ஒரே நட்சத்திரக்காரர்கள் கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது, ஏன்?  27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 103 ; 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

திருமணப் பொருத்தம் என்னும் தலைப்பில் நட்சத்திர தகவல்கள் பற்றி கடந்த சில பதிவுகளில் கொடுத்திருந்தேன். அதில் நட்சத்திர ரீதியான பொருத்தங்களுக்கான விளக்கங்களை விரிவாக தந்திருந்தேன். மிகத் தெளிவுற புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆனாலும் ஒருசிலருக்கு பலவிதமான கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.
மிக முக்கியமாக ஒரே நட்சத்திரம் அதாவது, ஏக நட்சத்திரம் கொண்டவர்களை திருமணம் செய்யலாமா என்று கேட்டிருந்தார்கள். ஏக நட்சத்திரங்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற விதி இருந்தாலும், இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டும் விதிவிலக்கு தரப்பட்டு இருக்கிறது.

மூலம் மற்றும் ரேவதி இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் அதே நட்சத்திர வரன்களை திருமணம் செய்து வைக்கலாம் என்று விதி இருக்கிறது. இந்த ஒரு விதியை அடிப்படையாக வைத்துக்கொண்டு திருமணம் செய்து வைத்துவிடலாமா என்றால் நிச்சயமாகக் கூடாது. இந்த விதியைச் சொல்லும் சாஸ்திரம், பலவித நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. அது, நான் ஏற்கெனவே சொன்ன விஷயம்தான். ஜாதக ரீதியான பொருத்தத்தை அறிந்து கொண்ட பிறகே, இந்த ஏக நட்சத்திரம் வரன்களை தீர்மானம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது சாஸ்திரம்.

ஏக நட்சத்திர வரன்கள் திருமணம் செய்ததால் ஏற்படக்கூடிய சில பிரச்சினைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

முதலில் ரஜ்ஜு பொருத்தம் என்னும் மாங்கல்ய ஸ்தானம் பலவீனப்படும். அதுமட்டுமல்லாமல், இருவரும் ஒரே நட்சத்திரம் என்பதால், தசாபுத்தி ஒரே போல வரும். இதில் நல்ல காலம் என்பதும் பிரச்சனைகளை தரக்கூடிய கஷ்ட காலம் என்பதும் இருவருக்கும் ஒரே விதமாக தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். இதுவே வேறு வேறு நட்சத்திரங்களில் திருமணம் செய்யும்போது தசாபுத்திகளும் மாறுபட்டிருக்கும். ஒருவருக்கு சிரமமான திசை நடந்தாலும் மற்றவருக்கு நல்ல திசை நடந்து இந்த சிரமமான திசை நடத்துபவரை கைகொடுத்துக் காப்பாற்றும். எனவேதான் ஏக நட்சத்திரம் கொண்டவர்களை இணைக்கக்கூடாது என்று விதித்திருக்கிறது ஜோதிட சாஸ்திரம். தசாபுத்தி மட்டுமல்லாமல் ஏழரை சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டம சனி மற்றும் குருப் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய நன்மைகள், மற்றும் இடர்பாடுகள் போன்றவை ஒரே போல இருவருக்கும் நடக்கும்.

இது வாழ்க்கையின் சுவாரஸ்யத்தைக் கெடுத்துவிடும். இருவருக்கும் நல்ல பலன்கள் ஒரே போல நடக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருப்பது போலவே, இருவருக்கும் சிரமமான காலச் சூழ்நிலைகள் நடக்கும்போது மனம் வருந்தும் படியாக, விரக்தி அடையும் படியான சம்பவங்கள் நடக்கும். அப்போது வாழ்க்கையில் ஒரு பற்று இல்லாமல், பிடிப்பு இல்லாமல் போகும்.

இந்தக் காரணங்களுக்காகவே வேறு வேறு நட்சத்திரங்களில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது, இதைத் தெளிவாக புரிந்து கொண்டால் ஏக நட்சத்திரம் பொருத்தம் பார்ப்பதை நாமே தவிர்த்து விடலாம்.

திருமணப் பொருத்தம் என்பதை இன்னும் நிறைய பேர் ஏதோ ஒரு பார்மாலிட்டி என்பது போலவே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது அவசரம் காட்டாதீர்கள். நிதானமாக ஜாதகங்களை ஆய்வு செய்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும். திருமண பொருத்தம் பார்த்து, எல்லாம் பொருந்தி வந்து, முடிவு செய்த பின், அடுத்து மிக முக்கியமாகப் பார்க்கவேண்டியது திருமண முகூர்த்த நாள் மற்றும் நேரம்.

இதிலும் மிக மிக கவனமாகவும், அவசரப்படாமலும் முகூர்த்த காலத்தைக் கண்டறிய வேண்டும். மண்டபம் கிடைக்கின்ற தேதிக்கு தகுந்தார்போல் திருமணத் தேதியை முடிவு செய்வது வழக்கமாகிவிட்டது. இது முற்றிலும் தவறு. மணமகள், மணமகன் இருவருடைய லக்னம், ராசி, நட்சத்திரம் இந்த மூன்றுக்கும் பொருந்தி வரக்கூடிய முகூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்து அதில் மிகச் சரியான முகூர்த்த நேரத்தை குறிக்க வேண்டும். அந்த நாளின் அந்த நேரத்தில் செய்யும் திருமணம் எப்படிப்பட்ட தோஷங்கள் இருந்தாலும் கூட அதையெல்லாம் முறியடித்து மணமக்களை வாழ்வாங்கு வாழச் செய்யும்.

ஆண்டு முழுவதும் இருக்கக்கூடிய முகூர்த்த நாட்களில் ஒருவருக்கு அதிகபட்சம் 4 முதல் 5 முகூர்த்த நாட்கள் மட்டுமே கிடைக்கும். எனவே, மண்டப தேதி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நாள் நட்சத்திரம் பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டும். திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதை நினைவில் கொண்டால் சின்னச்சின்ன சமரசங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் நல்லவொரு முகூர்த்த நாளை குறித்துக் கொள்ளுங்கள். இதன் அவசியத்தை, முழுமையை உணர்ந்துகொண்டீர்கள்தானே!

இதற்கு அடுத்தபடியாக நாம் பார்க்க வேண்டியது சாந்தி முகூர்த்தம் என்னும் தாம்பத்தியத்திற்கு நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது! இதிலும் சற்று கூடுதலாகவே கவனம் செலுத்த வேண்டும். காரணம்... தலைமுறை சம்பந்தப்பட்டது. எனவே அதிலும் மிகச் சரியான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

திருமணம் என்பது மிக முக்கியமான வாழ்க்கையின் ஒரு அங்கம். எனவே திருமண விஷயத்தில் அவசரப்படுவது கூடாது.திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறதே... என்ற பதட்டப்படுவதும், வருகின்ற வரன்கள் எல்லாம் தட்டிப் போகிறதே என்ற கவலையிலும் அவசரமாக ஏதோ ஒரு வரன் வந்திருக்கிறது. முன்னேபின்னே இருந்தாலும் முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்யாதீர்கள். நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் தகுந்த கால நேரம் வரும்போது திருமணம் நடந்தே தீரும் என்பதை மறக்க வேண்டாம்.

அதேபோல வீடு, மனை, வாகனம் என முழுமையாக தன்னிறைவு அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏதேனும் கொள்கை வைத்திருந்தால், அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளுங்கள். வரன்கள் தேடி வரும்போது அதை தவற விடாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். திருமணம் முடிந்தும் கூட உங்களால் வீடு மனை வாகனம் வாங்க முடியும். எனவே வீண் பிடிவாதம் பிடித்து வரன்களை தள்ளிப்போட வேண்டாம்.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதே, வரன் அமையும் போதே திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த வழி. அதைவிட்டுவிட்டு, என்னுடைய லட்சியங்கள் நிறைவேறிய பின்பு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இருந்தால், காலம் கடந்த பின் அதாவது, திருமணத்திற்கான நல்ல நேரம் நடக்கும் போது தவிர்த்துவிட்டு திருமணத்திற்கு வாய்ப்பில்லாத காலத்தில் வரன்களை தேடுவது உங்களின் ஜாதக ரீதியாக சரியாக இருக்காது. இதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாமதம் ஆகிக் கொண்டிருக்கும் திருமணங்களை ஜாதகம் செய்து வைக்கிறதோ இல்லையோ..! நிச்சயமாக இறைவன் கருணையாலும் அருளாலும் திருமணம் நடந்தே தீரும். எனவே, உங்கள் குலதெய்வம், இஷ்ட தெய்வம் பரிகார தெய்வம் முதலான தெய்வங்களையும் குருமார்களையும் தவறாமல் வழிபட்டு வாருங்கள். விரைவில் உங்களுக்கு நன்மைகள் நடப்பதை உணர்ந்து கொள்வீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு எம்பெருமான் முருகன் அருளால் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன், திருமணமான தம்பதிகளுக்கு நல்ல புத்திர சம்பத்துகள் உண்டாக வேண்டும் என்றும் எம்பெருமான் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.

அன்பார்ந்த வாசகர்களே.

’27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள்’ எனும் இந்தத் தொடர், அடுத்த பதிவுடன் நிறைவுறுகிறது.

உங்களுடைய மேலான கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும்.

- வளரும்
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்