“பாம்பென்றால் படையும் நடுங்கும்” ஆனால் ராகு கேது என்றால் ஊரே நடங்கும், உலகமே ஒடுங்கும். ராகுவும், கேதுவும் நினைத்தால் ஒருவருடைய வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போட முடியும். கடைக்கோடியில் இருப்பவர்களை கோடி கோடியாய் சம்பாதித்து குபேரனாக்கவும் முடியும். கடைக்கோடியில் கொண்டு போய் நிறுத்தவும் முடியும். கருநாகம் என்பது ராகு, நல்லபாம்பு என்பது கேது. கருநாகம் இருக்கும் இடத்தில் புதையல் இருக்கும். புதையலைப் பாதுகாக்க நாகங்கள் இருக்கும்.
ராகு ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால் அவர்களுக்கு புதையல் யோகம் உண்டு. வீடு கட்டும் போதும், நிலம் வாங்கி உழும்போதும், கிணறு தோண்டும்போதும் அவர்களுக்கு புதையல் கிடைக்கும். நல்ல பாம்பாகிய கேது வறுமைகளையும், வாட்டங்களையும், வருத்தங்களையும் கொடுத்து, ஆனால் அதேநேரத்தில் வாழ்க்கையில் பல பாடங்களை சொல்லிக் கொடுக்கக் கூடியவர். ஞானம், தியானம் மற்றும் முக்தியையும் கற்றுத் தரக் கூடியவர். நாம் எதற்காக வந்திருக்கிறோம், நம் கடைமைகள் என்னென்ன நாம் அடுத்து என்னவாக ஆக வேண்டும் என்றெல்லாம் மெய்ஞான அறிவை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கக் கூடியவர்தான் கேதுவாகிய நல்லபாம்பு.
சூரியன், சந்திரன், குரு ஆகிய எல்லா கிரகங்களைவிட மிக வலிமையான கிரகங்கள் ராகுவும், கேதுவும்தான். நிழல் கிரகங்கள் மற்றும் சாயா கிரகங்களாகிய ராகுவுக்கும், கேதுவுக்கும் தனக்கென சொந்த வீடோ, வானவெளியில் சீரான வட்டப்பாதையோ கிடையாது. ஆனால் வந்த வீட்டில் உட்கார்ந்து கொண்டு சொந்த வீட்டுக்காரரைத் துரத்திவிட்டு தனக்கென்று ஓர் இடத்தை பிடித்துக் கொள்வார்கள். “காலை பார்த்து ஜோதிடம் சொல், கையை பார்த்து வைத்தியம் செய்” என்ற பழமொழிக்கேற்ப எந்த கிரகத்துடைய நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்களோ அந்த கிரகத்துக்குரிய பலனை தவறாமல் அள்ளிக் கொடுப்பார்கள்.
ஜாதக அலங்காரம், ஜாதக பாரிஜாதம், பிருகத் ஜாதகம் மற்றும் பராசர ஹோரா உள்ளிட்ட பழைய ஜோதிட நூல்களில் ராகுவை, கேதுவைப் பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளது. லக்னத்துக்கோ, ராசிக்கோ 3-ம் வீட்டில் ராகுவோ, கேதுவோ இருந்தால் ஏகப்பட்ட ராஜ யோகங்களை அந்த தசாபுத்தியில் நாம் அனுபவிக்க முடியும். பெரிய பதவியில் அமர முடியும். நாடாளும் யோகத்தை அடைய முடியும். 6-ம் வீட்டில் ராகுவும், கேதுவும் இருந்தால் எதிரிகளே இல்லாத அளவுக்கு நம்மால் ஜெயித்துக் காட்ட முடியும். 11-ம் வீட்டில் ராகுவும் கேதுவும் இருந்து அந்த தசாபுத்தி வந்தால் ஷேர் மார்க்கெட் மற்றும் வியாபாரம் மூலம் அதிக லாபம் அடையலாம்.
ராகு தசை, ராகு புத்தி மற்றும் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர் களெல்லாம் சற்று வித்தியாசமாக இருப்பார்கள். 4-ம் எண்ணுக்கு அதிபதி ராகு. நம்மைசுற்றியுள்ள நாலு பேர் எல்லாம் ராகுதான். ராகு நம்மைப் பின் தொடரும் கிரகமாக மட்டுமல்லாமல் நம்முடைய ஊழ்வினைகளை யெல்லாம் கணக்கிடும் கிரகம். ராகுகாலத்தில் பிறந்த குழந்தைகள் கட்டுக்கு அடங்காத எனர்ஜி லெவல் அதாவது அதீத ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். மாற்றுவழியில் சந்து, பொந்து, இடுக்கில் நுழைந்து சென்று சேர வேண்டிய இடத்தை அடைவதுடன், யாராலும் முடியாது என்று மூட்டை கட்டிப் போட்ட விஷயத்தை என்னால் முடியும், நான் செய்து காட்டுவேன் என்று சவால்களில் வெற்றியடைய சாமர்த்தியத்தை தருபவர் இந்த ராகுதான். திடீரென்று வரும் சமயோஜித புத்தியை தருபவரும் இவர்தான். ராகுபகவான் பணத்தை கொட்டிக் கொடுத்து, அதே நேரத்தில் நம்மை பலவீனத்தில் மூழ்க வைத்து கொடுத்ததை எடுத்துக் கொள்வார்.
‘பிதுர்வழி பாட்டன் சொத்து பேரனுக்கு கிடைக்குமா?’ என்று கேட்பார்கள். பொதுவாக பாட்டன் சொத்து, மூதாதையர், முன்னோரின் சொத்தெல்லாம் நம் கைக்குக் கிடைத்து வம்சாவழியாக அதை நாம் பாதுகாத்து ஆண்டு, அனுபவித்து, அதன் மூலம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்றால், நம் ஜாதகத்தில் ராகு நன்றாக இருந்தால்தான் நமக்கு அந்த பாக்யமெல்லாம் கிடைக்கும். அப்படியே அவங்க தாத்தா போலவே பின்னங்கையை கட்டிக் கொண்டு நடக்குறான் பாரு என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நம் முன்னோரின் க்ரோமோசோம்ஸ் களாகிய ஞிழிகி, ஸிழிகி போன்ற மரபணு மூலக்கூறுகளை முன்னோரிடமிருந்து நம் உடலுக்குள் கடத்துபவர் ராகுதான். அந்த ஞிழிகி, ஸிழிகி வடிவமைப்பைப் பார்த்தால் இரண்டு பாம்புகள் பின்னிப்பிணைவது போன்றுதான் இருக்கும். ஆழ்நிலை தியானம் செய்யும்போது நம்முடைய நனவிலி மனதிலிருந்து எழக்கூடிய குண்டலினி சக்தி, பாம்பின் வடிவத்தில்தான் இருக்கிறது.
பசி, பட்டினி, வறுமை, உறவினர்களால் சங்கடங்கள், நம்பிக்கை துரோகங்களையெல்லாம் சந்திக்க வைக்கக் கூடிய கிரகம் கேது. ஆனால் கேதுபகவான் பணம், காசு கொடுக்காவிட்டாலும் வேத ஞானத்தையும், மனப்பக்குவத்தையும் நமக்கு கற்றுத் தருவார். கேது வேத வேதாந்தத்துக்கெல்லாம் அதிபதியாக இருக்கக் கூடியவர். மோட்சத்தை நமக்கு வாரி வழங்கக் கூடியவர். அதுமட்டுமின்றி வானவியல், ஜோதிடம் போன்றவற்றில் பெரிய அறிவுத் திறனை கொடுக்கக் கூடியவர். எப்பொழுதும் நேர்மையை தரக் கூடியவர். தரமான மருத்துவர்களை உருவாக்கி மருத்துவத்தின் மூலமாக மக்களுக்கு நிவாரணம் தரக் கூடியவர். அதுமட்டுமின்றி மோட்சத்தை தரக் கூடியவர். தாய்வழி பாட்டன், பாட்டிக்குரிய குணங்கள், சொத்துகளையெல்லாம் நமக்கு தருபவரும் இவர்தான்.
தேடல், தேடிக் கொண்டே இருத்தல், தேடியதில் நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் வரை தேடிக்கொண்டேயிருத்தல், தேடி முடித்த பிறகு பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து ஓடி உழைத்துக் கொண்டேயிருத்தல் என்பதெல்லாமே ராகு - கேதுவின் வேலைதான். ராகு சந்திரன், சுக்கிரனுடன் சம்பந்தபட்டால் சினிமா படம் எடுக்க முடியும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் வலிமையாக இருக்கும்
போதும், 4-ம் இடத்துடன், 10-ம் இடத்துடன் சம்பந்தப்படும் போதும் அவர்கள் மருந்துவராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். தற்போது கால புருஷ தத்துவத்துக்கு முதல் வீடான, தலை வீடான மேஷத்தில் ராகு வந்தமர்கிறார்.
தலை, தலைக்கவசம், தலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் மற்றும் தலைவனாக இருப்பவர்களுக்கு சிக்கல்கள், தலையின் மேல் அணியும் ஆடையைப் பற்றிய விவாதங்கள் எல்லாம் ராகு மேஷத்தில் அமர்வதால் ஏற்படக் கூடிய சில விஷயங்கள்தான். நீண்ட காலமாக நண்பனாக இருந்த நாடு, எதிரி நாடாக மாறவும், எதிரியாக இருந்த நாடு, நட்பு நாடாகவும் மாறி மாறி சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. நாட்டுத் தலைவர்களுக்கெல்லாம் ஒரு விதமான மன இறுக்கங்கள், மன அழுத்தங்கள், உயிர் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும். சாலை விபத்துகளும் அதிகமாகும்.
மேஷம் செவ்வாயின் வீடு. செவ்வாய் ராணுவத்துக்கும், காவல்துறைக்கும், போருக்கும், போர் தளவாடத்துக்கும் உரிய கிரகமாக இருக்கிறார். அதனால் உலகெங்கும் போர் பயம் இருக்கும். உலகநாடுகள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிகமாக போர் தளவாடங்களை வாங்கி அடுக்கி வைத்துக் கொள்ளும் சூழல் உருவாகும். கம்யூனிஸ நாடுகள் புது அவதாரங்கள் எடுக்கும். மலை சார்ந்த இடமும், காடு, கடல் சார்ந்த இடமும் சேதமாகும். நெருப்பு கிரகமாகிய செவ்வாயின் வீட்டில் ராகு உட்காருவதால் காடுகளில் தீ பற்றும்.
பெட்ரோ கெமிக்கல் விலை உயரும். அதேபோல துலாத்தில் கேது அமர்வதால், துலாம் வியாபாரத்துக்குரிய வீடு என்பதால் வியாபாரிகளுக்கு சில தொந்தரவுகள் இருக்கும். பதுக்கி வைத்துள்ள பொருட்களையெல்லாம் அரசாங்கம் வெளியில் கொண்டு வரும். ரசாயனங்களால் பதப்படுத்தபட்ட உணவுகள் எல்லாம் கண்டறியப்பட்டு அழிக்கப்படும். புது தடுப்பூசிகள் அடுத்தடுத்து வரும். நீதித் துறையில் சின்னச் சின்ன கலங்கங்கள் ஏற்படும். நீதிபதிகளுக்கு உயிர்பயம் வர வாய்ப்பிருக்கிறது. ஜவுளி, சொகுசு வாகனங்கள் மற்றும் உணவு உற்பத்தி பாதிப்படையும். வான்வெளியில் செயற்கைக் கோள்கள் மோதிக் கொள்ளும். இணையதள சேவைகள் சில நேரங்களில் முடங்கும்.
நிகழும் பிலவ வருடம் பங்குனி மாதம் 7-ம் தேதி திங்கள்கிழமை உத்தராயணப் புண்ய கால, சசி ருதுவில் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், வியாகாதம் நாமயோகம், பவம் நாமகரணம் அமிர்த யோகத்தில், பஞ்சபட்சியில் காகம் நடைபயிலும் நேரத்தில் நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பல சித்து வேலைகளைச் செய்யும் ராகுபகவானும், கேதுபகவானும் (21.3.2022) இன்று பிற்பகல் 2 மணி 54 நிமிடத்துக்கு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் ராகுபகவானும், விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்குள் கேதுபகவானும் நுழைகின்றனர். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 12.4.2022 மதியம் 1 மணி 48 நிமிடத்துக்கு பெயர்ச்சி அடைகிறார்கள்.
இந்த ராகு -கேது பெயர்ச்சி ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்களுக்கு பிரபலமான யோகத்தை தரக் கூடியதாக இருக்கிறது. வீடு, மனை வாங்குவது, திருமணம் கூடுவது, நல்ல வேலையில் அமர்வது போன்ற எல்லா சுகபோகங்களும் இந்தப் பெயர்ச்சியில் நடக்கும். கடகம், மகரம் ராசிகளில் பிறந்தவர்கள் சின்னச் சின்ன சிக்கல்கள் இருந்தாலும் கடின உழைப்பால் ஜெயித்துக் காட்டுவீர்கள். ஆனால் மேஷம், கன்னி, துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் போராடிப் பெற வேண்டி வரும். உடல்நலத்திலும் கவனம் தேவை. சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு.
மேஷம்
இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே ராகு வந்து அமர்வதால் முன்பு இருந்து வந்த பிரச்சினைகளெல்லாம் கொஞ்சம் விலகும். உங்கள் ஆரோக்யத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். முன்கோபம் அதிகமாகும். உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். தற்போது கேது 7-ல் வந்தமர்வதால் கணவன் -மனைவிக்குள் சின்னச் சின்னதான சந்தேகங்கள் வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன் - மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்த யாராவது முயற்சி செய்வார்கள் அதை நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும்.
பரிகாரம்: புற்றுடன் இருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று எலுமிச்சை பழ தீபம் ஏற்றுங்கள்.
ரிஷபம்
கடந்த மூன்றரை வருடத்துக்கு பிறகு மிகப் பெரிய ராஜயோகத்தை இந்த ராகு - கேது பெயர்ச்சி தரப் போகிறது. ராகு ராசியை விட்டு விலகுவதால் உடம்பில் இருந்து வந்த நோய்களெல்லாம் பறந்து ஓடிவிடும். மருந்து மாத்திரையெல்லாம் எடுத்து தூர போடுங்கள். பணவரவும் திருப்தி தரும். எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும். கேது 6-ம் வீட்டில் இருக்கிறார். கடன் பிரச்சினை தீரும். உங்களை எதிரியாக பார்த்தவர்கள் உங்களிடம் திடீரென்று வந்து நட்பு பாராட்டுவார்கள். ராகு - கேது பெயர்ச்சி ஒரு பெரிய ராஜயோகத்தை தருவது மட்டுமின்றி உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.
பரிகாரம்: சிவாலயத்துக்கு சென்று பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
மிதுனம்
அஷ்டமத்துச் சனியில் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு ராகு பகவான் 12-ம் வீட்டிலிருந்து 11-ம் வீட்டில் உட்கார்ந்து அள்ளித் தரப் போகிறார். இனி நிம்மதியாக இருப்பீர்கள். உங்களின் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபமும், உத்யோகத்தில் பதவி உயர்வும் உண்டு. சொந்த வீடு வாங்குவீர்கள். ஆனால் கேது 5-ல் அமர்வதால் பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள் அவர்களை புரிந்து கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள்.
பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்கு, சதுர்த்தி திதி நாளில் சென்று வணங்குங்கள்.
கடகம்
உங்களுக்கு 4-ம் வீட்டில் கேது அமர்வதால் வீடு மாற வேண்டி வரும். அம்மாவுக்கு கொஞ்சம் மருந்து, மாத்திரை செலவுகள் இருக்கும். 10-ல் ராகு அமர்வதால் உத்யோகத்தில் உங்களை விட வயதிலும், தகுதியிலும் குறைவானவர்களிடம் கொஞ்சம் பணிந்து பதில் சொல்ல வேண்டியிருக்கும். சொந்தமாக எதாவது தொழில் தொடங்கலாமா என்று கூட யோசிப்பீர்கள். ஆனால் அவசரப்பட்டு எதிலும் போய் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதேசமயம் கவுரவப் பதவிகளும் தேடி வரும். பணவரவு இருக்கும். எதிலும் பொறுமை காக்கவும்.
பரிகாரம்: கருமாரியம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று நெய் தீபமேற்றுங்கள்.
சிம்மம்
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல ஒரு யோகத்தை தரப் போகிறது. கேது பகவான் 3-ம் வீட்டில் அமர்வதால் இனி தைரியம் வரும். முக்கிய முடிவுகளை கூட நீங்களே சொந்தமாக எடுப்பீர்கள். சொந்த - பந்தங்களுடன் இருந்த மனவருத்தங்கள் விலகும். அம்மாவினுடைய ஆரோக்யமும் நன்றாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்திருக்கும் பணத்தில் சொந்த வீடு வாங்குவீர்கள். 9-ல் ராகு இருப்பதால் அப்பாவின் ஆரோக்யத்தில் கவனம் காட்டுங்கள். அப்பா வழி சொந்தங்களுடன் சலசலப்புகள் வரும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமைகளில் சென்று தீபமேற்றி வணங்குங்கள்.
கன்னி
உங்களுக்கு எல்லாத் திறமைகளும் இருக்கிறது அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் இந்த ராகு - கேது பெயர்ச்சியில் 2-ம் வீட்டில் கேது இருப்பதால் இனி யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். கண் மருத்துவரிடம் உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 8-ல் ராகு இருப்பதால் இரவு நேரத்தில் பயணம் செய்யாதீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். பேச்சு என்பது வெள்ளி, மௌனம் என்பது தங்கம் என்பதை மறந்து விடாதீர்கள்.
பரிகாரம்: அருகிலிருக்கும் துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள்.
துலாம்
உங்கள் ராசிக்குள்ளேயே கேது நுழைந்திருக்கிறார் உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் சங்கடங்கள் வரும். மருத்துவரோட ஆலோசனை இல்லாமல் கை வைத்தியம் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். காய்கறி, கீரை போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். 7-ல் ராகு இருப்பதால் வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டால் நிம்மதி போய்விடும். கணவன் - மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்த யாராவது முயற்சி செய்வார்கள் கவனம் தேவை.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீகருடாழ்வாரை சென்று வணங்குங்கள்.
விருச்சிகம்
கடந்த நான்கரை வருடத்துக்குப் பிறகு உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. 6-ல் ராகு இருப்பதால் நீங்கள் இனி எதை செய்தாலும் அதில் வெற்றி உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வேலை கிடைக்கும். மனதாலும், உடலாலும் இருந்து வந்த அவஸ்தைகள் விலகும். கேதுவும் சாதகமாக இருப்பதால் பாதியில் நின்று போன அரசு வேலைகள் உடனே நடக்கும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. புது வேலை கிடைக்கும். மகனுக்கு திருமணம் முடியும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
தனுசு
எப்பொழுதும் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல் இருப்பீர்களே - இனி உற்சாகமாக இருப்பீர்கள். வீடு மாற வேண்டி இருக்கும். அசதி, சோர்வு விலகும். புது வாகனம் வாங்குவீர்கள். 5-ல் ராகு இருப்பதால் முன்கோபத்தால் நெருங்கிய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வித்தியாசமாக யோசித்து வெற்றி அடைவீர்கள். குடும்ப வருமானத்தை அதிகப்படுத்த சுய தொழில் செய்யத் தொடங்குவீர்கள். கேது சாதகமாக இருப்பதால் கழுத்து வலி, இடுப்பு வலி குறையும். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளவும்.
பரிகாரம்: சிவன் கோவிலில் இருக்கும் பைரவரை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.
மகரம்
ராகுவும், கேதுவும் கேந்திரஸ் தானங்களில் அமர்வதால் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். ருசிக்கு சாப்பிடாமல் ஆரோக்யத்தை மனதில் வைத்து பராம்பரிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. கேதுவால் உத்யோகத்தில் மரியாதை குறைவான சம்பவங்கள் நடக்கும். சொந்த - பந்தங்களெல்லாம் நம்மை விட்டு விலகி போகிறார்களோ என நினைக்கத் தோன்றும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். நகரத்திலிருந்து விலகி சற்று ஒதுக்குப் புறமான பகுதிக்கு வீட்டை மாற்றுவீர்கள்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடும், மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்குவதும் சிறப்பான பலன்களைத் தரும்.
கும்பம்
ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு இந்த ராகு- கேது பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எதிர்நீச்சல் போட்டு எதிரிகளை ஜெயிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த மரியாதை மீண்டும் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து விடவும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வாயிதா வாங்கி கொண்டேயிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சிக்கனமாய் சேர்த்த பணத்தில் சின்னதாய் ஓர் இடம் வாங்கி குடி போவீர்கள். உங்கள் அப்பா எதாவது உரிமையில் பேசினால் அதற்காக கோபித்துக் கொள்ளாதீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு திருமணம் முடியும்.
பரிகாரம்: பெருமாள் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.
மீனம்
எல்லோரிடமும் வெளிப்படையாக இனி பேச வேண்டாம். கண்ணை கசக்கிக் கொண்டு காசு கேட்டவர்களுக்கெல்லாம் தந்து விட்டு நெருக்கடி நேரத்தில் நமக்கு யாரும் உதவவில்லையே என்று வருந்த வேண்டாம். குடும்பத்தில் அடங்கிப் போக வேண்டி இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். கடையை கொஞ்சம் பெரிதுபடுத்துவீர்கள். கேதுவால் இனந்தெரியாத ஒரு மனக்கலக்கம் இருக்கும். சுற்றியிருப்பவர்களின் மறுபக்கத்தை தெரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளிடம் வளைந்து கொடுத்து போகவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம் : அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago