தர்ம கர்மாதியோகம்; 28வது அபிஜித் நட்சத்திரம்; பெருமை வாய்ந்த பிள்ளையார்! - 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 63

By செய்திப்பிரிவு

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 63 ;


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் உத்திராடம். நம் வாழ்வின் ஒவ்வொரு செயல்களின் துவக்கத்திற்கு காரணமான நட்சத்திரமே உத்திராடம் தான்.

உத்திராடம் நட்சத்திரம் தனது முதல் பாதத்தை தனுசு ராசியிலும், மற்ற மூன்று பாதங்களை மகர ராசியிலும் கொண்டிருக்கும். இது சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று. நட்சத்திர வரிசையில் 21வது நட்சத்திரம் இது.

உத்திராடம் நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு முறம் போல இருக்கும். முறமானது எப்படி தானியத்தை தனியாகவும், தூசிகளை தனியாகவும் புடைப்பதால் பிரிக்கிறதோ அதுபோல தவறுகளை, தீமைகளை நீக்கி நல்லவற்றை மட்டும் தன்னகத்தே வைத்து கொள்ளும் குணம் வாய்ந்தது.

முறம் போன்ற காதுகள் கொண்ட உயிரினம் யானை மட்டுமே! யானைக்கு மட்டுமே அபார ஞாபக சக்தி, மற்றும் பூமியில் கால்களை வைத்தே பல கிமீ தூரத்தில் என்ன நடக்கிறது என்று அறியும் சக்தியும் கொண்டது என்பதை அறிவீர்கள்தானே. மேலும் குடும்ப ஒற்றுமை, குட்டிகளை வளர்க்கும் பாங்கு, தவறு செய்யும் சக யானைகளை நாசூக்காக தண்டிக்கும் குணம் என அற்புதமான குணாதிசயங்களைக் கொண்டது யானை. அதேசமயம் மதம் (கோபம்) பிடித்து விட்டால் யார்? எவர்? என்றெல்லாம் பார்க்காமல் துவம்சம் செய்யவும் தயங்காது. இதையும் நாம் தெரிந்துவைத்திருக்கிறோம்.

இப்போது நீங்களே யூகிக்கலாம்! இந்த குணங்களைக் கொண்ட தெய்வம் யார் என்று!
ஆமாம்... நம்முடைய விக்கினங்களை நீக்கும் விநாயக பெருமானே தான். விநாயகர் அவதரித்த நட்சத்திரம் உத்திராடம் தான்.

எல்லா தெய்வங்களிடமும் தெய்வ வழிபாட்டிலும் ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்தே ஆகவேண்டும். ஆனால் விநாயகரோ எளிமையியின் மறு உருவம். பிரமாண்ட ஆலயங்களிலும் குடியிருப்பார். மரத்தடியிலும் இருப்பார். அவ்வளவு ஏன்... களிமண்ணில் பிடித்து வைத்தாலும் வந்துவிடுவார். வீட்டில் மஞ்சளால் பிடித்து வைத்தாலும் வந்து ஆசிர்வதிப்பார். அவ்வளவு எளிமையானவர் விநாயகர்.

அதேபோலத்தான் இந்த உத்திராட நட்சத்திரக்காரர்களும்!

ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் சமமாகப் பழகுவார்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்வதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே. தான் என்னாவாக வேண்டும் என்பதில் சுயமாக முடிவு செய்பவர்கள் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள்.

எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் எதற்காகவும் பின் வாங்காதவர்கள். தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் சிற்பிகள் என்றுதான் உத்திராட நட்சத்திரக்காரர்களைச் சொல்லவேண்டும். யாருடைய உதவியையும் எதிர்பார்க்காதவர்கள். தனக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருந்து வெற்றியை மட்டுமே ருசிப்பவர்கள்.

குடும்ப அமைப்பில் சிறந்தவர்கள், உறவுகள் அனைவரையும் அரவணைத்து செல்பவர்கள். தோற்றுப்போன உறவுகளை கைகொடுத்து தூக்கிவிடுபவர்கள். சகோதர சகோதரிகளிடம் அதீத பாசம் கொண்டவர்கள். பூர்வீக சொத்துக்களை பாதுகாப்பவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர், சொந்தத் தொழில் செய்வதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். காரணம் என்ன?
ஜோதிடத்தில் மகர ராசிதான் தொழில் ஸ்தானம். அந்த மகர ராசியின் தொடக்கமாக இருக்கும் நட்சத்திரம் உத்திராடம். ஆக ஒருவருக்கு தொழில் செய்வதில் ஆசையும் ஆர்வமும் இருக்கலாம். ஆனால் உத்திராடம் நட்சத்திரத் தொடர்பு இருந்தால் மட்டுமே தொழில் தொடங்க முடியும். அதுமட்டுமல்ல... இன்னொரு ஆச்சரியமான தகவலும் உண்டு!

அது... தர்ம கர்மாதிபதி யோகம்! ஒருவரின் ஜாதகத்தில் 9ம் இடமான தர்ம ஸ்தானமும்,10ம் இடமான கர்ம ஸ்தானமும் தொடர்பு பெற்றால் அது தர்மகர்மாதிபதி யோகம். இந்த யோகம் உடையவர்கள் ஆலயங்கள் கட்டும் பாக்கியம் பெற்றவர்கள். அல்லது ஆலய கும்பாபிஷேகங்களை ஏற்று நடத்தும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

உத்திராடம் நட்சத்திரம் இயல்பாகவே ஒன்பதாவது ராசியான தனுசு மற்றும் பத்தாவது ராசியான மகரத்தில் இருப்பதால் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்ம கர்மாதிபதி யோகத்துடன் பிறந்தவர்கள். இவர்கள் ஆலயங்கள் கட்டுகிறார்களோ இல்லையோ, கும்பாபிஷேகம் செய்கிறார்களோ இல்லையோ அந்தப் புண்ணியத்தை இயல்பாகவே கிடைக்கப்பெற்றவர்கள். ஆகவே, எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் தோல்விகளைச் சந்திக்கவே மாட்டார்கள். இன்னும் சொல்லவேண்டும் என்றால்... இறைவனின் அருளை முழுமையாக பெற்றவர்களாக இருப்பார்கள்.

மேலே சொன்ன எல்லாவற்றையும் விட மிக அற்புதமான இன்னொரு விஷயமும் உண்டு.

நம்மில் பலருக்கும் தெரிந்ததுதான் இது. மொத்தமுள்ளவை 27 நட்சத்திரங்கள் மட்டுமே. ஆனால் 28வதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அதன் பெயர் அபிஜித் நட்சத்திரம். இது நடைமுறையில் இல்லை. ஆனால் சூட்சும வடிவில் இருக்கிறது. இந்த அபிஜித் நட்சத்திரம் இருக்கும் இடம் இந்த உத்திராடம் நட்சத்திரத்தில்தான்!
ஆமாம்... உத்திராடம் 3,4 பாதங்களில் இந்த அபிஜித் நட்சத்திரம் இருக்கிறது. இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் தோல்வி என்பதையே சந்திக்க மாட்டார்கள். விரும்பியதை விரும்பியபடியே கிடைக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

உத்திராடம் நட்சத்திரம் அடையாளப்படுத்தும் வேறு வடிவங்கள் என்ன என்பதையும் பார்ப்போம்.

எந்த ஒரு செயலையும் துவக்கிவைக்கும் பிள்ளையார் சுழி, முறம், வீட்டின் தலைவாசல், தலை உச்சியில் இருக்கும் சுழி, யானை, அரசமரம், ஊஞ்சல் பலகை என இவை அனைத்தும் உத்திராடத்தின் அடையாளங்கள். குறியீடுகள்.

மகாபாரத பாத்திரங்களில் முக்கியமான கதாபாத்திரமான சல்லியன் பிறந்தது உத்திராட நட்சத்திரத்தில்தான். இவர்தான் யுத்தத்தில் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்தவர். இவர் கர்ணனை மன ரீதியாக வலுவிழக்கச்செய்து தந்திரமாகச் செயல்பட்டு கர்ணனின் மரணத்துக்குக் காரணமானார். இந்தக் கதை மூலமாக நாம் அறிய வேண்டியது என்னவென்றால்.. எதிரியை நேரிடையாக தாக்கி தோற்கடிப்பதை விட மன ரீதியாக பலவீனப்படுத்தி செயல்பட விடாமல் தடுப்பதே சரியான ராஜதந்திரம். இந்த தந்திரம் அறிந்தவர்களே இந்த உத்திராடம் நட்சத்திரக்காரர்கள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த உத்திராட நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் நாள். அறுவடை எனும் செழிப்பு, வளமை, மகிழ்ச்சி போன்றவற்றின் அடையாளமாகவும் இருப்பது உத்திராடம்.

இன்னும் உத்திராடத்தின் மகிமைகள் எவ்வளவோ இருக்கு. அவை அடுத்த பதிவில்!

- வளரும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்