பிலவ வருடம்; 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - துலாம் ராசி அன்பர்களே! திடீர் யோகம்; அளவற்ற பணவரவு; உடல்நலனில் எச்சரிக்கை; கடன் பிரச்சினை தீரும்; சொந்த வீடு யோகம்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

துலாம் ராசி வாசகர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த பிலவ வருட தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு எந்த மாதிரியான பலன்களை தரக் காத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

புத்தாண்டு தொடங்கும் சித்திரை முதல் நாளன்று இருக்கக்கூடிய கிரக நிலைகளை பார்த்தால், உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சூரியனுடனும் சந்திரனுடனும் இணைந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டாம் இடத்தில் கேது, 4-ம் இடத்தில் சனி, 5 - ம் இடத்தில் குரு, 6- ம் இடத்தில் புதன், 8-ம் இடத்தில் ராகு, 9-ம் இடத்தில் செவ்வாய் என கிரகங்கள் நல்ல நிலையிலேயே இருக்கிறார்கள். இதில் உச்சம் பெற்ற சூரியனோடு சந்திரனும் உங்கள் ராசி அதிபதி சுக்கிரனும் இணைந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் உச்சபட்சமான புகழ் வெளிச்சம் உங்களுக்கு கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

மேலும் உங்கள் ராசிக்கு பத்தாம் அதிபதியாக வரக்கூடிய சந்திரனும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தொழில் வளர்ச்சி மிக அமோகமாக இருக்கும். உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பணவரவு, திடீர் அதிர்ஷ்டம், திருமண முயற்சிகள் என அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

இரண்டாம் இடத்தில் கேது இருப்பது ஒரு சில சங்கடங்களைத் தந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நம்பலாம். துலாம் ராசிக்கு யோகாதிபதியான சனி பகவான் நான்காமிடத்தில் இருந்தாலும்.... இதை அர்த்தாஷ்டம சனி என்று கூறுவார்கள். ஆனால் யோகாதிபதியாக இருப்பதால் பெரிய அளவில் கஷ்டங்களை நிச்சயமாக தரமாட்டார் என்று உறுதியாகவே சொல்லுகிறேன்.

அதேபோல ஐந்தாம் இடத்திற்கு அதிசாரத்தில் சென்று குருபகவான் உங்கள் ராசியைப் ஒன்பதாம் பார்வையாக பார்த்துக் கொண்டிருப்பதால் இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்வுகள் அனைத்தும் இனி தடையில்லாமல் நிறைவேறும்.

எட்டாம் இடத்தில் ராகு இருப்பது ஒரு சில பிரச்சினைகளைத் தரும் என்பதில் ஐயமில்லை, ஆனாலும் சுக்கிரனுக்கு ராகு நண்பர் என்ற காரணத்தினால் பெரிய அளவில் பாதிப்புகளைத் தரமாட்டார்.

உங்களுக்கு பாக்கியாதிபதியாக வரக்கூடிய புதன் பகவான் 6-ம் இடத்தில் மறைந்து நீச்சம் அடைந்ததால் தந்தை மற்றும் தந்தைவழி உறவுகளிடம் மட்டும் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். அதேபோல தந்தையின் உடல் நலத்திலும் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். ஆனால் கவலைப்படும்படியாக பாதிப்புகளை தர மாட்டார் என்பதை முழுமையாக நம்பலாம்.

இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு பல வழிகளிலும் இருக்கும். எனவே குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் முழுமையாக பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது முழுமையாக நிறைவேறும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் தொடரும். கடனே இல்லை என்ற நிலை உங்களுக்கு உருவாகும் காலம் இது.

ஆடை ஆபரணச் சேர்க்கை இயல்பாக ஏற்படும். சொத்துகள் சேரும். வருமானம் பெருகும். குடும்ப உறவுகள் பலப்படும். சகோதர சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள், உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பு தருவார்கள். தாய் தந்தையரின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய ஆதரவு எப்போதும் நீடிக்கும். தந்தையின் உடல்நலத்தில் மட்டும் சிறிய பாதிப்பு ஏற்பட்டு சரியாகும். ஆனால், கவலை தரும்படியாக இருக்காது என்பதை நம்பலாம்.

வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பும் வெகு சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. வாழ்க்கைத் துணையின் வழியே ஆதாயம் தரக்கூடிய சொத்துகள் சேரும். அவர்களால் தேவையான உதவிகளும் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களுடைய வளர்ச்சி என அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகத்தில் சிறப்பான உயரத்தைத் தொடுவீர்கள். பதவி உயர்வு தேடி வரும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். அலுவலகத்தில் சிறந்த ஊழியராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் கிடைக்கும்.

உங்கள் செயல்பாடுகளால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். சூழ்நிலைக்கேற்றவாறு முடிவெடுத்துக் கொள்ளுங்கள். அரசுப் பணி மிக எளிதாக தடையில்லாமல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அரசுப் பணியில் சேருவதை லட்சியமாக் கொண்டவர்கள், தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயமாக அரசுப் பணி கிடைக்கும்.

மேலும், பணியில் இருப்பவர்களுக்கு துறை சம்பந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை போன்ற பிரச்சினைகள் ஏதும் இருந்தால் அவை அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும். உங்கள் மீதான குற்றச்சாட்டு கைவிடப்படும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிவது அல்லது வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சி போன்றவை இப்போது மிக எளிதாக நிறைவேறும்.

தொழில் வளர்ச்சி மிக மிகச் சிறப்பாகவே இருக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் தேடி வரும். தொழிலானது, சாம்ராஜ்ஜியமாக விரிவடையும். அதற்கு அனைத்து வித ஆதரவும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது தனியாக தொழில் செய்யும் வாய்ப்பு உண்டாகும். இப்போது செய்துகொண்டிருக்கும் தொழிலில், தொழிலோடு இணைந்த வேறு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது, நிச்சயமாக தொடங்கலாம்.... தொடங்குவீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

உணவுத் தொழில், வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு மிகச்சிறப்பான காலகட்டம் இது. இந்த ஆண்டில் உங்களுடைய தொழில் வளர்ச்சி பல நூறு மடங்கு வளர்ச்சி பெறும். ஓய்வை மறந்து உழைப்பை அதிகப்படுத்தினால் நிச்சயம் உச்சத்தைத் தொடுவீர்கள்.

பங்கு வர்த்தகத் தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் இவை அனைத்தும் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடையும். இதுவரை ஏற்பட்டிருந்த நஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து பன்மடங்கு லாபம் கிடைக்கும். மருத்துவத்துறை, மருந்து சம்பந்தப்பட்ட வியாபாரம் அனைத்தும் இனி வெகு சிறப்பாக இருக்கும். உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும்படியாக வளர்ச்சி இருக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட மிக அதிகப்படியான லாபம் கிடைக்கும். வியாபாரத்தை மிக பிரம்மாண்டமாக விரிவுபடுத்தும் வாய்ப்பு உள்ளது. புதிய கிளைகள் தொடங்குவது, வேறு நிறுவனங்களோடு இணைந்து வியாபாரத்தைப் பெருக்குவது போன்றவை நடக்கும். அந்த வாய்ப்புகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அதேபோல அவர்களுடைய தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்து தருவீர்கள். சிறு வியாபாரிகளாக மிகப் பெரிய வியாபாரியாக மாறும் அதிசயம் நடக்கும். சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் இந்த பிலவ ஆண்டு முழுவதும் இருக்கும் என்பதை முழுமையாக நம்பலாம்.

விவசாயத் தொழிலில் இருப்பவர்களுக்கு மிக சிறந்த வளர்ச்சி இருக்கும் உங்களுடைய தானியங்களுக்கு அதிகப்படியான விலை கிடைக்கும் அரசு சலுகைகள் மானியங்கள் தடையில்லாமல் கிடைக்கும் இடுபொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும் பணப் பயிர்களில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். இயற்கை சார்ந்த விவசாயிகளுக்கு தங்கள் விவசாயத் தொழிலானது லாபத்தை அதிகம் பெற்றுத் தரும்.

விவசாய இயந்திரங்கள் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மேலும் அதிகப்படியான ஆட்களை வேலைக்கு அமர்த்தி புதிய இயந்திரங்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு மிக எளிதாக நிறைவேறும்.

கலைத்துறையினருக்கு இந்த பிலவ ஆண்டு காலகட்டத்தில், வாய்ப்புகள் வந்து குவியும். எதை ஏற்பது எதை விடுவது என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்கு ஒப்பந்தங்கள் தேடி வரும். சிறந்த வாய்ப்புகளையும் ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இசை நாட்டியக் கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் தொகையைவிட மிக அதிகப்படியான தொகைக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள்.

இந்த காலகட்டத்தில் அனைத்துக் கலைஞர்களும் சொந்த வீடு வாகனம் என சொத்துகளாக சேர்த்துக்கொள்வது நல்லது, மிகச் சிறப்பான காலகட்டங்கள் வரும்பொழுது தவறவிடாமல் அனைத்து வசதிகளையும் செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த பிலவ ஆண்டு உங்களுக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை நிச்சயமாக தரும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. .

பெண்களுக்கு உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் ..... "உங்களுடைய கற்பனைக் கோட்டைகள் அனைத்தும் நிஜமாக மாறும் " என்பதே உண்மை. செல்வ வளம் சேரும். சொந்த வீடு, வாகனம், சொத்துகள் என இயல்பாக அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் காலம் இது.

புதிதாக அறிமுகமாகும் நண்பர்களிடம் இருந்து மட்டும் விலகி இருந்தாலே போதும். இதைத் தவிர மற்ற அனைத்தும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய உத்தியோகம், சுய தொழில் வியாபாரம் என அனைத்தும் மிக உயர்ந்த நிலையை அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த காலகட்டத்தை உங்களுடைய கடும் உழைப்பாலும் ஆழ்ந்த திட்டமிடலாலும் எதிர்கால வளர்ச்சிக்கு சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம், விரும்பிய கல்வி விரும்பியபடியே கிடைக்கும். உயர்கல்விக்கான உதவிகள் தேடி வரும். வங்கிக்கடன் மிக எளிதாகக் கிடைக்கும். உங்களுடைய கல்விக்கு சக மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். சிறந்த மதிப்பெண்கள் எடுப்பீர்கள். தோல்வி என்பதே இருக்காது, கல்வியில் வெற்றிகரமாக வளர்ச்சி ஏற்படும்.
பொதுவாக துலாம் ராசிக்காரர்களுக்கு பெரிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏதும் இருக்காது.

ஆனாலும் ஒரு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை சொல்லியாக வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க வேண்டும். உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய கண் எரிச்சல், பார்வையில் பிரச்சினைகள், கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் அசிடிட்டி என்னும் ஜீரணக் கோளாறு, சிறுநீர் வெளியேறுவதில் சில பிரச்சினைகள் போன்றவை ஏற்படும் சூழலும் உண்டு. தகுந்த மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள். உடல் நலம் காப்பதில் ஆர்வம் செலுத்துங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபாடு செய்வது மிகச் சிறந்த நன்மைகளை தரும். அருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயார் வழிபாடும், தரிசனமும் மேற்கொள்வது மேலும் அளவற்ற நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்