- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அன்பு காட்டி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மீன ராசி வாசகர்களே.
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரக் காத்திருக்கிறது என்று பார்ப்போம்.
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்த குருபகவான் இப்போது 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வர இருக்கிறார். குருபகவான் உங்கள் ராசிக்கு அதிபதியாவார். ஆனாலும் பத்தில் அமர்ந்து இருந்த போது ஆரோக்கிய பாதிப்புகள், மன உளைச்சல், வேலை மாற்றம், வீடு மாற்றம் போன்ற நீங்கள் விரும்பாத விஷயங்கள் பலவும் நடந்திருக்கும்.
பலவிதமான இடர்பாடுகளும், எதிர்பாராத செலவுகளும் இருந்திருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் முடியும் தருணத்தில் முடிக்க முடியாமல் தள்ளிப் போயிருக்கும். எதிர்பார்த்த பணவரவு உறுதியாகக் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கும்போது கடைசி நேரத்தில் கை விரித்திருப்பார்கள். இப்படி பலவித மன வேதனைகளையும் அனுபவித்து வந்த நீங்கள், இப்போது கண்ணை மூடிக்கொண்டு எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் 100 சதவீத வெற்றியைக் காண இருக்கிறீர்கள்.
எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் நீங்கள் கைவைத்தால் எளிமையாக முடியும். எந்த பொருளாதாரத்திற்காக மிகுந்த சிரமப்பட்டு வந்தீர்களோ, இப்போது அளவற்ற பொருளாதார வளர்ச்சி ஏற்படப் போகிறது. "மைதாஸ் டச்" என்பார்களே அதுபோல தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது.
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் குரு பகவான் இருப்பதும், அங்கேயே சனிபகவான் ஆட்சி பலத்தோடு இருப்பதும், மூன்றாமிடத்தில் ராகு பகவான் இருப்பதும் உங்களுடைய வளர்ச்சியை இனி எவராலும் தடுக்க முடியாது என்பதற்கு மிக முக்கியக் காரணங்கள். குடும்பப் பிரச்சினைகள் பலவாறாக இருந்திருக்கும். இனி குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். காரணமே தெரியாத கருத்து வேறுபாடுகளால் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த பிரிவுகள் இப்போது நீங்கி மீண்டும் ஒன்றுசேர்வார்கள்.
குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தாய் தந்தையரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தாயாரின் உடல் நலம் மிகுந்த கவலை தருவதாக இருந்திருக்கும். இனி முழுமையான ஆரோக்கியத்தைப் பெற்று நலமாக இருப்பார்.
அலுவலகத்தில் ஏன்? எதற்கு? என்று தெரியாமல் பல விதமான இடர்களுக்கு ஆளாகி இருப்பீர்கள். சரியாக செய்த வேலைகளைக் கூட திருப்பி அனுப்பி இருப்பார்கள். இப்படி பலவித இடர்பாடுகளுக்கு இடையே பணிபுரிந்து வந்தாலும், இனி உங்கள் பணிகள் பாராட்டுகளைப் பெறும். அலுவலகத்தில் மிகுந்த மரியாதை கிடைக்கும். எதிர்பாராத இரட்டிப்புப் பதவி உயர்வு கிடைக்கும்.
உங்களின் சக ஊழியர்கள் உங்களுடன் கருத்து வேறுபாடுகளால் சரிவர ஒத்துழைப்பு தராமல் இருந்திருப்பார்கள். இப்போது அவர்களே வலிய வந்து உங்களோடு நட்பைப் புதுப்பித்துக் கொள்வார்கள். அலுவலகப் பணிகள் தொடர்பான பயணங்கள் ஏற்படும், இந்த பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
தொழிலில் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான அத்தனை உதவிகளும் தேடி வரும். முதலீடுகள் நீங்கள் கேட்காமலேயே வந்து குவியும். உற்பத்தியாகும் பொருட்களை உடனுக்குடன் விற்பனையாகும்.தொழிலை மேலும் பல மடங்காக விரிவுபடுத்த முயற்சி செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளிநாடு தொடர்பு உடைய நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் காணலாம். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். சக வியாபாரிகளின் வியாபாரத்தை உங்களோடு இணைத்துக் கொள்வீர்கள். இப்படி பல வகையிலும் உங்களுக்கு வியாபார வளர்ச்சி சிறப்பாகவே இருக்கிறது. இங்கே குறிப்பிட்டுச் சொல்லும்படியான வியாபாரங்களைச் சொல்லவில்லை! எந்த வியாபாரியாக இருந்தாலும், தொழில் செய்பவராக இருந்தாலும் லாபம் மட்டுமே இருக்கும்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த நெருக்கடிகள் விலகி சிறப்பான நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களுடைய மதிப்பு வாய்ந்த எழுத்துக்கு மரியாதை கிடைக்கும்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். நீங்களே எதிர்பாராத சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். மிகப் பெரிய நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கும், கட்டுமானத் தொழில் புரிபவர்களுக்கும் இதுவரை இருந்த..., குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் கடந்த மூன்று வருடங்களாக ஏற்பட்டிருந்த முடக்க நிலை மாறி, தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி முன்னேற்றத்தைத் தருவதாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவுகள் செய்து வந்தவர்களுக்கு, இனி மருத்துவச் செலவு இல்லாமலேயே குழந்தை பிறக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடல்கடந்து சென்று பயிலும் வாய்ப்பு உண்டாகும். உயர் கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும். மிகச் சிறந்த ஆசிரியரின் வழிகாட்டுதல் கிடைக்கும்.
பொதுவாக மீன ராசிக்காரர்கள் எந்த முயற்சி எடுத்தாலும் முழு வெற்றியைக் காணக்கூடியதாக இருக்கும். பெரிய அளவில் உடல்நல பாதிப்புகள் ஏதும் இருக்காது. இளைய சகோதரரிடம் மட்டும் இணக்கமாக இருந்து கொள்ளுங்கள். அவரிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம். சொத்துப் பிரச்சினைகளில் சற்று விட்டுக் கொடுப்பது நல்லது. விட்டுக் கொடுப்பதால் எந்த வகையிலும் நீங்கள் கெட்டுப் போக மாட்டீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் - திருச்செந்தூர் முருகன்.
மீன ராசிக்காரர்கள் முடிந்தவரைக்கும் மாணவ-மாணவியருக்கு கல்விக்கான உதவிகளை செய்து தருவதும் குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள் வாங்கித் தருவதும் நல்ல பலன்களைத் தருவதாக இருக்கும்.
***************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 mins ago
ஜோதிடம்
24 mins ago
ஜோதிடம்
55 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago