நி
ஜ வாழ்க்கையில் வீட்டுக்கு வரும் டாக்டரை இன்றைய தலைமுறை நிச்சயம் பார்த்திருக்க முடியாது. வீட்டுக்கு வரும் டாக்டர்களை இப்போதெல்லாம் திரைப்படங்களில் கூடப் பார்க்க முடிவதில்லை. எனக்குத் தெரிந்து அறுபதுகளில் அவசர உதவிக்கு வீடுதேடிவந்து வைத்தியம் பார்த்த டாக்டர்கள் இருந்தார்கள். தஞ்சாவூரின் பிரசித்தி பெற்ற டாக்டர் சேஷாத்திரி எப்போது கூப்பிட்டாலும் வீட்டுக்கு வருவார். நான்கு ரூபாய்க்கு மேல் ஃபீஸ் வாங்க மாட்டார்.
வலங்கைமானில் டாக்டர் அருளானந்தம் என்பவர் இருந்தார். ஒரு கையில் பைபிள், மறுகையில் பிரசவத்துக்கு உதவும் ஃபோர்சப்ஸ் அவ்வளவுதான். பிரசவ வலி வந்த பெண்ணின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு பைபிளை வாசிக்க ஆரம்பிப்பார். சற்று நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து ‘குவா... குவா’ என்ற சத்தம் கேட்கும்.
வீட்டுக்கு வரும் டாக்டர் பெரும்பாலும் குடும்ப டாக்டராக இருப்பார். வீட்டிலுள்ளோர் உடல்நலம் குறித்த முழு ஜாதகமும் அவரிடம் இருக்கும். சில டாக்டர்கள் பணத்தைக் கையால்கூட தொட மாட்டார்கள். இஷ்டமிருந்தால் பக்கத்தில் இருக்கும் தட்டில் வைக்கலாம், வைக்காமலும் போகலாம். குந்தவை நாச்சியார் சித்த வைத்தியர்களுக்கு இறையிலி நிலங்களை (வரி செலுத்த தேவையில்லை) எழுதிக்கொடுத்து குடிமக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்ததாக ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. ஆயுர்வேத மருத்துவமனை அமைத்தது பற்றிய குந்தவை நாச்சியாரின் கல்வெட்டு திருமுக் கூடலில் காணப்படுகிறது.
தஞ்சை எல்லையம்மன் கோவில் தெருவில் கிளினிக் வைத்திருந்த டாக்டர் கோபால்சாமி குழந்தை வைத்தியர். வெள்ளை நிறக் கை வைத்த மஸ்லின் ஜிப்பா அணிந்து குள்ளமாக, சிவப்பாக இருப்பார். டாக்டர் சீட்டில் உட்கார்ந்ததும் இன்னும் குள்ளமாகி ஒரு குழந்தையைப் போல காட்சியளிப்பார். குழந்தையைப் போல சிரிப்பார். அவர் முன் இருக்கும் வழவழப்பான பெஞ்சில் குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். தொட்டுப் பார்ப்பார், வயிற்றைத் தட்டுவார். சில மாத்திரைகள் எழுதித் தருவார். குழந்தைக்குக் குணமாகிவிடும்.
எந்த வகைக் காய்ச்சலானாலும் டாக்டர் அனந்தராமன் கொடுக்கும் சிவப்புநிற தித்திப்பு திரவ மருந்தில் குணமாகிவிடும். ஒரு சீசா நிறைய ‘சிகப்பு மிக்ஸர்’, எல்லோருக்கும் அதுதான் மருந்து. மாத்திரைகளும் அவர் தயாரிப்புகள்தான்.
ஆபிரகாம் பண்டிதரின் மகாகோரோஜனை மருந்து துளியூண்டு பாட்டிலில் கிடைக்கும். நாள்பட்ட சளி இருமலுக்குக் கைகண்ட மருந்து. இப்போதும் கிடைக்கிறது. டாக்டர் இராமநாதன், டாக்டர் கல்யாண சுந்தரம் இவர்களின் மருத்துவ மனைகளில் கூட்டம் அலைமோதும். அப்போதெல்லாம் குதிரை வண்டியிலும், மாட்டுவண்டியிலும் டாக்டர் வீட்டுக்குப் போவோம். குடும்ப டாக்டர் போல குடும்ப வண்டிக்காரர்களும் இருந்தார்கள்.
தாஸ்மேடு எனப்படும் பீரங்கிமேடு அருகில் முத்து வைத்தியர் என்பவர் இருந்தார். இவருக்கே பித்தப்பையில் கல் உண்டாகி படுத்த படுக்கை ஆகிவிட்டார். அப்போதும் படுத்தபடியே நோயாளிகளை வரச்சொல்லி வைத்தியம் பார்த்தார். கீழ வாசலில் குணங்குடிதாசன் சர்பத் கடை என்ற புகழ்பெற்ற சர்பத் கடையை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் உரிமையாளர் (அந்த காலத்தில்) ஒரு தேள்கடி வைத்தியர் என்பது ரொம்ப பேருக்குத் தெரியாது.
எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷின் தாயார் டாக்டர் கார்டன் தஞ்சையின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர். டாக்டர் அச்சம்மா தாமஸ் டாக்டர் சுசீலா போன்றோர் தஞ்சாவூரின் முன்னோடி பெண் மருத்துவர்கள்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மகாராஜா கண் மருத்துவம் கற்றவர். அவரே அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். தன்வந்திரி மஹால் என்னும் ஆராய்ச்சிக் கழகத்தை ஏற்படுத்தி மருந்துகளைத் தயாரித்திருக்கிறார். சரபோஜியின் அரண்மனையில் கொட்டியம் மத்யஸ்தர் கோபாலபிள்ளை குமாரர் அய்யாக்கண்ணு பிள்ளை பிரபல அரண்மனை வைத்தியராக விளங்கினார். தர்பாரில் இடம் பெற்றிருந்த சுப்பராய கவிராயர் இயற்றிய நூலின் பெயர் ஜ்வர சிகிச்சை. சர்ஜன் பெல், சர்ஜன் க்யூரி முதலிய ஆங்கில மருத்துவர்கள் சமஸ்தான டாக்டர்களாக இருந்தனர். டாக்டர் ஏ.எல்.முதலியாரின் புகழ் கடல் கடந்தும் பரவியிருந்தது. மகப்பேறு சிகிச்சையில் நிபுணர் அவர். அவரை எலிஸபெத் மகாராணியாருக்குப் பிரசவம் பார்க்க அழைத்துச் சென்றது அன்றைய ஆங்கில அரசு.
சென்னையின் புகழ்பெற்ற டாக்டர் ரங்காசாரியின் வீடு சிறியது, ஆனால் அவருடைய ரோல்ராய்ஸ் கார் மிகப் பெரியதாக இருக்குமாம். “நான் வீட்டிலேயே இருப்பதில்லை நோயாளிகளைப் பார்க்கச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதால் பெரிதாக கார் வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்பாராம் டாக்டர் ரங்காசாரி. அவரிடம் சொந்தமாக ஒரு விமானம் இருந்தது. அவர் ஒரு பகுத்தறிவுவாதி!
தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் டாக்டர் வ.ஐ. சுப்ரமணியத்தின் குடும்ப டாக்டராக விளங்கினார் டாக்டர் சு. நரேந்திரன். வயது இப்போது 75. இவர் தமிழ்ப் பற்று மிகுந்தவர்.
ஒரு தடவை துணைவேந்தரின் தபேதார் நடராசனிடம் “ஐயாவுக்கு இனிமேல் இரண்டு சிகரெட்டுக்கு மேல் கொடுக்காதீர்கள்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
நடராசன் அதைச் செயல்படுத்தினார்.
“ஐயா இரண்டு சிகரெட்டுக்கு மேல் தரக் கூடாது என்பது உத்தரவு”
“யார் போட்ட உத்தரவு?”
“டாக்டர் நரேந்திரன் போட்ட உத்தரவு!”
அன்பினால் போட்ட அந்த உத்தரவை மீறும் துணிவு துணைவேந்தருக்கு ஏது?
- தஞ்சாவூர்க்கவிராயர், தொடர்புக்கு:-thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago