திருவோண நட்சத்திர மகிமை; ஸ்ரீராமன், விபீஷணன், குபேரன், வராஹர்!  உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 28

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

சென்ற வாரம் உத்திராடம் நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் சரவண எனும் திருவோண நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாக மற்றும் விரிவாகக் காணலாம்.

சரவண எனும் திருவோணம்

சரவண எனும் திருவோண என்பது வானத்தில் மகர ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் கண்களில் காணும் போதும் மூன்று பாதங்கள் போலவும், அம்பு போலவும், அன்னப்பறவை போலவும், முழக்கோல் போலவும் காட்சி அளிக்கும். ஆகவே இதன் வடிவமாக மூன்று பாதங்கள், அம்பு , அன்னப்பறவை, முழக்கோல் காணப்படும் ஆகியவை கூறலாம்.

இதன் அதிபதி சந்திரன் கிரகம் ஆகும். இது மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சந்திர திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் சனி மற்றும் செவ்வாய் பலம் பெறுகிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் மற்றும் சனி நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்த கட்டுரையில் காணலாம்.

திருப்பதி பெருமாளின் சாதக தாரை நண்பர்
“பன்றிக்கு நன்றி சொல்லி,
குன்றின் மேல் ஏறி நின்றால்,
வென்றிடலாம் குலசேகரனை”

தன் குலம் காத்த சேகரானாம் குபேரேனின் கடனை அடைக்க, திருமலையில் இடம் தந்த வராஹ மூர்த்தியிடம் நன்றி சொல்லி, திருமலையில் எழுந்தருளினார் வெங்கடாசலபதி.

வராஹ மூர்த்தியின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை. ஆகும். அதுபோல வேங்கட பெருமாளின் நட்சத்திரம் திருவோணம் ஆகும். திருவோணத்தில் இருந்து எண்ணி வர கேட்டை, 24 நட்சத்திரமாக வரும். இது சாதக தாரை ஆகும். எனவே வராஹ மூர்த்தி பெருமாளுக்கு இடம் கொடுத்து, குபேரனின் கடனை அடைக்க சாதக சூழலை உருவாக்கினார். எனவே பெருமாளுக்கு சாதக தாரை நண்பரானார் வராஹ மூர்த்தி.

இருப்பினும் கடனாக இடம் கொடுத்த வராஹருக்கு, இன்னும் பெருமாள் கடனை அடைக்கவில்லை. காரணம் வராஹருக்கு திருவோணம் பிரதியக்கு தாரை ஆகும். பிரதியக்கு தாரைக்கு கடன் கொடுக்கக்கூடாது, அப்படிக் கொடுத்தால் திரும்ப வராது.

ராமனும் விபீஷணனும்
விபீஷணன் ராவணணின் சகோதரன் ஆவார். இவரது நட்சத்திரம் திருவோணம். ராவணன் நட்சத்திரம் மூலம் ஆகும். மூல நட்சத்திரத்திற்கு திருவோணம் க்ஷேம தாரை ஆகும். க்ஷேம தாரை என்பது காரிய சித்தி தரும் நட்சத்திரம் ஆகும். எனவே ராவணன் உடன் விபீஷணன் இருக்கும் வரை ராவணனுக்கு எடுத்ததெல்லாம் வெற்றியே கிட்டியது. ஆனால் திருவோணத்தில் இருந்து எண்ணும் பொழுது மூலம் வதை தாரையாக வரும். எனவே ராவணனுக்கு பல வகையில் நல்ல அறிவுரைகள் விபீஷணன் வழங்கிய பொழுதும், ராவணன் மூலம் அவமானமே ஏற்பட்டது. மேலும் ராவணன் செய்யும் காரியங்களால் விபீஷணன் விரக்தியுடன் இருந்தான். மேலும் ராவணனுக்கு தான் துணை போனால் வதை படுவோம் என்று உணர்ந்த விபீஷணன் புனர்பூசத்தில் பிறந்த ராமனிடம் அடைக்கலம் தேடி சென்றான். புனர்பூசம் என்பது திருவோணத்தின் க்ஷேம தாரை ஆகும். அதாவது திருவோணத்தின் காரிய சித்தி தாரை ராமனின் நட்சத்திரம் என்பதால் ராமனிடம் சென்றான்.

எனவே உங்கள் க்ஷேம தாரையில் பிறந்த கடவுள் அல்லது வடிவம் அல்லது மகனை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது/வணங்குவது அல்லது உடன் வைத்துக் கொள்வது மூலம் உங்களுக்கு காரிய சித்தியை பெற்றுத் தரும்.

வேங்கட மலை தாரை ரகசியம்

ஏழு மலைகள் இருக்கும்பொழுது பெருமாள் ஏன் வெங்கடாத்ரி என்ற வேங்கட மலை மட்டும் தேர்ந்தெடுத்தார்.

பெருமாளின் நட்சத்திரம் திருவோணம் பொதுவாக மலை என்பது சதய நட்சத்திர வடிவமாக வரும். வேங்கடம் என்ற மலை அதிக மூங்கில் காடுகள் நிறைந்ததாகும். மூங்கிலின் தூய தமிழ் பெயர் கழை. மூங்கில் என்பது புனர்பூச நட்சத்திர வடிவமாகும்.

பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்திற்கு க்ஷேம தாரையாக வரும் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி. புனர்பூசம் என்பதன் வடிவான மூங்கில் காடுகள் நிறைந்திருக்கும். திருவேங்கட மலையை தனது இருப்பிடமாக தேர்வு செய்தார் பெருமாள். க்ஷேம தாரை என்பது காரிய சித்திக்கு உபயோகப்படும் தாரை. குபேரனிடம் தான் பட்ட கடனை அடைக்கும் காரியத்தை சித்தியாக, தனது க்ஷேம தாரை மூங்கில் காடுகள் நிறைந்த வேங்கட மலையை தேர்ந்தெடுத்தார்.

வேங்கடவன் கிருஷ்ணாவதாரமாகவே கருதப்படுவதால், மூங்கில் காடுகள் நிறைந்த வேங்கட மலையில் பெருமாள் வாசம் செய்வது சாஸ்வதம் தானே.

அதாவது வேங்கட மலை என்பது சதய மற்றும் புனர்பூச நட்சத்திர இணைவாக வருகிறது.

இதுவரை திருவோணம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். அடுத்து வரும் கட்டுரையில் அவிட்டம் நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE