உ
லகத் தரத்தில் பொரித்தெடுக்கப்பட்ட ஒரு கீரை வடையை நான் முதன்முதலில் ருசி பார்த்த அன்று சென்னையை ஒரு கடும் புயல் தாக்கியிருந்தது. நகரமே சுருக்கம் கண்டாற்போல் ஈரத்தில் ஊறி ஒடுங்கியிருந்தது. ஆங்காங்கே நிறைய மரங்கள் விழுந்திருந்தன. சாலைகளில் வெள்ள நீர் பெருகி, சந்து பொந்தெல்லாம் குளங்களாகியிருந்தன. பேருந்துகள் நின்றுவிட்டன.
மின்சாரம், பேப்பர், பால் கிடையாது. மழை விட்டால்தான் உலகம் தன் பொந்துக்குள் இருந்து வெளியே வரும் என்று தெரிந்தது. என்றைக்கும் இல்லாத திருநாளாக அன்றைக்கு நான் கல்லூரியில் ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் ஒர்க் ஷாப் வகுப்புக்குப் போகலாம் என எண்ணிப் போயிருந்தேன். என்னோடு சேர்த்து ஏழோ, எட்டோ மாணவர்கள்தான் வகுப்புக்கு வந்திருந்தார்கள். ஆனால், பேராசிரியர் வரவில்லை. ஒர்க் ஷாப் அட்டெண்டர் இருந்தார். ஆனால் பரிசோதனை ஏதும் செய்து பார்க்க வழியில்லை என்று சொன்னார். மின்சாரம் இல்லை. “இன்னும் கொஞ்ச நேரத்துல லீவு அனோன்ஸ் பண்ணிருவாங்க. வீட்டுக்குப் போங்க தம்பிகளா’’ என்று அக்கறையுடன் சொன்னார். வீட்டுக்குப் போக வழி இல்லாதபடியால் அப்படியே பொடி நடையாக நடந்து இந்திரா நகர் மார்க்கெட் பக்கம் போனோம்.
கடைகள் ஏதும் திறந்திருக்கவில்லை. தேடிக் கண்டுபிடித்த ஒரு டீக்கடையில்தான் அந்தக் கீரை வடையை தரிசித்தேன். மழைக்குப் பாலிதீன் படுதாக்களைத் தொங்கவிட்டு, உள்ளே அவர் வடை சுட்டுக்கொண்டிருந்தார். இன்னொரு அடுப்பில் டீ பாத்திரம் இருந்தது. இதனைக் காட்டிலும் ஒரு பெரிய மானுட சேவை இருக்க முடியுமா? குளிரில் விறைத்திருந்த பத்திருபது பேருக்கு அன்று அந்த டீக்கடை ஒரு பெரும் சரணாலயமாகத் தெரிந்தது. அந்தக் கீரை வடை சுமாராகவே இருந்திருக்கலாம். ஆனால் அந்தச் சூழ்நிலையில், வேறு எந்த உணவும் கிடைக்க வழியற்ற நிலையில் அது அமிர்தமாக ருசித்தது. இரண்டு வடைகள் சாப்பிட்டுவிட்டு கடைக்காரருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, வடையில் போட்டிருந்தது என்ன கீரை என்று கேட்டேன். பொதுவாகக் கீரை வடையென்றால் அரை / முளைக்கீரைகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அன்று வேறெதுவும் கிடைக்காத சூழ்நிலை யில் அவர் பொன்னாங்கண்ணிக் கீரையில் வடை சுட்டிருந்தார். மணத்துக்கு சோம்பு போடுவதில்லை என்றும், இலவங்கத்தைப் பொடி செய்து போடுவதே வழக்கம் என்றும் சொன்னார்.
என்னோடு வடை சாப்பிட்ட நண்பர்கள் யாருக்கும் அது ஆர்வம் தூண்டக்கூடிய தகவலாகவோ, புதியதொரு சமையல் குறிப்பாகவோ தோன்றவில்லை. காசைக் கொடுத்துவிட்டு மழை விடும்வரை அங்கேயே நின்றிருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். நான் மட்டும் இரண்டு நாள் கழித்து மீண்டும் அந்தக் கடைக்குச் சென்று மீண்டும் ஒரு முறை கீரை வடை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். அன்று அரைக் கீரைவடை. இலவங்கச் சேர்மானம் இல்லை. மாறாக ஒரு பிடி புதினா சேர்த்திருந்தார், அந்த வடைக் கலைஞர். கொத்துமல்லி, வெங்காயத் தாள், பசுமஞ்சள், தனியா என்று வடைக்கு வாரம் ஒரு மாறுபட்ட மணம் வழங்கத் தாம் பயன்படுத்தும் பொருள்களைக் குறித்தும் எடுத்துச் சொன்னார். அதிர்ஷ்டம் இருந்திருந்தால் ஏதாவது பெரிய நட்சத்திர உணவகத்தின் தலைமை விற்பன்னராகப் போயிருப்பார்.
விடுங்கள், நான் வடையைப் பற்றிச் சொல்ல வந்ததாகவா நினைத்தீர்கள்? நிச்சயம் இல்லை. ஆ, அந்தக் கீரை! ஒரு கீரையின் சமையல் சாத்தியங்கள் அனந்தமானவை. கூட்டு, பொரியல், வடை, குழம்பு தாண்டி நாம் அதைச் சிந்திப்பதே இல்லை. வேகவைத்த வேர்க்கடலையுடன் பிடி கீரை நறுக்கிப் போட்டு வாணலியில் ஒரு சுழற்று சுழற்றித் தாளித்து உண்டு பார்த்திருக்கிறீர்களா? அட்டகாசமாக இருக்கும்.
ஒரு சமயம் கொல்கத்தா சென்றிருந்தபோது மறைந்த மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் மதிய உணவு உட்கொண்டேன். அவரது மனைவி பாலக் கீரையையும் இஞ்சியையும் இடித்து பொடிமாஸ் மாதிரி ஒன்று சமைத்திருந்தார். அப்போது அது குறித்து அவரிடம் விசாரிக்க மறந்துவிட்டேன். ஆனால், இன்றைக்கு வரை அந்த பாலக் பொடிமாஸின் ருசியும் மணமும் நினைவில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தியைப் பின்பொரு சமயம் சென்னையில் சந்தித்தபோது “வங்கத்தில் இருந்து தமிழுக்கு நீங்கள் கொண்டுவந்ததைக் காட்டிலும் உங்கள் மனைவி கொண்டுவந்த கீரை பொடிமாஸ் பிரமாதம்’’ என்று சொன்னது நினைவிருக்கிறது.
கீரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் சிறு வயதுகளில் நான் வாழ்ந்த கேளம்பாக்கத்தில் என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கீரைத் தோட்டம் உண்டு. பெரிய என்றால் ரொம்பப் பெரிய! பிரம்மாண்டமான கிணற்றில் இருந்து மாடு கட்டி நீரடித்து வளர்த்த தோட்டம். அதிகாலை ஐந்தரை, ஆறு மணிக்கு அங்கே போனால் கண்ணெதிரே கீரை பறித்து, பை நிறைய போட்டு கொடுப்பார்கள். ஒரு பை கீரை அப்போது நாலணா மட்டுமே. ஒரு பை என்பது குறைந்தது இன்றைய மூன்று கட்டுக் கீரைக்குச் சமம். என்னைப் போன்ற தாவர பட்சிணிகளுக்கு நுண் ஊட்டச் சத்து களுக்குக் கீரையை விட்டால் வேறு கதியே கிடையாது. இன்ன கீரை என்றில்லை. எது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும்!
தினசரி உணவில் குறைந்தது 200 கிராம் அளவுக்குக் கீரை இருந்துவிட்டால் வைட்டமின் குறைபாடுகள் அநேகமாக வராது. பிரச்சினை என்னவென்றால் நாம் சமைக்கிறபோது கீரையின் சத்துகளை அதிகபட்சம் எவ்வளவு சாகடிக்க முடியும் என்று தேடித் தேடி வழி கண்டுபிடித்து சமைக்கிறோம். அதற்கு உதாரணம், கீரை வடை! பருப்பும் எண்ணெயும் பொரித்த நிலையும் ருசி கூட்டக்கூடியவைதான். ஆனால், கீரைக்கு அது அநாசாரம். கீரையின் புனிதம் அதன் பச்சைத்தன்மையில் உள்ளது. பச்சையாகவே அது உள்ளே போனால் நடக்கிற அற்புதங்கள் அநேகம். ஒரு காலைச் சிற்றுண்டி. இதனை முயற்சி செய்து பாருங்கள்.
ஒரு கட்டுக் கீரை எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு கீரை. என்னவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. கொதித்த நீரில் அதை ஐந்து நிமிடங்கள் போட்டு, வடித்து எடுத்து விடுங்கள் (கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைக்கக்கூடாது) கொஞ்சம் புதினா. கொஞ்சம் கொத்துமல்லி. கொஞ்சம் கருவேப்பிலை. ஒரு இஞ்ச் இஞ்சி. ஒரு இஞ்ச் பசு மஞ்சள். ஒரு பிடி தேங்காய். ஒரு தக்காளிப் பழம். நாலு சிறு வெங்காயம். இரண்டு பல் பூண்டு. போதும்.
இவற்றை அப்படியே மிக்ஸியில் தூக்கிப் போடுங்கள். வெந்நீரில் ஐந்து நிமிடம் ஊறிய கீரையையும் எடுத்துப் போடுங்கள். அது கூழாகும்வரை மிக்ஸி ஓடட்டும். தண்ணீரெல்லாம் சேர்க்க வேண்டாம். நன்கு அரைந்ததும் அப்படியே எடுத்து அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, உப்புப் போட்டுக் குடித்துவிடுங்கள்.
இந்த கீரை ஸ்மூத்தியை இரண்டு தம்ளர் அருந்திவிட்டு ஆபீஸுக்குப் போய்விடலாம். இட்லி வேண்டாம். தோசை வேண்டாம். இடியாப்பம் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். இது கனஜோராக நாலு மணி நேரம் பசி தாங்கும். மட்டுமின்றி, இனிமா கொடுத்த மாதிரி வயிற்றைச் சுத்தம் செய்வதும் நடக்கும்; ருசி கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறதே என்பீர்களானால் புளிக்காத தயிர் இரண்டு கரண்டி சேர்க்கலாம். ஆனால், ஒரிஜினல் கீரை ஸ்மூத்தியின் ருசியானது ஒன்றிரண்டு முயற்சிகளிலேயே நமக்குப் பிடித்துவிடும். வாரம் ஒரு முறை இதைக் காலை உணவாக்கிக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் பெரும்பாலும் அண்டாது.
- அடுத்த வாரம் நிறைவுறும்.
எண்ணங்களைப் பகிர:
writerpara@gmail .com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago