‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
சென்ற பதிவில் “தாரை பலம்” பற்றி எழுதியிருந்தேன். அந்தப் பதிவுக்குப் பலரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் ஒரே மாதிரியான விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்கள். “எங்களால் எங்களுடைய நட்சத்திரத்துக்கான தாரை பலம் பற்றி, சரிவர கணக்கிட முடியவில்லை. நீங்களே விரிவாக எங்கள் நட்சத்திரத்திற்கான நன்மை தரும் நட்சத்திரங்களையும், கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரங்களையும் பட்டியலாகக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டிருந்தார்கள்.
ஆகவே, அவர்களுக்காக, நம் வாசகர்களுக்காக விரிவாகவும் எளிமையாகவும் பதிவிறக்கம் செய்துகொண்டு, பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதற்காகவும் இதோ... தருகிறேன்.
அஸ்வினி -
அஸ்வினியில் பிறந்தவர்களுக்கு... அஸ்வினி நட்சத்திரம்தான் ஜென்ம தாரை. மேலும் “மகம்” நட்சத்திரம் (இது அனு ஜென்ம நட்சத்திரம்), “மூலம்” நட்சத்திரம் (இது திரி ஜென்ம நட்சத்திரம்) எனப்படுகிறது. இந்த மூன்றும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும். ஜென்ம நட்சத்திரம் என்பது நம் பிறப்பின் நோக்கம் எனும் கர்மவினைகளை அனுபவிப்பதைக் குறிக்கின்றன.
இதனால்தான் திருமணத்திற்கு ஒரே நட்சத்திரத்தில் அமைந்த ஆண் பெண் ஜாதகத்தை இணைக்கக் கூடாது என்றார்கள். காரணம்? ஒரே மாதிரியான கஷ்ட நஷ்டங்களையும், துக்க சோகங்களையும் கூடவே கர்ம வினைகளையும் ஒரேசமயத்தில் அனுபவிக்க இருப்பவர்கள் எப்படி இணைந்து வாழ்க்கையை நிம்மதியாக நடத்தமுடியும்? வேறுவேறு நட்சத்திரமாக இருந்தால்தான் கர்ம வினையும் வேறுவேறாக இருக்கும். ஒருவருக்கு துன்பம் வந்தாலும் மற்றவரின் வினைப்படி அந்த துன்பத்தை வாழ்க்கைத் துணையின் துணையுடன் கடந்து போக முடியும். அப்போதுதான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். இப்போது ஒரே நட்சத்திரத்தில் வாழ்க்கைத் துணை இணையக் கூடாது எனும் காரணத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
சரி, இந்த ஜென்ம தாரையில் செய்யக்கூடியவை என்னென்ன?
அனைத்துச் செயல்களும் செய்யலாம். செய்யக்கூடாதவை எவை என்பதுதான் முக்கியம்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள், அஸ்வினி நட்சத்திர நாளில், குறிப்பாக ஆண்கள் திருமணம் செய்யக்கூடாது, பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது. இருவரும் முடி திருத்துவது, எண்ணெய்க் குளியல், நகம் வெட்டுவது, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது போன்றவை கூடாது.
அஸ்வனி நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரை நட்சத்திரம் :- பரணி, பூரம், பூராடம்
இந்த மூன்றும் உங்களுக்கு சம்பத்து தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திர நாட்களில், அனைத்து சுப காரியங்களும் செய்யலாம். தொழில் வியாபாரம் தொடங்கலாம். பணவரவு தொடர்பான விஷயங்கள் மேற்கொள்ளலாம். சின்னதான தடை கூட ஏற்படாமல் வெற்றியைத் தரும். இந்த நட்சத்திர நாட்களில் உங்கள் முயற்சிகளைத் தொடங்க நூறு சதவீத வெற்றி நிச்சயம்! இந்த நட்சத்திர நண்பர்கள் உண்மையான நட்புக்கு அடையாளமாக இருப்பார்கள். இந்த நட்சத்திரக்காரர்களில் ஒருவர், வாழ்க்கைத்துணையாக அமைவது நிச்சயம் இறைவன் கொடுத்த வரம்தான்.
க்ஷேம தாரை நட்சத்திரங்கள் :- ரோகிணி - அஸ்தம் - திருவோணம்
இந்த மூன்றும் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு க்ஷேமத்தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் அனைத்து சுப காரியங்களும் செய்யலாம். ஏதேனும் குறை இருந்தாலும் இந்த நட்சத்திரங்கள் அதை நிவர்த்தி செய்துவிடும். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் இந்த நாட்களில் வாங்கலாம். உடல் நலத்திற்கான பயிற்சி வகுப்புகளில் சேரலாம். நோய் நீங்க மருந்துண்ணத் தொடங்கலாம். புதிய வாகனம் வாங்கலாம். புதுமனைப் புகுவிழா செய்யலாம். பதவி ஏற்கலாம். ஆதாயம் தரும் பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் உங்களுக்குப் பொருளாதார உதவிகளைச் செய்து தருபவர்களாகவும், இக்கட்டான நேரத்தில் சரியாக வந்து உதவி செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
சாதக தாரை நட்சத்திரங்கள் :- திருவாதிரை - சுவாதி - சதயம்
இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள்.
எந்தவொரு காரியத்தில் ஈடுபட்டாலும் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செயல்பட்டால் நீங்கள் எடுத்துக் கொண்ட காரியம் சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவும், பணவரவு சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடவும், வழக்கு தொடர்பான விஷயங்களைக் கையாளவும், வேலைவாய்ப்பு, வேலையில் பதவி உயர்வு வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் உகந்த நாட்கள்.
வேறு வேலைக்கு மாறுவதற்காக முயற்சி செய்யவும், கடன் வாங்குவதற்கும், கடனை அடைப்பதற்கும், புதிய வீடு வாங்குதல், புதிய வீடு கட்டுதல், விவசாயம் தொடர்பான பயிரிடுதல், உரமிடுதல், அறுவடை செய்தல் போன்றவைகளைச் செய்யவும் ஏற்ற நாட்கள்.
பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்கவும் ஏற்ற தினங்கள் இவை. உங்களுக்கு சாதகமான நாட்கள் இவை. இவை மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கும், பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் ஏற்றதாக இருக்கும் நாட்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் மிகுந்த உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்களுடைய எண்ணத்திற்கு தகுந்தது போல் செயல்படுவார்கள்.
மைத்ர தாரை எனும் நன்மை தரக்கூடிய நட்சத்திரங்கள் :- பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி -
இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ர தாரை எனும் நன்மை தரக்கூடிய நட்சத்திரங்கள்.
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியங்களும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு ஒவ்வாத வேலை செய்தாலும் அதிலும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக மாற்றி அமைக்கும் வல்லமை இந்த நட்சத்திர நாட்களுக்கு உண்டு.
குறிப்பிட்டுச் சொல்லும்படியாக தொழில் முறையாக லாபத்தை அடையக்கூடிய முயற்சிகளிலும், பயணங்களிலும் வியாபார விஷயமாக மேற்கொள்ளக்கூடிய ஒப்பந்தங்கள் போடவும், வெளிநாடு செல்லவும், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யவும் ஏற்ற நாட்கள் இவை.
மேலும் இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கவும் ஏற்றதாக இருக்கும். முதல் திருமணம் ஏதாவது ஒருவகையில் பாதிப்படைந்து தோல்வியடைந்தவர்கள், மறுமண முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் உகந்த நாட்கள்.
முதல் குழந்தை பிறந்து, நீண்ட இடைவெளிக்குப்பின் இரண்டாவது குழந்தைக்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஏற்றதாக இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களாக அமைந்தால், நீங்கள் கேட்காமலேயே தேடி வந்து உதவி செய்பவர்களாக இருப்பார்கள். வேலைவாய்ப்பு முதல் பொருளாதார உதவி வரை தொடர்ச்சியாக உங்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டே இருப்பார்கள்.
அதி மைத்ர தாரை எனும் அதிக நன்மை தரக்கூடிய நட்சத்திரங்கள் :- ஆயில்யம் - கேட்டை - ரேவதி -
இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள்.
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் உங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை தரக்கூடியதாகவும், மிக அதிகப்படியான நன்மைகளை தரக் கூடியதாகவும் இருக்கும்.
கடல் கடந்த பயணங்கள், அயல்நாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது, அயல்நாட்டில் தொழில் செய்வது, அங்கேயே பணிபுரிவது, உலக நாடுகள் முழுவதும் சுற்றி வரக் கூடிய அளவிற்கான தொழில் செய்வது அல்லது சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்றவை இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்வது மிகச்சிறந்த பலன்களை தரக் கூடியதாக இருக்கும்.
அவை மட்டுமல்லாமல் உலக விஷயங்கள் அதிகம் அறிந்தவர்களாகவும், இதன் மூலம் ஞானத்தைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். புரியாத புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க இந்த நட்சத்திர நாட்கள் பயனுள்ளதாக இருக்கும்.
தீர்க்க முடியாத பிரச்சினைகளை இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொண்டால் அந்தப் பிரச்சினை உடனே முடிவுக்கு வரும். உலகில் உள்ள அத்தனை சுகபோகங்களை அனுபவிக்கவும், விதவிதமான உணவுகளை ருசி பார்க்கவும் இந்த நட்சத்திர நாட்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவதற்கும் ஏற்ற நாட்களாக இருக்கும்.
ஆன்மிகப் பயணங்கள், ஆன்மிகப் பெரியோர்களை தரிசிப்பது, மகான்கள் சித்தர்களின் தரிசனம் செய்வது போன்றவற்றை இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொண்டால் முழுமையான அருளைப் பெறலாம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் அமைவதை அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாகவும், உதவிகரமாகவும் இருப்பார்கள்.
தவிர்க்கப்படவேண்டிய நட்சத்திர நாட்கள் :- விபத்து தாரை நட்சத்திரங்கள் :- கார்த்திகை - உத்திரம் - உத்திராடம்
இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்கள். இங்கே விபத்து என்பது ஏதோ சாலையில் நடக்கின்ற விபத்து மட்டுமே என புரிந்து கொள்ள வேண்டாம். சாலையில் நடக்கும் எதிர்பாராத விபத்துகள் மட்டுமல்லாமல், நம் வாழ்வில் நடக்கக்கூடிய எதிர்பாராத ஏமாற்றங்கள், துரோகங்கள், சூழ்ச்சிகள் என அனைத்துமே விபத்துகள் தான்! விபத்தால் ஏற்படும் வெளிப்புற காயம் மட்டுமல்லாமல், மனதளவில் ஏற்படுகின்ற காயங்களும் விபத்தின் வெளிப்பாடுதான்!
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளக் கூடிய எந்தவொரு காரியங்களும் உங்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை தரக்கூடியதாகவும், பொருளாதார இழப்புகளை சந்திக்க கூடியதாகவும், ஆறாத ரண வேதனைகளை தரக்கூடியதாகவும் இருக்கும். நம்பிக்கைத் துரோகத்தால் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்வதும், அதன் மூலம் ஏற்படக்கூடிய அவமானங்களை சந்திக்க வேண்டியதும் விபத்து வகையில்தான் சேரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! எனவே, இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, பயணங்களை மேற்கொள்வது போன்றவற்றைச் செய்யக்கூடாது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் எந்த வகையிலும் உங்களுக்கு உதவிகளை செய்ய மாட்டார்கள். மாறாக உங்களை ஏதாவது ஒரு சிக்கலில் சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பி விடுவார்கள். உதாரணமாக உங்களை சாட்சியாக வைத்து கடனைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விடுவார்கள். அந்த மொத்தக் கடனையும் நீங்கள் அடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண்டியது வரும். இதைப் புரிந்து கொண்டால் போதும்... எப்படிப்பட்ட சிக்கல்களிலும் சிக்காமல் தப்பி விடலாம்.
பிரத்தியக்கு தாரை எனும் பிறருக்கு நன்மை தரக்கூடியது. தனக்கு எந்த வகையிலும் பயன்படாத நட்சத்திரங்கள் :-
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம்
இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரத்துக்கு பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள். அப்படி என்றால் பிறருக்கு நன்மை, உங்களுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை என்று பொருள்.
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளைச் செய்யாது. மாறாக உதவி செய்தோம் என்ற மனதிருப்தி மட்டுமே உங்களுக்கு ஏற்படும். பொருளாதார ஆதாயங்கள் இருந்தாலும் அதை மற்றவர்கள் பிரித்துக் கொள்வார்கள். உங்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்காது. ஆனால் உதவிகளைச் செய்வதன் மூலம் உங்களுக்கு புண்ணியம் சேரும்! அந்த வகையில் மட்டுமே இது உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்!
இந்த காலத்தில் பொருளாதாரத் தேவைகளும் மிக மிக அத்தியாவசியம்தான் இல்லையா... எனவே இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளக்கூடிய எந்தக் காரியமும் பொருளாதாரத்திற்கு உதவாமல் போய்விடும். இதை நன்கு புரிந்து கொண்டால் ஏன் நமக்கு பொருளாதார விஷயங்களில் முழுமை பெறாமல் இருக்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களாக அமைந்தால்.. உங்களுக்கு எந்த வகையிலும் அவர்களால் நன்மைகள் கிடைக்காது. மாறாக தொடர்ச்சியாக நீங்கள் அவர்களுக்கு உதவிகளையும், அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டே இருப்பீர்கள். சிறிதும் தயக்கமில்லாமல் அவர்களும் உங்களை விடாமல் உதவிகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
வதை தாரை நட்சத்திரங்கள் :- புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி
இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு, வதை தாரை நட்சத்திரங்கள். வதை என்றால் உங்களுக்கே தெரியும். நெருப்பிலிட்ட புழு போல் துடிப்பது என்பது வதைபடுவதற்கான மிகச்சிறந்த உதாரணம். இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளக் கூடிய எந்தக் காரியமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி உங்களுக்குக் கடுமையான பிரச்சினைகளையும், வேதனைகளையும், மன உளைச்சலையும் தரக்கூடியதாக அமைந்துவிடும். ’ஏன்டா இந்தக் காரியத்தைச் செய்தோம்’ என்ற அளவிற்கு மனதில் ரண வேதனையை உண்டாக்கிவிடும்.
நியாயமாகப் பார்த்தால் சந்திராஷ்டமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விடவும், இந்த வதை நட்சத்திர நாட்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் கடுமையானதாகவே இருக்கும். எனவே, இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது முக்கியம். அடுத்தவர்களுக்கு ஏதாவது செய்யப் போனாலும் அது உங்களுக்கு எதிராகவே திரும்பி விடும். எந்தவிதமான செயல்பாடுகளையும் செய்யாமல் உங்கள் கடமையை மட்டும் செய்து வருவதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.
நண்பர்களாக இந்த நட்சத்திரக்காரர்கள் அமைவது கடும் பிரச்சினைகளை உண்டு பண்ணுவதாக இருக்கும். பிரச்சினைகளை அழைத்துக்கொண்டு உங்கள் வீட்டிற்கே வருவார்கள். அப்படி கடுமையான துன்ப துயரங்களை தரக்கூடியவர்களாக இந்த நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். எனவே இவர்களை விட்டு விலகி இருப்பதே நல்லது.
என்ன அஸ்வினி நட்சத்திரக்காரர்களே..! இந்தப் பட்டியல் உங்களுக்கு முழுமையான விவரம் கொண்ட பதிவாக இருக்கிறதுதானே. இதுகுறித்த உங்களுடைய கருத்தை அவசியம் பதிவிடுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அஸ்வினி நட்சத்திரக்காரர்களாக இருந்தால், இந்த அத்தியாயத்தை அவர்களுக்குப் பகிருங்கள்.
அடுத்த பதிவில் "பரணி" நட்சத்திரக்காரர்களுக்கான தாராபலன்களைப் பார்ப்போம்.
- வளரும்
*********
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago