மழையோடு விளையாடி..!

By வி. ராம்ஜி

யானை, கடல், ரயில், மலை, மழை என எப்போதும் ரசிக்கும், வியக்கும் பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் எல்லாவற்றையும் எப்போது வேண்டுமானாலும் பார்த்துவிடமுடியும். ஆனால் வந்தால்தான் மழையைப் பார்க்க முடியும்! மற்ற விஷயங்களில், அதாவது உப்பு, புளி, கார, நிற வித்தியாசங்கள் இருந்தாலும், இந்தப் பட்டியல்... எல்லோருக்கும் பிடித்த பட்டியல்!

மழையை ரசித்து, மழையில் நனைந்து, மழையிலே கரைந்து, மழையுடனே வளர்ந்த தலைமுறையெல்லாம் இங்கே உண்டு. மழை வந்தால், பள்ளியில் இருக்கவேண்டும்; தெரு நண்பர்களுடன் ஆட்டம் போட வேண்டும் என்று எண்பதுகள் வரைக்கும் இருந்ததை, சிலிர்ப்பு மாறாமல் சொல்வார்கள் இன்னமும்!

பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் நடக்கணும். ஆனால், நடக்க வேணாம், பஸ்ல போ என்று காசு தருவாள் அம்மா. போக இருபது, வர இருபது. வாங்கித் தின்ன பத்துக்காசு. ஆக மொத்தம் ஐம்பது காசு. ஆனால் ரயில்வே ஷாப் ஓரத்தில் நண்பர்களுடன் நடப்பது தனிசுகம். கிட்டத்தட்ட கடல் மணல் போல், பரந்து கிடக்கும் அந்தப் பாதையில், தத்தக்காபித்தக்கா என்று பேசிக்கொண்டே ஸ்கூலுக்குச் செல்வோம். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால்... சட்டென்று மழை வந்தால், ஒதுங்கக் கூட இடம் இருக்காது. ஷாப் ஓரமான, ஓங்கி உயர்ந்த கருங்கல் சுவரையொட்டி, அட்டைமாதிரி ஒட்டிக்கொள்ளவேண்டும்.

மழை வந்துவிட்டால், எங்கள் கெமிஸ்ட்ரி வாத்தியார் இளங்கோவன் சார் குஷியாகி விடுவார். ‘டேய்... என்னடா படம் பாத்தீங்க. வா... வந்து கதையைச் சொல்லு’ என்பார். இன்னொருவனை பாடச் சொல்வார். ஸ்கூல் பியூனை அழைத்து பக்கத்தில் உள்ள ஆனந்தா பேக்கரிக்குச் சென்று, பட்டர் பிஸ்கட் வாங்கி வரச் செய்து, எல்லோருக்கும் தருவார். கச்சேரி இன்னும் களைகட்டும். கைத்தட்டல்கள் தூள்பறக்கும். விசிலடிக்க மட்டும் அனுமதியில்லை.

வெளியே கொட்டியெடுக்கும் மழை. உள்ளே குதூகலம் கொடிகட்டிப் பறக்கும். மாலை நாலரைக்கு விட வேண்டிய பள்ளியை, மூணரைக்கே விடுவார்கள். இடியே இடித்தாலும் நடந்தே தீரும் என்பார்களே. அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கும் இது பொருந்தும்.

சனி, ஞாயிறு லீவு சமயங்களில், மழையென்றால் இன்னும் கொண்டாட்டம்தான். ரயில்வே காலனியில் உள்ள நண்பர்கள் மொத்தபேரும், பக்கத்தில் உள்ள முந்திரித் தோப்பில் ஆஜராகிவிடுவோம். தட்டான் பிடிப்போம். பொன்வண்டு தேடுவோம். தட்டானைப் பட்டமாக்கி, நூலிலோ சணல் கயிறிலோ கட்டி ஐந்தடி தூரத்துக்குப் பறக்கவிட்டுப் பறப்போம். பொன்வண்டின் முதுகுப் பகுதியில், அதாவது கழுத்துப் பகுதியில் ஒரு இடைவெளி இருக்கும். அது நகர நகர, அது மூடித் திறந்து, மூடித்திறந்து என இருக்கும். ஒவ்வொருவராய் அந்த இடைவெளியில் விரல் நகம் வைப்போம். அது கப்பென்று பிடித்துக் கொள்ளும். சட்டென்று விட்டுவிடும். இந்தப் பொன்வண்டை தீப்பெட்டிக்குள் வைத்து, தீப்பெட்டியின் ஆங்காங்கே ஓட்டைகள் சுவாசத்துக்காக விடுவோம். இன்னும் சில திடகாத்திரமான பொன்வண்டுகள், தீப்பெட்டியையும் சுமந்தபடி, ஊர்ந்து ஊர்ந்து நடக்க... திங்கட்கிழமை விடிவதே தெரியாது எங்களுக்கு!

முதுகில் ரெண்டடி போட்டு, அப்பாக்களோ அண்ணாக்களோ அம்மாக்களோ வில்லன் மாதிரி வருவார்கள். ‘மழைல என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு’ என்று கத்திக் கொண்டே வருவார்கள். சில நண்பர்கள் இதுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு, சந்துபொந்துகள் தாண்டி ஓடி, கொல்லைப்புறமாக வீட்டுக்குள் நுழைந்து கொள்வார்கள்.

இப்போது, மழை வந்துவிட்டால், குழந்தைகளை வெளியே வர விடுவதே இல்லை. மழைக்கால பள்ளியும் இப்போது இல்லை. முக்கால்வாசி பள்ளிகள், ஏரிக்கரைக்கு அருகிலும் ஏரியிலும் ஊருக்கு வெளியே உள்ள பொட்டல்காட்டிலுமாக இருப்பதால், மழைக்கு பள்ளிக்கு ஒதுங்கியவன் என்பதெல்லாம் போய், மழையே பள்ளிகளில்தான் இப்போது ஒதுங்குகின்றன. ஹங்கமாவும் டோரிமானும் பார்த்துக் கொண்டிருந்த பசங்க, மழை வந்தால் கர்மசிரத்தையாய் செய்தி சேனல் பார்க்கிறார்கள். ‘டேய் மாத்துடா... சன் லைஃப்ல காதலிக்க நேரமில்லை போடறாண்டா’ என்று கெஞ்சுவதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே மாட்டார்கள்.

அந்தப் பசங்களுக்கு அந்த மாவட்டக் கலெக்டர் பெயர் உள்பட அத்துப்படியாகிவிட்டது, இப்போது.

என் பையன் பாலா , ‘ஏம்பா உன் காலத்துலயும் இப்படி தடக்குதடக்குன்னு லீவு விட்டுடுவாங்களாப்பா?’ எனக் கேட்டான். அப்போதெல்லாம் மழைக்கான பாதை இருந்தது. அந்த மழை நீர், அழகாக அதுபாட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பாதையையெல்லாம் இப்போது காணடித்துவிட்டோம். இப்போது வானத்தைத் தொடும் அடுக்குமாடி குடியிருப்புகள் பல, அந்தப் பாதைக்கு மேலே நிற்கின்றன என்பதை, அவனுக்குப் புரிகிற பாஷையில் சொன்னேன். புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டான்.

இந்த முறை கேள்வி கேட்டு, பதிலை நான் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை போல! அவனே கேள்வி கேட்டான்; பதிலும் சொன்னான். ‘போன வருஷம் புயல் வந்துச்சு. மிரட்டலா இருந்துச்சு. அதுக்கு முந்துன வருஷம் மழை காட்டுகாட்டுனு காட்டுச்சு. ஆனா இந்த ஒருவாரமா மழை, நிதானமாத்தான் பெய்யுது. விட்டுவிட்டுத்தான் பெய்யுது. நடுவுல வெயிலடிச்சு, இதமாவும் இருக்கு. ஆனா ஒரு வாரமா ஸ்கூல் இல்ல. ரோடெல்லாம் தண்ணீ. நடுவழில ரயில் நின்னு நின்னுதான் போகுது. ஏம்பா இப்படி?

நான் நாலாவது படிக்கும் போது நீ வைச்சிருந்த செல்போன் சாதாரணமானதுதான். அடுத்தடுத்து செல்போன்ல பல வசதிகள் வந்துருச்சுன்னு சொல்றே. நாங்களும் இஷ்டத்துக்கு டவுன்லோடு பண்ணிட்டு, விளையாடுறோம். ஆனா இன்னமும் மழை பெஞ்சா, உடனே கரண்ட் கட் பண்ணிடுறாங்க. கரண்ட் ஷாக்கடிச்சு, ரெண்டு குழந்தைங்க இறந்து போறாங்க. அதோ.. . அந்தக் கம்பியை மாத்தணும்பா. மாத்தினா இதெல்லாம் சரியாயிரும்பா’ என்றான்.

ஹை... மழை அடிச்சுப் பெய்யுது பாருடா... என்று வாசலுக்கு வந்து மழை பார்க்கிற சாக்கில், அந்தக் கேள்வியில் இருந்து நகர்ந்தேன்.

இந்த அரசின் அலட்சியத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் என்ன சொல்லிப் புரியவைப்பது அவனுக்கு. ஒருகட்டத்தில் அவனே புரிந்துகொள்வான். ஆனால் எப்படிச் சொல்ல... எதைச் சொல்ல?

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்