’அவிட்டம் தவிட்டுப்பானையை பொன்னாக்கும்’ உண்மையா? ’அவிட்டத்தில் பிறந்தால் அயலானுக்கு கொடுக்காதே!’  27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் 69; 

By செய்திப்பிரிவு


‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் "அவிட்டம்" எனும் நட்சத்திரம். இது செவ்வாயின் நட்சத்திரங்களில் ஒன்று. இது நட்சத்திர வரிசையில் 23வது நட்சத்திரம். அவிட்ட நட்சத்திரம் மகர ராசியில் இரண்டு பாதங்களும், கும்ப ராசியில் இரண்டு பாதங்களுமாக இருக்கும்.

இது வானில் பார்ப்பதற்கு மிருதங்கம் போல தோற்றமளிக்கக் கூடியது. மிருதங்கம் எப்படி சுப விசேஷங்களிலும், மங்கல காரியங்களிலும் இசைக்கப் பயன்படுகிறதோ அதுபோல சுப விசேஷங்கள் அனைத்தும் செய்ய ஏற்ற நட்சத்திரம்.

"அவிட்டம் தவிட்டுப்பானையும் பொன்னாக்கும்' என்று ஒரு ஜோதிடப் பழமொழி உள்ளது. அதாவது தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பழமொழிக்கு இணையானது இந்த ஜோதிடப் பழமொழி. எனவே அவிட்ட நட்சத்திரக்காரர்கள் எதைத் தொட்டாலும் பொன்னாகும். அதாவது, வெற்றிகரமாக முடியும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.
மேலும் அவிட்டம் நட்சத்திரம் குறித்தும் இன்னொரு முக்கியமான பழமொழி உண்டு.

"அவிட்டத்தில் பெண் பிறந்தால் அயலானுக்கு கொடுக்காதே" என்றொரு முதுமொழியை அறிந்திருக்கிறீர்களா?

அதாவது, அவிட்ட நட்சத்திரத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அந்தப் பெண்ணை வெளி நபருக்குக் கொடுக்காமல் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது அவிட்டத்தில் பெண் பிறந்தால் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்பார்கள். அந்த அதிர்ஷ்டம் தங்கள் குடும்பத்திற்குப் பயன்பட வேண்டும், வேறு குடும்பத்திற்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தப் பழமொழி. அது தற்காலத்திற்கு சாத்தியமில்லை. சொந்தங்களையெல்லாம் விட்டு, தனித்தனி தீவுகளாக விலகியிருக்கிற சூழல் இன்றைக்கு. அவிட்டத்தின் பெருமையை நீங்கள் இதன் மூலமாக உணர்வதற்காக சொல்கிறேன். அவிட்டம் எனும் நட்சத்திரம் அத்தனை மகத்துவம் வாய்ந்த நட்சத்திரம். அதிர்ஷ்டத்தையும், லட்சுமி கடாட்சத்தையும், செல்வ வளத்தையும் அள்ளிக் கொடுக்கக் கூடிய நட்சத்திரம்.

தேவர்களின் தலைவனான இந்திரன், அந்த இந்திரனின் மனைவியான இந்திராணியின் நட்சத்திரம் அவிட்டம்.

அஷ்ட வசுக்கள் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அஷ்ட வசுக்கள் பிறந்தது அவிட்ட நட்சத்திரத்தில்தான். வசு என்றால் வெளி என்று அர்த்தம் ஆகும். அதாவது இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கின்ற பஞ்சபூதங்கள் முதல் சூரிய சந்திரர்கள் வரை அனைத்து இயக்கங்களையும் சரியாக செயல்பட வைக்கின்ற இடத்தில் இருப்பவர்கள் தான் அஷ்ட வசுக்கள். இவர்கள் முறையே, தரா, அனலன், ஆப, அனிலன், துருவன், சோமா, பிரபாசா, பிரத்யூசன் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பணிகள் உள்ளன.

அஷ்ட வசுக்களில் முதலாவதாக இருப்பவர் "தரா" என்னும் வசு. இவர் பூமியையும், "அனலன்" எனும் வசு நெருப்பையும், "ஆப" எனும் வசு நீரையும், அனிலன் எனும் வசு காற்றையும், "துருவன்" எனும் வசு துருவ நட்சத்திரத்தையும் (விடிவெள்ளி), "சோமன்" எனும் வசு சந்திரனையும், "பிரபாசன்" எனும் வசு சூரிய உதயத்தையும் பிரத்யூசன் எனும் வசு உலகம் முழுவதும் சூரிய ஒளியைப் பரவச்செய்வதையும் என தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் "தனிஷ்டாபஞ்சமி" என்பதை ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்பீர்கள். தனிஷ்டாபஞ்சமி என்பது ஒருவர் குறிப்பிட்ட ஒரு சில நட்சத்திரங்களில் இறக்க நேரிட்டால் வீட்டை அல்லது அவர் வாழ்ந்த அறையை அடைக்கவேண்டும். இதை அடைப்பு நாள் என்று சொல்வார்கள். இந்த அடைப்பு நாளுக்கான தெய்வம் தனிஷ்டாபஞ்சமி என்று சாஸ்திரம் சொல்கிறது. தனிஷ்டாபஞ்சமி பிறந்தது அவிட்ட நட்சத்திரத்தில்தான்.
இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது இறப்புடன் தொடர்பு பெறக்கூடிய நட்சத்திரமா என்ற சங்கடம் நேரிடலாம். உண்மையில் இப்படி இறப்புகள் ஏற்படும் போது அதிலிருந்து விலக்கி நம்மை பாதுகாக்கக் கூடிய வேலையை அவிட்ட நட்சத்திரமானது செய்கிறது, அதாவது இந்த அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த தனிஷ்டாபஞ்சமி எனும் தெய்வம் நம்மைக் காக்கிறது.

இந்த நட்சத்திரம் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் இருக்கின்றது என்பதைப் பார்த்தோம். இந்த மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் ஜோதிட அடிப்படை விதிகளின்படி மகர ராசி 10-ம் இடத்தையும் கும்ப ராசி 11-ம் இடத்தையும் குறிக்கும். பத்தாமிடம் தொழிலையும் பதினோராம் இடம் லாபத்தையும் குறிக்கக்கூடியது. இயல்பாகவே இந்த நட்சத்திரம் தொழிலிலும், தொழில் தொடர்பாக கிடைக்கக்கூடிய லாபத்தையும், தன்னுடைய நட்சத்திர பாதங்கள் மூலம் தொடர்பை வைத்து இருப்பதால் இது முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே தரக்கூடிய அதிர்ஷ்ட நட்சத்திரம். எனவே அவிட்டத்தில் பிறந்தவர்கள் தைரியமாக சொந்தத் தொழில் தொடங்குவதில் எந்தத் தடையும் இருக்காது. முழுக்க முழுக்க தன் திறமைகளை வெளிப்படுத்தி தொழிலில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக, சாதித்துக் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பது நிச்சயம்.

அவிட்ட நட்சத்திரம் குறித்த மேலும் சில விஷயங்களைப் பார்ப்போம்.

நெல் களஞ்சியம், தங்க நகைகள் போன்றவற்றை வைத்திருக்கக்கூடிய லாக்கர் மற்றும் அறைகள், வங்கிப் பாதுகாப்பு பெட்டகம், லாட்டரிச் சீட்டு போன்ற அதிர்ஷ்டப் பரிசுகள், இசைக்கருவிகள், மிருதங்கம், மத்தளம், துந்துபி எனும் இசைக்கருவி இவை அனைத்தும் அவிட்டத்தின் அடையாளமே.

நாதஸ்வரம், தவில், வயலின், வீணை, தாரை தப்பட்டை, மணியோசை, கதாகாலட்சேபம், பிரசங்கம், தொலைபேசி சாதனங்கள், செல்போன், காது, காதில் அணியக் கூடிய கம்மல், வளையல், வளையம் போன்று இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களும், உறவுகளில் மூத்த சகோதரர்,வெகு சிலருக்கு அமையக் கூடிய இரண்டாவது மனைவியையும் இந்த அவிட்ட நட்சத்திரத்தையே குறிக்கும்.

மேலும் அவிட்டத்தின் வடிவம் மிருதங்கம் என்று பார்த்தோம். ஒருவகையில் இது உரல் போன்று தோற்றமளிப்பதால் மாவு அரைக்கக் கூடிய அனைத்து விஷயங்களும் அதாவது, கிரைண்டர், மாவு மில், நூல் மில், ரைஸ் மில், பவர் லூம் தறி, பின்னலாடை தயாரித்தல், கயிறு திரித்தல், புதிதாக தொடங்குகின்ற அனைத்து முயற்சிகளும் அவிட்டத்தின் அடையாளங்களே!

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சராசரி உயரம் உடையவர்கள். முகம் பொலிவாகவும், தேஜஸாகவும் இருக்கும். ஒரு தொழிலை எப்படி தொடங்குவது, எப்படி நடத்துவது, போன்ற தெளிவான திட்டமிடல் இருக்கும். எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும் அதில் லாபம் எத்தனை சதவீதம் என்பதில் இவர்கள் குறியாக இருப்பார்கள். லாபம் இல்லாத தொழில் எதையுமே செய்ய மாட்டார்கள். ஒரு சிறிய காரியமாக இருந்தாலும் அதில் ஆதாயம் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வார்கள். அரசியல் மற்றும் அரசாங்கம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டுபவர்கள். அவிட்டத்தில் பிறந்தவர்களிடம் எந்த வேலையையும் நம்பி ஒப்படைக்கலாம். மிகச் சரியாக தெளிவாக செய்து முடிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

பலமான குடும்பப் பின்னணியும், குடும்ப உறவுகளையும் கொண்டவர்களாக அவிட்டம் நட்சத்திரக்கார்களாக இருப்பார்கள். தாய்-தந்தை இருவரிடமும் அன்பையும் அவர்களுடைய ஆசீர்வாதத்தையும் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக தந்தையின் வழிகாட்டுதல் இவர்களுக்கு பக்கபலமாக இருக்கும். ஒரு சிலருக்கு தாயின் வழிகாட்டுதலும், தாயாராலேயே முன்னேற்றத்தைக் காண்பவர்களாகவும் இருப்பார்கள். ஒரு சிலர் தாய்மாமனின் உதவியும் தாய்மாமனாலேயே கல்வி மற்றும் தொழில் உத்தியோகம் முதலான வாய்ப்புகளையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இதுபோல, உறவுகள் பலம், நண்பர்கள் பலம் என அனைத்தும் அமைந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் கணக்கு பார்க்கும் குணம் இவர்களிடம் இருக்கும். இந்த கணக்கு பார்க்கும் குணம் ஒரு சிலருக்கு குறையாக தெரிந்தாலும் இவர்களுடைய பார்வையில் அது சரியான செயல்பாடு தான் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இன்னும் பல தகவல்கள் இந்த அவிட்ட நட்சத்திரக்காரர்களைப் பற்றி இருக்கிறது.

அதை அடுத்த பதிவில் இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

- வளரும்
************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்