ருசியியல் 42: மழை என்றால் பஜ்ஜி

By பா.ராகவன்

இதனை எழுதத் தொடங்கும் இந்தக் கணத்தில் என் அறைக்கு வெளியே மிதமான வேகத்தில் மழை பெய்ய ஆரம்பிக்கிறது.

அதன் சத்தம் கேட்டு, எழுதுவதைச் சற்று ஒத்திப் போட்டுவிட்டு எழுந்து வெளியே வருகிறேன். பால்கனியில் நின்று சிறிது நேரம் மழையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெளியே காடென வளர்ந்திருக்கும் செவ்வரளிச் செடிகளின் இலைகளின்மீது மழைத்துளிகள் மோதித் தெறிக்கின்றன. சட்டென்று ஓர் இடிச் சத்தம். மழை மேலும் வலுக்கிறது. காற்றின் வேகம் அதிகரித்திருப்பது அரளிச் செடிகளின் ஆட்டத்தில் தெரிகிறது. அவை அசைந்து அசைந்து மழைக்காற்றை என்னை நோக்கித் திருப்பிவிடுகின்றன. என் கன்னங்கள் குளிர்ந்து போகின்றன. காதுகளுக்குள் காற்று நுழைந்து கரங்கள் பூரிக்கின்றன. கணப் பொழுதில் குளிர்ச்சி உடலெங்கும் பரவி, பாதங்களில் சென்று நிறைகிறது.  

என்ன ஒரு தருணம்! சிறு வயதுகளில் மழை என்றால் விடுமுறை என் மகிழ்ச்சியல்ல. மழை தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் சுடச்சுடத் தட்டில் வந்து எதிரே அமரும் வெங்காய பஜ்ஜியே என் மகிழ்ச்சி. அப்போது வீட்டில் அது ஒரு கட்டாயச் சடங்காகவே இருந்தது. மழை என்றால் பஜ்ஜி. பஜ்ஜியில் மனம் தோயத் தொடங்கிவிட்டால் மழை மறந்துவிடும். அது ஏன் ஒரு மசால்வடையாகவோ, மைசூர் போண்டாவாகவோ என்றைக்குமே இருந்ததில்லை என்று பின்னாள்களில் பல சமயம் நினைத்துப் பார்த்திருக்கிறேன். மழைக்கு பஜ்ஜி என்று தீர்மானித்த பிரகஸ்பதிதான், பெண் பார்க்கப் போகும் இடங்களிலும் அதுவே என்று தீர்மானித்திருக்கிறான். எப்படியானாலும் இயற்கைப் பேரிடர்களின் தொடக்கம் பஜ்ஜியுடன் அமைந்துவிடுகிறது. 

என் மனைவியைக் கேட்டேன். அவளது சிறு வயதில் மழைக்குச் சகாயமான சிற்றுண்டியாக அவளது அம்மா என்ன செய்து தருவார்? 

கேழ்வரகு அடை என்று பதில் சொன்னாள்.  

கேழ்வரகு மாவில் வெல்லத்தை உதிர்த்துப் போட்டு, போளி மாவு பதத்தில் எண்ணெய் விட்டுப் பிசைந்துகொள்ள வேண்டியது. நாலு ஏலக்காய், எட்டு முந்திரி தட்டிப் போட்டு, நெய் தடவிய வாழையிலையில் வடிவம் கொடுத்து எடுத்து தோசைக்கல்லில் இட்டுச் சுட்டால் இனிப்பான கேழ்வரகு அடை தயாராகிவிடும். 

நான் இதை உண்டு பார்த்ததில்லை. ஆனால் அவள் சொன்னபோது உணர்ந்து பார்க்க முடிந்தது. பஜ்ஜியின் மிதமான காரமும் சூடும் மழைக்குச் சரியான எதிரிடை என்றால், இந்த வெல்ல அடையை மென்றபடி மழையை ரசிக்கிறபோது அப்போதைக்குச் சுமாரான கவிதையோ, எதிர்காலத்தில் என்னைப் போன்ற ஒரு சிறந்த புருஷனோ அவசியம் கிட்டும். 

ஆனால் ஒரு கணம் யோசித்துப் பார்க்கலாம். 

வெயிலடிக்கும் நாள்களில் நாம் உண்ணாமல் இல்லை. பருகாமல் இல்லை. ஆனால் மழை ஏதோ விதத்தில் உடனடியாக எதையாவது தேடச் சொல்கிறது. பசி இருக்கிறதா, வயிற்றில் இடம் இருக்கிறதா என்பதுகூடப் பொருட்டில்லை. மழை வந்தால் கொண்டாடிவிட வேண்டும். கொண்டாட்டம் என்பது உணவில் பூர்த்தியாவது. 

இப்போது ஞாபகம் வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வர்தா புயல் சென்னையைத் தாக்கிய தினத்தில் ஒரு மசக்கைக்காரியின் தீவிரத்துடன் மசால் தோசை தின்ன முடிவு செய்தேன். வீட்டை விட்டு வெளியே எங்கும் இறங்கவே முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்திருந்த தினம். மின்சாரம் கிடையாது. பால் கிடையாது. பேப்பர் கிடையாது. எதுவுமே கிடையாது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் அன்று உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தன. தோசை மாவு இருந்தது. அரிசி அல்லது வேறெந்த தானியத்தையும் மொத்தமாகத் தவிர்த்துவிட்டு பாதாமும் பனீரும் மட்டுமே உண்ண ஆரம்பித்து அப்போது சுமார் ஆறு மாதங்கள் ஆயிருந்தன. உடல் இயந்திரத்துக்கு ஓர் அதிர்ச்சியளித்துப் பார்க்கலாம் என்று அத்தனை பெரிய இடைவெளிக்குப் பிறகு அன்று மசால் தோசை சாப்பிடுவது என்று முடிவெடுத்திருந்தேன். திட்டமிட்டபடி மூன்று முறுகல் மசால் தோசைகளைச் சாப்பிடவும் செய்தேன்.  

என்னால் அன்று அதை உண்ணவே முடியவில்லை. தோசைத் துண்டுகள் தொண்டையைத் தாண்டி இறங்க மறுத்தன. தண்ணீர் குடித்துக் குடித்து உள்ளே தள்ள வேண்டியிருந்தது. இது எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. ஏனென்றால் ஓட்டலுக்குப் போய் தோசை சாப்பிட்டால்கூட இரட்டைப்படையில்தான் ஆர்டர் செய்வேன். இரண்டு மசால் தோசை, இரண்டு ப்ளேட் பஜ்ஜி, இரண்டு காப்பி.  

ஆனால் இன்று என்ன ஆகிவிட்டது? உயிருடன் கலந்த உணவுகூட உள்ளே போக மறுக்குமா? நம்ப முடியவில்லை. 

பிறகு யோசிக்கும்போது புரிந்தது. நாவின் விருப்பம் என்பது மனத்தின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதுதான். நெஞ்சுக் குழிக்கு அப்பால் ருசி என்ற ஒன்றில்லை. அது சிந்தனையில் தோன்றி, நாவை நிறைத்து மறைவது. என் தேவைகள் மாறியபோது என் விருப்பங்கள் மாறிப் போயின. புதிய ருசிகளைக் கண்டடைய விரும்பி விதவிதமான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கினேன். அரிசி, கோதுமை, மைதா இனங்களை அகற்றி, பாதாம், காய்கறி, பனீர் என்று அடிப்படை உணவுப் பொருள்களை வேறாக்கி வைத்துக்கொண்டு அதில் புதிய ருசிகளைத் தேடத் தொடங்கினேன். 

இந்தத் தொடரை ஆரம்பம் முதல் வாசித்து வரும் பல நண்பர்கள் ஒவ்வொரு வாரமும் எனக்கு மின்னஞ்சலில் எழுதிக் கேட்கும் சந்தேகம் ஒன்றுதான். ஒரே கொழுப்பு கொழுப்பாகச் சொல்கிறீர்களே, ஹார்ட் அட்டாக் வந்துவிடாதா? 

வராது என்பதுதான் பதில். கொழுப்பு ஓர் எரிபொருள். கார்போஹைடிரேட் ஓர் எரிபொருள். இரண்டையும் கலந்தால்தான் சிக்கல். வெறும் கொழுப்பு, நல்ல கொழுப்பு ஒருநாளும் உங்கள் இதயத்தைக் கசக்கிப் பிழியாது.  

துரதிருஷ்டவசமாக ருசியென்பது தேகநலத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே அமைந்துவிட்டது. நாக்கு விரும்பும் எதையும் உடம்பு விரும்பாது என்று என் பாட்டி சொல்லுவாள். அப்படி ஒரேயடியாக முடிவுசெய்துவிட முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பயன்பாடு என்று ஒன்று உள்ளது. என்னத்தைத் தின்றாலும் போதிய உடலுழைப்பைக் கொடுத்துவிட முடியுமானால் ஸ்தூல சரீரம் தாக்குப் பிடிக்கும். ஆனால் என்னைப் போலொரு அசையாப் பிள்ளையார், தின்னவும் திளைக்கவும்தான் தயங்காதே தவிர, ஓடவும் உழைக்கவும் எப்போதும் யோசிக்கும். நேரமில்லை என்பதெல்லாம் எளிய தப்பிக்கும் வழி. அடிப்படையில் சோம்பேறியாக இருக்கிறவர்களுக்கு இது எக்காலத்துக்குமான பிரச்னைதான். அதனால்தான் நான் கொழுப்புணவுக்கு மாறினேன். இது ருசியை அல்ல; பசியை வெல்லும் வழி. ஒரு நாளைக்கு ஒரே வேளை உணவு. அரை மணி உட்கார்ந்து நிறுத்தி நிதானமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டால் போதும். நாளெல்லாம் பசி உணர்வே இல்லாமல் போய் பரம சுகமாக வேலை பார்க்க முடிகிறது இப்போது. 

இதோ, மழை இன்னும் விட்டபாடில்லை. மீண்டுமொருமுறை எழுந்துபோய் நின்று பார்க்கிறேன். சிறு வயதில் உண்ட பஜ்ஜிகளும் பக்கோடாவும் மீண்டும் நினைவில் திரண்டு எழத்தான் செய்கின்றன. ஆனாலும் இப்போது மீண்டும் உண்ணத் தோன்றவில்லை. நான் உணவு உட்கொண்டு பன்னிரண்டு மணி நேரம்தான் ஆகிறது. அடுத்த உணவுக்கு இன்னும் பன்னிரண்டு மணி நேரம் இருக்கிறது. எந்த பஜ்ஜி மோகினியாலும் அதைச் சீர்குலைக்க முடியாது. 

ஏனெனில் பசிக்கும் நேரத்தில் மட்டுமே என் ருசிமொட்டுகள் அவிழும்படியாகப் பழக்கி வைத்திருக்கிறேன். 

[நிறைந்தது]

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்