27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 53 ;
‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் கேட்டை நட்சத்திரம்.
முன்னதாக, என் ஆத்மகுரு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு இன்று ஜூலை 5ம் தேதி பிறந்தநாள். அவரை நமஸ்கரித்து எழுதத் தொடங்குகிறேன்.
கேட்டை நட்சத்திரம். இது, நட்சத்திர வரிசையில் 18வது நட்சத்திரம். இது புதனின் நட்சத்திரங்களில் ஒன்று. விருச்சிக ராசியில் இருக்கும் நட்சத்திரம்.
இந்த கேட்டை நட்சத்திரம் வானில் ஒன்பது நட்சத்திரங்களின் கூட்டமைப்பாகும். அச்சுஅசலாக ஈட்டி போன்றே தோற்றமளிக்கும். சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். இந்த ஒன்பது நட்சத்திரங்களும் சூரிய சக்திக்கு இணையானது. இதனாலேயே கேட்டை நட்சத்திரக்காரர்கள், ஆயுள் தீர்க்கம் பெற்றவர்களாவர். அதாவது தீர்க்கமான ஆயுள், நீண்ட ஆயுள் கொண்டிருப்பார்கள். ஒன்பது விதமான கண்டங்கள் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வருவார்கள். அவ்வளவு எளிதில் மரணம் இவர்களை நெருங்காது என்பதே உண்மை.
சரி, கேட்டை கோட்டை ஆளும் என்றொரு வாசகம் உண்டு. கேட்டை கோட்டை ஆளுமா?
நிச்சயமாக ஆளும். எப்படி? தனக்கென தனி சாம்ராஜ்ஜியம் அமைத்து, அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து, அரசாட்சி செய்வார்கள் கேட்டை நட்சத்திரக்காரர்கள்.
“நீங்க சொல்ற மாதிரி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேங்க” என்று கேட்டை நட்சத்திரக்காரர்கள் சிலர் கேட்கலாம்! இந்தக் கட்டுரையின் கடைசியில் உங்களுக்கு பதில் இருக்கிறது.
கேட்டை நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள் என்னென்ன? எவ்விதம்?
இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். அதேசமயம் கொஞ்சம் கடுமையானவர்களும் கூட! இலக்கை குறித்து வைத்துக்கொண்டு பயணிப்பவர்கள். இடையில் எந்தத் தடை வந்தாலும் அதை தகர்த்தெறிந்து ஈட்டி போல செயல்படுபவர்கள். தன் முயற்சியில் யார் குறுக்கே வந்தாலும் தயவு தாட்சண்யமே காட்டாதவர்கள். ஏறி மிதித்து முன்னேறிச் சென்றுகொண்டே இருப்பார்கள். இவர்கள் இலக்கு வெற்றி மட்டுமே!
அதற்காக கேட்டை நட்சத்திரக்காரர்கள், இரக்கமே இல்லாதவர்கள் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். தர்மம் செய்வதில் தர்மரையும் மிஞ்சுபவர்கள். ஆமாம்... யாராவது, ஏதாவது கேட்டால், யோசிக்கவே யோசிக்காமல் கையில் இருப்பதை அப்படியே அள்ளித்தருபவர்கள். பாண்டவர்களில் தர்மர் பிறந்தது இந்த கேட்டை நட்சத்திரத்தில் தான்.
கேட்டை நட்சத்திரக்காரர்கள், மெத்தப் படித்த புத்திசாலிகள். அறிவாளிகள். அந்த அறிவாளித் தனத்தால் தனக்கென புதுப்பாதை போட்டு அதில் பயணிப்பவர்கள். இவர்களின் போட்டியாளர்கள் புறப்பட்ட இடத்திலேயே இருக்கம்போது அவர்களைவிட பலநூறு அடிகள் முன்னேறியிருப்பவர்கள். இலக்கை குறித்து வைத்து அதை அடைவதில் அதிதீவிரமாக செயல்படுபவர்கள். அதில் வெற்றிகளையும் தோல்விகளையும் மாறிமாறி சந்திப்பார்கள். ஏற்கெனவே சொன்னதுபோல் தோல்விகளால் சிறு பாதிப்பும் அடையாமல் அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவார்கள்.
குடும்பத்தின் மேல் அளவுகடந்த பற்று வைத்திருப்பவர்கள் கேட்டை நட்சத்திரக்காரர்கள். பற்று என்றால் கண்மூடித்தனமான பற்று கொண்டவர்கள். கேட்டை நட்சத்திரப் பெண்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம்... தன் குடும்பம் என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூட மாட்டார்கள். சேணம் கட்டிய குதிரை மாதிரிதான் இருப்பார்கள். தன் பிள்ளைகளின் மேல் அளவு கடந்த பாசம் வைப்பவர்கள். இப்படி அதிக பாசம் காட்டி முறையாக, சரியாக பிள்ளைகளை வளர்க்கவும் மாட்டார்கள். இவர்களின் பிள்ளைகள் பிடிவாத குணத்தில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள்.
இவர்களில் அதிகம்பேர் தாய்மாமன் உதவியால் படிப்பு முதல் வேலை வரை பெற்றிருப்பார்கள். சகோதரப் பாசம் இருந்தாலும் தனக்கு மிஞ்சிதான் மற்றவர்களுக்கு என்ற குணமும் இருக்கும். தாயின் அன்பு இருந்தாலும், தந்தையின் பிம்பமாக இருப்பவர்கள். தந்தையை ரோல் மாடலாகக் கொண்டே வாழ்பவர்கள்.
எதிர்காலத்தை முன் கூட்டியே அறிபவர்கள் கேட்டை நட்சத்திரக்காரர்கள். எந்தச் சிக்கலையும் தீர்த்து வைக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். தான் படித்த படிப்புக்கும் செய்கின்ற வேலைக்கும் தொடர்பே இருக்காது. ஆனாலும் எந்தத் துறையாக இருந்தாலும் சாதிக்கத் தவறவும் மாட்டார்கள்.
விருத்திகாசுரன் எனும் அசுரன் மழையைக் கவர்ந்து மறைத்து வைத்தான். இந்திரன் போரிட்டு மழையை மீட்டான். அதுமுதல் மழைக்கு அதிபதியானான் இந்திரன். அவன் போர்புரிந்து மழையை மீட்டது கேட்டை நட்சத்திர நாளில்தான் என்கிறது புராணம். எனவே இந்திரனின் குணாதிசயங்கள் கேட்டைக்கு இருக்கும். (மேலும் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் நாம் அதிகப்படியான புயல் மழை பெறுவதற்கும் இந்த கேட்டையே காரணம்).
இந்திரனின் சபலம் நாம் அறிந்ததே! எளிதில் காதல் வயப்படுவது, காம உணர்வுகள் கட்டுக்கடங்காமல் இருப்பது, பாலியல் வேட்கை, அடங்காத ஆர்வம், இதன் தொடர்பாக ஏற்படும் பாலியல் நோய்கள் கேட்டையின் அடையாளங்கள்.
எதிரிகளை தானே தேடிக்கொள்வது, அந்த எதிரிகளையும் அநாயசமாக வீழ்த்துவது இவர்களின் பொழுதுபோக்கு. ஆனால் தொடர்ச்சியாக எதிரிகள் வந்து கொண்டே இருப்பார்கள்... கேட்டையிடம் தோற்பதற்க்கென்றே..!
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு ஜோதிட நம்பிக்கையும் இருக்கும். பில்லிசூனியம், மாந்திரீகம் என்கிற நம்பிக்கையும் இருக்கும். வாழ்வில் நடக்கும் சிறிய பாதிப்புக்குக் கூட தனக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டதாக நம்புவார்கள். விபத்தும் விபத்தால் ஏற்படும் அங்கஹீனமும் கேட்டை நட்சத்திரத்தைக் குறிக்கிறது. மேலிருந்து கீழே விழுதல், எலும்பு முறிவுகள் போன்றவையும் கேட்டை நட்சத்திர குணத்தையே தெரிவிக்கிறது. இவர்களில் அதிகம் பேருக்கு தண்ணீரில் தான் கண்டம். எனவே நீர்நிலைகளில் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
போதை பழக்கம் என்பது கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு அறவே கூடாது. பழகிவிட்டால் இறுதிவரை மீளவே முடியாது. வீண் கற்பனை கூடாது. பிரமாண்டமான கனவுகளைக் காண்பதில் எந்தப் பலனுமில்லை. சம்பந்தமே இல்லாமல் திடீரென தற்கொலை எண்ணங்கள் தோன்றும். ஒருசிலர் சாடிஸ்டாக, குரூர குணம் கொண்டவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. விபரீதக் கற்பனைகள் தோன்றும். பயணத்தின் போது விபத்து நடந்தால் என்னாகும் என்பது போன்ற எதிர்மறை சிந்தனைகள் அடிக்கடி தோன்றும்.
இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொள்பவர்கள் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
சரி... “கேட்டை கோட்டை ஆளுமா” என்ற கேள்விக்கு பதில்...
தொழிலில் சாதித்து சாம்ராஜ்ஜியத்தைப் படைக்கும் வல்லமை கொண்டவர்கள். அல்லது கற்பனையிலாவது வாழ்வார்கள்.
மனம் சார்ந்த பிரச்சினைகள் மட்டும் வராமல் பார்த்துக்கொண்டால் இமயத்தின் உயரத்தை கேட்டை நட்சத்திரக்காரர்கள், அடைந்தே தீர்வார்கள். எனவே கேட்டையில் பிறந்தவர்கள் மன உறுதி, நம்பிக்கை, தைரியம் ஆகியவற்றைக் கொண்டிருந்தால் வெற்றி உங்கள் பக்கம் என்பதில் மாற்றமே இல்லை.
இந்தக் கட்டுரையில், கேட்டை நட்சத்திரக்காரர்களின் நிறைகளையும் குறைகளையும் பார்த்தோம்.
ஏன் இப்படி இருக்கிறது? வளர்ச்சியும் தளர்ச்சியும் ஏன் மாறிமாறி வருகிறது?
இதற்கு விடை ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் இந்த சந்திரன் தான் காரணம். சொல்லப்போனால், சந்திரன் மட்டுமின்றி ராகு கேதுவும் கூட காரணம்!
சந்திரனின் வளர்பிறை தேய்பிறையும், ராகு கேது என்னும் பாம்பின் வாய் மற்றும் வால் பகுதியும், செவ்வாயின் நெருப்பை கேட்டை எனும் நீர் அணைப்பதாலும் ஏற்படும் விளைவுகளே, இதுவரை சொன்ன அத்தனை விஷயங்களுக்கும் காரணங்கள்.
கேட்டை நட்சத்திரம் குறித்து இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
- வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago