பணம்... பணம்... பணம்; வாழ்க்கைத் துணைக்கு கட்டுப்படும் குணம்!  27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 65

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.

உத்திராடம் நட்சத்திரம் பற்றிய தகவல்களைப் பார்த்து வருகிறோம். இந்தப் பதிவில் உத்திராடம் நட்சத்திரம் 4 பாதங்களுக்கும் உண்டான குணநலன்களை, கேரக்டர்களைப் பார்ப்போம்.

உத்திராடம் 1ம் பாதம் :-

உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானின் முழு அருளை பரிபூரணமாகப் பெற்றவர்கள். துன்பம், கஷ்டம், தோல்வி இது போன்ற வார்த்தைகளை தன் அகராதியில் காணாதவர்கள்.

“எங்கும் வெற்றி எதிலும் வெற்றி” என்பதே இவர்களின் அடையாளம். தாரக மந்திரம். இனிமை, மகிழ்ச்சி, நிறைவு... இதுபோன்ற வார்த்தைகளை வாழ்நாள் முழுதும் கொண்டிருப்பவர்கள். சிறு பிசகும் இல்லாத தூசுமில்லாத தூய ஆடைகள், மங்கலகரமான தோற்றம், எதிரிகளும் மதிக்கும் முகப்பொலிவு, தேஜஸ், நன்னடத்தை, பொய்புரட்டு இல்லாத பேச்சு, வாக்குத் தவறாமை, சொன்ன சொல்லில் உறுதியாக இருப்பது, வாக்குக் கொடுத்துவிட்டால் தலையை வைத்தாவது நிறைவேற்றுகிற குணம், வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியாத அளவிற்கு தர்ம சிந்தனை என்றிருப்பவர்கள்.

கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், கொடுக்க முடியவில்லையே என்று வருந்துகிறவர்கள். வேதனைப்படுகிறவர்கள். தர்ம சிந்தனை உடையவர்கள். ஒருபோதும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதர்ம வழியில் செல்லாதவர்கள்!

நிறைவான குடும்பம், அளவான அறிவான குழந்தைகள். அதிகம் படித்த அறிவாளியான வாழ்க்கைத்துணை, இவர்களின் ஆதரவைப் பெற்ற சகோதரர்கள், தந்தையின் கவனமான, கனிவான வளர்ப்பையும் அன்பையும் பெற்றவர்கள். தாயாரின் கண்டிப்பு அதிகமிருக்கும்.

அறிவான வாழ்க்கைத்துணை என்று சொன்னேன் அல்லவா. ஒரு கட்டத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாகி அவர்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தமும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும்.

உத்தியோகத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள். அரசு பணியில் இருப்பவர்கள், நிர்வாகத் துறையிலும், அதிகாரத்தைப் பயன்படுத்தும் பதவியிலுமாக இருப்பார்கள். வங்கி அதிகாரி, ஆசிரியர் பணி, நீதிபதி, அரசியல் பதவி, நியமனப் பதவி, கௌரவத் தலைவர், மனிதவள மேம்பாட்டு அதிகாரி, நிதி நிறுவனம், தங்கம் தொடர்பு உடைய தொழில், மரத்தொழில், ரத்தின வியாபாரம், பழமையான பொருட்கள் விற்பனை மற்றும் சேகரித்தல், நாணயங்கள் சேர்ப்பது, ஆலயங்களில் பிரசாதக் கடை, பக்தி தொடர்பான பொருள் விற்பனை, பக்திப் பிரசங்கம், கோயில் சீரமைப்புப் பணி, கும்பாபிஷேகப் பணிகள், மருத்துவர், இலவச மருத்துவ சேவை, அயல்நாட்டு தூதரகப் பணி முதலான தொழில் அல்லது வேலை வாய்ப்புகள் அமையும்.

அளவான, ஆரோக்கியமான உணவின் மீது விருப்பம் இருக்கும். உணர்ச்சிப் பிழம்பாக இருப்பதால் ரத்தக்கொதிப்பு, உடல்சூடு, கொப்புளங்கள், அம்மை நோய் போன்ற பாதிப்புகள் இருக்கும். சிறுவயதிலேயே மூக்குக் கண்ணாடி அணிய வேண்டியது வரும்.

இறைவன் - அண்ணாமலையார்- திருவண்ணாமலை

விருட்சம் - பலா மரம்

வண்ணம் - ஆரஞ்சு

திசை - கிழக்கு
*********************************


உத்திராடம் 2ம் பாதம் :-

உத்திராடம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள், தன் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள்.

என்ன செய்தாவது உயரத்தை அடைபவர்கள். ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டால் முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். விடாப்பிடியும், வறட்டு கௌரவமும் அதிகம் இருக்கும். வெற்றியை எட்டிப்பிடிக்கும் இலக்கில், எவர் குறுக்கே வந்தாலும் ஏறி மிதித்துச் சென்று வெற்றியைத் தொடுபவர்கள்.

அதீத சுறுசுறுப்பு, செயல்களில் வேகம், ஓய்வில்லாத உழைப்பு, சதா சம்பாத்திய சிந்தனை என இருப்பார்கள். உடை சுத்தம் இருக்கும். ஆனால் நேர்த்தி இருக்காது. சுயமாக முடிவெடுத்து செயல்படுபவர்கள். மரியாதைக்குக் கூட அடுத்தவர் பேச்சை நின்று கூட கேட்க விரும்பாதவர்கள். காரணம்? அவர்களின் பேச்சு, எங்கே தன்னுடைய முயற்சிக்கு தடையாகிவிடுமோ என்கிற அச்சமும் சந்தேகமும்தான் காரணம்.

உத்திராடம் 2ம் பாதக்காரர்கள், தாயன்பு அதிகம் பெற்றவர்கள். தந்தையின் கண்டிப்பால் ஒழுக்கமாக வளர்பவர்கள். தந்தையின் கண்டிப்பு காரணமாகவே அவரிடம் நெருங்க மாட்டார்கள். சகோதரப் பாசம் அதிகமிருந்தாலும் அவர்களிடமும் எச்சரிக்கையாக இருப்பவர்கள். உறவுகளிடம் நெருக்கம் காட்டினாலும் ஒருவித அலட்சியம் இருக்கும். சதா நச்சரிக்கும் வாழ்க்கைத்துணையே இவர்களுக்கு அமையும். திருமணத்திற்குப் பிறகே வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதிலும் குழந்தை பிறந்த பிறகுதான் வீட்டில் செல்வம் சேரும். சகோதரர்களைவிட சகோதரிகளிடம் பாசம் அதிகமிருக்கும்.

சிறந்த தொழிலதிபராக ஜொலிப்பவர்கள். இன்ன துறைதான் என்றில்லாமல் எதையும் செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள். செய்கின்ற தொழிலில் அசல் இவ்வளவு, செலவு இவ்வளவு, லாபம் இவ்வளவு எனத் திட்டமிட்டு செயல்படுபவர்கள். இதில் ஏதேனும் குறை ஏற்பட்டால் அப்படியே அதை நிறுத்தி, எங்கே ஓட்டை என கவனித்து அதை சரிசெய்த பின்னரே தொழிலைத் தொடர்வார்கள். கட்டுப்படுத்த முடியாத சிந்தனை ஓட்டம் உள்ளவர்கள். சிந்தனை ஓட்டம் என்றால் ஏதோ கதை கவிதை என எண்ணாதீர்கள்! பணம் பணம் பணம் என்னும் சிந்தனை ஓட்டம்தான் ஓடிக்கொண்டே இருக்கும்.

விவசாயத் தொழில், வாகனத் தொழில், கனரக வாகனத் தொழில், இயந்திரங்கள் உற்பத்தி தொழில், சுரங்கம் தொடர்பான தொழில், பெட்ரோலியத் தொழில், எண்ணெய் வியாபாரம், கரி, விறகு, மூங்கில் விற்பனை, பெயிண்ட் வியாபாரம், அசைவ உணவகம், கால்நடை வளர்ப்பு, தோல் தயாரிப்புகள், பஸ் - வேன் தொழில். குழுவாக இணைந்து பணியாற்றுதல், கால அட்டவணை இல்லாமல் மணிக்கணக்காக உழைக்கும் பணிகள் (பத்திரிகை, ஊடகம், காவல்துறை, ராணுவம், சினிமா) இரவு நேர பணிகள் (ஐடி,பெட்ரோல் பங்க், செக்யூரிட்டி) ரீ சைக்ளிங் எனும் மீள் சுழற்சி தொழில் (பழைய இரும்பு வியாபாரம் போன்றது) சாலைப் பணிகள், காடு வளர்ப்பு, அரசு தொடர்பான கான்ட்ராக்ட், போட்டோ லேப், படக்கடை, பிரிண்டிங் தொழில் இதுபோன்ற தொழில், வேலை வாய்ப்புகள் அமையும்.

