இந்தியில் வருவதுபோல பேர்லல் சினிமா தமிழில் வரவில்லையே என்ற குறையை 'அறம்' தீர்த்துவிட்டது. மிக்க நன்றி கோபி நயினார் சார். உங்கள் கடும் முயற்சியிலும் சமரசமற்ற படைப்பாக்க நெறிமுறைக்கும் எமது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் அவர்கள் தங்கள் மிகச் சிறந்த படைப்புகளை முன்வைக்கும்போது அதில் தாங்கள் செய்துகொண்ட சமரசத்திற்கு சமாதானம் சொல்ல தோதான காரணங்களை வைத்திருப்பார்கள். ஆனால் யாரையும் சமாதானப்படுத்த வேண்டிய எந்த அவசியமும் இன்றி ரசிகர்களின் ரசனைத் தரத்தையும் உண்மையில் அவர்கள் வாழ்வின் தரத்தையும் உயர்த்துவதில் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பளிச்சிட்ட வண்ணம் இருந்ததை மறுக்க இயலாது.
படத்தைப் பாராட்டியும் அதை சிறப்பாக அறிமுகப்படுத்தியும் பல்வேறு விமர்சனங்கள் மக்கள் எதிர்கொண்ட வண்ணமிருப்பதைக் காண முடிகிறது. உலகின் கண்களுக்குத் தென்படும் வகையில் நேர்மையான உழைப்பு உயர்ந்து நின்றுவிடும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இப்படம் திகழ்கிறது. ஆனால் இப்படத்தில் ஒரு வசனம் என்னை மிகவும் உறுத்தியது சார்... அது என்னவென்று படத்தில் வருவதுபோல நானும் கடைசியாக சொல்கிறேன்.
உண்மையில் நயன்தாராவை நோக்கி மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் பலமுறை அவரது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளின் கதவுகள் சிறப்பாகவே திறந்து வைக்கப்பட்டது. சில நேரங்களில் சரியாகவும் சில நேரங்களில் தவறாகவும்.
டென்மார்க் நாட்டில் மக்களைச் சுரண்டும் அரசியல் கட்சிகளின் முகத்திரையைக் கிழிக்கும் திரைப்படத்தை நேரடியாக இன்றி தழுவி எடுக்கப்பட்டபோது அந்தத் தவறு நேர்ந்தது. இப்படம் தமிழுக்கு வரும்போது அதிலேயே அதில் நாம் பார்க்கும் நயன்தாராவின் கதாபாத்திரம் மேலும் மிகச் சிறப்பாக வந்திருக்க வேண்டியது. ஆனால் அதில் நாயகனின் சாகசம் அதிவலிமை மிக்கதாக படைக்கப்பட நயன்தாரா ஏற்ற கதாபாத்திரமான நாயகியின் பங்களிப்பு வெறும் ரொமான்ஸ் பங்களிப்பாக மாற்றப்பட்டிருந்தது.
மியா மோஸ்கார்ட் (Mia Moesgaard) கதாபாத்திரத்தை ஏற்றுநடித்த ட்ரினி டைர்ஹொல்ம் (Trine Dyrholm) பெண் கலைஞரின் பாத்திரம் முழுதாக நயன்தாராவுக்கு தராமல் ஓரளவுக்கே தரப்பட்டது. 'ஷூட்டர்' (2013) திரைக்கதையின் அக்கதாபாத்திரத்திற்கு நிறைய முரண்பட்டு தனியொருவனில் ஒரு இடத்தில் ஜெயம்ரவிக்கு அறிவுரை தருவதோடு மட்டும் வைத்துக்கொண்டு பெரும்பாலான இடங்களில் அவரை விரட்டி விரட்டி காதலிப்பவராகவே காட்டப்பட்டிருந்தார். இதில் காதல் கிரிக்கெட் போன்ற டூயட் பாடல்கள் வேறு. அது இருந்துவிட்டுபோகட்டும் பிறகு தமிழ்சினிமாவில் பார்ப்பதற்கு வேறென்னதான் இருக்கிறது என்றுதான் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
தனியொருவனில் நயன்தாரா பாத்திரம் ஒரிஜனல் கதாபாத்திரத்தையே பிரதிபலிக்காமல் 75 சதவீதம் சிதைத்து உருவாக்கப்பட்டதைக் கண்டு நான் மிகவும் வருந்தினேன். இங்கு ஆண் சாகசம் மட்டுமே சாத்தியம் எனவும் பொதுவாழ்வில் பெண்ணின் இருப்பு பெரும்பாலும் பதிவாவதில்லை என்ற போக்குக்கு தனியொருவனும் விதிவிலக்கில்லை எனவும் நான் கருதினேன். ஒருவேளை இதை 'அறம்' திரைப்பட இயக்குநர் கோபி நயினாரும் நினைத்திருக்கக் கூடும்.
'அறம்' திரைப்படம் பொதுவாழ்வில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள ஒரு பெண்மணி மக்கள் பணியாற்றவேண்டிய அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல் மிகுந்த சந்தர்ப்பங்களை மிகச் சரியாக மிக அழகாக வெளிப்படுத்தியிருந்தார் இயக்குநர் கோபிநயினார்.
அதேநேரத்தில் படத்தின் கிளைமாக்ஸில் ''அவசரப்பட்டு பதவியை ராஜினாமா செய்திடாதிங்க மேடம்'' என விசாரணை அதிகாரி கூற அதற்கு கலெக்டர் மதிவதனி பாத்திரம் ஏற்ற நயன்தாரா கூறுகிறார், ''ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் வேலை பார்க்கமுடியாது சார். அதிகாரியாக இருந்துதான் மக்களுக்கு சேவை செய்யணும் இல்ல. நான் நேரடியாக மக்களுக்கு சேவை செய்யப்போகிறேன். அது எங்கே அழைத்துச் செல்லும் என்னை என்று தெரியும் '' கூறுகிறார்.
படத்தின் மொத்த சம்பவங்களுக்கும் குறுக்கே குறுக்கே வந்த அந்த விசாரணை நடைபெற்ற நிர்வாகத்துறை கட்டிடத்தைவிட்டு வெளியே வருகிறார். அவரது நடையில் கம்பீரம், நம்பிக்கை, மக்கள் சார்ந்த கடமை உணர்ச்சி யாவும் வெளிப்படுகிறது. கூடவே மக்களின் அவதிக் காட்சிகள் விசாரணை அதிகாரியின் எச்சரிக்கை வார்த்தைகள் சிறுசிறு ஃபிரேம்களில் வெளிப்படுகிறது..... அப்போது யாரும் எதிர்பார்க்காத வசனம் ஒன்று வருகிறது. அதுவே 'அறம்' திரைப்படத்தின் இறுதி வசனம்.
''மதிவதனியாகிய நான் எனக்களிக்கப்பட்ட கடமையை உணர்ந்து செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்...'' என்ற குரல் தியேட்டரின் நான்கு பக்கம் கம்பீரமாக ஒலிக்கிறது. அப்போதும் 'அறம்' ஆரம்பம் தொடரும் போன்ற வாசகங்கள் அடங்கிய முத்திரை குத்தப்படுகிறது. இந்த உள்ளர்த்த குறிப்புகளின் சொற்கள் மிகப் பெரிய புரிதலை நமக்கு அறிவித்துவிட்டு திரை விலகுகிறது.
என்ன சொல்ல வருகிறீர்கள் கோபி நயினார் சார். 'அறம்' ஆரம்பம் தொடரும் என்பதை இப்படிப்பட்ட மிகச்சிறந்த திரை முயற்சிகள் தொடரும் என எடுத்துக்கொள்ளலாமா? அப்படியெனில் மதிவதனியாகிய நான் என்ற வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொள்வது... அதை 'அறம் 2' படத்துக்கான முன்னோட்டமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியவில்லை. நயன்தாரா அரசியலுக்கு வரப்போகிறாரா... அதைத்தான் குறிப்பால் உணர்த்துகிறீர்கள்?
இங்குதான் பேர்லல் சினிமாவுக்கான பரந்துபட்ட பாதையிலிருந்து சற்றே விலகுகிறீர்கள். நயன்தாரா ஒரு இளம் பெண் கலைஞர். அவர் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தவேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் அவரை உண்மையிலேயே அரசியலுக்கு வருவதற்கான ஒரு கோடிட்டு காட்டும் முயற்சிபோல இது திசை மாறுவது போல இல்லை? நீங்கள் சொல்லலாம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன் என்று. ஆனால் இளம் தலைமுறை அரசியலுக்கு வரவேண்டுமென்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தனிமனித வழிபாடு மேலோங்கிய நிலையில் அதன் போதையில் கரைந்து நாட்டு நடப்புகளின் உண்மைகளை அறிந்துகொண்டுவிட்டதாக கற்பிதக் கனவுகளில் மூழ்குபவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா? முதல்வர் ஆக வேண்டுமா? நாடு தாங்காது சார்.
சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வரவேண்டாம் என்றோ அவர்களால் நாடு நலம்பெறாது என்று சான்று பகர்வது நமது நோக்கமல்ல. நயன்தாராவைவிட அதிபுத்திசாலித்தனமும் வரலாற்றின் ஏதோ ஒரு சிக்னலில் கிராஸ் செய்தவருமான ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை தமிழகத்தை உலுக்கியதற்கும் அவரது மரணமே இன்னும் கேள்விக்குறியான சூழ்நிலை தொடர்கிறது. இந்நிலையில் ரஜினி ஒரு பக்கம், கமல் ஒரு பக்கம் அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரங்களை தொடர்ந்து உருவாக்கப்பட்டு வந்தவண்ணம் உள்ளன. இன்னொரு பக்கம் திரையுலகில் 'அறம்' பேசி அரசியலுக்கு வந்தவர்களுக்கு பின்னே இருந்து இயக்கும் பெரும்குடும்பங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்து சொத்துக்குவிப்பு வழக்குகளில் சிக்கி 30 ஆயிரம் 40 ஆயிரம் கோடிகள் குவித்திருப்பதை சிபிஐ நிரூபித்து வருகிறது.
வளர்ந்து வரும் கலைஞர்களை ரசிகர்கள் பொது இடங்களில் சந்திக்கும்போது உவகைகொள்வதும் அவர்களை சூழ்ந்துகொள்வதும் தமிழகம் காலம்காலமாய் சந்தித்துவரும் காட்சிகள் தற்சமயம் கேரளாவையும் அது விட்டுவைக்கவில்லை. அவ்வகையில்தான் நயன்தாரா பொது இடங்களில் வரும்போது அவரையும் மக்கள் சூழ்ந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால், அவர் அரசியலுக்கு வரவேண்டுமா? வேண்டாமா என்பதை அவ்வளவு சீக்கிமாக நாம் முடிவு செய்து அதற்கான முகாந்திரத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. நயன்தாரா போன்றவர்களை தமிழக முதல்வர் ஆவதற்கான பாதைகளை உருவாக்குவது அல்ல நம் பணி.
உலகமெங்கும் திரைப்படங்கள் மக்கள் விழிப்புணர்வுக்கு மாபெரும் பங்காற்றியுள்ள வகையில் நயன்தாராவின் பாதை மேலும் சிறக்கவேண்டுமென்பதுதான் நல்ல திரை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. இதை நாம் உணர்ந்துகொள்வதோடு, நயன்தாரா போன்ற மிகச் சிறந்த நடிகைகளுக்கும் உணர்த்தினால் அவர் மேலும் மேலும் சாதிக்கவும் தனது கலைப்பாதையை மெருகேற்றவும் நிறைய வாய்ப்புகள் அவரைத் தேடி வரும் என்பது உறுதி. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் எந்த சிறந்த கதாபாத்திரத்தையும் ஏற்று தேசிய விருதுகள் பெறும் கலைத்தகுதி அவரிடம் உள்ளது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago