27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 87 ;
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
இதுவரை அஸ்வினி நட்சத்திரம் தொடங்கி ரேவதி நட்சத்திரம் வரையிலான 27 நட்சத்திரங்கள் பற்றியும் நட்சத்திரக்காரர்களின் குணங்கள் குறித்தும் 27 நட்சத்திரக்காரர்களின் பலன்களையும் பார்த்தோம். மேலும், ஒவ்வொரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியாக குணநலன், பலன்களை விரிவாகவே பார்த்தோம்.
இன்னும் குறிப்பாக, 27 நட்சத்திரங்களின் தெய்வம், விருட்சம், பட்சி என பார்த்தது மட்டுமல்லாமல் அந்த நட்சத்திர நான்கு பாதங்களுக்குமான தெய்வம், விருட்சம், ஆலயங்கள் என்றும் பார்த்தோம்.
இன்னும் சில தகவல்கள்... ஆச்சரியமான தகவல்கள்... ’அடடே இதனால்தானா..?’ என்று வியக்கும்படியான தகவல்கள்.. என்பவற்றையெல்லாம் சொல்ல இருக்கிறேன்.
நாம் ஏற்கெனவே பார்த்த தகவலான சம்பத்து தாரை என்னும் இரண்டாவது நட்சத்திரமே உங்களுக்கு பலவித நன்மைகளைத் தரும். அதாவது உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தரும். அந்த நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு பல வகைகளிலும் உதவிகரமாக இருப்பார்கள்.
இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழும். அப்படியானால் ஜென்ம நட்சத்திரம் என்ன செய்யும் என்பதே!
ஜென்ம நட்சத்திரம் என்பது உங்களின் பிறப்பின் நோக்கம் எதுவோ அதைச் செய்யும். இது ஜென்ம தாரையாகும் ( தாரை என்றால் தருவது.. நம்மை வந்து சேர்வது என்று பொருள்). இரண்டாவது நட்சத்திரம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கும். பணவரவு, திருமணம், புத்திர பாக்கியம் உருவாகுதல், எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைப்பது, நல்ல வேலை கிடைப்பது, மனம் மகிழும் சம்பவங்கள் நடப்பது இவையனைத்தும் இந்த “சம்பத்து தாரை”? நட்சத்திரத்தின் வேலை!
மூன்றாவது நட்சத்திரம் நீங்கள் வேதனைகளை, துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணமாக அமைகிறது. உதாரணமாக ஒரு சிக்கலில் சிக்கி மன நிம்மதி தொலைத்தால்.. அந்த நிகழ்வு எப்போது, எந்த நட்சத்திர நாளில் நடந்தது என்று என்பதைக் கவனியுங்கள். நிச்சயமாக அது மூன்றாவது நட்சத்திரமாகத்தான் இருக்கும். ’நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். ஆனால் எங்கிருந்தோ வந்து இப்படி சிக்கலில் மாட்டிவிட்டுட்டானே’ என உங்களைப் புலம்ப வைத்தால் அது நிச்சயம் மூன்றாவது நட்சத்திரமாகவோ மூன்றாவது நட்சத்திரக்கார்களாலோதான் நடந்திருக்கும். அதாவது விபத்து தாரையாகத்தான் இருக்கும். விபத்து என்றால் அடிபட்டு காயம் ஏற்படுதல் மட்டுமல்ல... எதிர்பாராத துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலும் அதுவும் விபத்துதான். பயணங்களில் ஏற்படும் விபத்தும் இந்த மூன்றாவது நட்சத்திர நாட்களில்தான் நடக்கும். ஆகவே, இந்த “விபத்து தாரை” நட்சத்திர நாளையும் நட்சத்திரக்காரர்களையும் தவிர்த்து விடுங்கள்.
வீடு, வாகனம், ஆபரணம் வாங்கும் எண்ணம் வருகிறதா? அல்லது அது தொடர்பான தகவல்கள் உங்களை வந்து சேர்கிறதா? நிச்சயமாக அது உங்கள் நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரமாகத்தான் இருக்கும்.நான்காவது நட்சத்திர நாளாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை தொடர்வதற்கும், ஆதாயம் தரக்கூடிய பயணங்களை மேற்கொள்ளவும் நான்காவது நட்சத்திர நாளாகத்தான் அமைந்திருக்கும். இப்படி சொத்து சுகம் சேர்வதற்கும் ஆனந்த வாழ்வுக்கும் காரணம் இந்த நான்காவது நட்சத்திரம் “க்ஷேம தாரை” என்னும் சுகபோக தாரை நட்சத்திரமாகும்.
மிகுந்த எதிர்பார்ப்போடு.. நிச்சயமாக நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும், என்று ஒரு காரியத்தில் முழுவீச்சாக செய்து வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த காரியம் முடிந்தவுடன் அந்த நபர் “ரொம்ப நன்றி சார், நீங்க மட்டும் இல்லேன்னா இது நடந்திருக்காது. வாழ்நாள் முழுசும் மறக்க மாட்டேன்” என்று நன்றியை மட்டுமே பரிசாகத் தருகிறாரா? நிச்சயமாக அது உங்கள் நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரமாகத்தான் இருக்கும், அதாவது அந்த காரியத்தை நீங்கள் தொடங்கியது அந்த நட்சத்திர நாளில்தான்! அந்த 5வது நட்சத்திரம் “பிரத்தியக்கு தாரை” என்னும் பிறருக்கு நன்மையை தரும் தாரை! ஆனாலும் உங்களுக்குப் புண்ணியங்கள் சேரும். ’புண்ணியம் சேருவது இருக்கட்டும் சார்! பணம் கிடைக்கவில்லையே’ என விரக்தியாக கேட்பது புரிகிறது. என்ன செய்வது..? இது பணம் சம்பந்தப்பட்ட விஷயமில்லை. புண்ணியம் தரக்கூடிய காரியங்கள். ஒரு காரியம் தொடங்கும்போது, நாள், நட்சத்திரம் பார்க்கச் சொல்வது இதற்காகத்தான். இனியாவது நாள் நட்சத்திரம் பார்த்து தொடங்குங்கள். நன்மைகள் கிடைக்கும்.
உங்களுக்கு எதிரான விஷயத்தை உங்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டுமா? வழக்கு போட்டு வெற்றி அடைய வேண்டுமா? நல்ல நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வியாபார அனுகூலம் கிடைக்க வேண்டுமா? தொழில் வியாபாரம் தொடங்க வேண்டுமா? மொத்தத்தில் எடுத்த காரியம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திரமான “சாதக தாரை” நட்சத்திரத்தில் செய்தால் முழுமையான வெற்றி உறுதி. நூறு சதவீத வெற்றி நிச்சயம்!
நம்பிக்கையோடு குறுகிய காலத்தில் திருப்பி தந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு ஒரு கடன் வாங்குகிறீர்கள்..ஆனால் ஏதோ சிக்கல். அந்தக் கடனை அடைக்க முடியவில்லை, பணப்புழக்கம் இருந்தாலும் அந்தக் கடனை அடைக்க முடியவில்லை. ஏன்?
சரி, அடுத்து உடல்நலத்தில் சிறிய பிரச்சினை, மருத்துவர் பல பரிசோதனைகள் செய்யச் சொல்கிறார். நீங்களும் பணம் செலவு செய்து சோதனை செய்கிறீர்கள். முடிவில். ஒன்றும் பிரச்சினையில்லை சாதாரண கேஸ் டிரபிள் தான் என மருத்துவர் சொல்கிறார். நீங்களும் நிம்மதியடைகிறீர்கள். ஆனால் செலவுகளும் மன உளைச்சலும் உண்டாகிறது! ஏன்?
அலுவலகத்திலோ அல்லது உறவுகளிடமோ அல்லது நண்பர்களிடமோ கிண்டல் செய்வதாக நினைத்து ஒரு வார்த்தையை விடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அது அவர்களை காயப்படுத்தி உங்களுக்கு எதிராக மாறுகிறது. எதிர்ப்பாகவே மாறிவிடுகிறது. ஏன்?
மேற்கண்ட மூன்று சம்பவங்களுக்கும் காரணம்... நீங்கள் செய்த இந்த மூன்று விஷயமும் உங்கள் நட்சத்திரத்திற்கு 7வது நட்சத்திரமான “வதை தாரை” நாளில் செய்ததுதான் காரணம். வதை என்றால் மன நிம்மதி இழத்தல்,கடும் வேதனையைத் தருவது என்று அர்த்தம்.
அடுத்து எட்டாவதாக வரக்கூடிய “மைத்ர தாரை”யைப் பார்ப்போம். மைத்ரம் என்றால் நன்மை என பொருள். சுப காரியங்கள் தொடங்கவும், வியாபார, தொழில் ரீதியாக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கும் அயல்நாட்டில் வேலைக்கு முயற்சி செய்யவும், வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்யவும், ஒரு காரியத்தில் லாபம் கிடைக்கவும், இரண்டாவது திருமணம், இரண்டாவது குழந்தை பாக்கியம் பெறவும் ஏற்றது... ‘மைத்ர தாரை’. இங்கே இரண்டாவது திருமணம் என்பது முதல் திருமணம் முடிவுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது, முதல் திருமணம் நடந்து, வாழ்க்கைத் துணை இறந்திருக்கலாம். அல்லது விவாகரத்து ஏற்பட்டிருக்கலாம். அல்லது இருதரப்பிலும் பேசி பிரிந்திருக்கலாம். அவர்களுக்கு, இரண்டாவது திருமணம் நடப்பதற்கான சூழல், ‘மைத்ர தாரை’யில் நிலவும்.
அடுத்ததாக ஒன்பதாவதாக வரக்கூடிய “அதிமைத்ர தாரை” நட்சத்திரங்கள். இந்த அதிமைத்ர தாரை வருகின்ற நட்சத்திர நாளில் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள், தொழில் வியாபார பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்கள், ஆன்மிகப் பயணங்கள், மகான்கள் தரிசனம், சுப காரிய செலவுகள், அதாவது திருமணத்திற்கு நகை, ஆடை போன்றவற்றை வாங்க ஏற்ற தினங்கள்!
முதன் முதலில் பார்த்த “ஜென்ம தாரைக்கு” என்ன பலன் என்று சொல்லவில்லையே..!? என கேட்கிறீர்கள்தானே.
எல்லா சுபமும் நடக்கும். ஆனால் செய்யக்கூடாதவை என சில விஷயங்கள் உண்டு. அது.. ஆண்கள் ஜென்ம தாரை நாளில், ஜென்ம நட்சத்திர நாளில், திருமணம் செய்யக்கூடாது. பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது, இருவருக்கும் பொதுவாக சில தகவல்கள் ... எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. நகம் வெட்டக்கூடாது. முடி திருத்தம் செய்யக்கூடாது. தாம்பத்தியம் கூடாது. இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
இப்போது உங்களின் அடுத்த சந்தேகம்... சம்பத்து தாரை நட்சத்திரத்தில் மட்டும் பணவரவு என்றால் மாதத்திற்கு ஒருமுறைதானே வரும். அப்படியானால் பணத்திற்காக ஒருமாதம் காத்திருக்க வேண்டுமா? என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்!
உங்களுக்கு மாதத்தில் 10 தினங்கள் மட்டுமே சலசலப்புகள் இருக்கும். மற்ற நாட்கள் நன்மை தருவதாக இருக்கும். உங்களுக்கு என்றால் உங்களுக்கு மட்டுமில்லை... எல்லோருக்கும்தான்!
உங்கள் நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரை என்பது உங்களின் இரண்டாவது நட்சத்திரம் என்று சொன்னேன். ஆக 2வது நட்சத்திரம், 11வது நட்சத்திரம் (கூட்டினால் 2 வருகிறதுதானே), 20 வது நட்சத்திரம் இந்த மூன்றுமே சம்பத்து தாரை நட்சத்திரங்கள்தான்!
க்ஷேம தாரை நட்சத்திரம் 4வது நட்சத்திரம் என்று சொன்னேன் தானே. ஆக... 4வது நட்சத்திரம், 13 வது நட்சத்திரம் இந்த இரண்டு நட்சத்திர நாட்களும் க்ஷேமம் கொடுக்கும். அதாவது நன்மைகள் நடக்கும். அப்படியானால் 22 வது நட்சத்திரம்...?
இந்த 22 வது நட்சத்திரத்தை அனைவரும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். க்ஷேம தாரையாக இருந்தாலும், இது “வைநாசிக நட்சத்திரம்” ஆகும். வைநாசிகம் என்றால் முற்றிலும் கெடுதல்(சர்வ நாசம்) என்பதாகும். எனவே தவிர்க்க வேண்டும்.
அடுத்து 6வது நட்சத்திரமான “சாதக தாரை” நட்சத்திர நாட்கள். உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 6வது நட்சத்திர நாள், 15 வது நட்சத்திர நாள், 24வது நட்சத்திர நாள் இந்த மூன்றும் சாதகம் தரக்கூடிய நட்சத்திரங்கள்; சாதகம் வழங்கக்கூடிய நாட்கள். .
இதேபோல மற்ற நட்சத்திரங்களையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
27 நட்சத்திர வரிசை தெரிந்தால்தானே கணக்கிட முடியும் என்பவர்களுக்காக..!
1. அஸ்வினி,
2. பரணி,
3. கார்த்திகை,
4. ரோகிணி,
5. மிருகசீரிடம்,
6. திருவாதிரை,
7. புனர்பூசம்,
8. பூசம்,
9. ஆயில்யம்.
10. மகம்,
11. பூரம்,
12. உத்திரம்,
13. அஸ்தம்,
14. சித்திரை,
15. சுவாதி,
16. விசாகம்,
17. அனுஷம்,
18. கேட்டை,
19. மூலம்,
20. பூராடம்,
21. உத்திராடம்,
22. திருவோணம்,
23. அவிட்டம்,
24. சதயம்,
5. பூரட்டாதி,
26. உத்திரட்டாதி,
27. ரேவதி.
இதை வரிசையாகக் கொள்ளுங்கள். உங்கள் நட்சத்திரத்தை ஒன்று என எண்ணிக் கொள்ளுங்கள். அதில் இருந்து தொடந்து எண்ணிக்கொண்டு வந்தால், ஒவ்வொரு தாரையையும் நீங்கள் மிக எளிதாகப் புரிந்துகொள்வீர்கள்.
அடுத்த பதிவில் இன்னும் பல தகவல்களைப் பார்ப்போம்.
- வளரும்
******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 mins ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago