சார்வரி ஆண்டு; மகர ராசிக்காரர்களே! சாதனையின் உச்சம், வேலையில் முக்கியத்துவம், வியாபார வளர்ச்சி, இனி நஷ்டமில்லை! - 12 மாதங்களுக்கான ஏ டூ இஸட் பலன்கள்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

எந்தத் துறையில் இருந்தாலும் சாதனையின் உச்சத்தைத் தொடக்கூடிய மகர ராசிக்காரர்களே!
இந்த புத்தாண்டு உங்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் உண்டாகும் என்பதை பார்க்கலாம்.

கட்டுக்கடங்காத செலவுகளால் தவித்து வந்த நீங்கள் இனி செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை அதிகமாக்குவீர்கள். எடுத்துக் கொண்ட எந்த முயற்சிகளிலும் சிறிதும் பின்னடைவு இல்லாமல் முழுமையான சாதனைகளை செய்யப் போகிறீர்கள்.
வீண் செலவுகளாக நடந்து கொண்டிருந்த உங்களுக்கு இனி சுபச்செலவுகள் ஏற்படும். குறிப்பாக வீடு கட்டுதல், திருமணம் செய்தல், இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் நடத்துதல் போன்றவை ஏற்படும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
பொருளாதார சிக்கலினால் வாழ்க்கை துணையிடமும், உறவினர்களிடமும், தாய் தந்தையுடனும் அதிகப்படியான பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். தாய் தந்தை உங்கள் சூழ்நிலையை அறிந்து அவர்களாகவே உங்களுக்கு உதவுவார்கள். சகோதரர்களிடம் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வந்து சமாதானமாகும்.
ஆரோக்கியத்தில் இருந்த கடுமையான பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக விலகும். மருத்துவச் செலவுகள் குறையும். அறுவை சிகிச்சை வரை சென்ற பிரச்சினைகள் இனி அறுவைசிகிச்சை இல்லாமலேயே மருந்து மாத்திரைகளால் குணமாகும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இனி தாமதமில்லாமல் முடிவாகும்.
உத்தியோகத்தில் கடுமையான நெருக்கடிகளும் பணிச்சுமையும் ஏற்பட்டிருக்கும். இதன் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆட்பட்டு இருப்பீர்கள். இனி பணிச் சுமைகள் குறையும். வேலையில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். அலுவலகத்தில் உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகளைத் தந்து கொண்டிருந்தவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள்.

உங்களின் மதிப்பு உயரதிகாரிகளுக்கு இப்போது தெரியவரும். எனவே அலுவலகத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். இடமாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இப்பொழுது விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அது பதவி உயர்வுடன் கூடியதாக இருக்கும்.
தொழிலில் அதிகப்படியான முடக்கத்தை சந்தித்து மன விரக்தியில் இருந்திருப்பீர்கள். இனி தொழில் படிப்படியாக வளர்ச்சி பெறும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்து அதில் முனைப்புடன் செயல்பட்டு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புடைய தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் கடுமையான நெருக்கடிகளால் வியாபாரத்தை கைவிட்டு இருந்தவர்கள் இப்பொழுது மீண்டும் வியாபாரத்தை செய்யத் தொடங்குவார்கள். அதற்குத் தேவையான உதவிகளும் முதலீடுகள் கிடைக்கும். குறிப்பாக மொத்த வியாபாரிகள், கமிஷன் ஏஜென்ட் தொழில் செய்பவர்கள், மற்றும் ஸ்டேஷனரி போன்ற வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி காண்பார்கள். வியாபாரத்திற்காக வாங்கிய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஒரு சில சலுகைகளும் கிடைக்கும்.
பங்கு வர்த்தகத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து இழப்புகளை சந்தித்து வந்த நீங்கள் இனி படிப்படியாக நஷ்டத்தில் இருந்து மீள்வீர்கள். கட்டுமானத் தொழில் ரியல் எஸ்டேட் தொழில் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு கடுமையான நெருக்கடிகளும் அதிகப்படியான நஷ்டங்களையும் சந்தித்து இருப்பீர்கள். இனி படிப்படியாக வியாபாரம் சூடுபிடிக்கும்.
நஷ்டங்கள் சரியாகும். லாபம் அதிகரிக்கும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு கடுமையான நெருக்கடிகள், வழக்குகள் போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள். இனி அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இப்போது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் தீரும். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். திருமணமாகாத பெண்களுக்கு இப்போது திருமணம் உறுதியாகும். அதுவும் ஜூன் மாதத்திற்குள் திருமண முயற்சிகள் முடிவாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை கல்வியில் இருந்த தடைகள், அழுத்தங்கள் இனி இருக்காது. குறிப்பாக ஞாபக சக்தி குறைந்து தேர்வுகளில் எழுதும்போது கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும். இப்போது ஞாபக சக்தி அதிகரிக்கும். தேர்வுகளில் மிக எளிதான வெற்றியைப் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு செப்டம்பர் மாதம் வரை பொறுமையாக இருந்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதுவரை நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரப் பிரச்சினைகள் பெருமளவில் தீரும். ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் இருந்தாலும் பெரிய அளவிலான செலவுகள் ஏற்படாது. ஆனால் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். குளிரூட்டப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடுங்கள், அதேபோல இனிப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சித்திரை மாதம்-
குடும்பத்தில் தந்தையுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். தந்தையின் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். மன வருத்தங்கள் அகலும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்கவில்லையே என்ற கவலை இருந்திருக்கும். இப்போது பிள்ளைகள் தங்கள் தவறுகளை உணர்ந்து உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். அரசின் உதவிகளும், அரசு சலுகைகளும் கிடைக்கும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு அரசு வழியில் உதவிகள் கிடைத்து தொழில் வளர்ச்சியை நோக்கிச் செல்லும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தித் துறை சார்ந்த தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கு குறிப்பாக தோல் பொருட்கள் உற்பத்தி, துணி வகைகள் போன்ற தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். சொந்தவீடு இருப்பவர்களுக்கு ஒரு சில பிரச்சினைகள் இருந்திருக்கும், குறிப்பாக அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்டிருந்த சண்டை சச்சரவுகள் வழக்குகள் அனைத்தும் சுமுகமாகத் தீரும். குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியது மிக அவசியம். அதேபோல மாமன் வகை உறவுகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.

வைகாசி மாதம்-
அரசியலில் இருப்பவர்களுக்கு அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பணியில் சிறந்த நிர்வாகத்திற்காக அரசின் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் விசேஷங்கள் நடக்கும். மூத்த மகனுக்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் புதிய முயற்சியில் இறங்குவார்கள். அதற்குத் தேவையான உதவிகளை பெற்றோர்கள் செய்து தருவார்கள். பெண்களுக்கு தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். சகோதரர்கள் வலிய வந்து உதவுவார்கள். பொருளாதார பிரச்சினைகள் இல்லாத நிலை ஏற்படும்.

ஆனி மாதம்-
தொழில் மற்றும் வியாபாரத்திற்காக வங்கிக் கடன் கிடைக்கும். வீட்டுக் கடன் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். ஒரு சில கடன்கள் வட்டியில் சலுகைகள் பெற்று கடனை அடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்தில் வரவேண்டிய குத்தகை பணம் இப்பொழுது கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களை மேலும் விரிவுபடுத்தவும் வளமாகவும் அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். போக்குவரத்து தொடர்பான தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது தேவையான உதவிகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு உண்டாகும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும். அரசு ஒப்பந்ததாரர்களாக இருந்தால், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு வேறு நிறுவனத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் புதிய சாதனைகளைப் படைப்பார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை பறிபோகுமோ என்ற பதட்டத்தில் இருந்தவர்களுக்கு பணி உறுதியாகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து தொலை தூரத்தில் இருப்பவர்கள் இப்போது குடும்பத்தோடு சேர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர்களை விட்டுப் பிரிந்து தாத்தா பாட்டி வீட்டில் கல்விக்காக இருந்தவர்கள் மீண்டும் பெற்றோருடன் இணைவார்கள். அதேபோல வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தாயகம் திரும்புவார்கள்.

ஆடி மாதம்-
வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வழக்குகள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். அது உங்களுக்கு ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தும். அரசியலில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பாக பதவி கிடைக்கும். தொழிலில் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும் .அரசு வழி உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். வருமான வரித் துறை சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களுக்கு வியாபார வளர்ச்சி எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கும். கட்டுமான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான வியாபாரங்கள் ஆகும், லாபம் இருமடங்காக இருக்கும். வணிக நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்தவும், கிளைகளை ஆரம்பிக்கவும் வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் வேலை இழந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். ஒருசிலருக்கு நண்பர்களால் மிகப்பெரிய உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். உங்கள் மீது வழக்கு போட்டவர்கள் அவதூறுகளை செய்தவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிற்க வைக்கப்படுவார்கள், அவர்களுக்கு சரியான தண்டனை பெற்றுத் தருவீர்கள். பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைப்பது மட்டுமல்லாமல் பாராட்டுகளையும் பெருமளவிற்கு பெறுவார்கள். பத்திரிகைத் துறை மற்றும் ஊடகத் தொழிலில் இருப்பவர்களுக்கு தொலைதூரப் பயணங்கள் ஏற்படும். முக்கியமான நபர்களை சந்தித்து பேட்டி எடுக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பரபரப்பான சம்பவங்களை வெளியிட்டு புகழின் உச்சத்தை அடைவீர்கள்.


ஆவணி மாதம்-
கடந்த மாதம் போலவே இந்த மாதமும் இருக்கும் என்று எண்ணாதீர்கள். இந்த மாதம் ஒரு சில பிரச்சினைகள் தேடிவரும். எனவே எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனமும், பொறுமையும் இருக்க வேண்டும். அலுவலகத்தில் செய்கின்ற வேலைகளில் அதிக கவனமும் அக்கறையும் காட்டவேண்டும். அலட்சியமாக எந்த விஷயத்தையும் கையாள வேண்டாம். அது உங்களுக்கு எதிராக மாறும். தொழிலில் அதிக கவனம் சிரத்தை எடுக்க வேண்டும். சிறிய அலட்சியம் கூட பெரிய அளவிலான பாதிப்புகளைத் தந்துவிடும். வியாபாரத்தில் வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பல வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். ஆடம்பர விஷயங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டாம். பெண்கள் தங்களுடைய வேலைகளை மட்டும் செய்து வாருங்கள் அடுத்தவர் விஷயங்களில் கருத்து கூறுவதோ ஆலோசனை தருவதோ கூடாது. சேமிப்புகள் குறையும். அனாவசிய செலவுகள் ஏற்படும். மருத்துவச் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கவனமும் எச்சரிக்கை உணர்வும் மிக அதிகம் வேண்டும்.

புரட்டாசி மாதம்-
கடந்த மாதம் ஏற்பட்ட சில பிரச்சினைகள் இந்த மாதம் முடிவுக்கு வரும். ஒருசில தவறான முடிவுகளை எடுத்து பிரச்சினைகளில் இருந்த நீங்கள் அந்த பிரச்சினைகள் அனைத்தையும் இப்போது முடிவுக்கு கொண்டு வருவீர்கள். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் சமாதானமாகும். உங்கள் தவறுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்பதால் பிரச்சினைகள் அத்தோடு முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த சில குழப்பமான பிரச்சினைகளுக்கு நீங்களே முன்னின்று தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் மிக எளிதாக அமையும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு மதிப்பு மரியாதை அரசு கவுரவம் போன்றவை கிடைக்கும். மாணவர்களுக்கு புதிய பயிற்சி வகுப்புகளில் சேர்வது, புதிய மொழிகளை கற்றுக் கொள்வது போன்றவை ஏற்படும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

ஐப்பசி மாதம்-
வேலையில் இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக மிகப் பெரிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கப்பெறுவீர்கள். அரசு பதவி அல்லது அரசியல் பதவியில் இருப்பவர்களுக்கு பதவி மாற்றம் ஏற்படும். அது அதிகாரம் உள்ள பதவியாக இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். குறிப்பாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு இப்பொழுது இயற்கையாகவே குழந்தை உருவாகும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். தொழிலில் ஒரு சில மாற்றங்கள் செய்வீர்கள், வியாபார நிறுவனத்தின் ஒரு சில மாற்றங்களைச் செய்து வியாபார வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள். உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரத்திற்க்கு மனைவிவழியில் ஆதரவு கிடைக்கும். மனைவியால் பெரிய உதவிகள் கிடைக்கப்பெற்று தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு மிகப் பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கக்கூடிய ஒப்பந்தங்கள் ஏற்படும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு தாங்கள் ஏற்கனவே கட்டி முடித்த கட்டுமானங்களை விற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், அதிலும் குறிப்பாக ஒட்டு மொத்தமாக விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டில் இருந்து நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்யும் வாய்ப்பும் அதிகம் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவார்கள்.


கார்த்திகை மாதம்-
மிகப்பெரிய லாபங்களும் யோகங்களும் கிடைக்கும். சேமிப்பு உயரும். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். கட்டுமானத் தொழில் மிகப்பெரிய உச்சத்தை நோக்கிச் செல்லும். பங்கு வர்த்தகத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். உணவு தொடர்பான தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது புதிய கிளைகளை ஆரம்பிப்பது, புதிய உணவுகளைத் தயாரிப்பது போன்றவை நடக்கும். சிறு கடைகள் நடத்திக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது பெரிய வணிக நிறுவனமாக மாற்றுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும், புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றும் வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். ஆனாலும் பெரிய அளவிலான அச்சுறுத்தல் இருக்காது. ஒரு சிலருக்கு அடிவயிற்றில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் தேவைப்படும்.

மார்கழி மாதம்-
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற ஒரு பிரச்சினை ஏற்படும். அந்தப் பிரச்சினையை மிக எளிதாக சமாளித்து விடுவீர்கள். அரசு உயர் அதிகாரிகளுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒரு சில மாற்றங்களைச் செய்து வளர்ச்சியை நோக்கிச் செல்வீர்கள். கட்டுமானத் தொழில் நல்ல வளர்ச்சியை நோக்கிச் செல்லும். பங்குவர்த்தகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத் தரும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் நடக்கும். இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். உறவினர்கள் வருகை ஏற்படும் . உறவினர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மூத்த மகன் வேலை நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார். தந்தையின் உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். தாயாரின் உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனக் குறைவு ஏற்படும்.


தை மாதம்-
இதுவரை வேலைக்கு சென்று கொண்டிருந்தவர்கள் கூட சுய தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அதற்கான முயற்சிகளில் இறங்கி வெற்றி காண்பார்கள். இந்த முயற்சிக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் கிடைத்து தொழில் தொடங்குவீர்கள். சகோதரர்களும் பெருமளவு உதவுவார்கள். ஆனாலும் அதிக முதலீடுகளைச் செய்யாமல் குறைந்த முதலீடுகளைக் கொண்டு தொழிலைத் தொடங்க வேண்டும். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைத்து அதை வெற்றிகரமாக செய்வீர்கள். நிலக்கரி மற்றும் சுரங்கம் தொடர்பான தொழில், பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தித் தொழில் போன்ற தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கான ஆடை ஆபரண வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு மிக அதிகப்படியான ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். அரசின் உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் மீதான விசாரணையில் குற்றமற்றவர் என்று நிரூபித்து மீண்டும் பதவி பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கடந்த மாதம் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மீண்டும் பதவியைப் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். அதனால் ஆதாயமும் கிடைக்கும். சொத்துகள் பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். வழக்குகள் வாபஸ் பெறப்படும். தந்தை மகன் உறவில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது பிரச்சினையை பெரிதாக்காமல் இருக்கும். பெண்களுக்கு தொழில் வாய்ப்புகள், மிக எளிதாக கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

மாசி மாதம் -
குடும்ப நலன், குடும்பத்தின் எதிர்காலம் போன்றவற்றிற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்ப நலன் மட்டுமல்லாமல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிக்காகவும் இருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு மேலும் விரிவாக்கம் செய்ய வங்கிக் கடன் வாங்குவீர்கள். ஒரு சிலர் பூர்வீகச் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அது லாபகரமானதாக இருக்கும். வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பணிநீட்டிப்பு, குடியுரிமை போன்றவை இப்போது கிடைக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கையும் ஏற்படும். மாணவர்கள் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார்கள்.

பங்குனி மாதம்-
இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் மாதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கடன்கள் முழுமையாக அடைபடும். சொந்த வீடு வாங்குவது நிலபுலன்கள் வாங்குவது போன்றவை நடக்கும். தொழிலிலும் வியாபாரத்திலும் புதிய தொழில்நுட்பம் வாய்ந்த இயந்திரங்கள், கருவிகள் போன்றவற்றை வாங்குவீர்கள். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், அதேபோல நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் மூலமாக அதிகப்படியான லாபங்களும் யோகமும் கிடைக்கும். பெண்களுக்கு கல்விக்குத் தகுந்த வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்- இளம் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்- 1, 5, 7, 8

வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்-
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கு பூஜை செய்யுங்கள். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் தாருங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு தருவது பெரும் புண்ணியத்தைத் தரும்.

வணங்கவேண்டிய ஆலய தெய்வம் -
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள். பிள்ளையார்பட்டி விநாயகர் பெருமானை ஒருமுறை தரிசனம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்