சார்வரி ஆண்டு; மிதுன ராசிக்காரர்களே! பிரிந்தவர்கள் சேருவர், யாரையும் நம்பவேண்டாம், வீண் குழப்பம் தீரும்! - 12 மாதத்துக்குமான ஏ டூ இஸட் பலன்கள்!

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

கற்பனையில் கோட்டைக் கட்டி வாழும் மிதுன ராசி வாசகர்களே.
தப்புத் தப்பாக முடிவெடுத்து பலவிதமான சிக்கல்களில் சிக்கி செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த நீங்கள், இந்தப் புத்தாண்டில் புதுப்பொலிவோடு ஜொலிக்கப்போகிறீர்கள்.

குடும்பத்திலும் வாழ்க்கைத் துணையிடமும் தேவையற்ற குழப்பங்களை நீங்களே உருவாக்கியிருப்பீர்கள். இப்போது அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் மெல்ல மெல்ல முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமைப் பலப்படும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். விவாகரத்து வரை சென்ற பிரச்சினை கூட சமாதானமாகி மீண்டும் ஒன்று சேருவார்கள்.

உத்தியோகத்தில் ஏற்பட்டிருந்த கடும் நெருக்கடிகள் விலகும். ஆட்குறைப்புப் பட்டியலில் இருந்து நீங்கள் மயிரிழையில் தப்பித்து விடுவீர்கள். எனவே வேலையைப் பற்றிய அச்சம் தேவையில்லை.
உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் இடமாற்றம் பெற்று செல்வார்கள் அல்லது வேலையை விட்டுச் சென்று விடுவார்கள். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கடன் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். ஆனாலும் நெருக்கடிகள் குறையாது. தொழிலில் ஏற்பட்டிருந்த முடக்கம் இப்பொழுது நீங்கும். அரசு உதவி மற்றும் சலுகைகள் கிடைக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தம் கிடைக்கும். இவை அனைத்தும் மே மாதம் 20ம் தேதிக்குப் பின் நடைபெறும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்யக்கூடாது. வியாபாரத்திற்காக கடன் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது.

பெண்களுக்கு மனக் குழப்பங்கள் தீரும். மனதில் தோன்றும் அர்த்தமற்ற பயம் விலகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஆனால் ஜூலை மாதத்திற்கு பின்பே திருமணம் செய்ய வேண்டும். சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். ஆனால் யாரையும் நம்பி தொழில் தொடங்க வேண்டாம். புதிய நண்பர்களிடம் விலகியே இருங்கள். இல்லை என்றால் தேவையற்ற சர்ச்சை சங்கடங்கள் ஏற்படும்.
மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும். கல்வியைத் தவிர மற்ற ஆடம்பர நாட்டங்கள் ஏற்படும். எனவே கவனச் சிதறல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உயர்கல்வி மாணவர்கள் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கலைஞர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு பிறகுதான் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.

சித்திரை மாதம் -
எடுக்கின்ற புதிய முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்‌. சகோதரர்களால் லாபம் உண்டாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும்.

வைகாசி மாதம் -
சுபச்செலவுகள் ஏற்படும். வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. வீடு மாற்றம் செய்யவும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு சில முயற்சிகள் எடுப்பீர்கள். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும்.

ஆனி மாதம்-
சகோதரர்களிடம் இணக்கமாக இருங்கள். வீண் சண்டை சச்சரவு வேண்டாம். பாகப்பிரிவினைகள் செய்யவேண்டாம். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் தேவையற்ற கருத்துக்களை கூற வேண்டாம். குடும்பத்தினரிடம் அன்பாக இருக்க வேண்டும். குழப்பமான மன நிலை இருக்கும். நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும்.

ஆடி மாதம்-
பணவரவு தாராளமாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு தந்தைவழிச் சொத்துகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் சீரான வளர்ச்சியில் இருக்கும். உற்பத்தி தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் பெருகும்.

ஆவணி மாதம் -
சிறிய அளவிலான முயற்சி கூட பெரிய அளவில் லாபத்தை பெற்றுத் தரும். தொழில் வளர்ச்சிக்காக வங்கிக் கடன் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சகோதரர்களிடம் சமாதானம் ஏற்படும். சமூகத்தில் பெரிய மனிதரின் உதவியால் ஆதாயமடைவீர்கள். குடும்ப உறவுகள் பலப்படும். குழந்தைகளால் பெருமை கிட்டும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் தரக்கூடிய வியாபாரம் நடக்கும்.

புரட்டாசி மாதம் -
சொத்துக்கள் விற்பது தொடர்பாக தாமதமாகிக் கொண்டிருந்த விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான ஒப்பந்தங்கள் அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வங்கிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் விலகும்.

ஐப்பசி மாதம் -
நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த விஷயங்கள் மற்றும் வேலைகள் இந்த மாதம் எளிதாக முடியும். சுயதொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். ஏற்றுமதி தொழிலில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் தோன்றும். திருமணம் தொடர்பான விஷயங்கள் உறுதி செய்யப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் -
நெருக்கடி தந்த கடன் பிரச்சினைகள் அனைத்தும் ஒரு சில சலுகைகள் கிடைத்து முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். தேங்கி நின்ற அலுவலக வேலைகளை விரைந்து முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள்.

மார்கழி மாதம்:-
வாழ்க்கைத் துணையின் உதவியால் முக்கியமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில்லாமல் இருந்த உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களால் பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும். புதிய நட்புகள் அறிமுகமாகும். வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் தகவல் மனதிற்கு உற்சாகம் தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

தை மாதம் -
எந்த ஒரு விஷயத்திலும் நிதானமும் பொறுமையும் அவசியம். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. வழக்குகளின் நெருக்கடி தரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது தேவையில்லாத வம்பு வழக்குகளில் உங்களை சிக்க வைக்கும். பெரிய அளவில் கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

மாசி மாதம் -
தேவையான உதவிகள் தேவையான சமயத்தில் கிடைக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். வெற்றி மேல் வெற்றியைக் குவிப்பீர்கள். சொத்துக்கள் சேரும். சொந்த வீடு அமையும். தொழில் பிரம்மாண்ட வளர்ச்சி அடையும். வியாபாரத்தில் புதிய கிளைகள் உருவாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

பங்குனி மாதம்:-
வீடு, வேலை, தொழில் என அனைத்திலும் இடமாற்றம் ஏற்படும். வரவேண்டிய கடன் வசூலாகும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும். தந்தையின் தொழில் அல்லது வியாபாரப் பொறுப்பை ஏற்க வேண்டிவரும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்:- பச்சை மற்றும் இளஞ்சிவப்பு.

அதிஷ்ட எண்:- 1, 5, 6

வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரம் - பச்சைப்பயறு சுண்டல் செய்து இளம் வயதினருக்கு வழங்குங்கள்.

வணங்க வேண்டிய இறைவன் -
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடுகளை தவறாமல் செய்யுங்கள். இடர்பாடுகள் அனைத்தும் அகலும். நன்மைகள் அதிகமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்