இளையராஜா - மணிரத்னம் கூட்டணியின் ரசவாதங்கள்

By செய்திப்பிரிவு

இன்று இசைஞானி இளையராஜாவுக்கு மட்டும் பிறந்த நாள் அல்ல. இயக்குநர் மணிரத்னத்துக்கும் பிறந்த நாள். மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியை வெற்றிகரமான கூட்டணி என்பது போலவே, 1980களில் இளையராஜா - மணிரத்னம் கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி. இருவரும் பிறந்தநாள் காணும் வேளையில், இக்கூட்டணி நிகழ்த்திய மாயாஜாலத்தைத் திரும்பிப் பார்ப்போம்.

இன்று நடுத்தர வயதில் உள்ளவர்கள் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று 80களை நிச்சயம் கூறுவார்கள். இந்தக் கூட்டணியில் உருவான படங்களும், பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் தெறிக்கவிட்டன. அன்றைய இளைஞர்கள் இக்கூட்டணியை தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். இளையராஜா - மணிரத்னம் கூட்டணி ‘பகல் நிலவு’ படத்தின் மூலம் தொடங்கியது. 1985இல் வெளியான இப்படத்தின் கதைக்களம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ‘பூமாலையே தோள் சேர வா..’ என்கிற பாடல் இளைஞர்களைக் கவர்ந்தது. ‘பூவிலே மேடை போடவா’, ‘மைனா மைனா’, ‘வாராயோ’ போன்ற பாடல்களும் ராஜகீதமாக ஒலித்தன. அதே ஆண்டில் வெளியான ‘இதயகோயில்’ படமும் பாடல்களும் இன்றுவரை ‘எவர்கிரீன்’ லிஸ்டில் உள்ளதற்கு இக்கூட்டணியே காரணம்.

1986இல் வெளியான ‘மௌனராகம்’ படம் ராஜா - மணி கூட்டணியில் தங்கக் கிரீடமாக ஜொலித்தது. இப்படத்தில் வெளியான ‘ஓஹோ மேகம் வந்ததோ’, ‘நிலாவே வா’, ‘சின்னச் சின்ன வண்ணக்குயில்’, ‘பனிவிழும் இரவு’, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ போன்ற பாடல்கள் தேனில் பலாச்சுளையைக் கலந்து சாப்பிட்ட இன்பத்தைத் தரக்கூடியவை.விரும்பியவனைத் திருமணம் செய்துகொள்ளாமல் தவிக்கும் மனைவியும், காதலனை மறக்க முடியாமல் இருந்தாலும். அவளைத் அனுதினமும் விரும்பும் கணவனும் ‘மெளன ராகமாக’ வாழும்போது வெளிப்படும் பாடல்கள் ஒவ்வொன்றும் அடடா, தேன்... தித்திக்கும் தேன்...

தமிழ் சினிமாவின் மைல்கல் என்று ‘நாயகன்’ படத்தைச் சொல்வார்கள். 1987இல் வெளியான இப்படம் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு பக்கம் கமலின் நடிப்புத் திறமை. இன்னொரு பக்கம் மணிரத்னத்தின் இயக்கம். இவர்களுக்குப் பின்னணியில் இசைஞானி இளையராஜா. மூவரும் சேர்ந்து இப்படத்தில் முத்திரை பதித்தனர்‌. இப்படத்தில் இடம்பெற்ற ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலை யாராவது மறக்க முடியுமா? ‘ நிலா அது வானத்து மேலே’, நீ ஒரு காதல்..’ ‘அந்தி மழை மேகம்’, ‘ நான் சிரித்தால்...’ பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள். கதைக் களத்தில் மணியும் இசைவெளியில் ராஜாவும் சொல்லியடித்து வெற்றி பெற வைத்த கூட்டணி.

1988இல் இடிமுழக்கமாக வெளியான படம் ‘அக்னி நட்சத்திரம்’. இரண்டு தாரத்துப் பிள்ளைகளுக்குள் நடக்கும் மோதல்கள், காதல்கள், ஊடல்கள், செண்டிமென்டுகள், பழிக்குப் பழி என ஒரு கிளாசிக் படமாக வெளியானது. மணிரத்னத்துக்கே உரிய ஸ்டைலில் பிரபுவையும் கார்த்தியையும் வைத்துக் கலக்கிய படம். இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும் ‘அக்னி நட்சத்திர’த்தைக் காலம் கடந்தும் ரசிக்க வைக்கிறது. ‘நின்னுக்கோரி வர்ணம்’, ‘ஒரு பூங்காவனம்’, ‘ராஜா ராஜாதி’, ‘ரோஜாப்பூ ஆடி வந்தது’, ‘தூங்காத விழிகள்’, ‘வா வா அன்பே’ ஆகிய பாடல்கள் இன்றும் ஃபிரெஷ்ஷாக இருக்க ராஜாவின் கைவண்ணமே காரணம்.

1989இல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்த ‘இதயத்தைத் திருடாதே’, 1990இல் வெளியான ‘அஞ்சலி’ படத்தின் கதைக்களம் ஒரு புதிய முயற்சியை சொல்ல வந்தது. அதற்கு ராஜாவின் இசையும் சேர்ந்து ஒத்திசைக்க, இரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இக்கூட்டணியில் கடைசியாக வெளியான படம் ‘தளபதி’. ரஜினி, மம்முட்டியை வைத்து மணி ரத்னம் இயக்கிய இன்னொரு ‘ஏ கிளாஸ் படம்’. பல கேங்ஸ்டர் படங்களுக்கு இதுவும் ஒரு முன்னுதாரணம். நட்பின் இலக்கணத்தையும் ஒரு தாயின் பாசத்தையும் படத்தில் கலந்து காட்டியதில் திரையரங்கமே அதிர்ந்தது. ரஜினியின் சூப்பர் ஸ்டார் பிம்பத்தை மக்களிடத்தில் இன்னும் கூடுதலாக ஒளிரச் செய்ததது இப்படத்தில் இடம்பெற்ற ‘அடிராக்கமா கைய தட்டு’ என்கிற துள்ளல் பாடலைக் கொண்டாதவரே இருக்க மாட்டார்கள். ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. ‘யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே’, ‘சின்னத்தாயவள்’, ‘மார்கழிதான் ஓடியாச்சு’, ‘சுந்தரி கண்ணால்’ போன்ற பாடல்கள் ரீங்காரமாக ஒலித்தன.

கடந்த 30 ஆண்டுகளாக ராஜா - மணி கூட்டணி மீண்டும் சேராமல் போனாலும், 80களில் இக்கூட்டணி் நிகழ்த்திய ரசவாதங்கள் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும்!

- ரிஸ்வான், பயிற்சி இதழாளர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE