகிற பிரதமர் நேரு - 1951 சுதந்திர தினம் அன்று விடுத்த செய்தியின் சாராம்சம் இதுதான்: சுதந்திரத்துக்குப் பிறகான நமது செயல்பாடுகள்தாம் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும்.
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 4 - விடுதலைக்கு விலங்குகள் உண்டு | 1950
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
18 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
28 days ago