தீராக்காதல், விடாமுயற்சி, நம்பிக்கை துரோகம், ஜெயித்துக்காட்டுதல், அலட்சிய குணம்! 

By செய்திப்பிரிவு

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 55 ;


- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
கேட்டை நட்சத்திரம் பற்றிய தகவல்களை பார்த்து வருகிறோம். கேட்டை நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான பலன்களையும் குணாதிசயங்களையும் இப்போது பார்ப்போம்.
கேட்டை நட்சத்திரம் 1ம் பாதம் :-

கேட்டை 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் நல்ல மனம் கொண்டவர்கள். இரக்க குணம் அதிகம் இருக்கும். பொருளைத் தேடி ஓடாமல், பொருள் தன்னைத்தேடி வரும்படியாக வாழ்பவர்கள். உதவ வேண்டும் என முடிவெடுத்தால் பையில் உள்ள பணம் முழுவதையும் தர்மம் செய்யும் குணம் கொண்டவர்கள்.

ஆலயப் பணிகளில் முன்வந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்கள். தந்தையின் பாசவலையில் இருப்பவர்கள். பூர்வீகச் சொத்துகளில் ஆதாயம் அடைபவர்கள். சகோதரப் பாசம் அதிகம் கொண்டவர்கள். ஆனால் சகோதரர்களால் ஏமாற்றம் அடைபவர்கள். பிள்ளைப் பாசம் அளவு கடந்து இருக்கும். பிள்ளைகளுக்காக எதையும் செய்து தருபவர்களாகவும், கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பவர்களாகவும் இருப்பார்கள். மனைவியிடம் தீராக் காதல் உடையவர்கள். கணவரிடம் தன் தேவைகளை சாதுர்யமாக சாதிப்பவர்கள்.

ஆசிரியர், வங்கிப்பணி, நூலகர், இன்சூரன்ஸ் பணி, வட்டித்தொழில், சிட்பண்ட், தவணைத் திட்டம், வணிகம், ஆலயப் பணிகள், சேவை சார்ந்த தொழில், விவசாயம், பழ வியாபாரம், டுடோரியல் சென்டர், மொழி பெயர்ப்பாளர், மொழி பயிற்றுநர், தூதரகப் பணி, பாரம்பரிய நிறுவனத் தொழில், நெசவுத் தொழில், ஆயத்த ஆடை தயாரிப்பு, கட்டில் மெத்தை வியாபாரம் போன்ற தொழில் வேலை வாய்ப்புகள் அமையும்.

ஆரோக்கியத்தில் பாதிப்பு என பார்த்தோமேயானால் அடிவயிற்றில் வலி, ஒற்றைத்தலைவலி, போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - பிரம்மா (திருப்பட்டூர்)

விருட்சம் - பிராய் மரம்

வண்ணம் - இளம் மஞ்சள்

திசை - கிழக்கு
**********************************


கேட்டை நட்சத்திரம் 2ம் பாதம் -

கேட்டை 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் விடாமுயற்சிக்காரர்கள். எளிதில் சோர்ந்து போகாதவர்கள். பெரும் சிக்கனக்காரர்கள். எதையும் பணமாக்கும் வித்தை அறிந்தவர்கள். தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். ஒருவர் தொழிலில் ஜெயிக்க வேண்டும் என்றால் இவர்களிடம் தான் பாடம் கற்கவேண்டும். தொழிலில் வெற்றி பெற யாரை வேண்டுமானாலும் எவரை வேண்டுமானாலும் ஏறி மிதித்து செல்லலாம் என்பது இவர்களின் குறிக்கோள்.

எவர் ஒருவர் தொழிலில் இரக்கம் பார்க்கிறாரோ அவரால் நிச்சயமாக தொழிலில் வெற்றி பெற முடியாது என்பதுதானே உண்மை. இன்று தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் தொழிலதிபர்கள் எவரானாலும் இந்த வழிமுறையில்தான் முன்னேறியிருப்பார்கள். இந்தத் தொழில் தர்மம் இந்த கேட்டை 2ம் பாதக்காரர்களால் தான் வடிவமைக்கப்பட்டது.

குடும்பப் பாசம் இருக்கும். ஆனால் அது ஒரு அளவுக்குத்தான். தன் வாரிசுகளை வருங்கால தொழிலதிபர்களாகத்தான் வளர்ப்பார்கள். கடன் வாங்கியே தன்னை வளர்த்துக்கொள்வார்கள். வாங்கிய கடனை சிறு பிசகு இல்லாமல் நியாயமாக திருப்பியும் செலுத்துவார்கள். சகோதரர்கள் மேல் அதிக நம்பிக்கை வைப்பார்கள். அளவான நண்பர்களைக் கொண்டிருப்பார்கள்.

வானுயர கட்டிடத் தொழில் முதல் சுரங்கத்தொழில் வரை எதையும் செய்வார்கள். குறிப்பாக இரும்புத்தொழில், பெட்ரோலியத் தொழில், கட்டுமான நிறுவனம், கட்டுமானப் பொருள் விற்பனை, ரியல்எஸ்டேட், கமிஷன் ஏஜென்ட், மொத்த வியாபாரம், கனரக வாகனங்கள், விவசாய இயந்திரங்கள், மக்கள் பயன்பாடு வாகனங்கள், மோட்டார் வாகனப் பழுது பார்த்தல், டயர் விற்பனை போன்ற தொழில்களும், தற்காப்பு கலை, ஆயுத பயிற்சி, வெடிமருந்து விற்பனை மற்றும் கையாளுதல், போர்வெல் சர்வீஸ், காடு வளர்ப்பு, மரக்கடை போன்ற தொழில், காவல்துறை, ராணுவம், பாதுகாப்பு பணி, ஒற்றன், துப்பறிதல், சாகச முயற்சிகள், மேஜிக் வித்தை, பண இரட்டிப்பு போன்ற எளிதாக சம்பாதிக்கும் தொழில், மின்சாரப் பணி, நெருப்பு தொடர்பான பணி, கால்நடை வளர்ப்பு, இறைச்சி கடை போன்ற வேலை வாய்ப்புகள் அமையும்.

ஆரோக்கிய பிரச்சினைகளாக எலும்பு தொடர்பான பிரச்சினைகள், மூட்டுவலிகள், எலும்பு முறிவு, பல் நோய்கள், நகச்சுத்தி, குடல்வால் பிரச்சினைகள் போன்றவை இருக்கும்.

இறைவன் - ஶ்ரீஹயக்ரீவர்

விருட்சம் - பூவரச மரம்

வண்ணம் - நீலம், பச்சை

திசை - தெற்கு
*******************

கேட்டை நட்சத்திரம் 3ம் பாதம் -

கேட்டை 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் சுயகௌரவம், சுய மரியாதை, எந்த நிலையிலும் மற்றவர்கள் முன் தலை குனியாத கெளரவம் உடையவர்கள்.
குடும்ப பாசம் அதிகமிருக்கும், குழந்தைகளை அன்போடு மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளோடும் வளர்ப்பவர்கள். சகோதர பாசம் இருந்தாலும் இவர்களின் நடவடிக்கைகளால் சகோதரர்கள் விலகியே இருப்பார்கள். பூர்வீகச் சொத்துகள் மூலம் ஆதாயம் அடைபவர்கள். பூர்வீகச் சொத்துக்களை விற்று நகரப் பகுதிகளில் முதலீடு செய்பவர்கள். எதிலும் லாப நோக்கமே இருக்கும். தன் கல்வித் திறமை, அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல், தனக்கு தெரியாத விஷயமே இல்லை என்கிற அசாத்திய நம்பிக்கை உடையவர்கள்.

இந்த அறிவு ஆற்றலே இவர்களுக்கு மெகா தலைக்கனத்தையும் தரும். அலட்சியம் மேலோங்கும். பெரியவர் சிறியவர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அலட்சிய அகங்கார பேச்சு, உடல்மொழி கொண்டிருப்பவர்கள். தனக்கு மரியாதை, முக்கியத்துவம் தர வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். கிடைக்கவில்லை என்றால் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடுவார்கள். இவர்களின் குணமறிந்து பழகினால் நட்பு நன்றாக நீடிக்கும். ஆனால் வாழ்க்கைத்துணையின் பாடுதான் படு திண்டாட்டம்! எந்த மன நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து அதன்படி செயல்படுவதிலேயே பாதி வாழ்க்கை போய்விடும். புரிந்து கொண்டால் வாழ்க்கை எளிதாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

இவர்களில் பெரும்பாலோனோர் அதிகாரமிக்க பதவிகளில் இருப்பார்கள். அல்லது அதிகாரமிக்க பதவி தன்னை தேடிவருவது போல் செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் தன் திறமை முழுவதும் காட்டி உயர் பதவிகளை எளிதில் பெறுவார்கள். தன் திறமைக்கு அங்கீகாரம் இல்லாவிட்டால் சிறிதும் யோசிக்காமல் வேறு நிறுவனங்களுக்கு மாறிவிடுவார்கள்.

சிறிய அளவில் தொழில் தொடங்கி குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் வளர்வார்கள். அப்படி வளர்ந்த நிறுவனத்தை பெரும் லாபத்தோடு விற்கவும் தயங்க மாட்டார்கள். மீண்டும் புதிய தொழில் தொடங்கி வெற்றி நடை போடுவார்கள். இன்ன தொழில்தான் என்றில்லாமல் எந்தத் தொழிலையும் செய்வார்கள். நோக்கம் லாபம் மட்டுமே என்றிருப்பார்கள்.

அடகுக்கடை, இறைச்சிக் கடை, அசைவ உணவு விடுதி, மதுவிடுதி, உயர்ரக மதுபான விற்பனை, வெளிநாட்டு ஆடம்பரப் பொருள் விற்பனை, சட்டவிரோத தொழில், போலி பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை, பண இரட்டிப்புத் தொழில் போன்றவை செய்பவர்கள்.

அதேசமயம் ஜாதக கிரகங்கள் சாதகமாக இருந்தால், ஆலயப் பணிகள், மங்கலப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, ஆசிரியர் பணி, பேராசிரியர், கல்வி தொடர்பான புத்தகங்கள் எழுதுதல், கல்வி தொடர்பான அத்தனை விஷயங்கள், அரசியல் ஆலோசகர், பத்திரிகையாளர், மருத்துவர், வழக்கறிஞர், காவல்துறை, துப்பறியும் பணி, தூதரகப் பணி, விமானத்துறை பணி போன்ற வேலைகளிலும் இருப்பார்கள்.

இவர்களுக்கு முழங்கால் மூட்டு பிரச்சினைகளும், தீராத தலைவலி, தோல் நோய்கள், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - சுவேதாரண்யேஸ்வரர், திருவெண்காடு

விருட்சம் - அரச மரம்

வண்ணம் - இளநீலம், இளம் பச்சை

திசை - வடமேற்கு
*********************

கேட்டை நட்சத்திரம் 4ம் பாதம் -

கேட்டை நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள்...!
ஒரு திரைப்படத்தில் வசனம் ஒன்று வரும்... “அடி வாங்கிறதுக்கென்றே அளவெடுத்து வச்சவன் போல இருக்கிறான்” என்ற வசனம் நமக்கு நினைவில் இருக்கும். அதேபோல இவர்கள் ஏமாறுவதெற்கென்றே பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள். அதற்காக வாழ்க்கையில் ஏமாறுபவர்கள் என்று அர்த்தம் அல்ல. வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை தொடுபவர்கள்.

அனைத்து சுகபோகங்களையும் ஆழ்ந்து அனுபவிப்பவர்கள். ஏமாறுவதென்றால் எப்படி? யாரை ஆழமாக நேசிக்கறார்களோ அவர்களால் ஏமாற்றப்படுவார்கள். எவரால் ஏமாறுகிறாரோ அவரை வென்று அவர்கள் முகத்தில் கரி பூசுவார்கள். எனவே இந்த கேட்டை நான்காம் பாதக்காரர்களை சாதாரணமாக எடை போட வேண்டாம்.

குடும்ப நலனில் மிக அதிக அக்கறை காட்டுபவர்கள். குழந்தைகளை நல்வழியில் வளர்ப்பவர்கள். வாழ்க்கைத்துணையிடம் தன்னை முழுவதும் ஒப்படைப்பவர்கள். சகோதரர்களால் மன வேதனை அனுபவித்தாலும் அதை வெளிக்காட்டாத மனம் படைத்தவர்கள்.

உயர்பதவிகளிலும், அரசின் பதவிகளிலும் இருப்பார்கள். கலை ஆர்வம் மிகுதியாக இருக்கும். கைவினைத் தொழில், கலை நயம் மிக்க பொருட்கள் தயாரித்தல், மருத்துவர், மருந்தாளுநர், சித்த மருத்துவம், ஆன்மிக பரப்புரை, ஜோதிட ஆர்வம், கல்வியாளர், மருத்துவமனை கல்வி நிலையம் நடத்துதல், தகவல் தொழில்நுட்பத்தில் புதுமையான விஷயங்கள் கண்டுபிடித்தல், தன்னம்பிக்கை எழுத்தாளர், பயண ஆர்வம், பயணக் கட்டுரை, ஆலயங்களின் சிறப்புகளை விவரித்தல், கடல் கடந்து தொழில் மற்றும் வேலை செய்தல். ஏற்றுமதி இறக்குமதி தொழில், உயிர் காக்கும் மருந்து ஆய்வு மற்றும் உற்பத்தி, வாகனங்கள் தொழில், திரைப்பட நடிப்பு மற்றும் இயக்குநர், நகைச்சுவை எழுத்தாளர், துணுக்கு எழுத்தாளர் போன்ற பணிகள் இருக்கும்.

உடல்நலத்தில் நரம்பு தொடர்பான பிரச்சினைகள், தோல் ஒவ்வாமை, தீராத சளித்தொல்லை, பித்த வெடிப்பு, கால்ஆணி, குதிகால் தடிமன் பிரச்சிகள் போன்றவை இருக்கும்.

இறைவன் - காசி விஸ்வநாதர்

விருட்சம் - வேம்பு மரம்

வண்ணம் - இளம் பச்சை

திசை - வடக்கு
*******************


அடுத்த பதிவில் மூலம் நட்சத்திரக்காரர்கள் கேரக்டர்களைப் பார்ப்போம். அனைத்திற்கும் மூலமாக இருக்கும், இந்த உலக இயக்கத்திற்கே காரணமாக இருக்கக்கூடிய மூலம் என்னும் மகா உன்னதமான நட்சத்திரத்தைப் பற்றி பார்ப்போம்.

மூலம் எவற்றையெல்லாம் நிர்மூலமாக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.

மூலம் நட்சத்திரம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை பொடிப்பொடியாக்குவோம்!

- வளரும்

****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்