சார்வரி ஆண்டு; சிம்ம ராசிக்காரர்களே! தொட்டதெல்லாம் லாபம், தொழில் சிறக்கும், கணக்குவழக்கில் உஷார்! - 12 மாதத்துக்குமான ஏ டூ இஸட் பலன்கள்!

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

சோதனைகளை சாதனைகளாக்கும் சிம்ம ராசி வாசகர்களே!
இந்த புத்தாண்டு உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கக் காத்திருக்கிறது. உங்கள் ராசிக்கு இப்போது ஐஸ்வர்ய யோகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. உங்கள் தேவைகள் அனைத்தும் அதிக முயற்சி இல்லாமலேயே எளிதாக நிறைவேறும்.
கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பு, குழந்தைகளின் உடல்நலத்தில் அச்சுறுத்தும் வகையிலான பாதிப்பு,மன உளைச்சல், நிம்மதியற்ற நிலை போன்றவை இருந்திருக்கும். இந்த பிரச்சனைகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும்.
"சுவர் இருந்தால் தானே சித்திரம்" என்று சொல்வதைப்போல முதலில் உங்களுடைய ஆரோக்கியம் முழுமையாக சீராகும். குழந்தைகளின் ஆரோக்கியம் வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி இருந்த நிலையில் இனி மருத்துவ சிகிச்சையே தேவைப்படாத அளவுக்கு முற்றிலுமாக உடல்நலம் சீராகும்.
குடும்பத்தில் பணப் பற்றாக்குறையால் பலவித பிரச்சினைகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி பணத்தட்டுப்பாடு என்ற நிலையே இல்லாமல் போகும். அதாவது பணம் பல வழிகளிலும் வரும். செல்வம் சேரும். சொத்துக்கள் சேரும். கடன்கள் அனைத்தும் முழுமையாக அடைபடும். கடன் இல்லாத வாழ்வு தொடரும்.
உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அதிக பணிச்சுமை ஏற்பட்டிருக்கும். உயரதிகாரிகள் உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்காமல் இருந்திருப்பார்கள், இப்போது அந்த நிலை அனைத்தும் மாறும். பணி நிரந்தரமாகும். இடம் மாற்றம் இனி இருக்காது. உங்கள் கருத்துக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
உங்கள் அலுவலகத்தில் நீங்கள் தவிர்க்கமுடியாத சக்தியாக மாறுவீர்கள். உங்கள் திறமைகளை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உங்களை அணுகுவார்கள். நல்ல நிறுவனம் நல்ல ஊதியம் போன்றவை கிடைத்தால் தாராளமாக மாறிச் செல்லுங்கள்.
சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி பிரச்சினைகள் ஒவ்வொன்றாக குறையும். தொழிலில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் இருந்த தேக்கநிலை மாறும். இவை அனைத்தும் ஜூன் மாதத்திற்குப் பிறகு நடக்கும்.
பங்குவர்த்தகத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருக்கும். இனி அந்த நஷ்டத்தில் இருந்து படிப்படியாக விடுபட்டு வருவீர்கள். லாபம் மட்டுமே இனி இருக்கும். கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் இனி படிப்படியாக தொழில் சூடுபிடிக்கும். அதிக அளவில் வியாபாரமாகும்.
காய்கறி விற்பனை மையங்கள், ஜெனரல் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட் போன்ற வியாபாரங்களை செய்து வருபவர்களுக்கு இனி லாபம் அதிகரிக்கும் வகையில் விற்பனை சூடுபிடிக்கும். பொதுவாக வியாபாரிகளுக்கு பல விதமான வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்குவது, புதிய வியாபார நிறுவனங்கள் ஆரம்பிப்பது போன்றவை நடக்கும்.
அரசு மற்றும் அரசியல் பதவிகளில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் தானாக கிடைக்கும். உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்.மன உளைச்சல் தந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கணவன் மனைவியிடம் இருந்த மன வேற்றுமைகள் அகலும். ஒற்றுமை பலப்படும். சகோதரர்கள் பெருமளவு உதவுவார்கள். நீங்களும் உங்கள் சகோதரருக்கு உதவி செய்வீர்கள். சொத்து பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாக முடிவடையும்.
சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். அடகு வைத்த நகைகள் அனைத்தும் திரும்ப மீட்டு எடுக்கக் கூடிய காலம் இது. இல்லத்தில் திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் நடக்கும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் கிடைக்கும், ஆண் வாரிசுக்காக ஏங்கியவர்களுக்கு இப்பொழுது ஆண் வாரிசு கிடைக்கும். தாய்வழி உறவுகள் குறிப்பாக தாய்மாமன் வகையில் ஏற்பட்டிருந்த பகை மாறி ஒற்றுமை ஏற்படும்.
உறவினர்களிடம் கொடுத்திருந்த பணம் திரும்பக் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் கடந்த சில மாதங்களாக இருந்திருக்கும். இப்பொழுது அந்த பாதிப்பு முழுமையாக நீங்கும்.
பெண்களுக்கு அற்புதமான பலன்கள் நடக்க இருக்கிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் செய்து புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்ப நிலைகள் மாறும். சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு , குறிப்பாக உணவுத் தொழில் செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தையல் தொடர்பான தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த ஒரு சில தடைகளும் இப்போது முற்றிலுமாக அகலும். ஞாபக சக்தி குறைபாடு இருந்தவர்களுக்கு இப்பொழுது ஞாபக சக்தி அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியை முடிக்கும் முன்னே வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் கல்வி கற்கும் ஆர்வம் உடையவர்களுக்கு இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குப் பின் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்டநாளாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் திறமைக்கு இப்போது மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

சித்திரை மாதம்-
சிறிய அளவிலான முயற்சிகள் கூட அதிக உழைப்பில்லாமல் எளிதாக உங்களுக்கு கிடைக்கும். அலுவலகப் பணியில் அதிர்ஷ்ட வாய்ப்பாக தலைமைப் பதவி அல்லது குழுவிற்குத் தலைமை தாங்குதல் போன்ற பதவிகள் கிடைக்கும். தொழிலில் ஒரு புதிய உச்சத்தை தொடக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் செவி சாய்ப்பார்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர்கள் பெயரில் முதலீடுகள் செய்வது, சொத்துக்கள் வாங்குவது போன்றவை நடக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். குறிப்பாக முதுகெலும்பு மற்றும் பின் தலைவலி போன்ற பிரச்சினைகள் இருந்தவர்களுக்கு இந்தமாதம் முழுமையாக குணமடையும் வாய்ப்பு உள்ளது. அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி கிடைக்கும். அதுவும் அதிகாரம் உள்ளதாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் அனைத்தையும் இந்த மாதம் எளிதாகப் பேசி முடிப்பீர்கள்.

வைகாசி மாதம்-
புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். அதற்குத் தேவையான அத்தனை உதவிகளும் தேடிவரும். தொழிலுக்குத் தேவையான புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் வாங்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அபார வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். சகோதரர் அல்லது சகோதரியின் திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளின் கல்விக்காக ஒருசில பயிற்சிமுறைகளை செய்து தருவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அரசு வழியில் தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான முடிவு ஏற்படும். வெளிநாட்டு நண்பர் ஒருவரால் ஆதாயம் கிடைக்கும். நீண்டநாளாக தொடர்பில் இல்லாத நண்பரை இந்த மாதம் தொடர்பு கொள்வீர்கள் அல்லது அந்த நபரே உங்களை தொடர்பு கொள்வார். அவர் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபார வாய்ப்புகளும் உருவாக்கித் தருவார். உங்களுடன் கூட்டுச்சேர பலரும் முன்வருவார்கள்.

ஆனி மாதம்-
எந்த ஒரு விஷயத்திலும் லாபம்... லாபம்... லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேங்கி நின்ற பொருள்கள் அனைத்தும் விற்றுத் தீரும். அரசு தொடர்பான முக்கியமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சொத்து தொடர்பான மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் நிச்சயமாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வியாபார விஷயம் ஒன்று இந்த மாதம் எளிதாக முடியும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு இப்பொழுது மறுமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் புதிய கல்வி கற்கும் ஆர்வத்தால் பயிற்சி வகுப்புகளில் சேருவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தமும் ஏற்படும்.

ஆடி மாதம்-
குடும்பத்திலோ உறவினர் வகையிலோ சுப விசேஷங்கள் நடக்கும். அதற்கு செலவுகள் செய்ய வேண்டியது வரும் அல்லது அந்த விசேஷங்களில் ஒருசில பொறுப்புகளை ஏற்க வேண்டியது வரும். அந்த செலவுகள் அனைத்தும் நீங்களே சந்தோஷமாக மேற்கொள்ள வேண்டியது வரும். அலுவலக வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது பதவி உயர்வுடன் கூடியதாக இருக்கும். குலதெய்வ வழிபாடு, ஆலய வழிபாடு போன்றவை ஏற்படும். அல்லது குடும்பத்தோடு பயணம் ஒன்று ஏற்படும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்குத் தகுந்தாற்போல் வருமானமும் இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

ஆவணி மாதம்-
தன்னுடைய எதிர்காலம், தன் குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் கவலையை அதிகரிக்கும். ஒரு சில எதிர்காலத் திட்டங்களை செயல்படுத்த நினைப்பீர்கள். அது தொடர்பான முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீகத்திற்குச் சென்று விவசாயம் உள்ளிட்ட விஷயங்களை கவனிக்க எண்ணம் தோன்றும். அந்தப் பூர்வீக இடத்தை மேலும் வளர்ச்சியாக மாற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குதல், புதிய வியாபாரத்தை ஆரம்பித்தல் போன்ற சிந்தனைகள் அதிகமாகும். மனை பிரித்து விற்பது போன்ற தொழில் ஆர்வம் ஏற்படும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு படிப்படியாக லாபம் கிடைக்கும். ஆடை உற்பத்தி தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி மிதமாக இருக்கும். பெண்களின் சுய தொழில் உள்ளிட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும், திருமணத் தேதி குறிக்கப்படும். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் பற்றிய சாதகமான பதில் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். தேர்ச்சி விகிதம் எதிர்பாராத அளவுக்கு இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் ஏற்படும். மிகப்பெரிய நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புரட்டாசி மாதம்-
வருமானம் பல வழிகளிலும் வரும். தேவைக்கு மேல் பணம் கிடைக்கும். எடுக்கின்ற அனைத்து முயற்சிகளும் முழு வெற்றியை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இல்லத்திற்கு புதிய நபர் வருகை ஏற்படும். அதாவது உங்களுக்கு திருமணம் நடப்பது அல்லது திருமணம் நடந்திருந்தால் குழந்தை பிறப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்கும். அவர்கள் மூலமாக பேரக் குழந்தைகளைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறிய பின்னடைவு கூட இல்லாமல் முழுமையான வெற்றியும் அதிகப்படியான லாபமும் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும். பங்காளிச் சண்டைகள் முழுமையாக தீரும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். புதிதாக வீடு கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள் அல்லது தற்போது இருக்கின்ற வீட்டிலேயே மேலும் விரிவுபடுத்தும் விதமாக கட்டுமான வேலைகளை ஆரம்பிப்பீர்கள். அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் எளிதாகக் கிடைக்கும். வீட்டுக்கடன் தொழில் தொடர்பான கடன் வியாபாரத்திற்குத் தேவையான கடன் கிடைக்கும். அது வங்கியின் மூலமாகவே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசியல் தொடர்பானவர்களுக்கு நிர்வாகம் செய்யக் கூடிய பதவி கிடைக்கும். வங்கிப் பணியாளர்கள், கணக்காளர்கள், இன்சூரன்ஸ் போன்ற பணியில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும். வருமானம் இருமடங்காக ஏற்படும்.

ஐப்பசி மாதம்-
உத்தியோகத்தில் இடமாற்றம், வீடுமாற்றம், வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுதல் தொழில் மற்றும் வியாபார இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுதல் போன்ற விஷயங்கள் நடக்கும். உத்தியோக ரீதியாக பிரிந்து இருந்த கணவன் மனைவியர் இப்பொழுது ஒன்றுசேர்வார்கள். கல்வி தொடர்பாக தாத்தா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த உங்கள் பிள்ளைகள் இப்பொழுது மீண்டும் உங்களிடமே வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோகத்தை விட்டு சொந்தத் தொழில் செய்யும் முயற்சியில் இறங்குவார்கள். ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் புதிய தொழில் ஒன்றை தொடங்குவார்கள். வியாபாரிகள் புதிய வியாபார வாய்ப்புகளைப் பெற்று தனி நிறுவனம் தொடங்குவார்கள். மூத்த வழக்கறிஞர்களிடம் பணிபுரிந்து கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் தனியாக தங்கள் பணியை துவக்குவார்கள். அதேபோல ஆடிட்டர்களிடம் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் தனியாக ஆடிட்டர் தொழிலைச் செய்ய முற்படுவார்கள். கலைத் துறையினருக்கு இந்த மாதம் அற்புதமான பலன்கள் நடைபெறும் மாதம். அதேபோல, பெண்களுக்கு இயல்பாக சொத்து ஏற்படுவதும் மிகப்பெரிய வருமான வாய்ப்பும், கற்ற கல்விக்கு தகுந்த நல்ல வேலைவாய்ப்பும் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் நடக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது அல்லது திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

கார்த்திகை மாதம்-
நல்ல பலன்கள் நடக்கும் மாதம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்பாக சொந்த வீடு அமையும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் கிடைக்கும். மூத்த மகனின் செயல்பாடுகளை மட்டும் உற்று கவனியுங்கள். ஒரு சில தவறான சகவாசம் நட்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரம் அனைத்தும் சரியாக இருந்தாலும் அவசர முடிவுகளை மட்டும் எடுக்காமல் இருக்க வேண்டும். ஒப்பந்தங்கள் போடும் பொழுது கவனமாக முழுமையாக படித்துப் பார்த்த பின்பே கையெழுத்திட வேண்டும். குடும்பத்தினருடன் அன்பாக இருக்கவேண்டும், முகச்சுளிப்பு, எரிச்சல் போன்றவற்றை வெளிக் காட்டாதீர்கள். வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்துச் செல்லுங்கள். சிறிய வாக்குவாதம் பெரிய அளவில் கருத்து வேற்றுமை ஏற்படக் கூடிய அளவிற்கு மாறும். கலைத்துறை சார்ந்தவர்கள் இந்த மாதம் பெரிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அலுவலகப் பணியாளர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படும். கட்டுமானத் தொழில் மற்றும் பங்கு வர்த்தகத் தொழிலில் இருப்பவர்களுக்கு பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம்.

மார்கழி மாதம்-
எதிர்பார்த்த நல்ல பலன்கள் நடக்கும். ஆனாலும் ஒரு சிலருக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் அழுத்தத்தைத் தரும். கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அது வீட்டுக்கடனாகவும் இருக்கலாம். அல்லது தொழில் தொடர்பான கடனாகவும் இருக்கலாம். ஆனாலும் அந்தக் கடன் பெறுவதால் ஏதும் பாதிப்பு வருமா என்றால் நிச்சயமாக இல்லை. வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் நடக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆதாயம் பெருகும். அரசு ஒப்பந்ததாரராக இருப்பவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உடல் உபாதை உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மிக குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இடுப்பு மற்றும் முதுகு தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அதற்கான தீர்வு இந்த மாதம் கிடைக்கும். தொழில் தொடர்பாக பயணங்கள் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது மிக எளிதாக வேலை கிடைக்கும். தாய் வழி உறவினர்களாலும், சகோதர உறவுகளாலும், உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும். உற்ற நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும். தங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு கவுரவம் கிடைக்கும்.

தை மாதம்-
அரசு பதவிகளும், அரசியல் பதவிகளும் தேடி வரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கின்ற மாதமாக இருக்கும். பல விதமான யோகங்கள் உண்டாகும். சொந்த வீடு வாங்குவது முதல் நிலபுலன்கள் வாங்குவது வரை ஆடை ஆபரணங்கள் சேர்க்கை போன்ற சொத்துக்கள் சேரும் மாதமாக இருக்கும். பரம்பரை சொத்துக்களிலிருந்து வருமானம் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் முடிவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஐஸ்வர்ய யோகம் முழுமையாக கிடைக்கின்ற மாதமாக இந்த மாதம் இருக்கிறது. தொழில் வியாபாரம் என அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். எதிரிகளும் எதிர்ப்புகளும் காணாமல்போகும். இதுவரை வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் கூட சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவார்கள். அந்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் புதிதாக மற்றொரு தொழிலை செய்ய முற்படுவார்கள். ஒரு சிலருக்கு கௌரவப் பதவி கிடைக்கும். அரசு மரியாதை கவுரவம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வருமானத்தை விட இரு மடங்கு வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் மாறும். சுயதொழில் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும் தேவையான உதவிகளும் கிடைக்கும். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு அயல்நாட்டில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மாசி மாதம்
எந்த ஒரு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஒரு சில தடைகள் ஏற்படலாம், அந்த தடைகள் உங்களை சுற்றி இருப்பவர்களாகலும் நிகழலாம். அல்லது நெருங்கிய உறவினர்களாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களோ அதை மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம். எடுத்துக்கொண்ட வேலைகள் முடிந்த பின்னரே தான் என்ன செய்தேன் என்பதை மற்றவர்களிடம் சொல்லலாம். உங்கள் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தாரே கூட அச்சம் காரணமாக தடைபோட முயற்சிப்பார்கள். அவர்களுக்குத் தேவையான தகுந்த விளக்கத்தை பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். தோல்வி என்ற நிலை நிச்சயமாக இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ஆனாலும் அவர்களை விட்டு சற்று விலகியே இருங்கள். அவர்களுடைய ஆலோசனையை ஏற்க வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் செலவு செய்யும் பணத்திற்கு சரியாக கணக்கு கேளுங்கள். கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது நல்லது. கருத்துகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டு பகிர்ந்துகொண்டு கருத்து வேறுபாடுகளை அகற்றவேண்டும். கட்டுமானத் தொழில் மற்றும் பங்கு வர்த்தகத் தொழிலில் இருப்பவர்களுக்கு சராசரியான வளர்ச்சி ஏற்படும். லாபத்திற்கு குறைவிருக்காது.

பங்குனி மாதம்-
பொறுமை, நிதானம் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் போடும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய வியாபாரத்தை தொடங்குவதாக இருந்தால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து தொடங்குங்கள். இடமாற்றம் செய்ய வேண்டாம். தொழில் தொடர்பாக வங்கிக் கடன் பெறுவதை சற்று தள்ளி வையுங்கள். போட்டி நிறுவனங்களிடம் கவனமாக இருங்கள். உங்கள் மீது அவர்கள் வழக்குப் போடும் வாய்ப்பு உள்ளது. கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். வருமானவரித்துறை போன்ற பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது. குலதெய்வ வழிபாடை தவறாமல் செய்யுங்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து எளிதாக வெளிவருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்:
இளம் சிவப்பு மற்றும் மஞ்சள்.

அதிர்ஷ்ட எண்- 1, 2, 3, 5, 9

வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரம்-
கோதுமையால் செய்யப்படும் இனிப்புகளை அக்கம்பக்கத்தினருக்கு வழங்குங்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.

வணங்கவேண்டிய ஆலய தெய்வம் -
வன்னி மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட சிவாலயங்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மை தரக்கூடிய ஸ்தலங்களாகும். திருவொற்றியூரில் இருக்கும் ஸ்ரீ வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமிகள் ஆலயத்தில் இருக்கும் வட்டப்பாறை அம்மன் ஆலயத்திற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வந்து வணங்கிச் செல்லுங்கள். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். அதிக நன்மைகளைப் பெறலாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்