- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே!
களத்திர தோஷம் என்னும் திருமணத் தடை உண்டாக்கும் தோஷம் பற்றி கடந்த பதிவில் பார்த்தோம். இந்தப் பதிவில் "புத்திர தோஷம்" என்னும் "குழந்தை பாக்கியம்" பெறுவதற்கு ஏற்படும் தடை தாமதங்கள் ஏன் ஏற்படுகின்றன? அதை எப்படி நிவர்த்தி செய்யலாம்? என பார்ப்போம்.
நம் ஒவ்வொருவருக்கும் ஜாதகம் எழுதும் பொழுது முதல் பக்கத்தில்.... முதலில் எழுதுவது..!
"ஜெனனி ஜென்ம சௌக்யானாம் வர்த்தனி குல சம்பதாம்
பதவி பூர்வ புண்யானாம்
லிக்யதே ஜென்ம பத்ரிகா"
என்ற இந்த செய்யுள்தான் முதலில் எழுதப்படும். இதற்கான முழு விளக்கம்... "இந்த ஜென்மம் எடுக்கும்பொழுது செளகரியமாகப் பிறந்தவனே, குலம் காக்க வந்தவனே, இது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் கிடைத்தது. அதை இந்த ஜாதகப் புத்தகத்தில் குறித்து வைக்கிறேன்" என்று பொருள்.
இப்படி ஒரு மனிதன் பிறக்க பூர்வபுண்ணியம் என்னும் ஸ்தானம் பலமாக இருந்தால் மட்டுமே வாரிசு என்பது உண்டாகும். இந்தப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 5ம் இடத்தை குறிக்கும். இந்த 5-ம் இடம் புத்திர பாக்கியத்தையும் குறிக்கக் கூடியது. இப்போது அந்தச் செய்யுளின் பொருள் முழுமையாக புரிந்து இருக்கும். எவருக்கு பூர்வ புண்ணியம் பலமாக இருக்கிறதோ அவருக்கு வாரிசு கிடைக்கும். தாமதமாகக் கிடைத்தாலும் வாரிசு உறுதி என்பதை இந்த 5ம் இடத்தை வைத்து அறிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய பிறப்பின் நோக்கமாக தன்னுடைய சந்ததி தொடர்ச்சி என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஒரு மனிதனுக்கு புத்திர பாக்கியம் உண்டா இல்லையா என்பதை வெறுமனே ஐந்தாம் இடத்தை வைத்து முடிவு செய்துவிட முடியாது. 5ம் இடம் 7ம் இடம் 9ம் இடம் 12-ம் இடம் என இந்த பாவகங்களையும் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.
இங்கே நான் தருகின்ற விளக்கமானது உங்கள் ஜாதகத்தை கையில் வைத்துக்கொண்டு படித்துப் பார்த்தாலே மிக எளிதாக புரிந்து கொள்வீர்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணி வரும் 5-ம் இடமும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் புத்திர ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக வரக்கூடிய கிரகம் எந்த வகையிலும் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் மேலும் பாவ கிரகங்களோடு இணைந்து இருக்கவும் கூடாது. அதுமட்டுமல்லாமல் லக்னத்திற்கு பகை பெற்ற கிரகமாகவும் இல்லாமல் இருக்கவேண்டும். இவை அனைத்தையும் முழுமையாக கவனிக்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் புத்திர பாக்கியத்தை அருளக் கூடிய குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருக்கக்கூடாது. அதாவது தனித்து இருக்கக்கூடாது. தனித்து இருக்குமாயின் அது காரகோ பாவ நாஸ்தி என்னும் அடிப்படையில் புத்திர பாக்கியத்தைக் கெடுக்கும்.
ஐந்தில் சூரியன் இருந்தால் ஆண் குழந்தை நிச்சயமாக உண்டு. அதுவே சந்திரன் அங்கே இருந்தால் பெண் குழந்தை பாக்கியம் உண்டு. செவ்வாய் இருக்குமாயின் வாரிசு உண்டு. புதன் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் இருந்தால் தாமதமாகும். ராகு இருந்தால் அளவற்ற குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த ராகுவால் கிடைக்கக்கூடிய புத்திர பாக்கியத்தைப் பற்றி பிறகு பார்ப்போம். அந்த 5ம் இடத்தில் கேது இருந்தால் புத்திர பாக்கியம் தாமதமாகும். இப்படி கிரகங்கள் ஐந்தாம் இடத்தில் அமர்ந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த ஐந்தாம் அதிபதி 6 மற்றும் எட்டாம் இடங்களில் மறைந்து போனால் புத்திர பாக்கியம் தாமதமாகும். மேலும் இந்த ஐந்தாம் அதிபதி கேது ஓடு இணைந்திருந்தாலும் புத்திரபாக்கியம் தாமதமாகும். 5ம் அதிபதி சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைந்தாலும் அல்லது சூரியனிடம் இருந்து விலகி வக்கிரம் பெற்றாலும் புத்திர பாக்கியம் தாமதமாகும். இவை அனைத்தும் கிரகங்களின் நிலை பற்றி கணக்கில்கொண்டு கவனிக்கப்பட வேண்டியதாகும்.
மேலும், மேலே சொன்னபடி 7ம் இடம் 9ம் இடம் 12-ம் இடம் இந்த இடங்களையும் கவனிக்க வேண்டியதாகிறது. அதன்படி 7-ம் இடம் என்பது தாம்பத்திய நிறைவு பற்றி சொல்லக்கூடியது. அந்த 7ம் இடம் பலமாக இருக்க வேண்டும். மேலே சொன்ன கிரக விளக்கங்கள் இந்த ஏழாம் இடத்திற்கும் பொருந்தும். ஏழாம் அதிபதி எந்த வகையிலும் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும். ஏழாம் இடத்தில் சூரியன் இருந்தால் ஆணின் உயிரணுக்களின் வீரியம் குறைந்து விந்து நீர்த்துப்போகும். சந்திரன் இருந்தாலும் இதே பிரச்சினைதான் உண்டாகும். செவ்வாய் இருந்தால் நல்ல வீரியமுள்ள உயிரணுக்கள் உண்டாகும். புதன் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் உயிரணுக்கள் சற்று வேகம் குறைந்ததாகவும் இருக்கும்.
குரு இருந்தால் உயிரணுக்கள் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் இருந்தால் உயிர் அணுக்கள் நீர்த்துப் போவது மட்டுமல்லாமல், பெண்ணின் கர்ப்பப் பையிலும் நீர்த் தன்மை அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே புத்திர பாக்கியம் தாமதப்படும் வாய்ப்பு உள்ளது. இதே தன்மை சந்திரனுக்கும் பொருந்தும்.
ஏழாம் இடத்தில் சனி இருந்தால் உயிரணுக்களில் வீரியம் மந்தமாக இருக்கும், அதுவே ராகு இருந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை அளவற்றதாக இருக்கும். புத்திர பாக்கியமும் நிறைவாகக் கிடைக்கும். கேது இருந்தால் உயிரணுக்கள் வெகுவாகக் குறைந்துவிடும். புத்திர பாக்கியம் தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் பொதுவான பார்வையாகும். இந்த கிரகங்களுக்கு துணையாக வேறு ஒரு கிரகம் சேருமாயின் இந்த நிலை மாறும் வாய்ப்பு உள்ளது.
மேலும் ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம் ஆகும், அதாவது அனைத்து விதமான செல்வாக்கையும் கிடைக்கச் செய்யும் இடமாகும், அனைத்து விதமான மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து என மனிதனின் பெருமைக்குரிய விஷயங்களை குறிக்கும் இடமாகும். ஒன்பதாமிடம் வலுத்திருக்க வேண்டும். அப்படி வலுவாக இருந்தால் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடை இல்லாமல் இருக்கும்.
மேலும் 12-ம் இடம் என்பது தாம்பத்திய சுகத்தைத் தெரிவிக்கும் இடமாகும். அந்த இடம் மிக வலுவாக இருக்க வேண்டும். 12ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது... ராகுவைத் தவிர! பனிரெண்டாம் இடத்தில் சூரியன் இருந்தால் அளவான தாம்பத்தியம் இருக்கும். சந்திரன் இருந்தால் சிற்றின்ப ஆசை அதிகமாக உண்டாகும். செவ்வாய் இருந்தால் தாம்பத்தியத்தில் முரட்டுத்தனமும், இணை வெறுக்கக்கூடிய அளவிலும் இருக்கும்.
புதன் இருந்தால் மிக நேர்த்தியான அன்பான தாம்பத்தியம் இருக்கும். குரு இருந்தால் அளவான, ஒழுக்கமான தாம்பத்தியம் இருக்கும். சுக்கிரன் இருந்தால் அளவற்ற சுகம் உண்டாகும். சனி இருந்தால் தாம்பத்தியத்தில் நிறைவு உண்டாகாது. ராகு இருந்தால் அளவற்ற போகத்தை ஏற்படுத்தித் தரும். கேது இருந்தால் தாம்பத்திய ஆசை வெகு குறைவாகவே இருக்கும். இப்படி 12-ம் இடமும் குழந்தை பாக்கியத்திற்கான ஆய்வுக்கு உட்பட்டதே..!
பொதுவாக புத்திர தோஷம் என்றால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது மட்டுமே புத்திரதோஷம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாரிசுகள் இருந்தும் அவர்களால் எந்தப் பயனும் இல்லாமல் போனாலும் அதுவும் தோஷத்தில்தான் சேரும். அதுமட்டுமல்லாமல் இறுதிக் காலத்தில் பிள்ளைகள் அருகில் இல்லாமல் போனாலும் அதுவும் புத்திர தோஷத்தைக் குறிக்கும். மேலும் பெற்றோர்களை தவிக்க விடும் பிள்ளைகளைப் பெற்றாலும் அதுவும் தோஷத்தில் சேரும். எனவே புத்திர தோஷம் என்றால் குழந்தையின்மை என்பது மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட பிள்ளைகள் இருந்தால் அதுவும் தோஷத்திலேயே சேரும்.
அதேபோல ஆண் வாரிசு இல்லாமல் பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தாலும் அதுவும் ஒரு வகையில் தோஷத்தைத் தருவதாகும். ஏனென்றால் குலதெய்வ வழிபாடு முதல் மேலும் பல காரியங்களுக்கு ஆண் வாரிசுகளால் மட்டுமே தொடர முடியும்..! பெண் பிள்ளைகள் கணவர் வீட்டாருக்கு மட்டுமே உட்பட வேண்டியதாகவும், அவர்களுடைய வழித் தோன்றல்களை மட்டுமே கவனிக்க வேண்டியதாகவும் இருக்கும். குலதெய்வ வழிபாட்டைத் தொடர முடியாமல் போனால் அதுவும் ஒருவகையில் தோஷத்தைத் தருவது தான் என்றாலும் இதில் இன்னொரு சிறப்பு பலன்களும் உண்டு.
அதைப் பற்றி விரிவாக பார்ப்போம். புத்திர தோஷம் பற்றிய இன்னும் சில விளக்கங்களையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
- வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago