- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
கும்பராசி வாசகர்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த பிலவ ஆண்டு உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களை தரப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
பலன்களை அறிந்து கொள்வதற்கு முன் கிரக நிலைகளை ஆராய்ந்து விடுவோம்.
உங்கள் ராசியிலேயே அதிசாரத்தில் வந்த குரு பகவான், ராசிக்கு இரண்டாமிடத்தில் புதன், மூன்றாம் இடத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் என மூன்று கிரகங்களும், நான்காம் இடத்தில் ராகு பகவானும், 5-ம் இடத்தில் செவ்வாயும், பத்தாம் இடத்தில் கேது பகவானும், 12-ம் இடத்தில் சனி பகவானும் இருக்கிறார்கள்.
அதில் இதுவரை 12-ம் இடத்தில் இருந்த குருபகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்குள் வந்திருப்பது ஒருவகையில் நன்மையே! உங்கள் ராசிக்கு 2க்கும் 11 க்கும் அதிபதியான குரு பகவான், உங்கள் ராசியில் இருப்பதால் வருமானத்தை அதிகப்படுத்தித் தருவார். லாபத்தை உண்டாக்குவார். இவை அனைத்தும் சுப செலவுகளாக மாற்றுவார். இட மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். அது வீடு மாற்றம், பணியிட மாற்றம், வாகன மாற்றம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்! ஆனாலும் மாற்றம் என்பது உறுதி.
அதேபோல உங்கள் ராசி அதிபதி சனி பகவான் உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார். அவரும் சுபச் செலவுகளை உண்டாக்குவார். வீடு கட்டுவது, திருமணம் செய்வது, திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது முதலனாவை நடந்தேறும். பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா செய்வது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.
மூன்றாம் இடத்தில் மூன்று கிரக சேர்க்கை அதாவது சூரியன், சந்திரன் சுக்கிரன் என மூன்று கிரக சேர்க்கை அமைந்திருப்பது சிறப்புக்கு உரியது. இந்த அம்சம் மிகச்சிறந்த பலன்களை தரக்கூடியவை. உங்களுடைய மனோ தைரியம் அதிகரிக்கும்.
வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணை வழியே சொத்துக்கள் சேரும். உங்களுடைய வாழ்க்கைத் துணை தொழில் அல்லது வியாபார விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி காணும் வாய்ப்புகள் உண்டு. இப்படி பல அம்சங்கள் உற்சாகமாக நிறைவேறும். மேலும் சந்திரனும் சுக்கிரனும் உங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்திக் தருவார்கள். உங்களுடைய கற்பனைத் திறனை அதிகப்படுத்தித் தருவார்கள். இதுவரை உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்கள். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை செய்து கொடுப்பார்கள். இப்படி பல சாதகமான விஷயங்களை இந்த மூன்று கிரகங்களும் செய்து தருவார்கள்.
நான்காமிடத்தில் இருக்கும் ராகு பகவான் உங்களுடைய சொந்த வீட்டுக் கனவை நனவாக்கித் தருவார். இதுவரை விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்றுத் தருவார். அதிகப்படியான லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் வந்தாலும் பெரிய பாதிப்பைத் தராத வண்ணம் காப்பாற்றுவார். 5ம் இடத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் உங்களுடைய பிள்ளைகளின் ஆரோக்கியத்தைச் சீர்படுத்தித் தருவார், அவர்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார். மேலும் ஆலய வழிபாடு, ஆன்மிக பயணங்கள், குலதெய்வ வழிபாடு போன்றவற்றை செய்ய வைப்பார்.
பத்தாம் இடத்தில் இருக்கும் கேது பல விதமான தொழில்களைத் தொடங்க உதவி செய்து தருவார். ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் தொழிலை விரிவுபடுத்தும் உதவியை செய்து தருவார். இப்படி கிரகங்கள் உங்களுக்கு மிகுந்த துணையுடன் இருக்கும் சூழலில்தான் இந்த பில வருட புத்தாண்டு தொடங்குகிறது.
இந்த கிரக அமைப்புகள் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருந்தாலும் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமான இடத்தில் இருப்பதால் நற்பலன்களே அதிகம் விளையும். குடும்ப உறவுகள் பலப்படும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சகோதர சகோதரிகள் இணக்கமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களில் மிகச்சரியான பங்கு உங்களுக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிக்கு புத்திர பாக்கியம் உறுதியாகும். மாமன் வகை உறவுகளிடம் ஏற்பட்ட சில வருத்தங்களும் பிரச்சினைகளும் விரைவாக முடிவுக்கு வரும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
தொழில் வளர்ச்சி வெகு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். பல்வேறு தரப்பட்ட நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். அவர்கள் மூலமாக தொழிலுக்கு ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். அயல்நாடு தொடர்பு உடைய நிறுவனங்களுடன் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி வெகு சிறப்பாக இருக்கும். இதுவரை தேங்கி நின்ற வியாபாரமாகாத கட்டுமானங்கள் அனைத்தும் விரைவாக விற்று உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும். பிரித்துப் போட்ட மனைகள் இப்போது விறுவிறுப்பாக விற்பனையாகும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு லாபத்தை கிடைக்கப் பெறுவார்கள்.
உற்பத்தி தொடர்பான தொழில், தோல் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், கார்மெண்ட்ஸ் தொழில், டிராவல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் என அனைத்தும் வெகு சிறப்பான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். படிப்படியாக தொழில் வளர்ச்சி ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.
வங்கிகளில் கடன் தொடர்பாக சலுகைகள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும், எனவே தொழில் தொடர்பாக... அது எந்தத் தொழிலாக இருந்தாலும் அந்தத் தொழிலில் ஒரு மிகச் சிறந்த முன்னேற்றத்தை காணக்கூடிய ஆண்டாக இந்த பிலவ வருடம் இருக்கும்.
வியாபாரிகளுக்கு இது சிறந்த ஆண்டாக இருக்கும். இதுவரை ஏற்பட்டிருந்த முடக்கத்தில் இருந்து மீண்டு வருவீர்கள். மீண்டும் வியாபாரம் சிறப்பான வளர்ச்சியை அடையும். வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தேவையான முதலீடுகள் கிடைக்கும். சிறு வியாபாரிகள் முதல் பெரு வியாபாரிகள் வரை நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உணவகம் நடத்துபவர்கள், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை, அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, ஆடை ஆபரண பொருட்கள் விற்பனை போன்ற வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும்.
விவசாயம் சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மகசூல் உண்டாகும், வருமானம் செழிப்பாக இருக்கும். இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு இது மிகச்சிறந்த ஆண்டாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் முழு வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். இயற்கை சார்ந்த விவசாயம் மேலும் விரிவடையும். நீங்கள் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் இடத்துக்கு வருவீர்கள். பணப்பயிர்களால் ஆதாயம் உண்டாகும், விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விவசாய இயந்திரங்களைக் கொண்டு தொழில் செய்பவர்களுக்கும் வருமானம் திருப்திகரமாகவே இருக்கும்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு தொடக்கத்தில் ஒரு சில பிரச்சினைகளை சந்தித்தாலும் விரைவில் அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு உங்களுடைய பயணத்தை தொடர்வீர்கள். உங்களுடைய திறமைகள் முழுமையாக வெளிப்படும். உங்களுடைய கருத்துக்கு அனைவரும் ஆதரவு தருவார்கள். செய்திகளை சேகரிக்கச் செல்லும் இடத்தில் ஒரு சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும். சில மனக்கசப்புகள், தேவையற்ற சங்கடங்கள் போன்றவைகளை சந்திக்க வேண்டியது வரும். இவற்றையெல்லாம் மன தைரியத்துடன் கடந்து சென்றால் நீங்கள் வெற்றியாளராக ஜொலிப்பது உறுதி. இந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட உயரத்தை தொடக் கூடியதாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும். நீண்டநாளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ஒரு விஷயத்தை இப்போது மீண்டும் உயிர் பெறச் செய்வீர்கள். உங்களுடைய திறமை மீது பலரும் நம்பிக்கை வைப்பார்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். மிகத் திறமையாக செயல்பட்டு உங்களுடைய முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பமும் காலமும் கனிந்து வந்திருக்கிறது.
எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் உங்கள் கற்பனையை அப்படியே கொண்டு வந்தால் நீங்களும் ஒரு வெற்றியாளர் தான்..! இந்த கலைத்துறையில் நீங்களும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவீர்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.
பெண்களுக்கு உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களுக்குள் இருக்கும் திறமைகள் வெளிப்படக் கூடிய நேரம் இது, உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மிகப்பெரிய திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்படுத்துவீர்கள். அதற்கான முயற்சிகளில் இந்த ஆண்டு ஈடுபடுவீர்கள்.
சுய தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கிறது. நம்பிக்கையுடன் தொழில் தொடங்கினால் வெற்றி அடைய முடியும். நண்பர்களுடன் சேர்ந்து சிறிய அளவிலான வியாபாரம் தொடங்கலாம். அதுவும் வெற்றிகரமாக நடக்கும். உங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வைத்து அது தொடர்பான தொழில் விஷயங்களைச் செய்தால் அதுவும் உங்களுக்கு வெற்றியோடு புகழையும் சேர்த்துத் தரும்.
சொந்த வீடு கனவு நனவாகும். செல்வம் சேரும். பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களால் உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். தந்தைவழியிலான சொத்து சேரும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகள் முழுவதுமாக முடிவுக்கு வரும். மொத்தத்தில் இது வெற்றிகரமான ஆண்டாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மாணவர்களுக்கு கல்வியில் ஒரு சில தடைகள் ஏற்பட்டு விலகும், தடைகள் ஏற்படும்போது மனதில் வைராக்கியம் பிறக்கும். கல்வியில் சாதிக்க வேண்டும் என்கிற உணர்வு உண்டாகும், எனவே தடைகள் ஏற்படும் போது நம்பிக்கையை இழக்காமல் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய வழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இது உங்களுக்குள் தானாகவே நடக்கக்கூடிய மாற்றமாக இருக்கும். நிச்சயமாக அதை உணர்வீர்கள்.
அதிலிருந்து மீண்ட பின் கல்வியில் சாதனை படைப்பீர்கள். ஞாபகத் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான யுக்திகளைக் கையாளுவீர்கள். பலவீனமான பாடங்களை ஆசிரியர்களின் துணைகொண்டு உங்களை மேலும் பலப்படுத்திக் கொள்வீர்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் மிக எளிதாகத் தேர்ச்சி அடைவீர்கள். வெளிநாடுகளில் சென்று கல்வி கற்கும் வாய்ப்பும் உண்டாகும். படிக்கின்ற போது சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். இந்த ஆண்டு உங்களுடைய கல்விக் கனவை முழுமையாக நிறைவேற்றி தரக்கூடியதாக இருக்கும்.
பொதுவாக கும்ப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் என்று பார்த்தால் முதுகு வலி, முதுகு தண்டுவட பிரச்சினைகள் போன்றவை ஏற்படும். தற்போது உடல் நலக்கோளாறு என பார்த்தால் இடுப்பு மற்றும் முதுகு எலும்பு தொடர்பான பிரச்சினைகள், கால் மூட்டு வலி போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன, அதேபோல பித்தப்பை கற்கள், சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினை வராதபடி உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
கும்பகோணம் திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு திங்கட்கிழமை தோறும் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், சிவபெருமானுக்கு வில்வம் மற்றும் செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நற்பலன்கள் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago