மெர்சலானவர்கள் ரசிக்க வேண்டிய படம் மேயாத மான்

By பால்நிலவன்

தீபாவளிக்கு வெளியாவதற்கு முன்னும். பின்னும் பெரும் ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியது 'மெர்சல்' திரைப்படம். இந்த களேபரத்தில் பெரிய அளவில் அல்ல சிறிய அளவில் கூட புல்லை மேயத் தவறிக்கொண்டிருந்தது ஒரு மான்!

அது மனித மனங்களில் இழையோடும் அன்பின் வலிமையைப் பேச முற்பட்ட 'மேயாத மான்' திரைப்படம். சில வாரங்கள் கழித்து இப்போதுதான் மெல்ல மெல்ல மேயத் தொடங்கியுள்ளது. 'மேயாத மான்' படத்தைப் பற்றி பேசும் ஊடகங்களும் பத்திரிகைகளும் மெர்சலுக்கு கொடுத்த முக்கியத்துவம் அளவுக்கு கொடுக்கவில்லை. மிக மிக முக்கியமான படம் என்றெல்லாம் இந்த கட்டுரையை எழுதப் போவதில்லை.

இப்படத்தை சற்று தாமதமாக பார்க்க நேர்ந்ததால் அதை முன்னிட்டு பகிர்ந்துகொள்ள கொஞ்சம் இருக்கிறது என்ற வகையிலேயே இந்தக் கட்டுரை.

இப்படத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இதை 'ஒன்சைடு லவ்' என்று ரெட்டை வார்த்தையில் முடித்துவிடுகிறார்கள். எவ்வளவு அபத்தம் இது. ஏனெனில். இந்தப் படம் அந்த மாதிரியான எந்த திசையையும் காட்டவில்லை

புரிதலில் ஏற்படும் சிக்கல்களின் இடுக்குகளை நீக்கி மெல்லிய உணர்வுகளின் கதவுகளைத் திறந்துவிடுகிறது என்பதுதான் உண்மை. காதலை சொல்லமுடியாமல் தவிக்கும் இதயம் திரைப்பட கதையின் நாயகனாக இதயம் முரளி என நண்பர்களால் அழைக்கப்படுகிறான் இப்படத்தின் நாயகன்.

அது ஒரு தொடக்கம் அவ்வளவுதான். ஆனால் நமக்குத் தென்படும் காட்சிகளைப் பொறுத்தவரை புரிதலில் சிக்கல் என்பதுதான். 80களில் ஒன்சைடாக விரட்டும் காதலோ 90களில் முரளிவகையறா காதல் கதைகளில் வருவதுபோல நெருக்கமாக பழகினாலும் மனதிற்குள் மூடிமறைக்கும் காதலோ அல்ல.

மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கை என்று படத்தில் வசனமாக மட்டுமே வருகிறது. அது மட்டுமல்ல தாடியோடு நாயகன் வந்தால் அது ஒன்சைடு லவ் என்பதெல்லாம் எண்பதுகளில்தான் இப்போதல்ல... ஆனால் நாயகன் காதலுக்கு ஏங்குவது ஓரளவுக்குப் பொருந்திப்போக தாடி உதவுகிறது.

படமாக திரையில் வெளிப்படும் காட்சிகளைப் பொறுத்தவரையில் ஒரு பழைய தோழி... அல்லது தெரிந்த பெண். மற்றபடி அப்பெண்ணை விடாமல் துரத்துவதோ அருகருகே பழகியும் காதலை வெளியே சொல்லாமல் மென்று விழுங்குவதோ அல்ல.

அப்படியான ஒரு சப்ஜெக்டை அடிப்படையாகக் கொண்டு நாயகன் நாயகி இருவரின் பின்புலத்தைச் சுற்றி பின்னப்பட்ட ஒரு வாழ்வியல் நாடகம் இது. நகர வாழ்க்கையின் சிற்சிலப் பகுதிகளில் கடந்துசெல்லும் அவர்களின் வாழ்க்கைகளையே அறிமுக இயக்குநர் ரத்னகுமார் பின்னித் தந்துள்ளார்.

இப்படம் வடசென்னையையே கதைக்களனாக அமைத்துக்கொண்டுள்ளது. வடசென்னை என்றதுமே இப்படத்தில் காட்டப்படுவது வழக்கமாக தற்சமயம் தமிழ் சினிமாக்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சில பொதுவான அம்சங்கள் மட்டுமே. இப்படத்தில் வருவதுபோல, வடசென்னை என்றால் குடிசை மாற்று வாரிய இரண்டு அடுக்கக குடியிருப்புகளும் மெட்ராஸ் பாஷையும் கானா பாடலும்தானா? இன்னும் எத்தனை நாளைக்கு இதையே காட்டி வடசென்னை சினிமா என்று சொல்லப் போகிறார்கள்?

காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் தியாகராயர் கல்லூரி மைதானம், எண்ணூர் தாழங்குப்பக் கடலோரம், பழங்கால ராயபுரம் ரயில்நிலையம்,கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகள், எண்ணூர் மீன்பிடி துறைமுகம், ஆடுதொட்டி, டோபிகானா, ஸ்டீல் பேக்டரிகள், பேசின் பிரிட்ஜ், மாதவரம் பால் காலனி, வில்லிவாக்கம் செம்ள தாமோதரபெருமாள் கோவிலையொட்டிய பகுதிகள், ஆர்மேனியன் சர்ச் தெரு, சவுகார்பேட்டை, திருவொற்றியூர் கோயில்குளக்கரை, அயனாவரம், ஜார்ஜ் டவுன், வேப்பேரி, ஓட்டேரி என பலவிதமான நிலப்பரப்புகளும் வாழ்விடங்களும் இங்கு கிளைத்தோடுகின்றன. இவற்றில் கல்வியில் பொருளாதாரத்தில், சுகாதாரத்தில் பின்தங்கிய பகுதிகள் பல.

பல்வேறு கலாச்சாரங்கள் நிலைபெற்று பரந்துவிரிந்த வாழ்க்கையை தனித்தனி வறண்ட/செழித்த அழகியலோடு அதற்கேயுரிய உள்ளாரந்த இயங்கியலோடு வடசென்னை இன்னும் சரியாகப் பதிவாகவில்லை. அதே சமயம் இப்படத்தைப் பொறுத்தவரையில் 'மெட்ராஸ்' வகையறா படம்போல வன்முறை ரகளை என்ற கற்பிதங்கள் நிறைந்த காட்சிகளும் இப்படத்தில் இல்லை.

இப்படத்தில் முகம் சுளிக்கும் காட்சிகள் என்றால் உயரமான கட்டிட உச்சிக்கு சென்று தற்கொலைக்கு முயற்சிக்கும்போதெல்லாம் தண்ணியடித்து உணர்ச்சிவசப்படுவது... காதலிக்கும் பெண்ணை நினைத்து பாரில் அத்தனை பேரையும் ஆடவைத்து போடும் குத்தாட்டம்... (சிலர் அதை விரும்பக்கூடுமோ என்னவோ) இன்னும் சில முகச்சுளிப்பு காட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை அவரவர் ரசனை, விருப்பங்களோடு பொருந்திப் போக வாய்ப்புள்ளது.

நடுத்தரவர்க்க பையன் தன் கல்லூரி தோழியான உயர் சாதிப் பெண்ணை காதலிக்கிறான். அந்தவகையில் இது வழக்கமான தமிழ் சினிமா கதைதான்.

ஆனால் நாயகனுக்கு ஒரு தங்கையும் அவனின் பல நண்பர்களில் ஸ்கூட்டர் மெக்கானிக்கான நண்பன் விவேக் பிரசன்னா  படத்தின் வித்தியாசமான தளத்திற்கு நகர்த்தி விடுகிறார்கள். நாயகன் நாயகியை இப்படத்தில் சித்தரித்த விதத்தை விட மற்ற நண்பன், தங்கை கதாபாத்திரங்களை வடித்தவிதம் இன்றைய தமிழ்சினிமாவுக்கு ஒரு அற்புதமான முன்னுதாரணம். இவர்களைப் பொறுத்தவரை துணைக் கதாப் பாத்திரங்கள் என்று சொல்வது தவறு. கதை மாந்தர்கள் எனலாம் அல்லது வாழ்வின் நிதர்சனங்கள் இவர்களே என்றும் சொல்லலாம்.

உண்மையில் நாயகனின் நண்பன் மற்றம் தங்கைக்கான கிளைக்கதையின் போக்கும் இல்லையெனில் விமர்சர்களும் படம் அடிப்படையாக வைத்திருக்கும் கதாநாயகனின் 'ஒன்சைடு லவ்' வுக்கு வேலையே இல்லை. நண்பனும் தங்கையும் பால்ய காலத்திலிருந்தே தோழமை கொண்டவர்கள்... அவர்களிடமும் சாதாரண அன்பு காதலாக பரிமளிப்பதில் மிகையான காதல் மயக்கங்கள் துளியும் அற்ற யதார்த்த வாழ்வின் புரிதல்களே மையப்படுத்தப்பட்டுள்ளன.

உண்மையான வட சென்னை மத்தியதரவர்க்க வாழ்க்கையோடும் அது பின்னிப் பிணைந்துள்ளது. ஆண்ட்ராய்டு போனில் மனதோடு பேசவேண்டிய நெருக்கமான பகிர்தல்கள் அம்பலப்படும் வகையில் படத்தின் முக்கியமான திருப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கான்ஸ்பரன்ஸ் மோடில் அன்பின் ரகசியங்கள் அம்பலமாகும் இடங்களை இயக்குநர் ரத்னகுமார் கையாண்ட விதம் பார்வையாளர்களை ரசிக்க வைத்த காட்சிகளாகும்.

இறுதிக்காட்சிக்கு முன்பான காட்சி ஒன்றில், குடும்பத்திற்காக காதலை நிறைவேற்றிக் கொள்ள இயலாத லட்சக்கணக்கானவர்களுக்காக ஒரு அழகிய விளக்கம் தரப்படுகிறது. அது காதலை புதைத்துக்கொண்டு யதார்த்த வாழ்க்கையில் கரைந்துபோனவர்களுடனான இதமான கைகுலுக்கல்.

பாடல்கள் தவிர, பின்னணி இசையும் ஒளிப்பதிவும் கலை இயக்கமும் ஈர்க்கும் தரத்திலான துல்லியம். அதிலும் பின்னணி இசை மிக கவனமாக பழைய திரைப்படங்களுக்கான மூடைத் தந்து சற்றே கிளறி விடுகிறது.

நடிப்பைப் பொறுத்தவரை யாரையுமே குறைசொல்லமுடியாது. நாயகனான வைபவ் - அவரது பரிமாணங்கள் கூடியுள்ள படமாக இது அமைந்துவிட்டது. மெக்கானிக் நண்பர் விவேக் பிரசன்னாவின்  இயல்பான நடிப்பு பார்வையாளரை கட்டிப்போட்டுவிட்டது மட்டும் நிஜம். நாயகி பிரியா பவானி சங்கர் ஏற்றுள்ள பொறுப்புக்கு கச்சிதமாக பொருந்திவிட்டார். பவானிக்கும் தங்கையாக வாழ்ந்த இந்துஜாவுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

அறிமுக இயக்குநர்கள் அடுத்தடுத்த படங்களிலும் நுட்பங்களை வைத்தால் மட்டுமே மேலும் தொடர முடியும். ரத்னகுமாரிடம் அதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் இதில் தென்படுகின்றன...

மற்றபடி முதலில் சொன்னதுபோல மிக முக்கியமான படம் அல்ல இது. ஆனால் தீபாவளிக்கு வந்த படங்களில் மெர்சனலான ரசிகர்கள் இப்போதாவது சென்று நிதானமாக ரசிக்கவேண்டிய படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்