குருப் பெயர்ச்சி 2024 பொதுப்பலன் - 01.05.2024 முதல் 13.04.2025 வரை

By செய்திப்பிரிவு

நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.

பொன்னவன், மன்னவன், தென்னவன் என்றெல்லாம் புகழப் படும் குருபகவான் மட்டும் தான் நவகிரகங்களில் முழு சுபராக உள்ளவர். சுபத் தன்மையுடன் சுபராகி இருப்பதால் தான் குரு பார்த்திட கோடி புண்ணியம், குரு காண கோடி தோஷம் விலகும் என இவர் பார்வைக்கெல்லாம் ஜோதிட நூல்கள் பலன் சொல்லி இருக்கின்றன.

ஒன்பது கிரகங்களில் எட்டு கெட்டுப் போனாலும் ஒற்றைக் கொம்பன் போல் இவர் ஒருவர் நம் ஜாதகத்தில் வலுத்திருந்தால் அனைத்து யோகங்களும் வந்து சேரும். தனம், தான்யம், சம்பத்துடன் குளம், கோத்திரம் விளங்க விருத்தி அடைய சார் புத்திர பாக்கியத்தையும் தருபவர் இவர்தான். ராஜகிரகமாகி ராஜாவென அழைக்கப்படும் இவரின் தயவு இருந்தால் தான் அரசியலில் அமைச்சராக முடியும்.

ஓம் ஸ்ரீபுண்யாய ........ என்று நாம் மதித்து, துதித்து மகிழும் மடாதிபதிகள் மற்றும் மகான்களின் ஜாதகத்திலெல்லாம் குருபகவானின் ஆளுமை அதிகரித்திருக்கும். தினந்தோறும் விலை ஏறிக் கொண்டிருக்கும் தங்கம் நம் வீட்டில் தங்க வேண்டுமென்றால் தங்க நிறத்தில் ஜொலிக்கும் வியாழனாகிய குருபகவானின் அருள் நமக்கு வேண்டும். ஆசிரியராக, வழக்கறிஞராக, வங்கி மேலாளராக, கருவூலக் காரியதரசியாக, கோயில் தக்காராக சிறக்க வேண்டுமென்றால் குருவின் கருணை நமக்கு இருக்க வேண்டும்.

காலப் பிரகாசிகை, கேரள துய்யம், பிருகத் ஜாதகம், நந்தி வாக்கியம், சார்க்கேயர் நாடி உள்ளிட்ட பல ஜோதிட நூல்கள் குருபகவானின் நிலையறிந்து பலன் சொல்க என்கிறது. கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் என எதற்கெடுத்தாலும் இவரின் பார்வை நம்மீது பட்டால் தான் நல்லன நடக்கும்.

காலப் புருஷ தத்துவத்துக்கு இரண்டாம் வீடான ரிஷபத்தில் குருபகவான் வருவதால் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இனி அதிகரிக்கும். மனதில் நிம்மதி மலரும். சினிமா முதல் சின்னத்திரை வரை எல்லாம் வளரும். திரையிடப்பட முடியாமல் இருந்த படங்கள் இனி ரிலீசாகும். பிரம்மாண்டமான வரலாற்றுப் படங்கள் மற்றும் நகைச்சுவை படங்கள் வெற்றியடையும். புதிய சினிமா கலைஞர்கள் மற்றும் வளரும் கலைஞர்களால் சினிமாத் துறையில் புரட்சி ஏற்படும்.

குருபகவான் புதன் வீடாகிய கன்னி ராசியை பார்ப்பதால் ஷேர் மார்க்கெட் சூடு பிடிக்கும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் நவீன மாகும். ஆசிரியர்களை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும். பி.டெக்கில் ஏ.ஐ, டேட்டா கலெக்ஷன், சி.ஏ, சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகும்.

குருபகவான் விருச்சிக ராசியை பார்ப்பதால் ராணுவத்துக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அதிக நிதி ஒதுக்கப்படும். ராணுவ வீரர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். புதிய செயற்கைக் கோள்கள், ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் ஆளுமை அதிகரிக்கும். பூமி விலை கடுமையாக உயரும். விளைச்சல் நிலங்களின் பரப்பளவு குறையும். நீர் நிலைகள் ஆழப்படுத்தப்படும்.

வீட்டு வாடகை கிடுகிடுவென உயரும். சிறுநீரக நோயால் அதிகம் பேர் பாதிக்கப்படுவர். புற்று நோய்க்கு புதிய மருந்துகள் கண்டறியப்படும். சோலார் மின்உற்பத்தி அதிகரிக்கும். சொந்தத் தொழில் தொடங்குவோர் அதிகரிப்பர். பாரம்பரிய தொழில்களையும் இளைஞர்கள் விரும்புவர்.

குருபகவான் ஒன்பதாம் பார்வை யால் மகர ராசியை பார்ப்பதால் தொழிலாளர் வர்க்கம் தழைக்கும். தினக்கூலி உயர்த்தப்படும். கிராமங்களிலும் இன்டர்நெட் வசதிகள் அதிகரிக்கும். புதுத் தொழிற்சாலைகள் உருவாகும். கார், டீவி, மொபைல் போன் மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறையும். புது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அந்நிய முதலீடு நாடெங்கும் பெருகும். இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி யும் உயர்வடையும். தோல், கெமிக்கல், கிரானைட் தொழில்கள் வளரும். ஆக மொத்தம் இந்த குருபெயர்ச்சி மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருவதாக அமையும். குருபகவான் ரிஷபத்தில் அமர்வதால் பிரதோஷ பூஜை வழிபட்டால் அனைவருக்கும் அனைத்தும் கிட்டும். 12 ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் இணைப்பு:
> மேஷம்
> ரிஷபம்
> மிதுனம்
> கடகம்
> சிம்மம்
> கன்னி
> துலாம்
> விருச்சிகம்
> தனுசு
> மகரம்
> கும்பம்
> மீனம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE