மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு 2023 எப்படி? - புத்தாண்டு பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்): வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பவர்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கையில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை எதிர்பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் உடனே முடியும். கல்யாண விஷயங்கள் கூடி வரும். பழைய வாகனத்தை கொடுத்து புதிதாக வாங்குவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக அறை கட்டுவீர்கள். புதிதாக வீடு கட்டுவதற்கும் இது சரியான நேரம். உங்கள் ராசியிலேயே இந்தாண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடுக்கடுக்காக செலவுகள் இருந்தாலும், அதற்கேற்ற வருமானமும் உண்டு. அவ்வப்போது உடல்நிலையையும் கவனித்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் ஆழ்மனதில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டாம்.

23.4.2023 வரை குருபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் இருப்பதால் சின்ன சின்ன செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். புண்ணிய ஸ்தலங்கள் பலவற்றுக்கும் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்தில் பாகப் பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணமும் சாதகமாக அமையும். 24.4.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமரப் போகிறார். உங்களுக்கு சரி என்று படும் விஷயத்தை மட்டும் செய்யுங்கள். சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வீண் பயம், டென்ஷனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடமும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும்.

வருடத் தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். வெளிவட்டாரத்தில் புகழ், கவுரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். நட்பு வட்டம் விரியும். ஆனால் 17.1.2023 முதல் சனிபகவான் 11-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். 31.10.2023 வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும்.

1.11.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் எல்லா பிரச்சினைகளும் ஓயும். கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களால் நிம்மதி குறையும். அரசு சம்பந்தப்பட்ட டெண்டர்கள், கான்ட்ராக்டுகள் உங்களுக்கே கிடைக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். போராடி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமில்லாத தொழிலில் பணத்தை கொட்டி நஷ்டப்படாதீர்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் நிலையற்ற போக்கு நிலவும். உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களிடமெல்லாம் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை சரியாகும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை. நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, சலுகைகள் எல்லாம் வந்து சேரும். சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும்.

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பல சோதனைகளை தந்தாலும், எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியத்தையும், தன் கையே தனக்கு உதவி என்பதையும் அறிவுறுத்துவதாக அமையும்.

பரிகாரம்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீற்றிருக்கும் யோக பைரவரை தேய்பிறை அஷ்டமி திதியில் சென்று வணங்குங்கள். தாயில்லா பிள்ளைகளுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்): பணம், காசு வந்தாலும் கடந்து வந்த பாதையை மறவாத நீங்கள், உழைப்பால் உயர்பவர்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டத் தயங்காத நீங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் 9-ம் வீட்டில் வலுவாக நிற்கும் நேரத்தில் 2023-ம் ஆண்டு பிறப்பதால் இதுவரை உங்களிடமிருந்த வெறுப்பு, விரக்தி எல்லாம் விலகும். வருமானமும் உயரும். விலகியிருந்த கணவன், மனைவியுடன் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். நெடுநாட்களாக வட்டி மட்டுமே கட்டிய கடனும் பைசலாகும். தடைபட்ட திருமணம் முடியும். புதன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆனால் ராசிக்கு 12-ல் இந்த ஆண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வந்து கொண்டேயிருக்கும்.

23.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் வலுவாக காணப்படுவதால் திடீர் பணவரவு உண்டு. பெரிய பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் கிட்டும். நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். 24.4.2023 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஆனால் சுபச் செலவுகள் தான் அதிகம் வரும். முடிந்த வரை பட்ஜெட் போட்டு குடும்பத்தை கவனிக்கவும். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்களின் வீட்டு விசேஷங்களில் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

இந்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் ராசிக்கு 9-ம் வீட்டில் தொடர்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 17.1.2023 முதல் சனிபகவான் 10-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் உத்தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, ஏமாற்றம் வந்துபோகும். 31.10.2023 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். ராசிக்கு 12-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 1.11.2023 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.

வியாபாரிகளே! ஏற்ற - இறக்கங்கள் இருக்கும். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம். புகழ் பெற்றவர்கள் உங்களுக்கு வாடிக்கையாளர்களாக வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். அயல்நாடு, வெளிமாநிலத் தொடர்புடனும் புது வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பிளாஸ்டிக், கெமிக்கல், உணவு, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டு. கடை வாடகை அதிகமாகிக் கொண்டு போகிறதே - கடன் ஏதாவது வாங்கி சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வையெல்லாம் எதிர்பார்க்கலாம். தேர்வில் தேர்ச்சிப் பெற்று அதன் மூலமாகவும் புது பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்பாராத இடமாற்றம் உண்டு.

இந்த 2023-ம் ஆண்டு சின்னச் சின்ன எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளில் தாமதத்தையும் தந்தாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: மேல்மருவத்தூர் அருகிலுள்ள அச்சிறுப்பாக்கம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஆட்சீஸ்வரர் மற்றும் உமையாட்சீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மேலும் முன்னேறுவீர்கள்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்): சரியோ, தவறோ எதையும் நேரடியாக சொல்லும் திறந்த மனதுக்காரான நீங்கள், யார் எந்த உதவி கேட்டாலும், பிரதிபலன் பாராமல் சட்டென செய்பவர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகும் நீங்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த 2023 புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். முக்கிய பெரிய பொறுப்புகள் தேடி வரும். கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அரைகுறையாக நின்று போன வீடு கட்டும் வேலையை இனி விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.

உங்கள் ராசிநாதனான புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. மகளுக்கு இப்பொழுது நல்ல வரன் கிட்டும். தாயாருக்கு இருந்த முதுகு வலி, மூட்டு வலி சரியாகும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

23.04.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் அதுவரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அலுவலகத்தில் அதிக பேச்சை தவிர்ப்பது நல்லது. 24.4.2023 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டு. தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.

சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். புது வீட்டில் குடி புகுவீர்கள். இந்தாண்டு தொடக்கத்தில் அஷ்டமத்து சனி தொடர்வதால் முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், வீண் பழி வந்து செல்லும். 17.01.2023 முதல் சனிபகவான் 9-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் அனைத்து பிரச்சினைகளும் விலகும். அஷ்டமத்தில் அகப்பட்டதை விட இந்த காலகட்டம் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும்.

31.10.2023 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. 1.11.2023 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

வியாபாரிகளே! இனி கடையை நவீன மயமாக்குவீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். பதிப்பகம், கட்டுமானப் பணி, மூலிகை, ஸ்க்ராப் வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள்.

இந்த 2023-ம் ஆண்டு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை காட்டிக் கொடுப்பதுடன், நீண்ட கால கனவுகளையெல்லாம் நனவாக்குவதாகவும் அமையும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குங்கள். ஈமச்சடங்குக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

அனைத்து ராசிகளுக்கான 2023 புத்தாண்டு பலன்கள்

> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்