உணவில் விருப்பம் என்று பெரிதாக ஏதும் இருக்காது. வயிறு நிறைந்தால் போதும் என்ற மனப்பான்மைதான் இருக்கும்.

முதுகெலும்பு தேய்மானம், மூட்டு வலி, மூல நோய் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - குறுங்காலீஸ்வரர்- கோயம்பேடு சென்னை.

விருட்சம் - கடுக்காய் மரம்

வண்ணம் - நீலம்

திசை - தென்கிழக்கு
************************

உத்திராடம் 3ம் பாதம் :-

உத்திராடம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் கௌரவமானவர்கள்.

தன்மான உணர்வு அதிகம் பார்ப்பவர்கள். எந்த ஒரு செயலிலும் ஒழுங்கு, நேர்த்தி இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். எந்த ஒரு காரியத்திலும் லாபம் அதிகமிருக்கும் படியாக பார்த்துக்கொள்பவர்கள். உழைக்கத் தயங்காதவர்கள்.

எந்த வேலையிலும் முழுமூச்சாக இறங்கி வேலை பார்ப்பவர்கள். குடும்ப ஒற்றுமை அதிகமிருக்கும். தாய்தந்தையிடம் அதிக பாசம் பெற்றவர்கள், வாழ்க்கைத்துணையிடம் அடங்கிப் போவார்கள்.குழந்தைகளின் மேல் அளவு கடந்த அன்பைப் பொழிபவர்கள். சகோதரர்களைவிட சகோதரிகளிடம் பாசம் அதிகம் இருக்கும். தந்தையின் வழிகாட்டுதல்படி வாழ்பவர்கள்.

இவர்கள், கூட்டாக தொழில் செய்பவர்கள், அந்தக் கூட்டுத் தொழிலில் தன்னை முதன்மை படுத்திக்கொள்பவர்கள். தர மதிப்பு எனும் பிராண்ட் வேல்யூ தனக்கு வரும்வரை கடுமையாக உழைப்பவர்கள்.

தனக்கான பிராண்ட் வேல்யூ வந்தவுடன் உட்கார்ந்தபடியே சம்பாதிப்பவர்கள். அரசின் மிக உயரிய பதவிகள், தலைமைப் பதவி, அரசு கான்ட்ராக்ட், அரசுக்காக கொள்முதல் செய்யும் தொழில், உச்சபட்ச தொகை கொண்ட வியாபார தரகர், வாங்கி விற்கும் தொழில், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, நவரத்தின விற்பனை, ஆயத்த ஆடை தயாரித்தல், ஏற்றுமதி இறக்குமதி தொழில், ஆலயப் பணிகள், ஆலய நிர்வாகம், கௌவரவப் பதவிகள், வழக்கறிஞர், நீதிபதி, பயணம் தொடர்பான தொழில், நிதி நிர்வாகம், வட்டித்தொழில், பண்டமாற்று, பண மாற்று தொழில். கமிஷன் தொழில், கால்நடை வளர்ப்பு, மாமிச விற்பனை, தோல் பொருட்கள் தொழில், மேடை அலங்காரம், பேச்சைத் தொழிலாகக் கொள்ளுதல், மக்கள் தொடர்பு அதிகாரி, சினிமாத் தொழில், தணிக்கைத் துறை, வருமான வரித்துறை, சுங்கத் துறை, வணிகவரி துறை, திரை அரங்கம், திருமண மண்டபம், அயல்நாடுகளில் ஆட்களை பணியமர்த்துதல், தூதரகப் பணி இதுபோன்ற தொழில், வேலை வாய்ப்புகள் அமையும்.

பலவகையான உணவுகளில் விருப்பம் இருக்கும். நெய் உணவு, தயிர் உணவு போன்ற உணவுகளில் விருப்பம் அதிகமிருக்கும்.

முழங்கால் மூட்டுவலிகள், இதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - தான்தோன்றீஸ்வரர்- சேலம் அருகே பேளூர் என்னும் ஊர்

விருட்சம் - சாரப்பருப்பு மரம்

வண்ணம் - நீலம்

திசை - மேற்கு
***********************

உத்திராடம் 4ம் பாதம் :-

உத்திராடம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், இளகிய மனம் படைத்தவர்கள்.

தர்மவான்கள், பரோபகாரிகள், ஒளி படைத்த கண்ணும், பிரகாச முகமும் கொண்டவர்கள். படிப்பாளிகள், அளவான நகைச்சுவை கலந்து கருத்தாகப் பேசுபவர்கள். ஞான மார்க்கம் அறிந்தவர்கள். அடுத்தவர் வளர்ச்சியில் பங்கெடுப்பவர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். கேட்ட உதவியை தட்டாமல் செய்து கொடுப்பவர்கள். உடை நேர்த்தி மட்டுமின்றி உள்ளமும் நேர்த்தியானவர்கள்.

குடும்பப் பற்று கொண்டவர்கள். தந்தையிடம் பணிவும், தாயிடம் அதீத உரிமையும் கொண்டவர்கள். சகோதர சகோதரிகளிடம் பேரன்பு கொண்டவர்கள். வாழ்க்கைத்துணையாக வருபவரை தனது அன்பினால் கட்டுப்படுத்துபவர்கள்.

செலவு செய்யத் தயங்காதவர்கள். ஒரு பொருளை வாங்கும்போதே தேவையில்லாமல் இரண்டாக வாங்குபவர்கள். பணத்தைச் செலவு செய்வதைப் பற்றி கவலையேபடமாட்டார்கள். செய்த செலவுக்கு மனநிறைவு வந்தாலே போதும் என நினைப்பவர்கள். குழந்தைகளுக்காக எதையும் செய்து தருவார்கள். அவர்களுக்கு விருப்பமானதைச் செய்து தருவதில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

திருமண வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் மனம் வெறுத்து போகும்படியாக சம்பவங்களை சந்திப்பார்கள். நிதானமாக இருந்தால் சேர்ந்து வாழ்வார்கள். நிதானம் தவறினால் பிரிவைச் சந்திக்க வேண்டியது வரும்.

தொழிலாக பல தரப்பட்ட தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவார்கள். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபம், சேவை மையங்கள், இலவச மருத்துவச் சேவைகள், பணம் புழங்கும் தொழில், மனமகிழ் விடுதிகள், தங்கும் விடுதிகள், திருமணத் தகவல் சேவைகள், பயணம் தொடர்பான தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில், அயல்நாடு நிறுவனங்களோடு இணைந்த தொழில், ஆடை ஆபரணத் தொழில். ஆசிரியர், வங்கிப் பணி, அரசின் சிறப்புத் தூதர், அரசின் நியமனப் பதவிகள், கலை இலக்கிய ஆர்வம், திரைத்துறை, மருத்துவர், மருந்தகம், கடல்சார் தொழில், கப்பல் பணி, மது விடுதி, பாரம்பரியக் கலை ஆர்வம், கலை தொடர்பான ஆசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் இதுபோன்ற தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் அமையும்.

ஆடம்பர உணவு விருப்பம் உள்ளவர்கள். ஆரோக்கியத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள். சர்க்கரை நோய், அதீத போகத்தால் தாம்பத்திய நாட்டக்குறைவுப் பிரச்சினைகள், தாம்பத்திய ஏமாற்றம், பாதங்களில் பித்த வெடிப்பு, குதிகால் தடிமன் அதன் காரணமாக வலி இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - சதுரங்க வல்லபநாதர் - திருபூவனூர், நீடாமங்கலம் அருகில்.

விருட்சம் - தாழை

வண்ணம் - இளம் மஞ்சள்

திசை - வடக்கு

உத்திராடத்தில் பிறந்தவர்கள் விநாயகர் வழிபாட்டைத் தவறாமல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வழிபடுவது சிறப்பைத் தரும். கோயில் யானைகளுக்கு உணவு அளிப்பது அளவிட முடியாத நன்மைகளை வாரி வழங்கும்.

அடுத்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம்...

கலியுகக் கடவுள், திருமலை திருப்பதி வெங்கடசே பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரம்.

திருவோணம்... சந்திரனுக்கான நட்சத்திரம். சந்திரனுக்கும் திருப்பதி திருமலைக்கும் என்ன சம்பந்தம்?
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படுகிறதே..! ஏன்?

இவற்றையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்ப்போம்.

- வளரும்
*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்