துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 - குரோதி வருடம் எப்படி?

By Guest Author

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) முடிவெடுப்பத்தில் கெட்டிக்காரர்களான துலா ராசி அன்பர்களே! இந்த வருடம் தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். ஆனாலும் லாபம் அதிகரிக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதன் மூலமாக பல நன்மைகளையும் பெறுவீர்கள் புத்தம் புதிய விஷயங்களை புகுத்தி பல லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தைரியமான நடவடிக்கைகளால் கொடுத்த வேலையை சரியாக செய்வீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு பணியிட மாற்றம் வந்து சேரும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். மாங்கல்ய ஸ்தானம் பலமாக இருப்பதால் கண்டிப்பாக திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமை நிதானம் அவசியம் வார்த்தைப் பிரயோகம் மிக மிக முக்கியம்

மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர் கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மேல் கல்வி சம்பந்தமாக இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும்

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வருடம் வேலைப் பளு குறைந்து காணப்படுவீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லாக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும்.

சுவாதி: இந்த வருடம் மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வருடம் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி | அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்கிரன் - சனி - புதன் | எண்கள்: 4, 6, 9

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) தைரியமாக எந்த ஒரு விஷயத்தையும் அணுகும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வருடம் உங்கள் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். கடன்களை அடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்களின் ஆதரவால் எந்த ஒரு கடினமான வேலையையும் மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய எண்ணங்கள் உருவாகும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் எடுக்கும்போது புதிய விஷயங்களை ஆரம்பிக்கும் போது சரியான ஆலோசனை என்பது அவசியம்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வியில் சிறுசிறு தடைகள் ஏற்படலாம். சோம்பேறித்தனத்தை விடுவது நன்மையை கொடுக்கும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

அனுஷம்: இந்த வருடம் மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.

கேட்டை: இந்த வருடம் புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நலபாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் - குரு - சந்திரன் | எண்கள்: 4, 5, 7

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த வருடம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான எந்த ஒரு விஷயத்திலும் மிக கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். மிகக்கடுமையான பொறுப்புகள் ஏற்படலாம். ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். மற்றவர்களுடைய வேலைகளையும் நீங்கள் செய்ய வேண்டிய நிலை வரலாம்.

குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். மனதில் புதுத்தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மிகவும் அருமையான வருடம் எந்த ஒரு சூழலிலும் உங்களுக்கு நன்மையே நடக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும். அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்பார்க்கும் பதவி வரக்கூடிய ஆவணி மாதத்திற்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும்.

மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் மிகப்பெரிய சாதனைகளை செய்வீர்கள் எல்லாவிதமான பாக்கியங்களும் வந்துசேரும்

மூலம்: இந்த வருடம் பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும்.

பூராடம்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வருடம் கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மனநிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சிவனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு - செவ்வாய் - சூரியன் | எண்கள்: 1, 3, 5

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்