பிலவ ஆண்டு 2021; தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்; மகர ராசி அன்பர்களே! எதிர்பாராத திடீர் தொகை; வேலையில் முன்னேற்றம்; தொழிலில் வளர்ச்சி; ஆரோக்கியத்தில் கவனம்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மகரராசி வாசகர்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

புத்தாண்டு அன்று உங்கள் ராசிக்கு கிரகங்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பதை முதலில் பார்த்துவிடலாம்.

உங்கள் ராசி அதிபதி சனி பகவான் உங்கள் ராசியிலேயே ஆட்சி பலத்தோடு இருக்கிறார், 2ம் இடமான வாக்கு ஸ்தானத்தில் அதிசாரத்தில் சென்ற குரு பகவான் இருக்கிறார். 3ம் இடத்தில் புதன், 4ம் இடத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் என மூன்று கிரகங்களின் கூட்டு, 5ம் இடத்தில் ராகு, 6ம் இடத்தில் செவ்வாய், 11ம் இடத்தில் கேது, என கிரகங்கள் ஏறக்குறைய "கிரக மாலிகா" என்ற யோகத்தோடு அமர்ந்திருக்கிறார்கள். இந்த அமைப்பே உங்களுக்கு மிகப் பெரிய பலத்தை தரும் என்பது உறுதி.

மகர ராசிக்கு ஏழரைச்சனி காலம், அதிலும் ஜென்மச்சனி காலமாக இருக்கிறது என பலரும் உங்களை அச்சுறுத்திப் பார்த்திருப்பார்கள். "யாராவது சொந்த வீட்டுக்கே சூனியம் செய்துக் கொள்வார்களா" என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் மகர ராசிக்கு ஏழரைச்சனி நிச்சயமாக எந்த பாதிப்பையும் தராது என்பதை முழுமையாக நம்பலாம். மேலும் ஆட்சி பீடத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக தான் இருப்பாரே தவிர, உங்களை எந்த வகையிலும் பாதிப்பை அடையும்படி செய்யமாட்டார்.

அதேபோல வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பது மிக அற்புதமான அமைப்பு. உங்களுடைய சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட வருத்தங்கள் மறைந்து குடும்ப உறவினர்களின் ஒற்றுமை பலப்படும். சகோதர சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.

மூன்றாம் இடமான தைரிய ஸ்தானம் புதன் கிரகத்தால் ஆட்கொண்டிருக்கிறது, இந்த புதன் உங்களுக்கு நன்மை செய்யக்கூடிய கிரகம். எனவே உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் முழுமையான வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டாலும் நிச்சய வெற்றி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதேபோல நான்காம் இடத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் என மூன்று கிரகங்கள் இருப்பது மிக அற்புதமான பலன்களுக்கு ஆதாரமாக இருக்கும்.

சொந்தவீடு இல்லாதவர்களுக்கு கூட சொந்த வீடு அமைத்துத் தரும். ஏழாம் அதிபதியாக இருக்கக்கூடிய சந்திரன் நான்காம் இடமான மேஷத்தில் அமர்ந்திருப்பது திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தை உறுதி செய்து தரும். அதுமட்டுமல்லாமல் திருமணமானவர்களாக இருந்தால் வாழ்க்கைத்துணையின் வழியே அசையாச் சொத்துக்கள் சேரும். செல்வ வளத்தை அதிகப்படுத்தி தரும்.

உங்கள் ராசிக்கு யோகத்தை செய்யக்கூடிய சுக்கிர பகவானும் நான்காமிடத்தில் இருப்பதால் உங்களுடைய செல்வாக்கு உயரும். செல்வ வளம் அபரிமிதமாகப் பெருகும். கடனே இல்லாத வாழ்க்கை என்ற அமைப்பை ஏற்படுத்தித் தரும். சுய ஜாதகம் பலமாக இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். எதிர்பாராத பெரிய தொகை கிடைப்பதற்கான வாய்ப்பு பலமாக இருக்கிறது.

ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் இருப்பது அற்புதமான பலன்களை உங்களுக்கு நடத்தித் தரும். சமுதாயத்தில் புகழ், பதவி, பட்டம் என அனைத்தையும் பெற்றுத் தருவார் ராகு பகவான். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் குலதெய்வ வழிபாடுகளை தடையின்றிச் செய்ய வைப்பார். குலதெய்வம் தெரியாதவர்களுக்குக் கூட இப்பொழுது குலதெய்வம் தெரியவரும். இப்படி ராகு பகவான் உங்கள் குடும்பத்தோடு ஒருவராக நற்பலன்களை வாரிக் கொடுக்க தயாராக இருக்கிறார்.

ஆறாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பது வெகு சிறப்பு. காரணம் மகர ராசிக்கு செவ்வாய் கடுமையான பகை என்பது அனைவரும் அறிந்ததே! அவர் ஆறில் மறைந்து இருப்பதால் உங்களுடைய கடன், ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்து தருவார். எதிரிகளே இல்லாமல் போகும் நிலை ஏற்படும். எதிர்ப்புகள் என்பதே இனி இருக்காது. சகோதரர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகன்று சகோதர ஒற்றுமை பலப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு உங்களுக்கு கிடைப்பது அலுவலகத்தில் மற்றவர்களால் பொறாமைப்படும் வைக்கக்கூடிய அளவிற்கு இருக்கும். அதேபோல உங்களுடைய செயல்பாடும் அலுவலகத்தில் பேசுபொருளாக இருக்கும். மிகச் சிறப்பாக பணியாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உயரதிகாரிகள் உங்களுடைய கருத்துக்கு மதிப்பு அளிப்பார்கள். எதிர்ப்பைத் தந்து கொண்டிருந்த சக ஊழியர்கள் காணாமல் போவார்கள். அரசுப் பணியாக இருந்தாலும்... தனியார் பணியாக இருந்தாலும் அனைவருக்கும் அற்புதமான யோகமான நன்மைகள் நடக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இமில்லை.

தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். இந்தத் தொழில் தான் என்றில்லை, மகர ராசிக்காரர்கள் எந்தத் தொழில் செய்து கொண்டிருந்தாலும் மிக அற்புதமான நன்மைகள் நடக்கும். தொழில் வளர்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும். முதலீடுகள் கிடைக்காமல் அவஸ்தைப் பட்டவர்களுக்கு இப்போது முதலீடுகள் தேடிவரும்.

அடிக்கடி இயந்திரப் பழுது, பராமரிப்புச் செலவுகள் என ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி இனி பராமரிப்புச் செலவே இல்லை என்கிற அளவிற்கு நிர்வாகம் சிறப்பாக இருக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு அமோகமாக இருக்கும். உற்பத்தியாகும் பொருட்கள் தரமாக இருக்கும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு மிக பிரம்மாண்டமான வளர்ச்சி காத்திருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் ஓய்வில்லாமல் உழைத்து உங்கள் தொழிலை மிகப்பெரிய முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வீர்கள். ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள் தொழில், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், உணவகம் போன்ற அனைத்து தொழில்களும் மிக அற்புதமான வளர்ச்சியைப் பெறும்.

தொழிலை விரிவுபடுத்துவது, கிளைகள் ஆரம்பிப்பது போன்றவை நடக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படிக் கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தும் உங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை அனைவருக்குமே இந்த ஆண்டு முழுவதும் மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். கொடுத்த கடன்கள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கிக்கடன் மிக எளிதாகக் கிடைக்கும். ஆடை ஆபரண வியாபாரம், அழகு சாதனப் பொருட்கள் வியாபாரம், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, அத்தியாவசியப் பொருட்கள் வியாபாரம், மளிகைக் கடை என அனைத்து வியாபாரங்களிலும் அற்புதமான வளர்ச்சியைக் காண்பார்கள். காய்கறி வியாபாரம், பால், தயிர், எண்ணெய் வியாபாரிகள் முதலானோருக்கு ஏற்றம் தரக் கூடியதாக இந்த பிலவ ஆண்டு இருக்கும்.

உழவுத் தொழிலில் இருப்பவர்களுக்கு அற்புதமான வளர்ச்சி இருக்கும். சோதனை முயற்சியாக பயிரிடப்பட்ட பயிர்கள் உங்களுக்கு ஏமாற்றம் தராமல் லாபத்தைத் தரக்கூடியதாக இருக்கும். விளைச்சலுக்கேற்ற வருமானம் இருக்கும். பணப்பயிர்கள் அதிகப்படியான லாபத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய அளவில் விவசாயப் பொருட்களுக்கு விலை கிடைக்கும். விவசாய இயந்திரங்களை வைத்து தொழில் செய்பவர்களுக்கு மிக அற்புதமான ஆண்டாக இருக்கும். புதுவகை இயந்திரங்களை இறக்குமதி செய்து அதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். விவசாய இடுபொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான பலன்களைத் தரக் கூடியதாகவே இருக்கிறது.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நன்மைகள் நடைபெறக்கூடிய ஆண்டாக இருக்கும். ஆரம்பத்தில் ஒரு சில தடுமாற்றங்கள் இருந்தாலும் ஒரு சில நாட்களிலேயே சுதாரித்துக் கொள்வீர்கள். உங்களுடைய திட்டமிடலும்.. எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற தெளிவும் உங்களுக்குள் ஏற்படும்.

உங்களுடைய தொலைநோக்கு பயணத்தால் பேரும்புகழும் கிடைக்கும். ஆதாயமும் உண்டாகும். உங்களுடைய கருத்துகளுக்கும், எழுத்துக்கும் பாராட்டுகள் கிடைக்கும். தவிர்க்கமுடியாத சக்தியாக இருப்பீர்கள். புலனாய்வுப் பத்திரிக்கையாளர்களுக்கு அற்புதமான செய்திகள் கிடைத்து மிகப்பெரிய புகழின் உச்சத்தை அடைவீர்கள். வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்.

கலைஞர்களுக்கு இந்த ஆண்டு மிக அற்புதமான ஆண்டாக இருக்கப்போகிறது. சாதனைகளைச் செய்வீர்கள். சாதனைகளைச் செய்வது மட்டுமல்லாமல் உங்கள் துறையில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடிப்பீர்கள். அப்படி ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கும்.
வாய்ப்புகள் தேடி வரும்... தேடி வரும் என்பதை விட வந்து குவியும் என்பதே பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட அற்புதமான ஆண்டாக இருக்கும். இசை நாட்டியம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் இந்த ஆண்டு நல்ல பலன்களைத் தரக் கூடியதாக இருக்கும். வருமானம் பெருகும். சொத்துகள் சேரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுடைய பிரச்சினை அனைத்தும் முடிவுக்கு வந்து மன நிம்மதியும், மனநிறைவும் தரக்கூடிய ஆண்டாக இந்த பிலவ ஆண்டு இருக்கும்.

பெண்களுக்கு நினைத்தது நினைத்தபடியே சாதிக்கக் கூடிய ஆண்டாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் இப்போது ஈடேறும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அமோகமாக இருக்கும். சுயதொழில் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலமாக இருக்கும். கணவர், கணவரின் குடும்பத்தார் என அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

தொழில் மட்டுமல்லாமல் சிறு வியாபாரங்கள் முதல் வியாபார நிறுவனங்களை நடத்துவது வரை இப்போது அனைத்தும் உங்களுக்கு கைகூடும். அயல்நாடு தொடர்புடைய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். குடும்பத்திற்காகவும் அல்லது தொழில் வியாபாரத்திற்காகவும் வாங்கிய கடன்கள் அனைத்தும் முழுமையாக அடைபடும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சகோதரிகள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் சேரும். அற்புதமான பலன்கள் நடைபெறும் ஆண்டாக இந்த பிலவ ஆண்டு இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்கும். விரும்பிய கல்வி விரும்பியபடியே கிடைக்கும். சக மாணவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கல்விக்கான உதவிகள் அனைத்தும் தேடி வரும். ஆசிரியர்களின் உதவியும், அரவணைப்பும் கிடைக்கும். உயர்கல்வி செல்பவர்கள், தடையில்லாமல் கல்வியை முடிக்க முடியும். பட்ட மேற்கல்வி பயிலத் தேவையான உதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல் வங்கிக் கடன் கிடைக்கும். கல்வி முடியும் முன்னரே வேலைவாய்ப்பும் கிடைக்கும். கூடுதல் சிரத்தை எடுத்துப் படித்தால் நிச்சயம் வெற்றி என்பதை இந்த ஆண்டு உறுதி செய்கிறது.

மகர ராசிக்காரர்களுக்கு பொதுவாக உடல்நலக் கோளாறுகள் என்று பார்த்தோமேயானால் மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்சினைகள் எப்போதும் இருக்கும். தற்போதைய கிரக நிலைகளின் படியும், இந்த ஆண்டு பலன்களின் படியும் மூட்டுவலி தொடர்பான விஷயங்கள் அதிகமாவதற்கும், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. தகுந்த மருத்துவ ஆலோசனைப் பெற்று மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
திருச்சேறை சாரபரமேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்து வாருங்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று வில்வ இலைகளால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள், அதிகப்படியான நன்மைகளும், அற்புதமான வாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்