அம்மி மிதித்து அருந்ததி ஏன்? - உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 15

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

பூசம் நட்சத்திரம் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது ஆயில்யம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரம் வான மண்டலத்தில் அம்மி போலவும், படம் எடுத்த பெரிய பாம்பு மாதிரியான தோற்றத்திலும் காணப்படும். ஆயில்யம் என்றால் தழுவிக் கொள்வது என்று அர்த்தம். இது மருத்துவத்தின் குறியீடாக பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் மருத்துவர்களின் குறியீடாக இரண்டு நாகங்கள் இணைந்து அல்லது தழுவி இருப்பது போன்ற அமைப்பைக் காணலாம்.

அம்மி மிதித்து அருந்ததி காண்

நமது பாரம்பரியத்தில் திருமண வைபவங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்வு நடப்பதை நாம் அறிவோம்.

இதன் பின்புலத்தில் அமைந்திருக்கும் தாரை ரகசியத்தை இப்போது பார்க்கலாம்.
சப்த ரிஷிகள் என்பது ஏழு முக்கிய ரிஷிகளைக் குறிப்பதாகும். ஏழு முக்கிய ரிஷிகளின் பெயர்கள் முறையே கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர்.

இதில் அருந்ததி என்பவள் வசிஷ்டரின் மனைவியாவார். இந்த ஏழு நட்சத்திரங்களும் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தாலும் வசிஷ்ட நட்சத்திரம் மட்டுமே இரண்டு நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து உருவாகி இருக்கிறது. ஆகவே வசிஷ்டரும் அருந்ததியும் ஒருவருக்கொருவர் அந்யோன்யமான தம்பதிகள் என்பதை சூசகமாக இந்த நட்சத்திர மண்டலம் நமக்கு விவரிக்கிறது.

இந்த சப்தரிஷி மண்டலத்தை அயல்நாட்டு மொழியில் ursa major என்றும், பெருங்கரடி நட்சத்திர கூட்டம் என்றும் அழைக்கிறார்கள். இந்த நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் Alcor என்பது அருந்ததி என்றும், Mizar என்பது வசிஷ்டர் என்றும் புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

இந்த பெருங்கரடி நட்சத்திர மண்டலம் மகம் நட்சத்திர மண்டலத்திற்கு மிக மிக அருகே அமைந்திருக்கிறது.

தாரை விளக்கம்

எந்த ஒரு தாரை வடிவத்தையும் அதன் சம்பத்து தாரை உடன் இணைத்து பார்த்தல் பல அபரிமிதமான நற்பலன்களைத் தரும். கால புருஷ சுகஸ்தானமான கடகத்தில் இருக்கும் ஆயில்ய நட்சத்திரத்தின் வடிவம் அம்மி. அதில் பெண்ணின் பாதம் வைத்து மெட்டி போடும் நிகழ்வு அரங்கேறும். அதில் பாதம் என்பது ரேவதி நட்சத்திரத்தைக் குறிக்கும்.

இங்கு ரேவதி மற்றும் ஆயில்ய நட்சத்திரத்தின் சம்பத்து தாரை என்பது மகம் ஆகும். ஆகவே அம்மி என்ற தாரை வடிவத்தைக் கண்டு அதனுடன் மகத்தின் அருகிலுள்ள அருந்ததி மற்றும் வசிஷ்ட நட்சத்திரத்தைக் காண்பது சர்வ சம்பத்துகளையும் தரும்.

உலகத்தை தாங்கும் ஆதிசேஷன்

ஆயில்யம் கடக ராசியில் அமைந்திருக்கும் கடைசி நட்சத்திரம். தட்சிணாயன கால ஆரம்பத்தைக் குறிக்கும் கடகம் பூமியின் மையப்பகுதியைக் குறிக்கும். அதனால்தான் அது கடக ஆழி என்றழைக்கப்படுகிறது. கடக ஆழியில் இரண்யாட்சன் பூமியை ஒளித்து வைத்தான் என்கிறது புராணம்.

அங்கே மறைக்கப்பட்ட பூமியை பெருமாள் வராஹ அவதாரமெடுத்து மீட்டார். மேலும் அந்த பூமி நிலையாகச் சுழல, ஆதிசேஷனை பூமிக்கு அடியில் அமர்த்தினார். ஆகவே பூமியைத் தாங்கும் சக்தி ஆதிசேஷனிடம் இருக்கிறது. ஆயில்ய நட்சத்திரமே அந்த ஆதிசேஷன்.

அதுபோல கடக ஆழி என்பது பூசமும் ஆயில்யமும் கலந்ததே. அதனால்தான் பூசம் புற்றுவடிவம் என்றால், ஆயில்யம் பாம்பு வடிவம் கொண்டது. இரண்டிற்குமான சம்பந்தம் நான் சொல்லி தெரிய வேண்டியதல்ல.

மகர ஆழியில் மறைக்கப்பட்ட வேதங்களை, கடக ஆழியில் மீட்டார் பெருமாள். இதைத்தான் மகரத்தில் மறைக்கப்பட்ட வேதங்களைக் குறிகாட்ட அங்கே குரு நீச்சம் என்றும், கடகத்தில் வேதம் வெளிப்பட்டதால் அங்கே குரு உச்சம் என்றும் கூறுகிறோம்.

ஆயில்யம் பலராம மற்றும் லட்சுமணனின் நட்சத்திரம், சீறும் குணமும், பயமுறுத்தும் தன்மை இந்த நட்சத்திர அன்பர்களுக்கு உண்டு. பாம்பு புத்திர விருத்தி அதிகம் கொண்டிருக்கும் அதே சமயம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் குடும்பத்தில் இருக்கும் நபரால் பாம்பு கொல்லப்பட்டாலும் அல்லது புற்று இடிக்கப்பட்டாலும், புத்திர தாமதம் அல்லது கர்ப்பக் கழிவு அல்லது புத்திரக் குறைபாடுகள் தரும். இதற்கு புற்றுவழிபாடு பரிகாரம்.

அகத்தியர் பயன்படுத்திய தாரைகள்

அகத்தியரின் நட்சத்திரம் ஆயில்யம். அதன் சாதக தாரை அவிட்டம். மேலும் அவரின் க்ஷேம தாரை உத்திரம் ஆகும்.

ஈசான்ய மூலையான வடகிழக்குப் பகுதியில் சிவ பார்வதி திருமணத்தைக் காணக் கூடிய கூட்டத்தின் பாரத்தால், கன்னிமூலை எனும் தென்மேற்கு பகுதி மேலே உயர்ந்து நின்றது. இதனால் தென்பகுதி மக்கள் பாதிப்படைந்தனர்.

இதை அறிந்த சிவபெருமான் அகத்தியரை தென் மேற்கு பகுதி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார். இதனால் தனது சாதக தாரை அவிட்ட வடிவான கமண்டலத்தையும், சேம தாரை உத்திர வடிவான தண்டம் இரண்டையும் தன் கையில் கொண்டு சிவபெருமான் ஆணைப்படி பாரத கண்டத்தின் கன்னிமூலைக்கு கிளம்பினார் அகத்தியர்.

தென்மேற்கு பகுதியில் இருந்த பொதிகை மலையில் நின்று மேலெழுந்த நிலப்பரப்பை சமன்படுத்தினார். இதனால் தென்னிந்தியப் பகுதி மக்கள் காப்பாற்றப்பட்டனர்.

ஆயில்யம், ரேவதி, கேட்டை நட்சத்திர நண்பர்கள் தன் பூஜையில் தண்டம் வைத்து வழிபட காரிய வெற்றி பெறலாம்.

புனர்பூசம், பூரட்டாதி, விசாக நட்சத்திர நண்பர்கள் தன் பூஜையில் வைத்து தண்டம் வழிபட நெடுநாள் சிக்கலில் இருந்து தீர்வு பெறலாம்.

ஹஸ்தம், ரோகிணி, திருவோணம் நட்சத்திர நண்பர்கள் தன் பூஜையில் தண்டம் வைத்து வழிபட பல சிக்கலில் இருந்து தீர்வு பெறலாம்.

பரணி, பூராடம், பூரம் நட்சத்திர நண்பர்கள் தன் பூஜையில் தண்டம் வைத்து வழிபட பல சிக்கலில் இருந்து தீர்வு பெறலாம்..

அடுத்த அத்தியாயத்தில் மகம் நட்சத்திரம் பற்றி விரிவாக விளக்கமாகப் பார்க்கலாம்.

- வளரும்

*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE