வெளுத்து, பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறது மழை. இப்படியான மழை வேளைகள் வரும்போதெல்லாம், கூடவே, அப்பாவின் நினைவும் வந்துவிடும் எனக்கு. அப்பா, கறார் பேர்வழியெல்லாம் இல்லை. ஆனால் இந்தக் குடை விஷயத்தில் மட்டும், அப்படி ஸ்ட்ரிக்ட் ஆபீசர் கணக்காக இருப்பார்.
சரி... மழையாக இருக்கிறதே. கடைவீதிக்குப் போனால், நண்பர் யேசு டெய்லர் கடைக்குப் போய் 'டாப்'பைப் போடலாம். ஜாலியாப் பொழுது போகுமே... என்று சட்டையை மாட்டி, செருப்பை எடுத்தால் 'எதுக்குடா குடை' என்பார். மழை கொட்டியெடுக்கும். 'குடையை ஞாபகமா எடுத்துட்டு வரமாட்டியே...' என்று அவரே பதில் சொல்வார். எனக்கு நினைவு தெரிந்து, குடையை தொலைத்த சோகமெல்லாம் நிகழவே இல்லை. 'சரி... குடையைத் தொலைக்கமாட்டே. ஆனா யாராவது கேட்டா, தானமாக் கொடுத்துட்டு வந்துருவே. பெரிய 'குடை' வள்ளல்னு நினைப்பு' என்பார்.
பிறகு தற்போதைய மாநில அரசுக்கு சப்போர்ட் செய்யும் மோடியைப் போல, அம்மாவின் அழுத்தமான சிபாரிசுக்குப் பின்னரே குடை கிடைக்கும் எனக்கு. ஒருவழியாக, யேசு கடைக்குப் போய் டேரா போட்டு, டி.எம்.எஸ்., எஸ்.பி.பி, எம்.எஸ்.வி. இளையராஜா பாடல்களை சத்தமாக வைத்து இசை மழையில் நனைந்து கொண்டிருப்போம்.
மழையும் கொஞ்சம் குறைந்திருக்கும். அப்படிக் குறைந்த ஐந்தாவது நிமிடத்தில் அப்பா வந்து நிற்பார். 'என்ன பாட்டும் கூத்தும் பலமா இருக்கு' என்று ஜாலியாய் ரகளை பண்ணுவார். ரெண்டு நிமிஷம்தான். 'அதான் மழையே இல்லையே. குடையை எடுத்துக்கிட்டுப் போறேன்' என்று குடையை நெஞ்சில் அணைத்துக் கொண்டு போவார்.
'பாருங்க யேசு... இந்த மனுஷன் குடைக்காகவே வந்திருக்காருங்க' என்பேன். சிரிப்பாகவும் இருக்கும். கோபமாகவும் வரும்.
இப்படித்தான் ஒரு கார்த்திகை மாத மழையின் போது ஒருகிலோ மீட்டர் தொலைவில் இருந்து, என் அக்கா வந்திருந்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் அவளுடனேயே வந்தது போல், கொட்டித் தீர்த்தது மழை. 'அடடா... மணியாயிருச்சே. போய்தான் சமைக்கணும். கொஞ்சம் குடை கொடேன்' என்று அக்கா கேட்க, ஏதோ இல்லாத சொத்தினை எழுதிக் கொடுக்கச் சொல்லி கேட்டது போல் பதறித் துடித்துவிடுவார் அப்பா.
'ஏம்மா மழைல போறே. கொஞ்சம் நின்னதும் போயேன். இந்த மழைல குடையே எடுத்துக்கிட்டுப் போனாலும் நனையத்தான் செய்வே...' என்று ஒரு அக்கறையாளராகவும் ஆய்வாளர் போலவும் பேசுவார். அம்மா, நான், அக்கா என எல்லோரும் வெடித்துச் சிரிப்போம்.
இது என் அப்பா என்றில்லை. எண்பதுகளின் அப்பாக்களுடைய பொதுவாக குடை குணம் இது. குடை விஷயத்தில் மட்டும் ஏனோ அவர்கள் கொடை சிந்தனையைக் கடைப்பிடிப்பதே இல்லை. குடையின் துணி கிழிந்திருந்தாலோ, கம்பி வளைந்து நெளிந்திருந்தாலோ அந்தக் குடையை பொக்கிஷமாய் வைத்திருப்பார் அப்பா.
அப்போதெல்லாம் 'குடை ரிப்பேர் பண்றதேய்...' என்று கத்திக் கொண்டே தெருக்களில் ஒரு தாத்தா வயதுக்காரர் வருவார். ஹாலில் உட்கார்ந்திருக்கும் அப்பாக்களுக்கு தெருவில்தான் காது இருக்கும் போல. அவரை தெய்வமாகவே பாவித்து, வரவேற்று, குடையை ரிப்பேர் செய்யக் கொடுப்பார். அவர் விரித்து, மடக்கி, திருப்பி, மேலே தூக்கி, வானம் பார்த்து, பூமி நோக்கி... பி.சி.ஸ்ரீராமை விட பல கோணங்களில் பார்த்துவிட்டு, அஞ்சு ரூவா ஆகும் என்பார். ரெண்டு சொல்லி, நாலுக்கு வந்து மூணே முக்காலுக்கு வந்து முடிகிற பேரம்... குடையை இன்னும் கொடி நாட்டச் செய்த பொழுதுகள்.
ஜானவாசம் எனப்படும் கல்யாண மாப்பிள்ளை ஊர்வலத்தின் போது குடையைக் கொடுத்தார்கள். அப்போது மழையும் இல்லை. வெயிலும் அடிக்கவில்லை. ஆனாலும் இதென்ன கலாட்டா என்பதுடன் அப்பாவின் குடை நேசமும் சேர்ந்து குபுக்கெனச் சிரிக்கச் செய்தது.
இப்போது குடை காலம் இல்லை. அல்லது குறைவுதான். ஏங்க... மழை வர்ற மாதிரி இருக்கு. குடை தரேன், எடுத்துட்டுப் போங்க என்று மனைவி சொன்னால், மழையாவது... வர்றதாவது... என்று அசால்ட்டாகச் சென்று, காலையில் ஒரு தொப்பல், மாலையில் இன்னொரு தொப்பலாக நனைந்து அசடு வழிவதெல்லாம் தனி எபிசோடு.
இன்றைக்கு ரெயின்கோட் ரகம்ரகமாய், தினுசுதினுசாய் வந்துவிட்டன. குடையெல்லாம் சினிமா வாத்தியாரும் டீச்சரும்தான் வைச்சிருப்பாங்க என்பதாகிவிட்டன. சட்டைக்கு மேல் சட்டை, பேண்ட்டுக்கு மேலே பேண்ட் என்பதான ரெயின்கோட்டுகளும், புலன்விசாரணை விஜயகாந்த் ரேஞ்சுக்கு மிரட்டலான ரெயின் கோட்டுகளும் வந்து விட்டன. எவ்வளவு கோட்டுகள் வந்து என்ன... ''மழையே வா! குடையாய் வருகிறேன். குடையாய் வந்த காதலியே... கொடைதான் எனக்கு நீயடியே...'' என்றுதான் கவிஞர்கள், குடை வைத்து, குடைச்சல் கவிதைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பது மாறியபாடில்லையே!
குழந்தைகள் தலையில் மாட்டிக் கொள்வது மாதிரி குடை பார்க்கும்போதெல்லாம், நமக்கும் கல்யாணமாகி, குழந்தை பிறக்கும். அப்போ இந்தக் குடையை வாங்கி, குழந்தைக்கு மாட்டி விடணும் என்று மழைநீரில் அடித்து சத்தியம் செய்தது, வீர வரலாறு. மகனுக்கும் மகளுக்கும் அப்படி தலையில் மாட்டிக் கொள்ளும் குடை வாங்கி, கிரீடம் சூட்டிய உணர்வில் குதூகலித்துப் போயிருக்கிறேன்.
அப்பா இறந்த பத்தாம் நாள் காரியத்தின் போது, சாஸ்திரிகள், எல்லா தானங்களும் வாங்கி வைச்சிடுறேன் என்று சொல்லியிருந்தார். அந்த தானத்தில் குடையும் இருந்தது. சட்டென்று அப்பாவின் இழப்பை, அந்தக் குடை இன்னும் இன்னுமாய் அதிகப்படுத்தியது. சுற்றி நின்று எல்லோரும் என்னைத் தேற்ற... அந்தக் குடையில் அப்பா தெரிந்தார்.
இதோ... இன்றைக்கு லேசான தூறலுடன் ஆரம்பித்தது இந்தநாள். 'எனக்கு ரெயின்கோட் இருக்குலப்பா' என்றாள் மகள். இருக்கு என்றதும் 'அதை எடு, போட்டுக்கிட்டுப் போறேன்' என்றாள். வேன்ல போயிட்டு வேன்ல வரப்போறே. ரெயின்கோட் எதுக்கு என்று மனைவி கேட்க... அங்கேயும் குடைக்கு பதில் ரெயின்கோட், அப்பாவுக்கு பதிலாக மனைவி என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன். நிறைவாக, மகள்தான் ஜெயித்தாள். மழை நிச்சயம் வரும். நல்லாப் பெய்யப் போவுது. அதனால ரெயின்கோட் போட்டுட்டுத்தான் போவேன்’ என்று உறுதியுடன் நின்று, ரெயின்போ கணக்காக ரெயின்கோட்டுடன் கிளம்பினாள்.
அந்த அழகைப் பார்ப்பதற்காகவே, வெளுத்துக் கட்டியபடி பூமிக்கு வந்ததோ என்னவோ... மழை!
மழை போற்றுதும்... குடை போற்றுதும்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago