‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
சதயம் நட்சத்திரம் பற்றிய தகவல்களைப் பார்த்து வருகிறோம்.
இப்போது சதய நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்கும் தனித்தனியான குணங்களையும் பலன்களையும் பார்ப்போம்.
சதயம் நட்சத்திரம் 1ம் பாதம் :-
சதயம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள், சிறந்த பண்பாளர்கள்.
நுண்ணறிவு மிக்கவர்கள், தன் தேவைகளை எளிதில் அடைபவர்கள். அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றிகளைக் குவிப்பவர்கள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டவாறே முடிப்பவர்கள். உதவிகள் செய்வதில் பாரபட்சம் பார்க்காதவர்கள். குடும்ப ஒற்றுமையில் சிறந்தவர்கள்.
தாய் தந்தையரிடம் அன்பை விட மரியாதையையும் பணிவையும் அதிகம் காட்டுபவர்கள். சகோதர ஒற்றுமை கொண்டவர்கள். உறவுகளிடம் நெருக்கம் கொண்டவர்கள். அழகான... பாந்தமன.. முக அமைப்பைக் கொண்டவர்கள். பருத்த உடல்வாகு இருக்கும். அதிக உயரம் உடையவராகவும் இருப்பர். தொடையில் மச்சமிருக்கும். அது அதிர்ஷ்ட மச்சமாக இருக்கும். (ஆண்களுக்கு இடது தொடையிலும், பெண்களுக்கு வலது தொடையிலும் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்).
அரசு அதிகாரியாக இருப்பார்கள். உயர் பதவிகள், கல்லூரி பேராசிரியர்கள், வங்கி அதிகாரி, நிதி மேலாண்மை, ஆடிட்டர், மனிதவள மேம்பாடு அதிகாரி, செய்தி விளம்பரத் துறை, சுற்றுலாத் துறை, அறநிலையத்துறை, தர்மகர்த்தா, ஆலய நிர்வாகம் போன்ற பணிகளில் இருப்பார்கள்.
சுயதொழிலாக எந்தத் துறையிலும் சாதிப்பார்கள். குறிப்பாக... அரசு ஒப்பந்ததாரர், அதிக உழைப்பில்லாத வருமானம் தரக்கூடிய தொழில்கள், அடகு வியாபாரம், வட்டித்தொழில், சிட்பண்டு, மொத்த வியாபாரம், குத்தகைத் தொழில், பங்குவர்த்தகம், வாடகை வருமானம் தரக்கூடிய திருமண மண்டபங்கள், வணிக மையங்கள், தங்கும் விடுதிகள் போன்றவை நடத்துதல் முதலான தொழில் வாய்ப்புகள் அமையும்.
சுத்தமான சுகாதாரமான உணவில் விருப்பம் கொண்டவர்கள். இனிப்பு உணவுகளில் அலாதி ஆர்வம் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகளாக ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் பிரதானமாக இருக்கும்.
இறைவன் - கற்பக விநாயகர்
விருட்சம் - கடம்ப மரம்
வண்ணம் - அடர் நீலம்
திசை - கிழக்கு
**************************
சதயம் நட்சத்திரம் 2ம் பாதம் :-
சதயம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த தொழில் வல்லுநர்கள். கடமை தவறாதவர்கள்.
துல்லியமாக திட்டமிடுபவர்கள், பிழையில்லாமல் செயல்களைச் செய்பவர்கள், எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றியை மட்டுமே காண்பவர்கள். அயராத உழைப்பாளிகள். செயல்களில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள்.
சுய முயற்சியில் முன்னேறுபவர்கள். இந்த சுய முன்னேற்றத்தினாலேயே கர்வம் அதிகம் கொண்டிருப்பவர்கள். அலட்சிய குணமும் இருக்கும். பெற்றோரை மதிப்பவர்கள். சகோதர ஒற்றுமை பலமாக இருக்கும். உறவுகளிடம் அளவோடு பழகுபவர்கள்.
இவர்களில் பலரும் சுய தொழில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். வேலையில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்கி விடுவார்கள். கூட்டுத்தொழிலாக தொடங்கி, தான் மட்டுமே முதலாளியாக மாறும் ஆக்கிரமிப்பாளர்களும் கூட!
தான் சார்ந்த துறையில் ஒருபடி அல்ல பல படிகள் முன்னேறியவர்களாக இருப்பார்கள். எல்லோரும் ஒரே பாதையில் பயணிக்கும்போது, தனிப்பாதை உருவாக்கி அதில் பயணிப்பார்கள். அந்த புதுப்பாதையில் மற்றவர்களும் பயணிக்கும்போது இவர்கள் நெருங்கவே முடியாத தூரத்தில் இருப்பார்கள்.
எந்தத் தொழிலையும் செய்யத் தயங்காதவர்கள், அப்படி செய்கின்ற தொழிலில் முழு ஈடுபாட்டுடன் செய்பவர்கள். அலட்சியத்தையும் சோம்பலையும் விடுத்தால் தொழில் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்குபவர்கள் இவர்கள்.
கனரக வாகன தொழில், இயந்திரங்கள் தொடர்பான தொழில், சுரங்கத் தொழில், பழைய இரும்பு தொழில் (ஸ்கிராப் டீலர்), பழைய கட்டிடங்களை புதுப்பிக்கும் தொழில், பெட்ரோலிய பொருட்கள் விற்பனை, எண்ணெய் வியாபாரம், மொத்த ஏஜென்ட், சாலை கான்டிராக்ட், பொது மக்கள் பயன்பாடு தொடர்பான போக்குவரத்து வாகனத் தொழில் இதுபோன்ற தொழில், வேலை வாய்ப்புகள் அமையும்.
பசிக்குதான் உணவே தவிர ருசிக்கு அல்ல என்பதுதான் இவர்களின் கொள்கை. எனவே எந்த உணவையும் தயங்காமல் உண்பார்கள். அதீத உழைப்பின் காரணமாக மூட்டு தேய்மானம், எலும்பு பலவீனம், மைக்ரேன் என்னும் ஒற்றை தலைவலி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
இறைவன் - மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர், காட்டுமன்னார்கோயில்.
விருட்சம் - பரம்பை மரம்
வண்ணம் - இளநீலம்
திசை - தெற்கு
******************
சதயம் நட்சத்திரம் 3ம் பாதம் :-
சதயம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகள். ஆனந்த வாழ்வு வாழ்பவர்கள்.
மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றும் அறியாதவர்கள். பெரும் செல்வவளம் மிக்கவர்கள். ஆதாயம் கிடைப்பதாக இருந்தால் எவ்வளவு தூரமானாலும் பயணிப்பவர்கள். லாப நோக்கோடு செயல்படுபவர்கள். ஆதாயம் தரும் ஆதாரத்தை கெட்டியாக பிடித்துக்கொள்பவர்கள். அளவிடமுடியாத அளவுக்கு குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர்கள்.
தான் அனுபவிக்க முடியாததை தன் பிள்ளைகளாவது அனுபவிக்கட்டும் என நினைப்பவர்கள். தாய்தந்தை மீது அளவற்ற பாசம் கொண்டவர்கள். தந்தையின் வழிகாட்டுதலைப் பின்பற்றுபவர்கள். தாயின் செல்லப்பிள்ளையாக வளர்பவர்கள். சகோதர ஒற்றுமை உள்ளவர்கள். உறவுகளிடம் நல்ல நெருக்கம் காட்டுபவர்கள்.
சிற்றின்ப நாட்டம் இவர்களுக்கு அதிகமிருக்கும். பாலியல் வேட்கை அதிகம் கொண்டவர்கள். தகாத உறவு, தவறான உறவு, ரகசிய நட்பு என சபலக்காரர்களாகவும் திகழ்வார்கள். கடுமையான வீழ்ச்சியை சந்தித்தால் அதற்கு இந்த காம ஆசையே காரணமாக இருக்கும். சபலத்தை விடுத்தால்.. பெரும் செல்வந்தராக வாழலாம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அதிக உழைப்பில்லாத தொழிலாக செய்பவர்கள், இடைத்தரகர் தொழிலில் ஜொலிப்பவர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில், பயணம் தொடர்பான தொழில், பண்டமாற்று தொழில், ரியல்எஸ்டேட், கட்டுமானத் தொழில், மொத்த வியாபாரம், வட்டித்தொழில், கவர்ச்சி திட்டங்களுடன் கூடிய வியாபாரம், ஆடைகள் வியாபாரம், ஆடம்பர பொருள் விற்பனை, வாசனை திரவியத் தொழில், ஆபரண வியாபாரம், கவரிங் வியாபாரம், நவரத்தின வியாபாரம், தனியார் வேலைவாயப்பு நிறுவனம், மென்பொருள் தயாரிப்பு, ஏல நிறுவனம், சூப்பர் மார்க்கெட், மீன் ஏற்றுமதி, இறைச்சி கடை, மது விற்பனை, மதுக்கூடங்கள் தொழில், சூதாட்டம், மனமகிழ் மன்றம், போதை பொருட்கள் விற்பனை (சிகரெட், பான் வகை பொருட்கள், உயர்ரக வஸ்துக்கள் விற்பனை) முதலான தொழிலிலோ வேலையோ செய்பவர்கள்.
கட்டிட கலைஞர், வீட்டு அலங்கார நிபுணர், அழகுக்கலை நிபுணர், வர்ம சிகிச்சை நிபுணர், மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், விளையாட்டு பயிற்சியாளர், இதுபோன்ற தொழில் வேலைவாய்ப்புகள் அமையும்.
ஆடம்பர உணவின் மீது பிரியர்கள். உணவுகளை வீணாக்குபவர்கள். கூடி சாப்பிடுவதில் விருப்பம் கொண்டவர்கள்.
பலவித ஒவ்வாமை பிரச்சினைகளைக் கொண்டவர்கள், தோல் நோய், நரம்பு தளர்ச்சி, ஆண்மைக் கோளாறு போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
இறைவன் - ஶ்ரீஅரிசாப பயந்தீர்த்தீஸ்வரர், காஞ்சிபுரம்.
விருட்சம் - சீதா மரம்
வண்ணம் - நீலம்
திசை - மேற்கு
******************
சதயம் நட்சத்திரம் 4ம் பாதம் :-
சதயம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆனந்தமயமான வாழ்வைக் கொண்டவர்கள்.
எதிர்பார்த்த நன்மைகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத நன்மைகளையும் பெறுபவர்கள். ஞானம் மிகுந்தவர்கள். படிப்பறிவை விட பட்டறிவு அதிகம் கொண்டவர்கள். கற்ற கல்விக்கு தொடர்பில்லாத பணிகளில் இருப்பவர்கள். ஆனாலும் நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள்.
வாழ்க்கைத்துணையைத் தவிர மற்ற அனைத்து உறவுகளும் பலமாகக் கொண்டவர்கள். எதிர்பார்த்த வாழ்க்கைத்துணை அமையாது. அல்லது துணையிடம் அடங்கிப் போக வேண்டியது வரும். தாயா? தாராமா? என்ற இக்கட்டில் சிக்கித் தவிப்பவர்கள். தாயன்பை அதிகம் பெற்றவர்கள். தந்தையின் ஆலோசனையை ஏற்பவர்கள். சகோதர ஒற்றுமை பலம் கொண்டவர்கள். உறவுகளிடம் அளவாகப் பழகுபவர்கள்.
எந்தப் பணியில் இருந்தாலும் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். அரசுப் பணி, தனியார் நிறுவனங்களில் உயர்பதவி, பயணங்கள் தொடர்பான பணி, போக்குவரத்து துறை, அயல்நாடுகளில் வேலை செய்தல், பூர்வீகச் சொத்துக்களை விற்று சொந்தத் தொழில் செய்தல், உணவுத் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில், சுற்றுலா தொழில், ஆடம்பரப் பொருள் விற்பனை, வாசனை திரவிய வியாபாரம், கதை கவிதை நகைச்சுவை எழுத்து, திரைத்துறை, நடிப்பு நடனம், ஆன்மிகச் சொற்பொழிவு, ஜோதிடத் திறமை, நூல்களுக்கு உரை எழுதுவது இதுபோன்ற தொழில் வேலை வாய்ப்புகள் அமையும்.
விதவிதமான உணவின் மீது விருப்பம் கொண்டவர்கள். ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு வகையான உணவு உண்பவர்கள். சாப்பிடும்போது யாராவது உடன் இருக்க வேண்டும், பேசிக்கொண்டே சாப்பிட்டால்தான் இவர்களுக்கு திருப்தி.
ஞாபக மறதி, தைராய்டு, சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
இறைவன் - கருங்குளம் உச்சினி மாகாளி அம்மன், திருநெல்வேலி.
விருட்சம் - திலக மரம்
வண்ணம் - ஆகாய நீலம்
திசை - வடக்கு
பொதுவாக சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆலயத் திருப்பணிகளில் பங்கெடுப்பதும், வருமானத்தில் குறிப்பிட்ட லாபத்தை தர்ம காரியங்களுக்குச் செலவிடுவதும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
அடுத்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் பூரட்டாதி நட்சத்திரம்.
செல்வத்திற்கு அதிபதியும், குபேரப் பட்டினத்தின் அரசனுமான குபேரன் பிறந்த நட்சத்திரம்தான் பூரட்டாதி.
இவர் மட்டுமா?
இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றுவதற்குள் புத்தி மாறிவிட்டால் என்ன செய்வதென்று... என்று தடக்கென்று இடது கையில் இருந்த தங்கக் கிண்ணத்தை அந்தக் கணமே தானமாக வழங்கிய கர்ணன் பிறந்ததும் பூரட்டாதியில்தான்!
அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
- வளரும்
************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago