காலத்தின் வாசனை: மாட்டுவண்டிப் பாதையிலே…

By தஞ்சாவூர் கவிராயர்

“மாப்பிள்ளை வந்தான்…மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே! பொண்ணு வந்தா பொண்ணுவந்தா பொட்டி வண்டியிலே! புள்ளயப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே! பொண்ணைப் பெத்த அப்பா வந்தார் ஓட்டை வண்டியிலே!” ‘காவேரியின் கணவன்’ (1959) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இயற்றியவர் தஞ்சை இராமையாதாஸ். இசை கே.வி.மகாதேவன். எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குழந்தைக் குரலில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, கேட்போரைப் பரவசப்படுத்திய பாடல். நகைச்சுவையை மீறி யதார்த்தத்தின் உருக்கமும் இழையோடும் பாடல்.

அந்தக் காலத்தில் மாட்டு வண்டிகள் மனிதர்களின் அந்தஸ்துக்கு அடையாளமாக இருந்தன. ஜமீன்தார்கள் அலங்கரித்த வில்வண்டியில் சலங்கை கட்டிய மாடுகளின் ஜல் ஜல் சத்தத்தோடு பகட்டாக வந்து இறங்கினர். பெரிய தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை வண்டிகளில்தான் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

மாட்டு வண்டியில் சாதாரணமாக நாலு பேர் பயணிக்கலாம். புதிதாகத் திருமணமான தம்பதிகள் வைக்கோல் பரப்பி ஜமக்காளம் விரித்த வில் வண்டியில் புக்ககம் புறப்படுவார்கள். கல்யாண வீட்டார் குடும்பமாகக் கட்டை வண்டியில் கோலாகலமாகச் செல்வார்கள். வண்டியின் பின்பக்கம் பாதுகாப்புக்காகக் கம்பி இருக்கும். அதை வளையத்தில் மாட்டிவிட வேண்டும். வண்டிக்காரர் மாட்டின் வாலை முறுக்குவார், காலை விடுவார். குச்சியை சக்கரத்தின் ஓரம் விட்டு சடசடவென்று சத்தம் எழுப்பி அமர்க்களப்படுத்துவார். லேசான குலுங்கலுடன் வேகம் எடுக்கும். வண்டிப்பயணம் ஆனந்தமாக இருக்கும்.

இரவு வேளைகளில் வண்டிநின்றால் அந்த குஷி பிறந்துவிட்டால் தெம்மாங்கு பாட்டு பிய்த்துக்கொண்டு கிளம்பும். காளை மாட்டின் கொம்பைத் தீய்த்து மழுங்கச்செய்துவிடுவார்கள். ஆண்மை நீக்கமும் செய்துவிடுவார்கள். இதற்கு பெயர் மொட்டைமாடு. இது வண்டி மட்டுமே இழுக்கப் பயன்படும்.

வசதியானவர்கள் கூண்டு வண்டி வைத்திருப்பார்கள். கிராமங்களில் இருந்து டவுனுக்குப் போவதற்குக் கூண்டு வண்டிப் பயணம்தான். வாசலில் மாடுகள் பூட்டி வண்டி நிற்கிற வீட்டுக்காரர்கள் டவுனுக்குப் போகிறார்கள் என்று அர்த்தம். பயன்பாட்டுக்கு ஏற்றபடி பலவிதமான வண்டி கள் புழக்கத்தில் இருந்தன. கூண்டு வண்டி, வில் வண்டி, மொட்டை வண்டி, பார வண்டி, ரேக்ளா வண்டி, குதிரை வண்டி, ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி, ஆள் இழுக்கும் கட்டு வண்டி....

காளைக் கன்றுக் குட்டிகளை நுகத்தடியில் பூட்டி அக்கால தஞ்சாவூர் மைனர்கள் ஓட்டும் வண்டியின் பெயர் ரேக்ளா வண்டி. தஞ்சாவூர் கீழ வாசலில் ரேக்ளா வண்டி ரேஸ் நடந்திருக்கிறது.

என்.எஸ். கிருஷ்ணன் ‘நல்லதம்பி’ படத்தில் கிந்தனார் காலேட்சபம் செய்வார். அதில் கிடைத்த பணத்தில் திருச்சியில் புத்தூர் நால்ரோட்டில் வண்டிகளை நிறுத்துமிடம் கட்டிக்கொடுத்தார். ‘கிந்தனார் வண்டி ஸ்டாண்டு’ என்று இதற்குப் பெயர். இன்னும் இருக்கிறது. குதிரை வண்டிக்குப் பதிலாக ஆட்டோக்கள் நிற்கின்றன.

ரசிகன் என்ற பெயரில் 40, 50-களில் சிறுகதைகள் எழுதிய ரகுநாதன் ஒரு கிராமத்திலிருந்து இரவு வேளையில் மற்றொரு கிராமத்துக்கு சிறுவன் ஒருவனு டன் மாட்டுவண்டியில் பயணிப்பதை மூன்றே பக்கத்தில் அற்புதமான சிறுகதையாக எழுதியிருப்பார். இவர் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். தமிழில் சொற்பமாகவே எழுதினாலும் இவரது மகத்தான எழுத்துப் பணியை ஏனோ தமிழ் கூறு நல்லுலகம் கண்டுகொள்ளவே இல்லை.

இந்தக் கதையில் அவர் விவரித்திருக்கும் அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. தஞ்சைக்கு அருகில் உள்ள மேல உளூர் கிராமத்தில் இருந்து நள்ளிரவில் வீட்டுச் சாமான்களை ஏற்றிக்கொண்டு அப்பா மாற்றலான நாச்சியார் கோயிலுக்கு மாட்டுவண்டியில் பயணித்தோம். நிலா வெளிச்சம், தூரத்தில் சவுக்குத் தோப்பின் ஊடாகக் காற்றின் ஊளை. வண்டியில் சாமான்களின் மீது அப்பாவும் நானும்! மண் ரஸ்தாவில் வண்டிபோய்க்கொண்டிருக்கிறது. வண்டிக்காரர் பக்கத்தில் உட்கார்ந்துஇ இருந்த அப்பா இடுக்கு வழியே கீழே விழுந்து விட்டார். ஐயோ அப்பா என்று கத்தினேன். வண்டிபாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

வண்டிக்காரர் சட்டென்று வண்டியை நிறுத்தி “வாத்யாரய்யா என்னாச்சு, விழுந்திட்டீங்களா?” என்று பதறியபடி அப்பாவைத் தூக்கிவந்து என் அருகே உட்கார வைத்தார். தூங்காமல் இருக்க விடிய விடிய பாடிக்கொண்டே வந்தார். மறக்க முடியாத வண்டிப் பயணம். இப்போது வாகனங்கள் விபத்துக்குள்ளாவதுபோல் வண்டிக்கும் நேர்வது உண்டு. வண்டி குடை சாய்ந்துவிட்டது என்பார்கள். பெரிய அளவில் காயமெல்லாம் படாது.

வில்வண்டியின் மேலே பக்கவாட்டில் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். பார வண்டியின் கீழே லாந்தர் விளக்கு தொங்கும். வண்டி செல்லும்போது விளக்கு ஆடும் நிழலும் ஒளியுமாய் ஏகாந்தமான பாதையில் வண்டிக்காரன் பாடும் தெம்மாங்கைக் கேட்டுத் தலை அசைத்தபடி வண்டித் தடத்தில் மாடுகள் செல்லும்.

மாட்டு வண்டிகளுக்குப் போட்டியாக தஞ்சையில் ரிக்சா வண்டி அறிமுகப்படுத்தப்பட்ட காலம். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் எம்.எஸ்.கணபதி மாட்டுவண்டிக்காரர்கள் சங்கம் என்று ஒரு சங்கமே வைத்திருந்தார். சைக்கிள் ரிக்சாவை எதிர்த்து மாட்டுவண்டிக்காரர்களை வைத்து ஊர்வலம் போராட்டம் எல்லாம் நடத்தினார்.

மராட்டிய மன்னர் காலத்தில் சாரட் வண்டிகள் சாலையில் பயணித்தன. திரை போட்டு மூடிய பல்லக்குகளின் வடிவில் அவற்றில் அரச குடும்பப் பெண்கள் பயணித்தனர். தஞ்சை ப்ரகாஷ் தனது ‘மிஷன் தெரு’ நாவலில் மன்னார்குடிக்கு ஸ்டோன் துரை ஒரு டாம்பீக மான சாரட் வண்டியில் வந்து இறங்கியதை பிரமாதமாக வர்ணித்திருப்பார்.

திருமழபாடியில் நடந்த நந்தியம் பெருமான் கல்யாணத்துக்கு மராட்டிய அரண்மனையைச் சேர்ந்த, கணவனை இழந்த பெண்கள் நாலு குதிரை பூட்டிய சாரட்வண்டியில் சீர்வரிசை கொண்டுசென்றதாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. ‘விதவைகள்’ என்று அவர்களை மங்கல நிகழ்ச்சிகளில் விலக்காமல் இருப்பதற்கு மன்னர்களே முன்னின்று நடத்திய இச்சீர்திருத்தம் வியப்புக்குரியது. பார வண்டிகளை இழுத்துவரும் மாடுகள் தாகம் தணிக்க தஞ்சை நகரின் பல இடங்களில் தண்ணீர்த் தொட்டிகள் இருந்தன. பல ஆண்டுகளுக்கு முன்னால் யுனஸ்கோவின் அறிக்கை ஒன்று தமிழ்நாட்டு மாட்டுவண்டி மட்டும்தான் ஆதிமனிதனின் கண்டுபிடிப்புகளில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாததாக விளங்குகிறது. அதனளவில் பூரணத்துவம் பெற்றுவிட்ட வாகனம் உலக அளவில் இது ஒன்றுதான் என்று குறிப்பிட்டுள்ளது.

மற்ற ஊர்களில் இருப்பதுபோல சென்னையிலும் வண்டிக்காரத் தெரு இருக்கிறது. அங்கே இப்போது வண்டிக்காரர்கள்தான் இல்லை. கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள்!

- தஞ்சாவூர்க் கவிராயர்,

‘தெருவென்று எதனைச் சொல்வீர்?’

உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்