இந்தக் காலம், அந்தக் காலம் என்றில்லாமல் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான கருத்துகளைத் தருவதுதான், காலங்கள் கடந்தும் நிற்கும். அப்படித் தருபவரை, தந்தவரை... காலம் உள்ளவரைக்கும் பேசிக்கொண்டே இருப்பார்கள்; புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். அவற்றுக்குச் சொந்தக்காரர்.. என்.எஸ்.கிருஷ்ணன்.
தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து ஆளுமையையும் வள்ளல் தன்மையையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம், இன்னமும். அதற்கும் முன்னதாக மூன்றெழுத்துக்காரராகவும் மிகப்பெரிய வள்ளலாகவும் திகழ்ந்தவர் என்.எஸ்.கே.
இந்தியாவின் கடைக்கோடி அல்லது இந்தியாவின் ஆரம்பமுனை என்று சொல்லும் குமரி நாகர்கோவிலில் பிறந்தவர் என்.எஸ்.கே. இந்த வேலைதான் என்றில்லாமல் எல்லா வேலைகளையும் பார்த்தபடி சிறுவயதைக் கழித்தார். இயல்பாகவே வந்த பாட்டும் பேச்சும், வில்லுப்பாட்டுக் கலைஞராக இவரை முதலில் அடையாளம் காட்டியது. அந்த வில்லுப்பாட்டில்... தேசப்பற்று, ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவை வலியுறுத்தப்பட்டன. ஆனால், தேசப்பற்றையும் ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் சொன்னால் சிரித்துவிடுவார்களே... என்று யோசித்த என்.எஸ்.கே. ‘நாமளே சிரிக்கச் சிரிக்கச் சொல்லிப்புடுவோம்’ என்று நகைச்சுவையாகவே அனைத்தையும் சொல்லத் தொடங்கினார்.
இன்றைக்கு நகைச்சுவைப் பஞ்சம், நகைச்சுவையே இல்லை, மனதில் நிற்கும்படியாகவோ நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியாகவோ காமெடி இல்லை என்று அலுத்துச் சலித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அக்மார்க் காமெடிக்கு இன்றைக்கும் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார் என்.எஸ்.கே.
ஒருமுறை, முக்கியமான பிரபலத்தின் வீட்டுக்கு கலைவாணரும் அவர் மனைவி டி.ஏ.மதுரமும் சென்றிருந்தனர். அவர்களை வரவேற்றவர்கள், ‘என்ன சாப்பிடுறீங்க... காபியா, டீயா, கூல்டிரிங்க்ஸா, ஹார்லிக்ஸா...’ என்று அடுக்கிக் கொண்டே போக... கலைவாணர் சொன்னார்... ‘டீயே மதுரம்’ என்று! அந்த வீடே குலுங்கிச் குலுங்கிச் சிரித்தது.
சினிமாவுக்கான கதை பண்ணுவதில் கில்லாடி. அப்படிக் கதை பண்ணினால் அதில் சமூக அவலங்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் இருக்கும். பெண்ணடிமைத்தனத்தை குத்திக் காட்டுவார். விஞ்ஞான வளர்ச்சியை ஏற்க வேண்டி வலியுறுத்துவார். அதேசமயம்... தேசத்தின் மீது பக்தி தேவை என்பதை உணர்த்துவார். நடிப்பார். வசனம் எழுதுவார். பாடுவார் என பன்முகங்கள் கொண்ட வித்தகர் என்.எஸ்.கிருஷ்ணன்.
குதிரை வண்டியில் பயணம் செய்தபடி ஒரு விழாவுக்குச் சென்றார். அங்கே பேசும்போது, ‘குதிரைவண்டிக்காரர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஏன்னா... அவங்கதான் ‘முன்னுக்கு வா, முன்னுக்கு வா’ன்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க என்றார். விழா நடத்தியவர்கள் உணர்ந்து சிரித்த சிரிப்பு, அந்த ஊருக்கு கலைவாணர் வந்திருப்பதற்கு கட்டியம் கூறியது போல் இருந்தது.
காந்திஜியின் தனிமனித ஒழுக்கம் இவரை ஈர்த்த, பாதித்த ஒன்று. அதனால் பக்தியைப் பரப்பி வந்த வில்லுப்பாட்டுக் காலத்தில், காந்தியின் தேசியத்தையும் ஒழுக்கத்தையும் பரப்பினார் என்.எஸ்.கே. 1949-ம் வருடம், நாகர்கோவிலில், காந்தி நினைவு ஸ்தூபியை, தன் சொந்த செலவில் இருந்து, கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் செலவில் எழுப்பினார். விழாவுக்கு அப்போதைய முதல்வர் குமாரசாமி ராஜாவையும் பேரறிஞர் அண்ணாவையும் இன்னும் பலரையும் அழைத்திருந்தார். அண்ணாவின் மீது பற்று கொண்டிருந்ததால், அவரின் பேச்சை, நிறைய ஊர்களுக்கு அழைத்துச் சென்று பரப்பினார். இதனால் ஏற்பட்ட சலசலப்பைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை. இங்கே இன்னொரு விஷயம்... ஆசியாவிலேயே காந்திஜிக்கு, நினைவு ஸ்தூபி அமைத்த முதல் மனிதர் கலைவாணர் தான்!
ஆன்மிகத்துக்காக நந்தனார் என்று நாடகம் போட்ட காலம். இவர் கிந்தனார் என்று நாடகம் போட்டார். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வாலிபன், படிப்பதற்காக சென்னைக்குச் செல்வான். ‘நீயெல்லாம் ஆடுமாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று ஆசிரியர் அவனைத் திட்டி அனுப்புவார். ஆனால் அவனோ, நன்றாகப் படித்து, பள்ளிக்கல்வித் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை கிடைத்து, அதே ஊருக்கு, அவன் படித்த பள்ளிக்கே வருவார். ரயில்வே ஸ்டேஷனில் அந்த ஆசிரியர், அப்படியே தன் மாணவனை நெஞ்சாரத் தழுவிக் கொள்வார். கல்வியின் முக்கியத்துவத்தையும் தாழ்ந்ததாகச் சொல்வோர், உயர்ந்தோராவதற்குக் கல்விதான் அடிப்படை என்பதையும் அப்போதே வலியுறுத்தி கதை பண்ணியிருப்பார். அதேபோல், காந்தி மகான், வள்ளுவம், புத்தன் சரித்திரம் என இவரின் நாடகங்கள் அனைத்துமே வீரியமானவை; விதைகளாக இருந்து வளர்ந்தவை.
’கலைவாணரின் கருத்துகளைக் கேட்டு, உள்வாங்கி, பல்லாயிரக்கணக்கானோர் இன்றைக்கு முன்னுக்கு வந்திருக்கிறார்கள் என்று அண்ணா, இவரைப் புகழ்ந்திருக்கிறார். நண்பரும் ஒருவகையில் உறவினருமான, ப.ஜீவானந்தம் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தார் கலைவாணர். ஆனாலும் அண்ணன் என்று கலைவாணர் ஜீவானந்தத்தை அழைத்தார்.
சென்னை மயிலாப்பூரில் இருந்த நடராஜன் கல்விக்கழகம் எனும் அமைப்பு, இவருக்கு கலைவாணர் எனும் பட்டம் சூட்டி, இன்றைக்கும் சரித்திரத்தில் அந்த அமைப்பு இடம்பிடித்துவிட்டது. பம்மல் சம்பந்த முதலியார் இந்தப் பட்டத்தை வழங்கினார்.
சேலம், நாமக்கல் அருகே உள்ள தாரமங்கலத்தில் அண்ணாவின் படத்தைத் திறந்து வைத்ததுதான் கலைவாணரின் கடைசி நிகழ்ச்சி. அதேபோல், கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்ததுதான் அண்ணாவின் கடைசி நிகழ்ச்சி.
அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்த மண்டபத்தை, விரிவுபடுத்தி, புதுப்பித்து, பிரமாண்ட மண்டபமாக்கி, அதற்கு கலைவாணர் அரங்கம் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி. அதேபோல், நாகர்கோவிலில் கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர்.
கூத்தாடிகள், பபூன்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட நகைச்சுவை நடிகர்களுக்கு இன்றைக்கு மிகப்பெரிய அங்கீகாரமும் கெளரவமும் மரியாதையும் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவரே கலைவாணர்தான். இவர்தான்... தன் இயல்பாலும் இயல்பான நகைச்சுவையாலும் மக்களிடத்தில் அப்படியொரு பெயரைச் சம்பாதித்தார். இந்த இடம்... இன்று வரை திரையுலகில் நிரப்பப்படவே இல்லை.
அதேபோல், என்.எஸ்.கே. வீட்டில் எப்போதும் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும். பந்தி பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒருநாளைக்கு, குறைந்தபட்சம் ஐம்பது எண்பது பேராவது சாப்பிடுவார்களாம்.
பன்முக வித்தகர், சமூக, பொருளாதார, மனித நேயமிக்க கருத்துகளைப் பரப்பியவர் என்பதையெல்லாம் கடந்து தர்மசிந்தனையாளர் அவர். நல்ல ஆத்மா என்று இவரைப் புகழ்கிறார்கள்.
‘வள்ளல்’ எனும் குணத்தை வளர்க்க முடியாது. அது... பிறவிக்குணம். இந்தப் பிறவி... கலைவாணர் எனும் வள்ளலை, பண்பாளரை, மனித நேயமிக்க நல்லாத்மாவை நமக்கு வழங்கியிருக்கிறது. அதேபோல், தன் கலையின் மூலமாகவும் ஊருக்கு நல்லது சொன்ன நாகரீகக் கோமாளி அவர். அதனால்தான் அவர் இன்றைக்கும்... என்றைக்கும் கலைவாணர்!
கலைவாணரின் பிறந்த நாள் (நவம்பர் 29-ம் தேதி) இன்று. அந்த மகா கலைஞனை, நல்ல மனிதனைப் போற்றுவோம்; வணங்குவோம்; அவர் வழி நடப்போம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago