சித்தூர் ராணி பத்மினியும்... வெடிக்கும் பத்மாவதியும்!

By வி. ராம்ஜி

இணையதளம், முகநூல், ட்விட்டர், செய்தி மற்றும் வாரப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என எல்லா இடங்களிலும் நீக்கமறப் பரவியிருக்கிறது ‘பத்மாவதி’ படமும் அது தொடர்பான சர்ச்சையும்!

ராஜஸ்தான் பக்கம் உள்ள சிற்றரசு தேசத்தின் ராஜாவுக்கு ராணியான பத்மாவதி கதை, இன்றைக்கு இந்தியா முழுக்க பேச்சாக இருப்பதுதான், மிகப்பெரிய ஆச்சரியம். படத்துக்குப் போடப்பட்ட ‘செட்’டுகளை தீவைத்துக் கொளுத்துகிறார்கள். இயக்குநரை அறைகிறார்கள். கதாநாயகியின் தலையை எடுத்தால், மூக்கை அறுத்தால் கோடிக்கணக்கில் பரிசு என அறிவிக்கிறார்கள்.

இந்தப் பட விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை போயிருக்கிறது. இந்த அளவுக்கு, திரி கொளுத்திப் போடும் அளவுக்கு ‘பத்மாவதி’ பிரச்சினைக்குரியவளா? என்று யோசிக்கும் அதேவேளையில், பத்மாவதிக்கு ஐம்பது வருடங்களுக்கு இன்னொரு பெயர் இருந்ததை அறிய முடிந்தது. அது... 'சித்தூர் ராணிபத்மினி'.

‘அட... நம்ம சிவாஜி படம்’ என்று மனதில் ஓடியது. 1963-ம் வருடம் பிப்ரவரி 9-ம் தேதி, ரிலீஸான  இந்தப் படத்தில், சிவாஜி, வைஜெயந்திமாலா, பாலையா, நம்பியார், காகா ராதாகிருஷ்ணன் என ஏகப்பட்ட பேர் நடித்திருக்கிறார்கள்.

ரிலீஸான புதுப்படம் பார்க்கும் ஆசை போல, 'சித்தூர் ராணி பத்மினி' டிவிடியை முழுவதுமாகப் பார்த்தேன். கருப்புவெள்ளைப் படம்தான். ஆனால் பிரமாண்டத்திலும் இசையிலும் நம்மைக் கட்டிப் போடுகிறது படம்.

நடனத்துக்குப் பெயர் பெற்றவர் என்பதால், வைஜெயந்தி மாலாவுடனான அட்டகாசமான நாட்டியத்தில் இருந்தே தொடங்குகிறது படம். சித்தூர் தேச சிற்றரசன் பீம்சிங்... சிவாஜி. ஒரு சிப்பாய் போல் வந்து, நாயகியின் மனதில் இடம் பிடிப்பதும், போட்டியில் வென்று, ‘மன்னா... இளவரசியை மணம் முடித்துத் தாருங்கள்’ என்று கேட்பதும், அடுத்தடுத்து மலரும் காதலும் கவிதையாய் சொல்லப்பட்டிருக்கின்றன. வசனங்களும் இயல்பாய், அழகாய், நறுக்கென்று இருக்கின்றன. படத்துக்கு வசனம் யாரென்று பார்த்தால்... நம்ம டைரக்டர் ஸ்ரீதர். இளங்கோவனுடன் இணைந்து திரைக்கதையும் வசனமும் பண்ணியிருக்கிறார்.

அந்தக் காலத்து இலக்கணம் போல், காமெடிக்கு காகா ராதாகிருஷ்ணன். நாலு சீனுக்கு ஒரு சீன் காமெடி என்று, கணக்காய் பிரித்து சிரிக்கவைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

படம் தொடங்கும்போதே, பத்மினியின் பிறந்தநாளும் அந்த விழாவில் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலீக்காபூர் உட்பட மன்னர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். மாலீக்காபூர் கேரக்டரில் எம்.என்.நம்பியார். அலாவுதீன் கில்ஜியாக டி.எஸ்.பாலையா. காட்சி அமைப்பிலும் ஒற்றை ஒற்றையாய் வருகிற வசனங்களிலும் மொத்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை நமக்குச் சொல்லிவிடுவது நேர்த்தி.

பத்மினியின் அழகை, மாலீக்காபூர் டில்லி வந்து அலாவுதீன் கில்ஜியிடம் சொல்ல, பெண் கேட்டு தூது அனுப்புகிறான் கில்ஜி. ஆனால் அதற்குள் சித்தூர் ராஜா பீம்சிங்குக்கு (சிவாஜிகணேசனுக்கு) பத்மினியை (வைஜெயந்திமாலாவை) மணம் முடித்து வைத்துவிடுகிறார்கள். அடுத்து, சித்தூருக்குப் படையெடுக்கிறான் கில்ஜி. ஆனால் அவனுடைய அத்தனை வியூகங்களையும் தகர்த்து, போரில் முன்னேறிக்கொண்டிருக்கிறான் பீம்சிங்.

உடனே வெள்ளைக்கொடி காட்டி சமாதானம் செல்ல சதித் திட்டமிடுகிறான் கில்ஜி. வெற்றிக்காகவும் விரும்பியதை அடைவதற்காகவும் எதுவேண்டுமானாலும் செய்வான் கில்ஜி என்பதை அழகாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் சித்ரபு ஹெச்.நாராயணமூர்த்தி.

சமாதானத்தை அடுத்து பாலையாவுக்கு விருந்து உபசரிப்பு. அதில் ராணி பத்மினியை நடனமாடச் சொல்லிக் கேட்கிறார் பாலையா. விருந்தினரின் விருப்பத்தைத் தட்டமுடியாமல், பீம்சிங் ஓர் யோசனை செய்கிறார். அதாவது, பாலையாவுக்கு எதிரே மிகப் பெரிய கண்ணாடியை வைத்து, அந்தக் கண்ணாடியில் பிம்பம் தெரியும்படி நடனமாடுகிறார் வைஜெயந்திமாலா. இதில் இன்னும் ஆவேசமாகி, அடுத்த தந்திரத்துக்குத் தயாராகிறான்.

‘எனக்குப் பிறந்தநாள். விழாவுக்கு வாங்களேன்’ என்றும் ’மனைவியுடன் வந்தால் மகிழ்வேன்’ என்றும் கில்ஜி ஓலை அனுப்ப... ‘ஏற்கெனவே உன் அழகில் சொக்கித்தான் போர் தொடுத்தான். இப்போது அங்கேயே உன்னை அழைக்கிறான். நான் மட்டும் போய் வருகிறேன்’ என்று சொல்லி, ராணா பீம்சிங் மட்டும் செல்ல... அப்போது கைது செய்து அடைக்கிறான் கில்ஜி.

‘சிறையில் உள்ள உன் கணவருக்கு விடுதலை வேண்டுமெனில், என் அரண்மனையில் ஆயிரம்பேர் சூழ்ந்திருக்க நடனமாட வேண்டும்’ என பத்மினிக்கு ஓலை அனுப்புகிறான் கில்ஜி. தன் கணவரைக் காப்பாற்றும் பொருட்டு, நூறு பல்லக்கில் பெண்களுடன் வருகிறேன். என் கணவரை உடனே விடுதலை செய்யவேண்டும் என மறு ஓலை அனுப்பிவிட்டுச் செல்கிறாள் பத்மினி. ஆனால் பல்லக்கில் பெண் வேடமிட்ட ஆண்கள். கூடவே ஆயுதங்கள். அரண்மனைக்குள் நுழைந்து, அத்தனைபேரையும் பந்தாடிவிட்டு, பீம்சிங்கை விடுவிக்க, அனைவரும் சித்தூர் வருவதை பரபரப்பு மாறாமல் படமாக்கியிருக்கிறார்கள்.

அதேபோல், பத்மினியின் அரண்மனை, சித்தூர் அரண்மனை, அலாவுதீன் கில்ஜியின் கோட்டை என ஒவ்வொரு இடங்களையும் அட்டகாசமாய் செட் போட்டு அசத்தியிருக்கிறார்.

பத்மினியுடன் சித்தூர் வர... இன்னும் கோபாவேசத்துடன் படையெடுக்கிறான் கில்ஜி. இதனிடையே பீம்சிங்கின் அம்மா இறப்பது சென்டிமென்ட் டச். அந்த யுத்தத்தில், வாளெடுத்துச் சுழற்றிச் சுழற்றி சண்டையில் கலந்துகொள்கிறார் வைஜெயந்திமாலா. போரில், பீம்சிங் கொல்லப்பட... ஓடி வந்து உடலில் விழுந்து கதறியழும் பத்மினி, ஆயுதம் எடுத்து தன்னைத்தானே குத்திக் கொண்டு இறந்துபோகிறாள்.

ஒரு செவி வழிச் செய்தியான வரலாற்று விஷயத்தை, குழப்பமே இல்லாமல் நேர்க்கோட்டிலான திரைக்கதையில் நேர்த்தியாய் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. சிவாஜியின் மிகையில்லாத நடிப்பும் வைஜெயந்திமாலாவின் நடிப்பும் நடனமும் அழகு. காது கிழிக்காத, இனிய இசையால் ஜி.ராமநாதன் சொக்கவைக்கிறார்.

‘இதுவொரு சரித்திரக்கதை. அல்லது சரித்திரத்தில் கற்பனை சேர்த்த கதை என்பதாலோ என்னவோ கதை என்று டைட்டிலில் எவர் பெயரையும் குறிப்பிடாத நேர்மை, அந்தக் காலத்துக்கே உரிய நேர்மை. இவ்வளவு விஷயங்கள் இருந்தும் படம் தோல்வியைத் தழுவியது என்கிறார்கள்.

ஆனால் கிடைத்த வெற்றி என்ன தெரியுமா?

சர்ச்சை வெடித்திருக்கும் பத்மாவதியாகட்டும் அதற்கு முந்தைய இந்தக் கதையாகட்டும் தூர்தர்ஷனில் ஓம்பூரி கில்ஜியாக நடித்த டெலிவிஷன் தொடராகட்டும், ஹிந்திப் படமாகட்டும்... இவை அனைத்துக்குமே நம்மூர் ‘சித்தூர் ராணி பத்மினி’ தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றால் நம்ப முடிகிறதா?

அப்புறம்... சும்மா ஒரு கொசுறு... 1963 பிப்ரவரி 9-ம் தேதி இந்தப் படம் வெளியானது. மார்ச் 1ம் தேதி ‘அறிவாளி’ படமும் அதே மாதத்தில் 29-ம் தேதி இருவர் உள்ளமும் ஏப்ரல் 12-ம் தேதி நான் வணங்கும் தெய்வமும் ஜூன் 7-ம் தேதி குலமகள் ராதையும், ஜூலை 12-ம் தேதி பார் மகளே பார் படமும் ஆகஸ்ட் 12-ம் தேதி குங்குமம் படமும் செப்டம்பர் 14-ம் தேதி ரத்தத்திலகமும் செப்டம்பர் 20-ம் தேதி கல்யாணியின் கணவன், நவம்பர் 15-ம் தேதி அன்னை இல்லமும் என ஒரே வருடத்தில் 10 படங்களில் சிவாஜிகணேசன் நடித்திருக்கிறார்.

படம் பார்த்ததும் எழுந்த கேள்வி இதுதான். செவிவழிச் செய்தியாக இருக்கிற ஒரு கதையை, சினிமாவாக்குவதில் என்னென்னவெல்லாம் சொல்லி கட்டையைக் கொடுக்கிறார்கள்.

கண்ணாடியில் பத்மினியின் பிம்பம், அடுத்து ஹிந்திப்படத்தில் நீரில் பிம்பம் எனக்காட்டியது போய், இன்றைய டெக்னாலஜியில் வேறு ஏதேனும் வடிவில் பத்மினியை, அதுதான் இப்போதைய பத்மாவதியைப் பார்ப்பானோ கில்ஜி? கச்சைக்கட்டிக் கொண்டு சர்ச்சைப் பட்டாசுகளைக் கொளுத்துகிற அளவுக்கு, ஏதுமில்லாத, நேர்த்தியான, நேர்மையான படமாகத்தான் இருக்கிறது, சித்தூர் ராணிபத்மினியின் படமும் பத்மினி குறித்த கதைகளும்!

மொத்தமாக யோசித்தேன். ‘என்னடா இது பத்மினிக்கு வந்த சோதனை’ என்று உள்ளே நொந்துபோனேன்.

‘அட... டைட்டில் நல்லாருக்கே’ என்று இந்தக் கதையை அங்கிருந்து சுட்டு, அடுத்த ரவுண்டுக்கு பத்மாவதியை இழுத்துவிட்டுடாதீங்கப்பா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்