சார்வரி ஆண்டு ; விருச்சிக ராசிக்காரர்களே! இனியெல்லாம் வெற்றிதான், பிரிந்தவர் சேருவர், தொழிலில் லாபம், உத்தியோகத்தில் மேன்மை; 12 மாதங்களுக்குமான ஏ டூ இஸட் பலன்கள்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

சமயோசிதமாகச் செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ளும் விருச்சிக ராசி வாசகர்களே!
இந்த புத்தாண்டு எந்தவிதமான நற்பலன்களைத் தரப்போகிறது என்பதை பார்ப்போம்.
இதுவரை கடுமையான நெருக்கடிகளையும் பல விதமான பிரச்சினைகளையும் சந்தித்து வந்த நீங்கள் இனி அந்த பிரச்சினைகளிலிருந்து படிப்படியாக வெளியேறுவீர்கள். நன்மைகள் தொடர இருக்கிறது. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கடுமையான பிரச்சினைகள், குழப்பங்கள் அனைத்தும் இனி முடிவுக்கு வரும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வார்கள். குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தனிமையில் வாடுபவர்கள், இனி குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வார்கள்.
விவாகரத்து வழக்குகள் வாபஸ் பெறப்படும். வாழ்க்கைத்துணை மட்டுமல்லாமல் தாய் தந்தை, பிள்ளைகள் என அனைவராலும் ஒதுக்கப்பட்டு இருப்பீர்கள். இப்போது அந்த நிலைகளுக்கெல்லாம் முடிவு வரும்.
உங்கள் உத்தியோகத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள், அவமானங்கள் அனைத்தும் தீரும். கடன் பிரச்சினைகளால் கடுமையான நெருக்கடிக்கு ஆளான நீங்கள், ஊரைவிட்டுக் கூட சென்று இருப்பீர்கள். இனி கடன் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக தீரும்.
உங்கள் மீதான அலுவலக விசாரணை கைவிடப்படும். உங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகைகள் அனைத்தும் இப்பொழுது கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். இவை அனைத்தும் ஜூன் மாதத்திலிருந்து நடைபெறத் தொடங்கும். அதுவரை பொறுமையாக இருப்பது நல்லது.
தொழிலில் கடுமையான நெருக்கடிகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தவர்கள் இப்போது தேவையான உதவிகள் கிடைக்கப் பெற்று மீண்டும் தொழிலைத் துவங்குவார்கள். காலாவதியான ஒப்பந்தங்கள் மீண்டும் உயிர் பெறும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் கடும் சரிவைச் சந்தித்த நீங்கள் இப்பொழுது மீண்டு வருவீர்கள்.
தேவையற்ற இழுக்குகள், அவமானங்களை சந்தித்து வந்த நீங்கள் இனி அந்த நிலையில் இருந்து வெளியே வருவீர்கள். வழக்குகளில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்படும்படி பல சம்பவங்கள் நடந்திருக்கும். இப்போது உங்கள் திறமை மீது பலரும் நம்பிக்கை வைப்பார்கள். வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்களுக்கு பலராலும் அவச்சொல் ஏற்பட்டிருக்கும். இப்பொழுது அவற்றுக்கெல்லாம் விடை கிடைக்கும். உங்களுடைய நேர்மை, ஒழுக்கம் பாராட்டப்படும். உங்கள் மீதான களங்கம் துடைக்கப்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த கடும் பின்னடைவு இப்போது சரியாகும். தோற்றுப்போன தேர்வுகளில் மீண்டும் எழுதி நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவீர்கள்.
உடல்நலத்தில் ஒருசில பாதிப்புகள் இருக்கும். இப்போது நீங்கள் உங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் வேண்டும். இல்லை என்றால் வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் வரும். இந்த நிலை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.அதன்பிறகு உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும்.

சித்திரை மாதம்-
தொழிலுக்குத் தேவையான பண உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும். வியாபாரம் மீண்டும் வளர்ச்சி அடையும். குடும்பப் பிரச்சினைகளுக்கு மெல்ல மெல்ல தீர்வு ஏற்படும். பொறுமையாக இருப்பது நல்லது. அவசரப்பட வேண்டாம். கடன் பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க நாட்கள் வாய்தா கிடைக்கும். வட்டியில் தள்ளுபடிகள் கிடைக்கும். இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சகோதரர்களிடம் ஏற்பட்டிருந்த மனக் கசப்புகளை பேசி தீர்க்க முன்வருவீர்கள். சகோதரர்களும் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். மருத்துவச் செலவுகள் சற்று குறையும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வாழ்க்கைத் துணை இப்போது உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார். குறிப்பாக மனைவிவழி உறவினர்கள் பெரிய அளவிலான உதவிகளை செய்வார்கள். கலைத்துறையினருக்கு ஒருசில வாய்ப்புகள் பேச்சுவார்த்தை அளவில் நீடிக்கும்.


வைகாசி மாதம் -
குடும்பச் சிக்கல்கள் ஓரளவுக்கு நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். லாபம் குறைவாக இருந்தாலும் மனநிறைவு ஏற்படும். ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். வழக்குகள் நெருக்கடிகள் தந்தாலும் பாதிப்பு தராது. ஒரு சில வழக்குகள் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெண்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். இல்லை என்றால் அவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். ஆடம்பர விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.


ஆனி மாதம்-
உங்களை ஏமாற்றியவர்களையும் துரோகம் செய்தவர்களையும் அடையாளம் காண்பீர்கள். அவர்களிடமிருந்து விலகுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு சாதகமாக, இணக்கமாக நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். உற்றார் உறவினர் மீதிருந்த மனவருத்தங்கள் மறையும். மனம் உணர்ந்து மன்னிப்பு கேட்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வங்கிக் கடன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் ஒரு சிலர் தங்களுடைய பூர்வீகச் சொத்துக்களை விற்று தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் பாதிப்பைத் தந்தாலும் சிரமத்தைத் தராது. நோய் கட்டுக்குள் இருக்கும்.


ஆடி மாதம் -
பயணங்களால் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். வெளிநாடு தொடர்புடைய நபர்கள், மற்றும் நிறுவனங்கள் உங்களுக்கு தானாக முன்வந்து உதவுவார்கள். தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். வியாபார இடத்தை புதுப்பித்தல் செய்வீர்கள். ஒரு சில மாற்றங்களை செய்து வியாபார வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள். பெண் பிள்ளைகளால் பெருமையும் புகழும் கிடைக்கும். அவர்களால் உதவியும் கிடைக்கப்பெற்று உங்களுடைய சூழ்நிலையை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும். உங்களுக்கான மதிப்பு மரியாதை கூடும். வரவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் பெருமளவில் உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு பலரும் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.

ஆவணி மாதம் -
பலவித நன்மைகள் நடைபெறும் மாதம். கடன் பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. அல்லது சொந்த வீட்டின் மேல் வாங்கப்பட்ட கடன் முழுமையாக அடைபடும். அடகு வைத்த நகைகளை மீட்க உதவி கிடைக்கும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். திருமண முயற்சியில் கைகூடும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் பெருமளவு குறையும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுவரை தொழில் செய்யாதவர்கள் கூட தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவார்கள்.

புரட்டாசி மாதம் -
செய்தொழிலில் மிகுந்த லாபம் கிடைக்கக்கூடிய மாதம். வியாபாரத்திலும் அபரிமிதமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் எண்ணெய் வியாபாரம் மற்றும் உர வியாபாரம் போன்ற வியாபாரிகளுக்கு லாபம் அபரிமிதமாக இருக்கும். காவல் துறையினருக்கு பதவி உயர்வு உள்ளிட்ட அரசுச் சலுகைகள் கிடைக்கும். எண்ணெய் வியாபாரம் பெட்ரோலிய பொருள்கள் வியாபாரம் போன்ற வியாபாரிகளுக்கு எதிர்பாராத வியாபார ஒப்பந்தங்கள் ஏற்பட்டு லாபம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள். வேலை நிமிர்த்தமாக பிரிந்திருந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

ஐப்பசி மாதம் -
வீடு மாற்றம், வேலையில் இடமாற்றம் போன்றவை ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த முதலீடுகளை அதிகப்படுத்துவீர்கள். வியாபார இடங்களை விஸ்தரிப்பீர்கள். அதிகமான வேலை ஆட்களை சேர்ப்பீர்கள். குடும்பத்திற்காக பலவிதமான செலவுகள் செய்வீர்கள். இவை அனைத்தும் சுப செலவுகளாக இருக்கும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். வீட்டை புதுப்பித்தல், விரிவுபடுத்துதல் போன்ற செலவுகள் ஏற்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கான திருமண ஏற்பாடுகள் நடக்கும். படிக்கின்ற பிள்ளைகளாக இருந்தால் உயர் கல்விக்கான செலவு செய்ய நேரிடும். பூர்வீகச் சொத்துக்களை குத்தகைக்கு விடுதல் போன்ற செயல்கள் நடக்கும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கார்த்திகை மாதம்-
அதிக அளவில் நன்மைகள் நடைபெறும் மாதம். தேவையான உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பாராத முதலீடுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு அதிகாரமுள்ள பதவி கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்த இந்த மாதமே சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அந்த முயற்சிகள் வெற்றியாகும். குழந்தைகளுக்குக் கல்வி தொடர்பான உதவிகளை செய்து தருவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஒரு சில உதவிகள் கிடைத்தாலும், அவர்களுக்கும் நீங்கள் பதில் உதவி செய்ய வேண்டியதிருக்கும், அது தொடர்பாக அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர்களால் தொழில் தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும்.


மார்கழி மாதம்-
கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் இந்த ஒரே மாதத்தில் முடிவுக்கு வரும். கடன் முற்றிலுமாக தீரும். சேமிப்பு உயரும். சொந்தப் பணத்தில் வீடு மனை வாகனம் போன்றவை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான பிள்ளைகள் இருந்தால் பேரக் குழந்தைகள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். உங்களுடைய எதிர்காலம் கருதி சேமிப்புகளைச் செய்வீர்கள். பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் அதிக முதலீடு செய்வீர்கள். சிலர் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். பங்கு வர்த்தகத் துறை வளர்ச்சியில் இருக்கும். கட்டுமானத் தொழில் சூடுபிடிக்கும். ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பத்திரிகை மற்றும் ஊடகத் தொழிலில் இருப்பவர்கள் நல்ல பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத ஊதிய உயர்வு, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். மேலும் சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

தை மாதம் -
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்த முற்படுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். ஆனாலும் ஒரு சில விஷயங்களில் நிதானமும், அதிக கவனமும் தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த செயலையும் செய்ய வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். இருப்பதை இருக்கும்படியாக செய்தாலே போதும். உறவினர்கள் வகையில் ஒரு சில உதவிகள் கேட்டு நெருக்கடி தருவார்கள். நீங்களும் செய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பீர்கள். முடிந்தவரை உதவி செய்வீர்கள். உங்களுடைய மகனுக்கு தொழில் அல்லது வியாபாரம் தொடங்க பண உதவி செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அவர்களுடைய பாதிப்புகளை சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசித்து தேவையான சிகிச்சைகளை செய்வீர்கள்.

மாசி மாதம்-
சொந்த வீடு வாங்குதல், விவசாய நிலங்களை வாங்குதல் போன்றவை இந்த மாதம் நடக்கும். பூர்வீகச் சொத்துக்களை மீண்டும் கவனிப்பீர்கள். விவசாய வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும். சுப விசேஷங்கள் இல்லத்தில் நடக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

பங்குனி மாதம் -
அதிக அளவில் நன்மைகள் நடக்கும் மாதம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அதிக வருமானம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் தரகு தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு தொடர்பான கான்ட்ராக்ட் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் திடீர் விலை உயர்வால் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். குடும்பத்தினர் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். படித்து முடித்த உங்கள் பிள்ளைகளுக்கு இப்போது வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் - 5, 7, 9

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரம் -
பச்சரிசியில் தயிர்சாதம் செய்து தானமாக தாருங்கள். மற்றும் வசதி இல்லாத ஏழைகளின் திருமணத்திற்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தாருங்கள்.

வணங்க வேண்டிய ஆலய தெய்வம்-
ஸ்ரீ துர்கை வழிபாடு மிக மிக அவசியம். மேலும் சீர்காழி சட்டநாதர் கோயிலில் உள்ள அஷ்ட பைரவர்கள் சந்நிதியில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்று வாருங்கள். மேலும் தெருநாய்களுக்கு உணவு அளிப்பது மிகுந்த நன்மையை ஏற்படுத்தித் தரும். எதிரிகள் காணாமல் போவார்கள். நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்