குருப் பெயர்ச்சி: துலாம் ராசியினருக்கு எப்படி? - 01.05.2024 முதல் 13.04.2025 வரை

By செய்திப்பிரிவு

தன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர் களே! உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியை தந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 8-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். 8-ல் குரு வந்தால் எல்லாம் தட்டிப் போகுமே, தள்ளிப் போகுமே என்று கவலைப்பட வேண்டாம். குரு 8-ல் அமர்ந்தாலும் முக்கியமான வீடுகளைப் பார்ப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

தள்ளிப் போன அயல்நாட்டுப் பயணம் கூடி வரும். அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். செலவுகள் ஒருபக்கம் இருந்துக் கொண்டேயிருக்கும். தவிர்க்க முடியாத பயணங்களும் அதிகரிக்கும். ஆனாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். கணவருக்கு கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அவருக்கு உத்தியோகத்தில் இடமாற்றமும், வேலைச்சுமையும் இருக்கும். மாமனார், மாமியார் வகையில் அலைச்சல், செலவுகள் வரும். நாத்தனார், மச்சினருடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். நாத்தனார் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

குரு 8-ல் மறைவதால் தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு செல்வது நல்லது. குரு 2-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசாமல் யதார்த்தமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.

குரு 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு, மனை வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புது வீட்டுக்கு குடிபுகுவீர்கள். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கம் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். முடிவுகள் எடுப்பதில் ஒருவித குழப்பமும், தடுமாற்றமும் இருந்துக் கொண்டேயிருக்கும்.

பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தமாக அதிகம் செலவு செய்து சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.

யோகா, தியானம் மூலம் எதிர்மறை எண்ணங்களை சரிசெய்து கொள்ளுங்கள். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும். முன்கோபத்தால் நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள்.

குருபகவானின் நட்சத்திர பயணம்: 1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்களின் பாதகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கும். அலைச்சல் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். மூத்த சகோதர வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.

13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. சவாலான காரியங்களை கூட கச்சிதமாக முடித்துக் காட்டுவீர்கள்.

வீண்பழி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நகை வாங்குவீர்கள். கோபம் தணியும். வீடு, மனை அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். பொது நிகழ்ச்சி, கோயில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பிரபலமடைவீர்கள். மகளுக்கு திருமணம் முடியும்.

20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை உங்களின் தன, சப்தமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனைவி வழியில் அலைச்சல் இருக்கும். முதுகுவலி, மாதவிடாய்க் கோளாறு மனைவிக்கு வந்து நீங்கும். புது சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களால் உதவியுண்டு. வீடு மாறுவீர்கள்.

வியாபாரத்தில் கடந்த வருடத்தில் ஏற்பட்ட தவறுகள் நிகழாமல் இப்போது பார்த்துக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி விற்பனை மூலமாகவும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும்.

நேர் மூத்த அதிகாரி உங்களை பழி வாங்கினாலும், மேல்மட்ட மூத்த அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இந்த குரு மாற்றம் வேலைச்சுமையையும், ஒருவித படபடப்பையும் தந்தாலும் மற்றொரு பக்கம் வெற்றியையும், உற்சாகத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூர் – திருகருகாவூர் செல்லும் வழியில் உள்ள தென்குடி திட்டை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுங்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். தடைகள் உடைபடும்.

(நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE