தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) பலன்கள்: விவாதத்தை விரும்பும் நீங்கள், நல்ல கருத்துகள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வீர்கள். இதுவரை உங்கள் சுகவீடான 4-ல் அமர்ந்து எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் தடுத்ததுடன், பலவிதங்களிலும் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்த குருபகவான் ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை 5-ம் வீட்டில் அமர்ந்து அள்ளிக் கொடுக்கப் போகிறார். குடும்பத்தில் எப்போதும் வீண் விவாதங்கள், சண்டை சச்சரவுகள் என்றே நாட்கள் நகர்ந்ததே, ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் எந்த ஒட்டும், உறவும் இல்லாமல் பிரிந்துதானே இருந்தீர்கள். அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்த தம்பதியருக்கு கண்ணுக்கு அழகான குழந்தை பிறக்கும். தாயாருக்கு இருந்து வந்த மூட்டுவலி விலகும். சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசுவார்கள். குலதெய்வம் கோயிலுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சில நேரங்களில் தனிமையில் தவித்தீர்களே! இனி எல்லோருடனும் மனம் விட்டு பேசுவீர்கள்.
குரு உங்கள் ராசியை பார்ப்பதால் எதையோ இழந்ததைப்போல் இருந்த உங்கள் மனசு நிம்மதியாகும். வாடிய முகம் மலரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப்புடவை, தங்க ஆபரணம் வாங்கித் தருவீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்தமாக வீடு கட்டி குடிபுகுவார்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
அவர் வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கி, பாசமழை பொழிவார்கள். கிடப்பில் இருந்த வழக்கில் சாதகமான நிலை ஏற்படும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டுக்கு வேண்டிய டி.வி, ப்ரிட்ஜ் புதிதாக வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். அண்டை அயலாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
» குரு பெயர்ச்சி பொதுப்பலன் - ஏப்.22, 2023 முதல் மே 1, 2024 வரை | ஒரு பார்வை
» சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - தனுசு ராசியினருக்கு எப்படி?
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். ஆனால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளவேண்டாம். ஆனால் புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வீடு மாறுவீர்கள். எதைச் செய்தாலும் பலமுறை யோசனை செய்தும், பெரியவர்கள், அனுபவசாலிகளின் ஆலோசனையின் பேரிலும் செய்ய வேண்டும்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். பிள்ளைகள் படிப்பில் வெற்றி பெற்று உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் தொண்டை வலி, கணவன் - மனைவிக்குள் பிரிவு, வீண் வாக்குவாதம், வாகனப் பழுது, பணப் பற்றாக்குறை வந்து செல்லும். வரவுக்கு மீறி செலவுகள் இருக்கும். எச்சரிக்கையாக இருக்கவும். வீண் வம்புக்கு செல்ல வேண்டாம்.
வியாபாரத்தில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் புதிய முதலீடு செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். ஹோட்டல், கமிஷன், எண்டர்பிரைஸ், துணி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உத்தியோகத்தில் அங்கும் இங்குமாக பந்தாடப்பட்டீர்களே! அடிக்கடி அவமானப்படுத்தப் பட்டீர்களே! அதிக நேரம் உழைத்தும் அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் அல்லாடினீர்களே! இனி அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி உங்களை மதிப்பார்கள். வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான பனிப்போர் நீங்கும். கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். கணினி துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சி எதிலும் நாட்டமில்லாமல் ஏனோ - தானோ என்றிருந்த உங்களை எல்லாவற்றிலும் சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: தஞ்சை மாவட்டம் - வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குருபகவானையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago