- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
சென்ற பதிவில் திருமணப் பொருத்தம் என்ற தலைப்பில் நட்ச்சத்திரப் பொருத்தங்கள் பற்றிய விபரங்களைச் சொன்னேன். நிறைய வாசகர்கள் நன்றி தெரிவித்திருந்தார்கள். அத்துடன் மேலும் சில சந்தேகங்களையும் கேட்டிருந்தார்கள்.
குறிப்பாக ரஜ்ஜு பொருத்தம் பற்றிய ஒரு சில சந்தேகக் கேள்விகளைத்தான் ஏராளமான வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள்.
இந்தத்தொடரின் 100-வது பதிவில், ரஜ்ஜு பொருத்தம் பற்றி சொல்லும்போது ரஜ்ஜு பொருத்தத்தில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன என்று சொல்லியிருந்தேன்.
ஆரோகண நட்சத்திரங்கள், அவரோகண நட்சத்திரங்கள் என்று இருக்கின்றன. ரஜ்ஜு பொருத்தத்தில் ஆரோகணம் அவரோகணம் என்ற ஏறுவரிசை இறங்கு வரிசை நட்சத்திரங்களைப் பார்ப்போம். உதாரணமாக, சூரிய நட்சத்திரத்தைக் கொண்டவரையும் குருவின் நட்சத்திரத்தைக் கொண்டவரையும் திருமணத்தில் இணைக்கக் கூடாது என்பது ஜோதிட விதி. இந்த ஆரோகணம் அவரோகணம் என்ற ஜோதிட விதிப்படி சூரியன் நட்சத்திரங்கள் ஏறு வரிசையாகவும் குருவின் நட்சத்திரங்கள் இறங்கு வரிசையாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.
சரி... முதலில் சூரிய நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுகிற ஆரோகண நட்சத்திரங்கள் எவையெவை என்பதையும் குரு நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுகிற அவரோகண நட்சத்திரங்கள் எவையெவை என்பதை தெரிந்துகொள்வோம்.
சூரிய நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம். இவை ஆரோகண நட்சத்திரங்கள்.
குருவின் நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவை அவரோகண நட்சத்திரங்கள்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த நட்சத்திரங்களை இணைப்பதில் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஆனால், ஜாதகப்படி பொருத்தத்தைப் பார்த்து அதிலும் குறிப்பாக ஆயுள் பாவகமான எட்டாம் பாவகத்தை முழுமையாக ஆராய்ந்து அதன் பிறகுதான் இணைக்க வேண்டும். ஒருவேளை எட்டாம் பாவகம் ஆணுக்கோ பெண்ணுக்கோ பலவீனமாக இருந்தால் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. அதாவது திருமணம் நடத்தக்கூடாது.
என்னுடைய நண்பர் ஒருவர் மத்திய அரசுப் பணியில் வேலை பார்த்தார். அவரும் அவரின் மனைவியும் ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல்தான் திருமணம் செய்து கொண்டார்கள். இதுநாள் வரை ஒற்றுமையாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும், நல்ல செல்வ வளத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது நண்பருக்கு 78 வயது ஆகிறது. பணி ஓய்வு பெற்றுவிட்ட இந்த காலகட்டதில் நிம்மதியுடனும் தேக ஆரோக்கியத்துடனும் மிகவும் உற்சாகமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர் புனர்பூசம் நட்சத்திரம். அவருடைய மனைவி உத்திர நட்சத்திரம். ஜோதிட ரீதியாகப் பார்க்கும்போது ரஜ்ஜுப்பொருத்தம் இல்லைதான். ஆனாலும் இந்த ஏறுவரிசை இறங்கு வரிசை என்ற அதே ஜோதிட விதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் அவர்களுடைய ஜாதகத்தில் ஆயுள் பாவகம் மிக மிக பலமாக இருக்கும் காரணத்தினால் இதுவரை எந்தவிதமான பிரச்சினைகளும் பிணக்குகளும் இல்லாமல் மன ஒற்றுமையோடு, ஆரோக்கியமாக, ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படி ஜாதக ரீதியான பொருத்தம்... சில தருணங்களில், சிலருக்கு நட்சத்திரப் பொருத்தத்தைக் கூட பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுவிடும். எனவே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்... ஜாதக ரீதியான பொருத்தம் தான் மிக மிக முக்கியம். அதற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக யோனிப்பொருத்தம். இதுவும் மிக கவனமாக பார்க்கப்பட வேண்டிய பொருத்தம்!
யோனிப் பொருத்தம் என்பது ஆண்-பெண் தாம்பத்திய திருப்தியை சொல்லக் கூடியது என்பதை கடந்த பதிவிலேயே விவரித்திருந்தேன். பெண்ணின் நட்சத்திர விலங்கும், ஆணின் நட்சத்திர விலங்கும் பகை இல்லாமல் இருக்க வேண்டும். தவறாக இருக்கும் பட்சத்தில் தாம்பத்யம் சரிவர இருக்காது. திருப்தியற்ற நிலையே இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகரித்து வருவதற்கு இந்த தாம்பத்தியமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. அதுமட்டுமல்லாமல் தவறான நடத்தைக்கும் இந்த யோனிப்பொருத்தம் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறது.
திசைமாறிப் போனவர்களின் குடும்பத்தார், சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகங்களைக் கொண்டு வந்து பார்க்கச் சொல்வார்கள். அவற்றைப் பார்க்கும் போதே, இந்த யோனிப்பொருத்தம் என்னும் நட்சத்திர விலங்குகள் ஒன்றுக்கொன்று பகையாக இருப்பதை சட்டென்று அறிந்து சொல்லியிருக்கிறேன். எனவே ரஜ்ஜு பொருத்தம் பார்க்கும் பொழுதே யோனி பொருத்தமும் கவனமாக பார்க்கப்பட வேண்டும் என்பதை உறுதியுடன் சொல்லுகிறேன்.
அதேபோல கணப்பொருத்தம் என்ற விபரத்தையும் சென்ற பதிவிலேயே தந்திருந்தேன். அதிலும் ஒரு சிலர் இன்னுமான சில விளக்கங்களைக் கேட்டு இருக்கிறார்கள்.
கணப் பொருத்தம் என்பது ஒரு மனிதனின் உடல்வாகு, மனவலிமை இரண்டையும் குறிக்கக் கூடியது. . கணம் என்பது மூன்று வகையாக இருக்கிறது. தேவ கணம், மனுஷ கணம், ராஜஸ கணம் என மூன்று வகை கணங்கள் இருக்கின்றன.
தேவ கண நட்சத்திரங்கள் - அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.
தேவகணம் என்றால் அவர்களுடைய உடல்வாகு மெலிந்தும், மென்மையானதாகவும் இருக்கும். மனதளவில் சிறு துயரத்தைக் கூட தாங்க முடியாதவர்களாக இருப்பார்கள். சிறிய ஏமாற்றம் கூட இவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிக குளிரோ, அதிக வெப்பமோ இரண்டையுமே தாங்கமாட்டார்கள்.
மனுஷ கண நட்சத்திரங்கள் - பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.
மனுஷ கணம் என்றால் நடுத்தர உடல்வாகு, சற்றே தடித்த தோல் அமைப்பு கொண்டவர்கள். ஏமாற்றங்களை சந்தித்தாலும் அதிலிருந்து சட்டென்று விடுபட்டு சுதாரித்துக் கொள்ளக்கூடிய சக்தி கொண்டவர்கள். அதிக குளிர், அதிக வெப்பம் எதுவானாலும் ஒரு சில நாட்களிலேயே தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி உடையவர்களாக, அவற்றை, அந்தச் சூழலை பழக்கப்படுத்திக் கொள்பவர்களாக இருப்பார்கள்.
ராஜச கண நட்சத்திரங்கள் - கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.
ராஜச கணம் என்றால் முரட்டுத்தனமான உடல் வாகு இருக்கும். தடித்த தோல் அமைப்பு கொண்டவர்கள். குளிரோ வெப்பமோ எதுவும் இவர்களைப் பாதிக்காது. தாம்பத்தியத்தில் அதிகப்படியான முரட்டுத்தனத்தை கடைபிடிப்பார்கள்.
இப்போது நீங்களே ஓரளவுக்கு யூகிக்க முடியும்!
தேவ கண நட்சத்திரக்காரர்களை ராஜஸ கண நட்சத்திரக்காரர்களோடு இணைக்கும் பொழுது அதன் விளைவு எப்படி இருக்கும்? அதிகப்படியான மென்மையும் அதிகப்படியான முரட்டுத்தனமும் எப்படி ஒன்றாக இணைய முடியும்?
அதேசமயம் தேவ கணம் மனுஷ கணத்தோடு ஓரளவுக்கு மட்டுமே ஒத்துப்போகும். அடிப்படையான அனுசரித்துச் செல்லும் குணம் மனுஷ கணத்துக்கு இருப்பதால் இருவருக்குமான புரிதல் சிறப்பாகவே இருக்கும். அதேபோல மனுஷ கணம் ராஜச கணத்தோடு இணையும் பொழுது அதுவும் அனுசரித்துக் கொள்ளக் கூடிய, சகித்துக் கொள்ளக்கூடிய, விட்டுக்கொடுக்கக்கூடிய நிலையை அடைந்துவிடும். இதனால்தான் தேவ கணத்தைச் ராஜஸ கணத்துடன் இணைக்கக் கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம். மனுஷ கணம் இரண்டையும் அனுசரித்துச் செல்லும்.
தாம்பத்தியத்தில் ஏற்படக்கூடிய தீவிரத் தன்மையை விளக்கக் கூடியதாக இந்த கணப் பொருத்தம் இருக்கிறது. எனவே திருமண பொருத்தத்தின் போது முதலில் பார்க்க வேண்டியது ரஜ்ஜு பொருத்தம், அடுத்து யோனிப்பொருத்தம், அதன்பிறகு கணப்பொருத்தம் இந்த மூன்றையும் கவனமாக பார்க்க வேண்டும். மற்ற பொருத்தங்கள் ஓரளவுக்கு இருந்தாலே போதுமானது, இவற்றையெல்லாம் விட, ஜாதக ரீதியான பொருத்தத்தை முக்கியமாக பார்க்க வேண்டும்.
அதேபோல ஜாதக ரீதியான பொருத்தம் பார்க்கும்போது ஆண், பெண் இருவருக்குமான ஜாதகத்தில், 7-ஆம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் அவசியம் கவனிக்கவேண்டும். பெண்ணின் ஜாதகத்தில் 4ஆம் இடத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். 7-ஆம் இடம் என்பது கணவன் மனைவி தாம்பத்திய உறவைக் குறிக்கக்கூடியது. 12ஆம் இடம் என்பது அந்த தாம்பத்தியத்தில் கிடைக்கக்கூடிய திருப்தி நிலையை சொல்லக்கூடியது.
பெண்களுக்கு நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம். எனவே, அவர்களுக்கு சுக போகங்களில் ஆர்வம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக 4ம் இடத்தைக் கவனிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் சரியாக பார்த்தால் இல்லற வாழ்வில் எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்காது. தாம்பத்தியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது உறுதி!
எனவே திருமணப் பொருத்தம் என்பது ஏதோ நட்சத்திரப் பொருத்தம் பார்த்து முடிவு செய்யக் கூடியது அல்ல. ஜாதகத்தின் பலவித ஆய்வுகளுக்கு உட்படுத்தி அதன்பிறகு வரன்களை தீர்மானிக்கவேண்டும்.
திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறதே என்று பலரும் ஜாதக ரீதியான பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. நட்சத்திரப் பொருத்தம் பொருந்தி வந்தாலே போதும் என்று மேலோட்டமாக முடிவு எடுத்துவிடுகிறார்கள். இவையே பின்னாளில் பெரிய அளவிலான பிரச்சினைக் கொண்டு வந்து விடுகிறது.
ஜோதிட சாஸ்திரம் சொல்கிற இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் திருமண பொருத்தம் பார்க்கும்போது அவசரப்படமாட்டீர்கள்.
மேலும் பல தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
- வளரும்
**************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago