இந்த உலகின் ஆகப்பெரிய சொத்து, காசோ பணமோ இல்லை. வீடு வாசலோ, கார் பங்களாவோ கிடையாது. ஒரு குழந்தை தரும் குதூகலத்துக்கு இணை இங்கே ஏதுமில்லை. குழந்தைகள் தான் நம் சொத்து. குழந்தைகள் விஷயத்தில்... ஓர் வார்த்தை உண்டு, வாழையடி வாழை. ஏனெனில், குழந்தைகள் வம்சம் சம்பந்தப்பட்டவர்கள். அதனால் வாழையடி வாழையெனச் சொல்லிவைத்தார்கள். வாழையென வளரும் குழந்தைகளை.
‘நான் உன்னை விட புத்திசாலி’ என்று எவரேனும் நம்மிடம் சொன்னால், சுருக்கென வலிக்கும். கோபம் கூட வரும். ஆனால், எல்லோரிடமும் 'என் குழந்தை என்னை விட புத்திசாலி’ என்று மார்தட்டிச் சொல்லிப் பூரிப்போம். அப்படி அவர்களைப் புத்திசாலிகள் என்று அபார்ட்மெண்ட் அக்கம்பக்கத்தாரும் உறவுக்காரர்களும் சொல்லவேண்டுமே என பரபரத்துக் கிடக்கிறோம் என்பதுதான் இங்கே பிரச்சினை.
வேலைக்குச் சேர்ந்ததும் பணம் குறித்த, சேமிப்பு தொடர்பான மிகப்பெரிய திட்டமிடலைக் கையாள்கிறோம். பாலிஸிகளையும் மியூச்சுவல் ஃபண்டுகளையும் கணக்கெடுத்து, ஆராய்ந்து, எதில் போட்டால் நல்ல லாபம் என்று கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, பகுத்து பணம் பண்ண இறங்குகிறோம். இன்றைக்கு, குழந்தை வளர்ப்பில், கிட்டத்தட்ட இதுதான் நடக்கிறது.
திருமணமானதுமே, தம் குழந்தைகளின் பள்ளியை முடிவு செய்துகொள்கிறார்கள். அந்தப் பள்ளிக்கு அருகில் வீடு வாங்கத் திட்டமிடுகிறார்கள். அப்படி இல்லையென்றாலும் எட்டுப்பத்து கிலோ மீட்டரில் உள்ள பள்ளிக்கு, வேன் பஸ் மூலம் குழந்தைகளை அனுப்புகிறார்கள். 'எந்த ஸ்கூல்ல நிறைய பணம் வாங்குறாங்களோ... அதான் நல்ல ஸ்கூல்’ எனும் மனோநிலை நம்மிடம் இருக்கிறது.
நான் என் பள்ளிப் பருவத்தையும் அப்பாவையும் நினைத்துப் பார்க்கிறேன். அப்பாவுக்கு ரயில்வே வேலை. அந்தப் பகுதியில் ரயில்வே ஊழியர்களுக்கான பள்ளி இருந்தது. அந்தப் பள்ளியில்தான் படித்தேன். கண்டிப்பு மிகுந்த பள்ளி என்று முத்திரை குத்திவிட முடியாது. ஆனால் அதேசமயம் வாழ்வியலைச் சொல்லித் தந்த ஆசிரியர்கள் இன்றைக்கும் மனதில் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறார்கள்.
அப்பாவும் அப்படித்தான். சொல்லாமல் சொல்லித் தந்தார். அவைதான் எனக்குப் பாடங்களாயின; வேதங்களாயின. அப்பா பொய் சொல்லிக் கேட்டதே இல்லை. எவர் பொருளுக்கும் ஆசைப்பட்டுப் பார்த்ததே இல்லை. யாரையும் புறம்பேசியதே கிடையாது. எதன்பொருட்டும் பொய் சொல்லாமல், எவர் பொருளுக்கும் ஆசைப்படாமல், எவரையும் இழித்துரைக்காமல் வாழ்வதுதான் வாழ்க்கை என பின்னாளில் புரிந்து கொண்டேன். ஆசிரியர்கள் மீதும் அப்பாவின் மீதும் மிகப்பெரிய மரியாதை வந்தது.
இன்றைய பள்ளிக்கூடங்களும் சரி, சூழலும் சரி... நீதிபோதனை வகுப்புகளை நடத்துவதே இல்லை. நீதியையும் வாய்மையையும் சொல்ல, தாத்தாபாட்டிகளும் அருகில் இல்லை. நாமும் கூட வீட்டு ஹாலில், எல்லோரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் ஒரு குழந்தை ரிமோட்டை வைத்திருக்க, இன்னொரு குழந்தை செல்போனை நோண்டிக் கொண்டிருக்க, மனைவி கேண்டி க்ரஷ் விளையாட, கணவன் முகநூலில் முகம் புதைத்திருக்க... அப்பா அம்மாக்களின் அரவணைப்பு இல்லாமலும் ஆயாக்களின் அன்பு கூட இல்லாமலும் சோட்டாபீம்களுடனும் டோராக்களுடனும் பேசிக்கொண்டிருக்கின்றன குழந்தைகள்!
அடுத்து... 'நான் பட்ட கஷ்டம் என் பசங்க படக்கூடாது’ என்கிறோம். நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக, கேட்டதையெல்லாம் பீட்ஸா டெலிவரி நேரத்தை விட, வேகமாக வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். ‘நாமளும் பக்கத்துல இல்ல. மனைவியும் வேலைக்குப் போயிட்டு ஆய்ஞ்சுஓய்ஞ்சு வர்றா. குழந்தைங்க ஏங்கிப் போயிரும். இதுல, அதுங்க கேட்டதை வாங்கிக் கொடுத்துட்டா, நமக்கு ஒரு நிம்மதி. ஒரு குற்ற உணர்ச்சிலேருந்து தப்பிக்கலாம் என்பதான எஸ்கேபிஸம்!’
இங்கே... வாழ்க்கையானது... எதையும் தங்கத்தாம்பாளத்தில் வைத்து உடனே வழங்கிவிடாது. விருப்பப்பட்டது எதுவும் உடனே கிடைத்துவிடாது. அப்படிக் கிடைத்தால் சந்தோஷம். கிடைக்காது போனால், துவண்டுவிடாதே என்பதை யாரும், நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதே இல்லை. சொல்லித் தருவதென்றால்... பிரம்பை வைத்து , நாக்கைத் துருத்தி, ஆவேசக் குரலில் அவர்களை அலறவிடுவதா? அது இல்லை. உணர்த்த வேண்டும். அப்படி அவர்களை உணர்த்துவதில்தான் இருக்கிறது நம்முடைய தெளிவும் வாழ்வும்!
இன்னும் முக்கால்வாசிபேர் செய்யும் செயல்... 'நான் பரதம் கத்துக்க ஆசைப்பட்டேன். முடியலை. ஆனா எம் பொண்ணை சேர்த்துவிட்டேன். பிரமாதம் பண்றா’... ‘நான் கராத்தே கத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். பெல்ட்டாலயே விளாசிட்டார் அப்பா. அதான் என் பையனைச் சேர்த்துவிட்டேன்’... என்பவர்களைப் பார்த்திருப்போம். நாமே கூட இப்படி ஏதேனும் சேர்த்துவிட்டிருப்போம்.
நம்முடைய சிந்தனைகளையும் ஆசைகளையும் தோல்விகளையும் அவர்கள் முதுகிலும் மனதிலும் சுமப்பது மிகப்பெரிய வன்முறை இல்லையா. நம் ஆளுமைகளைத் திணிக்க, அவர்கள் எப்படி ஆளுமைமிக்கவர்களாக வளர்வார்கள்; ஒளிர்வார்கள்; மிளிர்வார்கள்?
குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கவிடுவதில்லை நாம். இதில் ஒரு வேதனையான வேடிக்கை என்ன தெரியுமா... குழந்தைகளாக இருந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் குழந்தைகளையும் அவர்களுக்கான உலகத்தையும் உணர்ந்து, புரிந்து, தெளிதல் என்பதே இல்லை. இது கசக்கிற நிஜம். வலிக்கிற உண்மை.
செல்போனில் யாரோ நம்மை அழைக்க... ‘நான் தூங்கிட்டிருக்கேன்னு சொல்லு’, ‘நான் போனை மறந்துவைச்சிட்டுப் போயிட்டேன்னு சொல்லு’ என்பதையெல்லாம் எந்தப் பெற்றோர் செய்கிறார்களோ... இதையெல்லாம் குழந்தைகள் வெறித்துப் பார்க்கும்படி எவரெல்லாம் நடந்துகொள்கிறார்களோ... அவர்களின் வளர்ப்பில் வரும் குழந்தைகளிடம் ‘வாய்மையே வெல்லும்’ சொல்லி எந்தப் பிரயோசனமும் இல்லை.
உண்மை, நேர்மை, சத்தியம், நன்றி மறவாமை, விட்டுக் கொடுத்தல் என்கிற சின்னச் சின்ன விஷயங்கள் மூலமாகத்தான் இனிமையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனைவியை மதிக்காத கணவன், அதாவது அம்மாவை அப்பாவே மதிக்கவில்லை எனும் போது, பிள்ளை எப்படி அம்மாவை மட்டுமின்றி அப்பாவையும் மதிப்பான். பெற்றோரை மதிக்காத சூழலில், பிறரையும் சக மனிதர்களையும் இந்த உலகையும் எப்படி மதிக்கும்? எவ்விதம் நேசிப்பு இருக்கும்?
குழந்தைகள்தான் நம் உலகம். குழந்தைகள் கையில்தான் நாளைய உலகம். நாளைய உலகுக்கு சத்தான, மனதில் சத்தான குழந்தையை விட்டுச் செல்வதுதானே நம் பொறுப்பு; கடமை! குழந்தைகளைக் குழந்தைகளாகவே வளரவிட்டால்... குழந்தைகள் பின்னாளில் மாமனிதர்களாவர்கள்! மனிதருள் மாணிக்கமாவார்கள்!
டாக்டர், பொறியாளர், வக்கீல், விஞ்ஞானி, கலைஞன் என நம் குழந்தைகள் வளரட்டும். தப்பே இல்லை. அவர்கள் மனிதர்களாக வளர்வதும் வாழ்வதும் மிக மிக முக்கியம். உணர்வதும் தெளிவதும் நாமே! குழந்தைகளைக் கொண்டாடுவோம்! வன்முறையில்லாத, எதிர்பார்ப்பில்லாத நேசத்தை ஊட்டி வளர்ப்போம்!
குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்குத் தருவோம். அதுதான் அவர்களுக்குத் தரும் உண்மையான பரிசு!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago